Thursday, April 18, 2024

சாணக்கியன் 105

 

க்ளைக்டஸ் இந்தப் பைத்தியக்காரனிடம் வந்து இப்படி சிக்கிக் கொண்டு விட்டோமே என்று தனக்குள்ளே அங்கலாய்த்துக் கொண்டான். சொன்னதை அனுசரிக்காதவர்களை எல்லாம் விஷம் வைத்துக் கொல்வதென்றால் வாழ்க்கையில் யூடெமஸுக்கு விஷம் கலக்கவே நேரம் போதாதே! இவனுக்கு எதிராகப் பேசுவதானால் யோசித்து மிக ஜாக்கிரதையாகப் பேச வேண்டும் போலிருக்கிறதே. இந்த மனநோயாளியிடமிருந்து உயிரோடு தப்ப முடியுமா?

 

யூடெமஸ் சிரித்துக் கொண்டே கேட்டான். “க்ளைக்டஸ் இப்படி இடி விழுந்தது போல் ஏன் ஸ்தம்பித்து நிற்கிறாய்? புருஷோத்தமன் உனக்கு மிக வேண்டப்பட்டவனா?”

 

“அப்படியெல்லாம் இல்லை. ஆனால் அனாவசியமாய் இந்தப் பிரச்னைக்குரிய முடிவை நீங்கள் எடுத்து விட்டது போல் எனக்குத் தோன்றுகிறது.”

 

யூடெமஸ் அலட்சியமாய் கேட்டான். “யாருக்குப் பிரச்னை? ஒருவேளை நம் மீது அவர்களுக்குச் சந்தேகமே வந்தாலும் அவர்கள் என்ன செய்ய முடியும்? யாரிடம் அவர்கள் புகார் சொல்ல முடியும்? கேகயம் என் நிர்வாகத்திற்கு உட்பட்டது என்பதால் எதுவானாலும் முடிவில் என்னிடம் தானே அவர்கள் வந்தாக வேண்டும். அல்லது ஆம்பி குமாரனிடம் புகார் கொடுக்கலாம். ஆனால் அவர்களிடம் ஆதாரம் என்ன இருக்கிறது. நீயாக வாய் திறந்து எதுவும் சொல்லாத வரை யாருக்கும் நிச்சயமாக எதுவும் தெரிய வழியில்லை..”

 

அதுவரை தன்னையும் சேர்த்து அவர்கள் சந்தேகிக்கலாம் என்ற எண்ணமே க்ளைக்டஸுக்கு வரவில்லை. யூடெமஸ் சொன்ன பிறகு தான் அதற்கும் வாய்ப்பிருப்பதாக அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. ஆம்பி குமாரனே எத்தனையோ தேவலை என்று சொல்லக்கூடிய அளவில் ஒருவனைச் சந்திக்க முடியும் என்று க்ளைக்டஸ் இது வரை நம்பியிருக்கவில்லை. விதி வலிது…

 

க்ளைக்டஸ் சொன்னான். “நான் எதையும் அவர்களிடம் சொல்லப் போவதில்லை.”

 

திருப்தியடைந்தவனாக யூடெமஸ் சொன்னான். “நல்லது. நாளை அதிகாலை சீக்கிரமே கிளம்பி விடுவோம். நாம் கிளம்புவதற்குள் அவர்கள் கண்டுபிடிக்க முடியாது. படுக்கையில் இருந்து புருஷோத்தமன் எழாதது நேற்றைய விருந்தில் அதிகமாக மதுவருந்தியதன் காரணமாக என்று நினைத்துக் கொள்வார்கள்.  நாம் அவன் மரணச் செய்தி தெரியும் போது இங்கே இருந்தால் சம்பிரதாயத்திற்காவது துக்கம் அனுஷ்டித்து இங்கே ஈமக்கிரியைகள் முடியும் வரை தங்க வேண்டியிருக்கும்.”

 

க்ளைக்டஸ் சந்தேகத்தோடு கேட்டான். “நாம் அவசர அவசரமாக முன்பே கிளம்பிப் போனால் அவர்களுக்குச் சந்தேகம் வராதா?”

 

“நான் தான் முன்கூட்டியே அதிகாலை கிளம்புகிறோம் என்று சொல்லி விட்டேனே. அதனால் நாம் போவது யாருக்கும் எந்தச் சந்தேகத்தையும் எழுப்பாது. நீ என்னுடன் புஷ்கலாவதிக்கு வருகிறாயா?”

 

“இல்லை. எனக்கு தட்சசீலத்தில் சில அவசர வேலைகள் முடிக்க வேண்டியிருக்கின்றன. நீங்கள் சொல்லி அனுப்பியதால் பாதியில் விட்டு விட்டு வந்தேன்….”

 

க்ளைக்டஸுக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை. அதிகாலையில் எழுந்து யூடெமஸ் கிளம்புவதற்குச் சற்று முன்னதாகவே கிளம்பியவன் தப்பித்தோம், பிழைத்தோம் என்று குதிரையை மின்னல் வேகத்தில் தட்ச சீலத்தை நோக்கிச் செலுத்தினான்.

 

யூடெமஸ் முன்கூட்டியே சொல்லி வைத்திருந்ததால் கேகய சேனாதிபதி அதிகாலையிலேயே ஐநூறு யானைகளை  அணி வகுத்து நிறுத்தியிருந்தான். யவன வீர்ர்களும், பாகர்களும், யானைப் பயிற்சியாளர்களும் கூடத் தயாராக இருந்தார்கள். வந்த வேலை முடித்துக் கொண்ட யூடெமஸ் புஷ்கலாவதிக்கு எந்த வருத்தமும் இல்லாமல் கிளம்பினான்.

 

யூடெமஸ் யூகித்தபடியே புருஷோத்தமன் படுக்கையிலிருந்து வழக்கமான பொழுதில் விழித்தெழாதது யாருக்கும் எந்தச் சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை.  முந்தைய நாளின் விருந்தின் தாக்கம் என்றே காவலர்களும் பணியாளர்களும் நினைத்தார்கள்.

 

ஐநூறு யானைகளோடு யூதிடெமஸ் போனதைக் கேள்விப்பட்டு திகைத்த இந்திரதத், கடைசி நேரத்தில் புருஷோத்தமன் ஏதாவது வாக்களித்து தான் இது நடந்திருக்கிறதா என்று அறிய விரும்பி மன்னரைச் சந்திக்க வந்த போது தான் மன்னர் இறந்து போயிருப்பது தெரிய வந்தது. ராஜ வைத்தியர் உடனடியாக வரவழைக்கப்பட்டார்.  அவர் உடலைப் பரிசோதித்து விட்டு அரசர் இறந்து போக விஷமே காரணம் என்றும் கண்டுபிடித்துச் சொன்னார். புருஷோத்தமன் உடலில் அங்கங்கே நீலமாகி இருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.    

 

இந்திரதத் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்தார். சசிகுப்தனின் எச்சரிக்கைக் கடிதம் முன்பே வந்திருந்ததால் அவர் யூடெமஸ் தான் இந்தக் கொலைக்குக் காரணம் என்று உறுதியாக நம்பினார். அரண்மனைப் பணியாளர்களையும், காவலர்களையும் அழைத்து விசாரித்த போது மன்னருக்கும் யூடெமஸ், களைக்டஸுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் சுமுகமாகவே போய்க் கொண்டிருந்ததென்று சொன்னார்கள். அவர்கள் அருகில் இல்லாத போதும் என்ன நடக்கிறதென்றே தெரியாத தொலை தூரத்தில் அவர்கள் இருக்கவில்லை. மன்னர் ஒரு ஓவியத்தைக் காட்டி யூடெமஸிடம் எதையோ விளக்கிக் கொண்டிருந்தார் என்றும் அதை யூடெமஸ் கேட்டுக் கொண்டிருந்தான் என்றும் சொன்னார்கள். அதன் பின் யூடெமஸும், க்ளைக்டஸும் கிளம்பி விட்டதாகச் சொன்னார்கள்.

 

சேனாதிபதி நேற்று மாலையே யூடெமஸ் மன்னரிடம் ஐநூறு யானைகளைக் கொண்டு போக அனுமதி பெற்றதாகச் சொன்னதையும், இன்று அதிகாலையிலேயே கிளம்புவதாக நேற்று தெரிவித்ததையும் சொன்னான். ஐநூறு யானைகளை அனுப்பக் கண்டிப்பாக புருஷோத்தமன் அனுமதித்திருக்க மாட்டார் என்று தெரிவித்த இந்திரதத் நேற்று மாலை அவரும், மன்னரும், சேர்ந்து தான் யூடெமஸிடம் விடைபெற்றுத் திரும்பி அரண்மனையில் விருந்து ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்ததாகச் சொன்னார். அது வரை அவர் மன்னருடன் சேர்ந்தே இருந்ததால் அது குறித்த பேச்சே எழவில்லை என்றும் சொன்னார்.

 

மலயகேதுக்கு ஆத்திரத்தில் உடல் நடுங்க ஆரம்பித்தது. தந்தையின் தகனத்திற்கு முன்பு யூடெமஸை வெட்டி வீழ்த்தி விட்டு வரவேண்டும் என்று அவன் துடித்தான்.   

 

இந்திரதத் மலயகேதுவிடம் சொன்னார். “நீங்கள் நினைப்பது அத்தனை சுலபமல்ல இளவரசே. அதில் நிறைய சிக்கல் இருக்கிறது.”

 

“இந்த நாட்டு மன்னரைக் கொன்று விட்டு இங்கிருந்து ஐநூறு யானைகளை ஒரு யவனன் திருடிக் கொண்டும் போயிருக்கிறான். அப்படியிருப்பதில் அவனைத் தண்டிப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது அமைச்சரே?” கோபமிகுதியில் மலயகேது கேட்டான்.

 

”அவன் தான் மன்னரைக் கொன்றான் என்பதற்கு நம்மிடம் ஆதாரம் எதுவுமில்லை. சட்டப்படி அவன் தான் கேகயத்தின் நிர்வாகி. அவனுக்குக் கீழ் தான் நாம் இருக்கிறோம். அதனால் அவன் இங்கிருந்து யானைகளை ஓட்டிக் கொண்டு போயிருப்பது அவனுக்கு உரிமையுள்ளதை எடுத்துக் கொண்டு போனபடி தான் எடுத்துக் கொள்ளப்படும்”  

 

மலயகேது கண்ணீருடனும், ஆத்திரத்துடனும் கேட்டான். “அப்படியானால் குற்றவாளியை நாம் அப்படியே விட்டு விடுவதா அமைச்சரே?”

 

“அப்படி நான் சொல்லவில்லை இளவரசே. உங்களுக்கு இணையாக என் இரத்தமும் கொதிக்கிறது. ஆனால் உணர்ச்சிவசப்பட்டு நாம் எதுவும் செய்துவிட முடியாது என்று தான் சொல்ல வந்தேன். முதலில் மன்னரின் இறுதிச்சடங்குகளை முறைப்படி செய்து முடிக்கப் பார்ப்போம் இளவரசே. அது முடிந்த பின் நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி யோசிப்போம்.”

 

மலயகேது தந்தையின் சடலத்தைப் பெருந்துக்கத்தோடு பார்த்தான். மலை போல் திடமாக இருந்த மனிதரைச் சூழ்ச்சியால் யூடெமஸ் சாய்த்து விட்டானே!

 

அவன் மெல்லக் கேட்டான். “இந்தச் சதியில் க்ளைக்டஸுக்கும் பங்கிருக்குமா அமைச்சரே?”

 

இந்திரதத் சொன்னார். “அவன் பங்கு எதுவுமிருக்க வாய்ப்பில்லை இளவரசே. அவன் நமக்கு முன்பே தெரிந்தவன். யவனன், தன் ஆட்களுக்கு ஆதரவாளன் என்றாலும் கூட கொலை சூழ்ச்சியில் எல்லாம் பங்கு கொள்ளும் நீச்சனாக அவனை நினைக்க முடியாது. அவன் இவனுடன் வரவில்லை. தட்சசீலத்திலிருந்து தனியாக வந்து இங்கே தான் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். அதனால் சேர்ந்து சதியாலோசனை செய்திருக்க வழியில்லை. ஆனால் நேற்று யூடெமஸ் செய்ததை அவன் கவனித்திருக்கலாம். தன் எஜமானனைக் காட்டிக் கொடுக்கும் அளவு அவன் சத்தியவானோ, நல்லவனோ அல்ல என்று வேண்டுமானால் சொல்லலாம்.”  

 

அவர் சொன்னது சரியாக இருக்கும் என்றே மலயகேதுவுக்கும் தோன்றியது. அவன் மெல்லத் தலையசைத்தான். அதன் பின் தந்தையின் சடலத்தின் அருகே அமர்ந்து அவன் அழ ஆரம்பித்தான்.

 

மலயகேதுவைப் பார்க்கையில் இந்திரதத்துக்கும் இதயத்தில் இரத்தம் கசிந்தது. சிறு வயதில் இரண்டு சகோதரர்களை இழந்து, இப்போது தந்தையையும் இழந்து நிற்கும் அவன் நிலையைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. புருஷோத்தமன் தன் இளைய மகன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார்….

 

கேகய நாடு மன்னரின் ஈமச் சடங்குகளுக்குத் தயாராக ஆரம்பித்தது.   

 

(தொடரும்)

என்.கணேசன்





1 comment:

  1. இனி கேகயமும் சாணக்கியரோடு இணையப் போகிறது... இதை கணித்து தான் மகதத்தில் வேலை ஆரம்பித்திருப்பார் போல....

    ReplyDelete