Thursday, April 4, 2024

சாணக்கியன் 103


யூடெமஸ் புஷ்கலாவதியிலிருந்து கிளம்புவதற்கு முன்பே க்ளைக்டஸுக்கு, கேகயம் வந்து தனக்காகக் காத்திருக்கும்படி தகவல் அனுப்பியிருந்தான். கேகயத்தில் அவனுக்கு உதவியாளனாகவும், மொழிபெயர்ப்பாளனாகவும் இருக்க க்ளைக்டஸ் தேவைப்பட்டான்.

 

தட்சசீலத்தில் இருந்து கேகயம் வந்து சேர்ந்த களைக்டஸை புருஷோத்தமன் அழையா விருந்தாளியைப் பார்ப்பது போலப் பார்த்தார். அலெக்ஸாண்டரின் மறைவு பாரதத்தில் யவனர்களின் நிலைமையை இப்படியாக்கி விட்டதே என்று களைக்டஸ் மனம் நொந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. யூடெமஸ் வரப்போவதாகவும், அதற்குத் தன்னை முன்பே வந்திருக்கச் சொல்லியிருப்பதாகவும் சொல்லி க்ளைக்டஸ் தன் வருகையை நியாயப்படுத்த வேண்டியதாயிற்று.  

 

புருஷோத்தமன் இந்திரதத்தைப் பார்த்தார். சசிகுப்தனின் தகவல் சரி தான் என்றாகி விட்டது என்று அவர் பார்வையால் சொன்னதை இந்திரதத் புரிந்து கொண்டு மெல்லத் தலையசைத்தார். க்ளைக்டஸுக்கோ தன்னைப் பற்றி அவர்கள் சங்கேத பாஷை பேசிக் கொள்வதாகப் பட்டது. அவனுக்கு யூடெமஸ் மீதும் நல்லபிப்பிராயம் கிடையாது. இந்த மூவரிடமும் சிக்கிக் கொண்டு இங்கே இருப்பதை விட தட்சசீலத்தில் ஆம்பி குமாரன் ஒருவனைச் சமாளித்துக் கொண்டு இருப்பது மேலாகத் தோன்றியது.

 

மறுநாளே யூடெமஸ் வந்து சேர்ந்தான். அவன் எதிர்பார்த்த வரவேற்பு கேகய மன்னனிடம் கிடைக்காதது அவனுக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவன் க்ளைக்டஸிடம் கேட்டான். “இது தான் ஒரு சத்ரப்புக்கு இவர்கள் தரக்கூடிய மரியாதையா?”

 

க்ளைக்டஸ் விரக்தியுடன் சொன்னான். “எல்லா மதிப்பு மரியாதையும் நம் சக்கரவர்த்தியோடு போய் விட்டது”

 

கசப்பான உண்மைகளைச் சகிக்க முடியாத யூடெமஸ் தன் முகத்தில் காட்டிய அதிருப்தியையும் புருஷோத்தமனும், இந்திரதத்தும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. முகபாவனைகளை வைத்து அதிருப்தியைப் புரிந்து கொள்ள முடியாத இந்த முட்டாள்களிடம் வெளிப்படையாகத் தான் அதிருப்தியைத் தெரிவிக்க வேண்டும் என்று யூடெமஸ் முடிவு செய்தான்.

 

அவன் முகத்தைச் சுளித்துக் கொண்டு புருஷோத்தமனிடம் சொன்னான். “நான் படைகள் அனுப்பச் சொல்லியும் படைகளுக்குப் பதிலாக முடியாது என்று கடிதம் எழுதி அனுப்பியதை நான் ரசிக்கவில்லை”

 

களைக்டஸ் மொழிபெயர்த்துச் சொன்னவுடன் புருஷோத்தமனுக்கு இந்த முட்டாளிடம் பேசினால் பொறுமையிழந்து விடுவோம் என்று தோன்றியதால் இந்திரதத்தைப் பார்த்தார்.

 

புரிந்து கொண்டு இந்திரதத் பொறுமையாகப் பதில் சொன்னார். “சத்ரப். நீங்கள் இங்குள்ள யதார்த்தத்தைப் புரிந்து கொள்வது நல்லது. சக்கரவர்த்தி இங்கிருந்த காலத்திலேயே குறைந்தபட்சத் தேவையளவுக்குத் தான் இங்கே படைகளை விட்டுச் சென்றிருக்கிறார். மற்ற படைகள் எல்லாம் அடுத்தடுத்த போர்களில் ஈடுபட அவருடன் சென்று விட்டன. அந்தக் குறைந்தபட்சப் படைகளை வைத்துக் கொண்டு எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் நாங்கள் விழித்துக் கொண்டிருக்கிறோம். எந்த நேரத்திலும் புரட்சிப் படைகள் வந்து தாக்கும் அபாயம் எங்களுக்கு இருந்து கொண்டே இருக்கிறது. அதனால் கூடுதல் படைகளை உங்களிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.  புஷ்கலாவதியில் உங்களைச் சுற்றிலும் உங்கள் ஆட்களும், நட்புகளும் மட்டுமே இருப்பதால் மிகவும் பாதுகாப்பான சூழலில் நீங்கள் இருக்கிறீர்கள். அதனால் நீங்கள் மனம் வைத்தால் அங்கிருக்கும் படைகளில் ஒருபகுதியை நீங்கள் இங்கே அனுப்பி வைப்பது நியாயமாக இருக்கும்.”

 

க்ளைக்டஸ் மொழிபெயர்த்துச் சொன்னவுடன் யூடெமஸ் கடுங்கோபம் அடைந்தான். முதலாவதாக புருஷோத்தமன் பதில் சொல்வதைக் கூட கௌரவக் குறைச்சல் என்று எண்ணி அமைச்சரைப் பேச விடுவதாக நினைத்தான். அந்த அமைச்சர் பேசியது நியாயமாகவும், உண்மையாகவும் இருந்து பதில் எதுவும் சொல்ல முடியாதபடியும் இருந்து விட்டதும் அவனுக்குப் பிடிக்கவில்லை.

 

அவன் கடுமையான குரலில் சொன்னான். “யவனர்களுக்கு என்று ஒரு தனி கௌரவம் இருக்கிறது. சத்ரப் நிர்வாகிக்கும் தலைநகர் என்கிற போது அந்த கௌரவத்திற்கேற்றபடி எல்லாப் படைகளும் புஷ்கலாவதியில் இருக்க வேண்டியது அவசியமாகிறது.  நீங்கள் சொன்னபடி இங்கும் படைகளின் அவசியம் இருக்குமானால் யானைகளையாவது கணிசமான அளவில் அங்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும்”

 

இந்திரதத் இந்த முட்டாளிடம் என்ன சொல்வது என்று புரியாமல் மௌனமாக இருந்தார். பதில் ஏதும் அவரிடமிருந்து வராததால் யூடெமஸுக்குத் தான் சரியான பதில் சொல்லி வாயடைத்திருக்கிறோம் என்ற திருப்தி ஏற்பட்டது. அவன் படைகளைப் பார்வையிட விரும்புவதாகச் சொன்னான். படைகளைப் பார்வையிட புருஷோத்தமன், இந்திரதத், சேனாதிபதி மூவரும் அவனை அழைத்துப் போனார்கள். அலெக்ஸாண்டருக்கும் மேலான பாவனையை முகத்தில் ஏற்படுத்திக் கொண்டு அனைத்தையும் அவன் பார்வையிட்டான். பின் அவர்களைக் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காகவே அபத்தமான கேள்விகள் கேட்டான்.

 

மொழிபெயர்த்த க்ளைக்டஸுக்கே கேட்பதெல்லாம் மகா அபத்தமாக இருந்தன. முடிந்த வரை மொழிபெயர்ப்புத் திறனில் கேள்விகளுக்குப் பொருள் சேர்க்க அவன் பாடுபட்டான். ஆனால் முடிவிலும் அவை அபத்தமாகவே வெளிப்பட்டன.  சம்பந்தப்பட்டவர்கள் ஏதோ பதில் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் அவனது கோமாளித்தனங்களைச் சகிக்க முடியாத புருஷோத்தமன் “சத்ரப் எனக்குத் தலைவலிக்கிறது. சற்று ஓய்வெடுக்கிறேன். நீங்கள் பார்வையிட்டு அரண்மனைக்கு வாருங்கள்.” என்றார்.

 

யூடெமஸ் அதிசயமாக அக்கறையுடன் சொன்னான்.நீங்கள் சென்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் கேகய அரசே. அமைச்சரே தாங்கள் மன்னரை அழைத்துச் செல்லுங்கள். என்னுடன் சேனாதிபதி இருந்தால் போதும். நான் நாளையே புஷ்கலாவதிக்குத் திரும்பிச் செல்வதாக இருப்பதால் இன்றே முக்கிய வேலைகளை முடித்துக் கொள்கிறேன்.”

 

இந்திரத்ததும், புருஷோத்தமனும் யூடெமஸ் சொன்ன செய்தியில் பெரிதும் மகிழ்ந்து போனார்கள். அரண்மனையில் இரவு விருந்துக்கு அவனுக்கும் க்ளைக்டஸுக்கும் அழைப்பு விடுத்து விட்டு “சரி இரவு விருந்தில் சந்திப்போம்.“ என்று கூறிவிட்டு அங்கிருந்து விடுபட்டார்கள்.

 

அவர்கள் சென்ற பிறகு சேனாதிபதியுடன் சேர்ந்து சிறு படைத்தலைவர்களை எல்லாம் சந்தித்து அலெக்ஸாண்டரின் பெருமைக்குச் சிறிதும் பங்கம் விளைவித்து விடாதபடி அனைவரும் செயல்பட வேண்டும் என்றும், புரட்சிப் படை வீரர்கள் வருவார்களேயானால் அனைவரும் தக்க பதிலடி தர வேண்டும் என்றும் அறிவுரை சொன்னான்.

 

பின் யூடெமஸ் யானைப் படைகளைப் பார்வையிட்டான். ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகளைப் பார்க்கையில் அவன் கண்கள் விரிந்தன. அவன் உற்சாகத்தைப் பார்த்த சேனாதிபதி யானைகளின் வீரதீரப் பராக்கிரமங்களை விவரித்து மேலும் சந்தோஷப்படுத்தினான்.  யூடெமஸ் யானைகளுக்கு மத்தியில் அதிக நேரம் செலவிட்டான்.

 

பின் அவன் யவனப் படைவீரர்களைத் தனியாகச் சந்தித்துப் பேசினான்.  அவர்களுக்கு அங்கு ஏதாவது பிரச்னைகள் உள்ளனவா, பாதுகாப்பு சரியாக உள்ளதா என்று அக்கறையோடு கேட்டான். அவர்கள் அங்கு தங்களுக்கு எந்தக் குறையும் இல்லை என்று சொன்னார்கள். க்ளைக்டஸ் மெல்லச் சொன்னான். “நம் வீரர்களுக்கு இங்கும் காந்தாரத்திலும் உண்மையில் எந்தப் பிரச்னையும் இல்லை”

 

யூடெமஸ் சொன்னான். “நல்லது. இதே சூழல் நாம் சீக்கிரத்திலேயே மீட்கப் போகிற நம் பழைய பகுதிகளிலும் நிலவப் போகிறது. பார்த்துக் கொண்டே இருங்கள்” யவன வீரர்கள் முகத்தில் உற்சாகம் தெரிந்தது.  

 

யூடெமஸ் கேட்டான். “இங்கு நம் வீரர்களில் எத்தனை பேர் யானைகளை இயக்கும் திறன் படைத்தவர்கள்?”

 

ஐம்பத்திரண்டு யவன வீரர்கள் கையுயர்த்தினார்கள். அவர்களிடம் யூதிடெமஸ் சொன்னான். “நல்லது நீங்கள் புஷ்கலாவதிக்குக் கிளம்பத் தயாராகிக் கொள்ளுங்கள். நாளை அதிகாலையில் கிளம்ப வேண்டும்.”

 

பின் சேனாதிபதியிடம் சொன்னான். “நான் அரசரிடம் பேசியாகி விட்டது. ஐநூறு யானைகளை என்னுடன் அனுப்ப அவர் சம்மதித்திருக்கிறார். அவர்களுடன் இந்த யவன வீரர்களையும் அழைத்துச் செல்கிறேன். ஐநூறு யானைகள், யானைப் பாகன்கள், பயிற்சியாளர்களும் என்னுடன் நாளை அதிகாலை செல்லத் தயார்ப்படுத்துங்கள். சமயம் அதிகமில்லை நம்மிடம்”

 

சேனாதிபதி தலையசைத்தான். க்ளைக்டஸ் திகைத்தான். யூடெமஸ் வந்த கணத்திலிருந்து அவன் கூடவே தான் இருக்கிறான். கூசாமல் ஐநூறு யானைகளை அனுப்ப புருஷோத்தமன் சம்மதித்து விட்டதாக இவன் கூசாமல் பொய் சொல்கிறானே.  புருஷோத்தமன் கண்டிப்பாக இதற்குச் சம்மதிக்க மாட்டானே. எல்லாம் எதில் கொண்டு போய் முடியுமோ?

 

(தொடரும்)

என்.கணேசன்





1 comment:

  1. புருஷோத்தமன் மற்றும் இந்திரதத் இருவரும் யூடெமஸ்க்கு ஏதோ வலை விரித்துள்ளது போல தோன்றுகிறது...

    ReplyDelete