Thursday, March 28, 2024

சாணக்கியன் 102


சில மனிதர்கள் என்றுமே அதிருப்தியில் இருப்பவர்கள். எந்த நன்மையும் அவர்களை நீண்ட காலத்திற்குத் திருப்திகரமாக இருத்தி விட முடியாது. விரைவிலேயே நன்மைகளை மறந்து அல்லது குறைத்து மதிப்பிட்டு மறுபடி குறைகளை ஆழமாக யோசித்து, துக்கித்து, கோபித்து அனைவரும் தங்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவோ, அலட்சியப்படுத்தி விடுவதாகவோ புலம்ப ஆரம்பித்து விடுவார்கள். ஏதாவது செய்து தங்கள் முக்கியத்துவத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டுவிட வேண்டும் என்ற துடிப்பும் அவர்களிடம் மேலோங்க ஆரம்பித்துவிடும்.

 

யூடெமஸ் அந்த வகை மனிதன் என்பதை புஷ்கலாவதியில் தங்கியிருந்த அந்த இரண்டு நாட்களில் சசிகுப்தன் கண்டுபிடித்தான். அலெக்ஸாண்டருக்குக் கிடைத்த மரியாதையும், கௌரவமும் அலெக்ஸாண்டரால் சத்ரப்பாக நியமிக்கப்பட்ட தனக்கும் கிடைக்க வேண்டும் என்று யூடெமஸ் எதிர்பார்த்தான். என்றுமே அவன் அலெக்ஸாண்டர் ஆகி விட முடியாது என்பதை யூடெமஸ் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அலெக்ஸாண்டர் மீதே கூட அவன் பாரதத்தில் இருந்த போது அங்குள்ளவர்களுக்கு இருந்த பயம் அவன் பாரதத்தை விட்டுப் போன பிறகு இருக்கவில்லை. தொலைவில் செல்லச் செல்லச் செல்லரித்துப் போன அந்தப் பயம் அவன் இறந்த பின் எள்ளளவும் இல்லாமல் போய் விட்டது. நிலைமை இப்படி இருக்கையில் அலெக்ஸாண்டரின் இரண்டு சத்ரப்களில் ஒருவன் என்ற அதிகாரத்திற்குப் பெரிய மரியாதை எதிர்பார்க்க ஒன்றுமில்லை என்று மறைமுகமாகவும், கோடி காட்டியும் சொல்லிப் பார்த்த சசிகுப்தன் யூடெமஸின் காதுகள் கேட்க விரும்புவதை மட்டுமே கேட்கும் விசேஷத் தன்மை வாய்ந்தவை என்று இறுதியாக உணர்ந்தான்.

 

அதனால் இவனுக்கு அறிவுரை சொல்லி தன்னுடைய சக்தியை இனி விரயமாக்கக் கூடாது என்று சசிகுப்தன் முடிவு செய்தான். ஆனால் யூடெமஸ் அவ்வப்போது அதிகம் யோசிப்பதையும் ஏதோ திட்டமிடுவதையும் பார்த்த போது அது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் சசிகுப்தனுக்கு அதிகரித்தது.

 

வரவர யூடெமஸும் அலெக்ஸாண்டராகிக் கொண்டு வருவது போல் எனக்குத் தோன்றுகிறதுஎன்று சசிகுப்தன் மெல்லச் சொன்னான்.  

 

அவனை அலெக்ஸாண்டருடன் ஒப்பிட்டுப் பேசியதில் மட்டற்ற மகிழ்ச்சியை உணர்ந்த யூடெமஸ் கேட்டான். “ஏன் அப்படிச் சொல்கிறாய் சசிகுப்தா?”

 

அலெக்ஸாண்டரும் ஏதாவது திட்டம் தீட்டும் போது இப்படித் தான் ஆழமாய் யோசித்தபடி உட்கார்ந்திருப்பதை நான் பல முறை பார்த்திருக்கிறேன். முடிவில் ஒரு அருமையான திட்டம் உருவாகியிருக்கும்.”

 

சசிகுப்தன் சொன்னதைக் கேட்டுப் பெருமையாகப் புன்னகைத்த யூடெமஸ் மெல்லக் கேட்டான். “சசிகுப்தா நான் கேட்டதில் மற்றவற்றைத் தராவிட்டாலும் கூடப் பரவாயில்லை. குறைந்தபட்சம் யானகளையாவது புருஷோத்தமன் அனுப்பியிருக்கலாம். கேகயப்படையில் எத்தனை யானைகள் இருக்கலாம் என்பது உன் அனுமானம் சசிகுப்தா?”

 

ஆயிரத்திற்கு மேலிருக்கும்

 

அதில் பாதியையாவது அவன் எனக்கு அனுப்பியிருக்க வேண்டும். புஷ்கலாவதியில் சத்ரப்பாக நான் ஆட்சி நடத்த வேண்டும் என்று சொன்னால் குறைந்தபட்ச கௌரவமாவது எனக்கு வேண்டாமா? குதிரைகள், வீர்ர்கள் எல்லாம் ஏற்கனவே என்னிடமிருக்கின்றன. யானைகளும் இருந்தால் தானே சிறப்பாக இருக்கும்

 

உண்மை தான்என்று சசிகுப்தன் சொல்லி வைத்தான்.

 

இதை எல்லாம் கடிதம் அனுப்பிக் கேட்டுக் கொண்டிருந்தால் ஒரு பயனும் இல்லை. அதனால் நானே நேரில் கேகயத்திற்குப் போவது என்று முடிவு செய்திருக்கிறேன் சசிகுப்தா. என் அதிகாரத்திற்குற்பட்ட பகுதியைப் பார்வையிட்டு வந்த்து போலவும் இருக்கும். நான் யார் என்பதை அவர்களுக்கு உணர்த்தியது போலிருக்கும்

 

உன் மீது அவர்கள் தெரியாமல் வைத்திருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையையும் நீ இழந்து விடப்போகிறாய்என்று மனதிற்குள் எண்ணியதை சசிகுப்தன் வாய் விட்டுச் சொல்லவில்லை. தலையை மட்டும் அசைத்தான்.

 

எதிராகக் கருத்து தெரிவிப்பதை சசிகுப்தன் நிறுத்திக் கொண்டது யூடெமஸுக்குத் திருப்தியாக இருந்தது. அவன் சசிகுப்தனிடம் கேகயத்தின் யானைப் படை பற்றிச் சொல்லச் சொன்னான். அலெக்ஸாண்டரே கேகயத்தின் யானைப்படையைப் பார்த்து பிரமித்ததாக யூடெமஸ் கேள்விப்பட்டிருக்கிறான். அந்தப் போரின் போது சசிகுப்தனும் அலெக்ஸாண்டரோடு இருந்தவன் என்பதால் அவன் வாயால் கேட்பது சரியாக இருக்கும் என்று யூடெமஸ் நினைத்தான்.


சசிகுப்தன் சொல்லச் சொல்ல யூடெமஸ் விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்று ஆபத்தானதாக சசிகுப்தனுக்குத் தோன்றியது.  வாய் விட்டுச் சொல்லாத ஏதோ ஒரு சதித்திட்டம் இவன் மனதில் உருவாகியிருக்கிறது என்று உள்ளுணர்வு எச்சரித்தது. அலெக்ஸாண்டரே புருஷோத்தமனிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டான், பலகாலப் பகையிருந்தும் சத்ரப் ஆக பதவி கிடைத்தும் கூட ஆம்பி குமாரன் கூட புருஷோத்தமனிடம் பிறகு பிரச்னை செய்யப் போகவில்லை. ஆனால் புருஷோத்தமனுக்கு யூடெமஸ் மூலம் பிரச்சினை உருவாகப் போகிறது என்று தோன்றியது. பழைய நட்பை நினைவில் கொண்டு புருஷோத்தமனை எச்சரிக்க நினைத்த சசிகுப்தன் யூடெமஸிடமிருந்து விடைபெற்று புஷ்கலாவதியிலிருந்து வெளியேறியவுடன் முதல் வேலையாக புருஷோத்தமனுக்கு ஒற்றன் மூலமாக ஒரு கடிதம் அனுப்பி வைத்தான்.

 

நண்பரே, தங்களது புதிய யவனத் தலைவன் வெகுசீக்கிரம் அங்கு வரவிருக்கிறான். அவன் சூழ்ச்சிக்காரன் என்பதால் மிக எச்சரிக்கையாக இருக்கவும். அவனை எக்காரணம் கொண்டும் குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம்.”

 

யாருக்கு யார் அனுப்பியது என்ற குறிப்பில்லாமல், எந்த முத்திரையும் இல்லாமல், கடிதத்திற்குள்ளூம் எந்தப் பெயரும் இல்லாமல், இது போன்ற பொதுவான வார்த்தைப் பிரயோகங்கள் கொண்ட கடிதம் புரிய வேண்டியவர்களுக்குப் புரியும். ஒருவேளை இடையில் வேறு ஒருவர் கையில் கடிதம் சிக்கினாலும் எந்தப் பிரச்னையுமில்லை.  சசிகுப்தன் தன்னால் முடிந்த எச்சரிக்கையைச் செய்திருக்கும் திருப்தியுடன் பயணத்தைத் தொடர்ந்தான்.

 

 

பொதுவாகத் தூதர்கள் கடிதம் அல்லது தகவல் கொண்டு வந்தால் பதில் கடிதம் அல்லது தகவல் வாங்கிக் கொண்டே செல்வது வழக்கம். சசிகுப்தன் அனுப்பியதாகச் சொல்லி கடிதத்தை புருஷோத்தமனிடம் தந்த ஒற்றன் பதில் எதற்கும் காத்திராமல் விடைபெற்றான். கடிதத்தில் சசிகுப்தனின்  முத்திரை எதுவும் இல்லை. இரண்டுமே புருஷோத்தமனை ஆச்சரியப்படுத்தின. அந்தச் சுருக்கமான கடிதத்தைப் படித்த அவர் குழப்பத்துடன் அந்தக் கடிதத்தை இந்திரதத்திடம் தந்தார்.

 

கடிதத்தைப் படித்த இந்திரதத்திடம் புருஷோத்தமன் சொன்னார். “எல்லாமே குழப்பமாகவே இருக்கிறதே. சசிகுப்தன் அனுப்பியது தானா இது? “

 

இந்திரதத் புன்னகையுடன் சொன்னார். “சசிகுப்தனின் முத்திரை கடிதத்தில் இல்லாத போதும் சசிகுப்தனின் பாணி கடிதத்தில் தெளிவாகவே இருக்கிறது அரசே”

 

“யூடெமஸ் பற்றி தான் சசிகுப்தன் எச்சரிக்கிறான் என்று நினைக்கிறேன். ஆனால் எச்சரிக்குமளவு சசிகுப்தனுக்கு என்ன தகவல் கிடைத்தது, எப்படிக் கிடைத்தது என்ற தகவல் எல்லாம் இல்லையே”

 

“புஷ்கலாவதிக்கு சசிகுப்தன் சென்றிருக்கலாம். அங்கு அவன் கேள்விப்பட்டதோ, அறிந்ததோ நம்மை எச்சரிக்கத் தூண்டியிருக்கலாம். கேள்விப்பட்டதை எல்லாம் கடிதத்தில் எழுதுவதும் ஒரு ஆளிடம் சொல்லி அனுப்புவதும் இன்றைய சூழ்நிலையில் உகந்தது அல்லவே”

 

”அலெக்ஸாண்டரையே எதிர்த்துச் சமாளித்தவன் நான். அலெக்ஸாண்டருக்கே நான் பயந்தது கிடையாது. அப்படி இருக்கையில் யூடெமஸிடம் நான் பயப்படுவேனா என்ன?”

 

”அரசே, சசிகுப்தன் மகாபுத்திசாலி. அலெக்ஸாண்டர் பாரசீகத்தை வென்ற காலத்திலிருந்து இங்கே வரும் வரை தன்னுடனேயே அவனை இருத்திக் கொண்டது அவன் வீரத்திற்காக என்று சொல்வதை விட அவனுடைய நுண்ணறிவுக்காக என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். பாரசீகத்தில் மறுபடி பிரச்னை எதோ வெடித்த போதும் சசிகுப்தன் அங்கு செல்வது நிலைமையைச் சமாளிக்க உதவும் என்று நம்பியே சசிகுப்தனை அங்கே அனுப்பி வைத்தான். அப்படிப்பட்ட ஒருவன் சரியான காரணமில்லாமல் இப்படி ஒரு எச்சரிக்கையை நமக்கு அனுப்பி வைத்திருக்க மாட்டான். அதனால் நாம் மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது.”

 

”அரசன் அரியணை ஏறிய கணத்திலிருந்தே எச்சரிக்கையாக இருக்க வேண்டியவன் தான் இந்திரதத். ஏனென்றால் அந்தக் கணத்திலிருந்தே ஆபத்துகள் அவனைச் சூழ ஆரம்பித்து விடுகின்றன. ஆனால் பயந்து பயந்து வாழ்வதிலும் அர்த்தமில்லை. வருவது எதுவாக இருந்தாலும் அவன் அதைச் சந்தித்தே ஆக வேண்டும்”

 

ஆபத்து மூன்று நாட்களில் வந்து சேர்ந்தது.

 

(தொடரும்)

என்.கணேசன்   


Wednesday, March 27, 2024

முந்தைய சிந்தனைகள் 100

 சிறிது சிந்திக்கலாமே!












என்.கணேசன்

Monday, March 25, 2024

யோகி 42


 ரசுராமன் சிறிது யோசித்து விட்டுச் சொன்னார். “நீங்க கேட்கறது எனக்கும் சரியாய் தான் படுதுஆனால் நான் உங்க கிட்ட இது வரைக்கும் ஆவிகளைப் பத்திச் சொன்னது அனுபவ பூர்வமாய் நான் அறிஞ்ச உண்மை.. அது மட்டுமில்லை, உங்க பேத்தியோட ஆவி என் உடம்பை விட்டு விலகின பிறகு நான் உணர்ந்தது ஒரு பேரமைதியைத் தான். அது தான் அந்த ஆவி கடைசியாய் உணர்ந்த உணர்வாய் இருந்திருக்கணும். அதனால உங்க பேத்தியோட ஆவி ரொம்ப முக்கியம்னு நினைச்சதை உங்க கிட்ட தெரிவிச்சுட்டு பூரண திருப்தியோட போன மாதிரி தான் தோணுது. ஆருடப்படி கூட அந்த நேரம் நிறைவான நேரம் தான். உங்க பேத்தி உங்க கிட்ட சொன்ன கடைசி வார்த்தைகளும் அந்த வகைல தான் இருந்திருக்கு.”

 

சேதுமாதவன் யோசித்து விட்டுக் குழப்பத்தோடு கேட்டார். “அப்படின்னா, அவள் மரணம் கொலையில்லைன்னு அர்த்தமா?”

 

பரசுராமன் சொன்னார். “நடந்திருக்கறதை எல்லாம் பார்க்கறப்ப உங்க பேத்தியும், அந்த டாக்டரும் கொல்லப்பட்டு இருக்காங்கங்கறது உறுதி தான். ஆனால் அதைப்பத்தி சொல்றது அவசியமில்லைன்னு உங்க பேத்தியோட ஆவி ஏன் முடிவு செய்துச்சுன்னு தான் புரியல. அதை விட முக்கியமாய் ரகுராமன்கிற யோகியை நீங்க சந்திக்கறது ஏன் முக்கியம்னு நினைச்சுதுன்னும் புரியல...”

 

சேதுமாதவனும் குழப்பத்துடன் யோசித்தார். இது வரை அவர் ரகுராமன் என்ற பெயருடைய எந்த யோகியையும் கேள்விப்பட்டது கூட கிடையாது. ”உங்களுக்கு அவள் சொன்ன யோகியைத் தெரியுமா?” என்று பரசுராமனை அவர் கேட்டார்.

 

பரசுராமனும் யோசித்து விட்டுச் சொன்னார்  இல்லை. அவர் தன்னை வெளிப்படுத்திக்க விரும்பாத யோகியாய் இருக்கலாம். உண்மையான யோகி விளம்பரம் செய்ய மாட்டார். அவருக்கு மத்தவங்களோட வணக்கமோ, அங்கீகாரமோ, புகழோ தேவையில்லை. சொல்லப் போனா அவங்களுக்கு அது தொந்தரவாய் கூட இருக்கும். அதனாலேயே அவங்க இருக்கற இடம் தான் தெரியாம தான் அதிகம் இருப்பாங்க

 

சேதுமாதவன் அவர் சொல்வதை ஆமோதித்துத் தலையசைத்தார். “நீங்க சொல்றது சரி தான். ஆனா அப்படிப்பட்ட யோகியை சைத்ரா எங்கே, எப்படி சந்திச்சா, எப்ப சந்திச்சான்னு தெரியலயே! யோகாலயத்துல போய்ச் சேர்ந்த பிறகு வெளியே எங்கேயும் அவள் போயிருக்க வழியில்லைங்கறதால, அந்த யோகி யோகாலயத்துக்குள்ளே இருக்காரோ? இல்லை அவள் கொலைக்கும், அந்த யோகிக்கும் கூட ஏதாவது சம்பந்தமிருக்குமோ?”

 

பரசுராமனாலும் அந்தக் கேள்விகளுக்கான பதில்களைச் சொல்ல முடியவில்லை.

 

ஷ்ரவனிடம் பரசுராமனைப் பற்றி ராகவன் சொன்ன போது அவன் மனதில் முதலில் எழுந்தது சந்தேகம் தான். ஏனென்றால் அவன் அவர் போன்ற நிறைய ஆட்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான்.  சில சில்லறை ஏமாற்று வித்தைகளை வைத்துக் கொண்டு பலரையும் நம்ப வைத்துச் சம்பாதிக்கிறவர்கள் அவர்கள். முன்கூட்டியே சம்பந்தப்பட்ட ஆட்களின் விவரங்களைச் சேகரித்து வைத்துக் கொண்டு, அதற்கேற்றபடி ஏதாவது சொல்லி அதை ஆவி சொன்னதாகச் சொல்வார்கள். சில சமயங்களில் மாயா ஜால விளைவுகளைக் காட்ட ரகசியமாய் கூட்டாளிகளை அவர்கள் வைத்துக் கொள்வதும் உண்டு. அதே போல் செய்வினை, சூனியம் வைத்தல் போன்ற விஷயங்களிலும் பல ஏமாற்று வேலைகள் நடப்பதுண்டு. முதலிலேயே சில தகடுகளையோ, பயமுறுத்தும் பொருட்களையோ வீட்டருகில் எங்காவது புதைத்திருந்து விட்டு பின், ஆட்கள் முன்னால் தோண்டி எடுத்துக் காட்டி திகிலை ஏற்படுத்துவார்கள். செய்வினை, ஏவல் ஆகியவற்றை எடுத்து விலக்கி விட்டேன், இனி எந்தப் பிரச்சினையும் வராது என்று சொல்லி அந்த ஆட்களிடமிருந்து ஒரு பெரிய தொகையை வசூலித்து விடுவதுண்டு.

 

ஆனால் முதல்வரின் தாய்மாமனின் மகன் பரசுராமனுக்கு அப்படி சம்பாதிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை. ஷ்ரவன் பரசுராமனைப் பற்றி இணையத்தில் இருக்கும் தகவல்களைச் சேகரித்தான். பரசுராமன் இவ்வளவு பிரபலமாயிருப்பார் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவரைக் குறித்து ஏராளமான தகவல்கள் இருந்தன. அவன் படித்த எல்லாத் தகவல்களும் மிக மிக சுவாரசியமாய் இருந்தன.  பரசுராமனுக்கு பல நாடுகளில் பக்தர்கள் இருந்தார்கள். அவர்கள் அவரை யோகியென்றே சொன்னார்கள். சுவாமிஜி என்று அழைத்தார்கள்.  துர்க்கையின் அம்சம் உள்ளவர் என்றார்கள். அவர் செய்து காட்டிய அற்புதங்களையும், அவருடைய மாந்திரீக சக்திகளைப் பற்றியும் பலரும் சிலாகித்துச் சொல்லியிருந்தார்கள். அவற்றில் அதிகம் இறந்தவர்களின் ஆவிகள் சம்பந்தப்பட்டதாகத் தானிருந்தன. ஆனால் பெரும்பாலான இடங்களில் அவர் ஊடகமாக வேறு ஆட்களைத் தான் பயன்படுத்தியிருந்தார்.  சேதுமாதவன் வீட்டில் செய்தது போல் அவரே ஊடகமாக இருந்தது மிக மிகக் குறைவாகத் தானிருந்தது. பரசுராமன் தமிழக முதல்வரின் நெருங்கிய உறவினர் என்ற தகவல் இணையத்தில் எங்குமே இருக்கவில்லை. பரசுராமனும், முதல்வரும் அப்படியே இருக்கும்படி கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பது அவனுக்குப் புரிந்தது.

 

ஷ்ரவன் சேதுமாதவனிடமும் போனில் பேசினான். சேதுமாதவன் பரசுராமன் வந்ததிலிருந்து அவர் செல்லும் வரை நடந்தவற்றை விரிவாகச் சொன்ன விஷயங்கள் அவனுக்கு அமானுஷ்யமாய்த் தோன்றின. சைத்ராவின் ஆவி பரசுராமன் மூலமாகப் பேசியது அவளுடைய குரலில் தான் என்று அவர் சொன்ன போது அவன் மேலும் ஆச்சரியப்பட்டான். இந்த விஞ்ஞான யுகத்தில் இது போல் நடப்பது பிரமிப்பாகத்தான் இருந்தது. இதற்கு என்ன அறிவியல் காரணம் இருக்க முடியும் என்று யோசித்தான். எதிர்பார்த்த எதையும் சொல்லாமல், சைத்ராவின் ஆவி ஒரு யோகியைப் பற்றித் தெரிவித்தது அவனுக்கு மேலும் ஆச்சரியமாக இருந்தது.

 

சிவசங்கரன் சொன்ன யோகியும், சைத்ராவின் ஆவி சொல்லும் யோகியும் ஒரே நபரா என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனாலும் எதிர்பாராத விதமாக சிவசங்கரன் வீட்டிலும், சேதுமாதவன் வீட்டிலும், ஒரே நாளில் வேறொரு யோகியைப் பற்றிக் கேள்விப்பட நேர்ந்தது தற்செயல் தானென்று அவனுக்குத் தோன்றவில்லை. சிவசங்கரன் வீட்டிலும் அவன் பிரம்மானந்தாவைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்கையில், யோகியைப் பற்றிய பேச்சு, எதிர்பாராமல் தான் வந்தது. சேதுமாதவன் வீட்டிலும் அவர் கேட்காமலேயே சைத்ராவின் ஆவி ரகுராமன் என்ற யோகியைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. சிவசங்கரனுக்கு அந்த யோகியின் பெயர் தெரிந்திருக்கா விட்டாலும், இரண்டு இடங்களிலும் கேள்விப்பட்டது ஒரே நபரையாகத் தான் இருக்க வேண்டும் என்று அவனுடைய உள்ளுணர்வு சொன்னது.

 

சேதுமாதவன் மூலமாக அறிந்த தகவல்களும், இணையத்தில் தேடிப்படித்த தகவல்களும் ஷ்ரவனுக்கு பரசுராமனை நேரில் சந்திக்க பெரும் ஆவலை ஏற்படுத்தி விட்டன. அவன் ராகவனிடம் போன் செய்து பரசுராமனை அவன் சந்திக்க விரும்புவதாகச் சொன்னான்.

 

சி எம் கிட்ட பேசிட்டு உன்னைக் கூப்டறேன்என்று சொன்ன ராகவன் சிறிது நேரத்தில் மறுபடி அழைத்துச் சொன்னார். “அவரை சரியாய் மதியம் 2.12க்குப் போய்ப் பார்க்கணுமாம். அவரோட அட்ரஸை உனக்கு வாட்சப்ல அனுப்பியிருக்கேன்

 

அவர் சந்திக்கச்  சொன்ன நேரம் ஷ்ரவனுக்கு வித்தியாசமாய் இருந்தது. அதை அவன் ராகவனிடம் வெளிப்படையாகவே தெரிவித்தான்.

 

ராகவன் சிரித்துக் கொண்டே சொன்னார். “சி எம் சொல்றத பார்த்தா அவர் சொல்ற நேரம் மட்டுமல்ல, ஆளே வித்தியாசமானவர் மாதிரி தான் தெரியிது. சில சமயம் அவர் சொன்ன நேரத்துல போகாட்டி அவர் திருப்பி அனுப்பிச்சுடுவாராம்.”

 

ஷ்ரவன் பரசுராமன் வீட்டருகே மதியம் 2.10 மணிக்கே சென்று விட்டாலும் இரண்டு நிமிடம் வெளியே நின்று விட்டு, சரியாக 2.12க்கு   வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான்.

 

கதவைத் திறந்த பரசுராமனின் தோற்றத்தில் அவருக்குள்ள சிறப்பு சக்திகளின் அறிகுறி எதுவும் இருக்கவில்லை. தலையில் ஒரு காவித் துண்டைக் கட்டியிருந்ததும், நெற்றியில் தடிமனாய் குங்கும நாமத்தை இட்டிருந்ததையும் தவிர அவர் தோற்றத்தில் வித்தியாசமாய் எதுவுமில்லை. நீண்ட நாள் அறிந்த நண்பர் போல் அவனை உற்சாகமாய் வரவேற்றார். ”வா ஷ்ரவன். எப்படி இருக்கே? என்னைப் பத்தின தகவல்கள் எல்லாம் தெரிஞ்சுகிட்டு வந்திருக்கே போலருக்கு

 

ஷ்ரவன் திகைத்தாலும் சுதாரித்துக் கொண்டு புன்னகையுடன் சொன்னான். “அது என் உத்தியோக புத்தி சுவாமிஜி. எங்கே போறதுன்னாலும் சந்திக்கப் போகிற ஆளைப் பத்தித் தெரிஞ்சுகிட்டு போகிறது ஒரு பழக்கமாய் மாறிடுச்சு.”

 

பரசுராமன் சிரித்துக் கொண்டே சொன்னார். “அது நல்லது தான். சரி நான் உன்னைப் பத்தி உனக்கே தெரியாத ஒரு புது தகவல் சொல்லட்டுமா?”


(தொடரும்)

என்.கணேசன்




Thursday, March 21, 2024

சாணக்கியன் 101

 

துர்வேதி என்ற பண்டிதர் தனநந்தனிடம் வந்து சாணக்கியரின் வெற்றியைப் பெருமையாகச் சொன்ன போது ஜீவசித்தி அரசவையில் தான் இருந்தான். அந்தச் சமயத்தில் அவன் உணர்ந்தது வெறும் ஆனந்தம் அல்ல, பரமானந்தம்.  என்ன தான் சாணக்கியர் தங்களது புரட்சிப் படையைப் பற்றி அவனிடம் தெரிவித்தது அவனுக்கு ஓரளவு நம்பிக்கையைத் தந்திருந்த போதும் அவர் உருவாக்கிய படை யவனர்களை வென்று வாஹிக் பிரதேசத்தில் சரித்திரம் படைத்ததை அறிந்த பின் அசைக்க முடியாத நம்பிக்கையை அவர் மீதும் அவர் ஆட்களின் மீதும் ஏற்படுத்தியது. அவரிடம் உள்ள பேரறிவு அனைவரையும் சரியானபடி இயக்கி வெற்றியடைய வைக்க முடிந்தது என்பது நிரூபணமாகி விட்டதால் மகதத்திலும் அந்த அற்புதம் தொடரும் என்பதை அவன் உறுதியாக நம்பினான்.

 

சதுர்வேதி அந்தத் தகவலைச் சொன்னதும் தனநந்தன் முகம் கருத்ததையும், அவரை அனுப்பி விட்டு உடனே அமைச்சர்கள், சேனாதிபுதியுடன் அவசர ஆலோசனை நடத்தியதையும் பார்த்த போது அது சாணக்கியரின் முக்கியத்துவத்தை தனநந்தனும் அறிந்து கொண்ட முதல் தருணமாக ஜீவசித்திக்குத் தோன்றியது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்று அவனுக்குத் தெரியவில்லை. தெரியாவிட்டாலும் கூட அதைத்தொடர்ந்த நாட்களில் ராக்ஷசர் எடுத்த நடவடிக்கைகள் அவரது எச்சரிக்கை உணர்வைத் தெரியப்படுத்தியது.

 

அவர் சாணக்கியர் அடுத்த கட்ட நடவடிக்கையாக இங்கு இரகசியமாகவாவது வரக்கூடும் என்று எதிர்பார்த்து ஒற்றர்களை எச்சரித்திருந்தார். ஒற்றர்கள் எத்தனையோ பேரை சந்தேகித்து சாணக்கியரா என்று சோதித்ததை ஜீவசித்தியும் பார்த்திருக்கிறான். நல்ல வேளையாக சாணக்கியர் அதற்கு முன்பே பாடலிபுத்திரம் வந்து ஜீவசித்தியைப் பார்த்துப் பேசிவிட்டுப் போய் விட்டார்! சாணக்கியர் ராக்ஷசரை முந்திக் கொண்டு சிந்தித்து செயல்படுவதை எண்ணி ஜீவசித்தி வியந்தான்.

 

ராக்ஷசர் அடிக்கடி முக்கிய இடங்களுக்குச் சென்று சோதனை இட்டார். சாணக்கியர் ஏதாவது வேலையாகத் தன் ஆட்களையாவது அனுப்பி வைக்கக்கூடும் என்று அவர் எதிர்பார்த்தார். நகரக் காவல் தலைவனையும், விடுதிக் காப்பாளரையும் வரவழைத்து புதியவர்களைப் பிரத்தியேகமாக எச்சரிக்கையுடன் கவனித்து சந்தேகப்படும்படியானவர்களைப் பற்றி உடனடியாகத் தனக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்.

 

ஆனாலும் பயப்படக் காரணம் ஏதுமிருக்கவில்லை. ஏனென்றால் சாணக்கியர் மிகவும் கச்சிதமாக முன்கூட்டியே தன் ஆட்களின் போக்குவரத்தையும், நடவடிக்கைகளையும் அமைத்திருந்தார். அவர் அனுப்பிய ஆட்கள் வணிகர்களாக வந்து பாடலிபுத்திரலும், பாடலிபுத்திரத்தின் அருகில் உள்ள பகுதிகளிலும் சில நாட்கள் தங்கிச் செல்வது இயல்பாக நடந்தது.

 

சாணக்கியரின் வணிகர்கள் கங்கைக் கரையில் தங்கள் குதிரைகளையும், பயணவண்டிகளையும் கழுவி அங்கேயே சற்று இளைப்பாறுவது அடிக்கடி நடக்க ஆரம்பித்தது. அவர்கள் ஒற்றர்களால் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டாலும் ஒற்றர்கள் அவர்களிடம் தவறு காணும்படியான எந்தச் சம்பவமும் அங்கே நடக்கவில்லை. புதையல் ரகசியத்தை ஒற்றர்களும் அறியாததால் கங்கைக் கரையில் கூடுதல் கவனத்திற்கும், கூடுதல் எச்சரிக்கைக்கும் காரணம் எதுவும் இருக்கவில்லை. சில காலம் கழித்து கங்கைக் கரையில் தங்கி இளைப்பாறும் அந்த வணிகர்களை ஒற்றர்கள் அதிகம் கண்காணிப்பது நின்று போனது. இதையெல்லாம் கவனித்துக் கொண்டு வந்த ஜீவசித்தி திருப்தி அடைந்தான். வழக்கம் போல பல சிறியதும், பெரியதுமான தகவல்களை அவன் சாணக்கியருக்கு அனுப்பிக் கொண்டிருந்தான்.    

 

ஒரு நாள் ராக்ஷசர் அவனை அழைக்கிறார் என்ற தகவல் வந்தது. அவன் துணுக்குற்றாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் உடனடியாகக் கிளம்பினான். அவன் ராக்ஷசரின் அலுவலகத்தை அடைந்த போது காவலன் வெளியறையில் அவனைக் காத்திருக்கச் சொன்னான். உள்ளே ராக்ஷசர் தாழ்ந்த குரலிலேயே பேசிக் கொண்டிருந்தாலும் அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது காது கூர்மையுள்ள ஜீவசித்திக்குத் தெளிவாகக் கேட்டது.

 

ராக்ஷசர் பேசிக் கொண்டிருந்தது ஒற்றர் தலைவனிடம். அவர் சொல்லிக் கொண்டிருந்தார். “.... நான் சமீப காலமாக யாரெல்லாம் நம் தலைநகருக்கு அதிகம் வருகிறார்கள் என்று நம் நகரக் காவலதிகாரியிடம் கேட்டிருந்தேன். அவர் வணிகர்களும் யாத்திரீகர்களும் முன்பை விட அதிகம் வந்து போகிறார்கள் என்று சொல்கிறார். இப்படி ஆட்கள் அதிகம் வந்து போவது மகதத்தின் பொருளாதாரத்திற்கு மிக நல்லது, வளர்ச்சிக்கான அறிகுறி என்றாலும் கூட வந்து போகிறவர்கள் சரியான ஆட்கள் தானா, இல்லை அவர்கள் பெயரில் நம் எதிரிகளின் ஆட்களும் இருக்கக்கூடுமா என்ற சந்தேகம் வருகிறது.”

 

ஒற்றர் தலைவன் சொன்னான். “தாங்கள் கேள்விப்பட்டது போல் வணிகர்களும் யாத்திரீகர்களும் அதிகம் வர ஆரம்பித்திருக்கிறது உண்மையே பிரபு. தாங்கள் முன்பே எச்சரித்ததிலிருந்து நாங்கள் கூடுதலாகப் புதியவர்களைக் கண்காணிக்க ஆரம்பித்திருக்கிறோம். இங்கிருக்கும் போது மட்டுமல்லாமல் இங்கிருந்து அவர்கள் எங்கு போகிறார்கள், போன இடங்களில் என்ன செய்கிறார்கள் என்று கூடக் கண்காணிக்கிறோம்.   வணிகர்கள் இங்கே உண்மையிலேயே பொருட்களை விற்கவும், வாங்கவும் செய்வதையும், தவறான செய்கைகள் எதிலும் ஈடுபடாததையும் எங்களால் பார்க்க முடிந்தது. அது மட்டுமல்ல மகதத்திலிருந்து கலிங்கம், அவந்தி போன்ற அருகிலிருந்த மற்ற தேசங்களுக்கும் சென்று அதே போல வாணிபம் செய்து விட்டுச் செல்கிறார்கள் என்பதையும் பார்த்தோம். அதே போல் யாத்திரீகர்கள் அதிகமாக அருகிலிருக்கும் ஆன்மீகத் தலங்களுக்குச் சென்று வழிபட்டுச் செல்வதையும் பார்க்கிறோம்.”

 

ராக்ஷசர் கேட்டார். “அவர்கள் இங்கு வாணிபத்தோடு சேர்ந்து வேறெதுவும் செய்து விடவில்லையே? மக்களுடன் அதிகம் அளவளாவுவது, அல்லது வீரர்களுடன் தொடர்பில் இருப்பது போன்ற சம்பவங்கள் எதுவும் நடப்பது இல்லையல்லவா?”

 

வீரர்களுடன் அவர்கள் யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை. மக்கள், மற்றும் அதிகாரிகளுடன் கூட அவர்கள் அவசியத்திற்கு அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வதில்லை பிரபு

 

நல்லது. எந்தக் காரணத்தைக் கொண்டும் எச்சரிக்கையை தளர்த்திக் கொள்ள வேண்டாம். இங்கு வருபவர்களில் வாஹிக் பிரதேசப் பகுதிகளிலிருந்து வரும் ஆட்களைக் கூடுதல் எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும். எல்லா ஒற்றர்களிடமும்  சொல்லி வையுங்கள்

 

உத்தரவு பிரபுஎன்ற ஒற்றர் தலைவன் விடைபெற்றான். வரவேற்பறைக்கு வந்து செல்லும் போது ஜீவசித்தியைப் பார்த்து அவன் புன்னகைத்துச் சென்றான். ஜீவசித்தியும் அவனிடம் நட்பாகப் புன்னகைத்து விட்டு ராக்ஷசரைச் சந்திக்கச் சென்றான்.

 

வணக்கம் பிரபுஎன்று தலைவணங்கி நின்ற ஜீவசித்தியை யோசனையுடன் ராக்ஷசர் பார்த்தார். அவருக்கு ஏனோ ஒற்றர் தலைவன் அவ்வளவு உறுதியாகச் சொல்லியும் மனதில் நீங்காமல் இருந்த நெருடலை வகைப்படுத்த முடியவில்லை. ஜீவசித்தியை அவர்கள் கண்கள் பார்த்தனவே தவிர மனம்  ஒற்றர் தலைவன் சொன்ன தகவல்களையே அசை போட்டுக் கொண்டிருந்தது.

 

மனதை திரும்பவும் நிகழ்காலத்துக்கு கொண்டு வந்த அவர் ஜீவசித்தியிடம் சொன்னார். “காவலர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி சொல்ல வேண்டும் ஜீவசித்தி. அவர்கள் வேலை வெறும் காவல் வேலையாக மட்டும் இருந்து விடக்கூடாது. கூடுதலாக, காவல் காக்கும் இடங்களில் வித்தியாசமாக எதாவது நடக்கிறதா என்பதையும், அவர்கள் கவனிக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமாக எதாவது நடந்தால் உடனே தெரிவிக்க வேண்டும் என்று அவர்களிடம் சொல்லி வை. ஒற்றர்கள் எல்லாவற்றையும் கவனித்துச் சொல்வதில் வல்லவர்கள் என்றாலும் கூட, எல்லா இடங்களிலும் அவர்களே இருக்க வழியில்லை. சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய இடங்களில் மட்டுமே அவர்கள் கவனம் செலுத்த முடியுமே தவிர மற்ற இடங்களில் நாம் எல்லோரும் தான் விழிப்பாக இருக்க வேண்டும். மகதத்திற்கு வெளியே இருக்கும் சூழல் திருப்திகரமாக இல்லை. மகதத்தை எதிர்க்கும் வலிமை நம் எல்லைகளைத் தாண்டியுள்ள யாரிடமும் இல்லை என்றாலும் கூட அலட்சியம் நமக்கு என்றும் நல்லதல்ல…”   

 

ஜீவசித்தி பணிவோடு சொன்னான். “புரிகிறது பிரபு

 

மன்னரிடமும், இளவரசர்களிடமும் அனுப்பும் காவலர்கள் அலட்சியமாக இல்லாதிருப்பது மிக முக்கியம். அதே போல் தான் அந்தப்புரத்திற்கும், அரண்மனைக்கும் காவல் பணிக்கு அனுப்பும் காவலர்களையும் பார்த்துத் தான் அனுப்ப வேண்டும். மகாராணிகள், இளவரசி, அரசகுடும்பத்தவர்கள் ஆகியோருக்குப் பல்லக்குத் தூக்கும் காவலர்களும் அப்படியே நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கும்படி பார்த்துக் கொள். எந்தக் காரணத்தைக் கொண்டும் புதியவர்களை இந்தப் பணிக்கு அனுப்ப வேண்டாம்

 

உத்தரவு பிரபு

 

சில காலத்திற்கு முன்பு நம் அரசவைக்கு வந்து மன்னருக்கு எதிராகச் சபதமிட்டுப் போன விஷ்ணுகுப்தர் என்ற அந்தணரைப் பார்த்த  நினைவிருக்கிறதா?”

 

ஜீவசித்திக்கு இயல்பாக இருப்பது பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது. இருந்த போதிலும் யோசிப்பது போலக் காட்டிக் கொண்டு பின் நினைவுபடுத்திக் கொண்டது போலச் சமாளித்துத் தலையாட்டினான். வார்த்தை எதுவும் வாயிலிருந்து எழவில்லை.

 

அந்த மனிதர் தனியாகவோ, மற்றவர்களுடன் சேர்ந்தோ மாறுவேடத்தில் வரும் வாய்ப்பிருக்கிறது. சந்தேகம் வருமானால் சோதித்து அவரைக் கண்டுபிடிப்பது எளிது. அவர் குடுமியை முடிந்திருக்க மாட்டார். இதை ஒற்றர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்றாலும் மற்ற முக்கிய அதிகாரிகளும் கூட நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. நாம் எல்லோரும் மகதத்தின் கண்களாகிக் கண்காணித்துக் கொள்ள வேண்டும்

 

ஜீவசித்தி தலையசைத்தான். அவர் போக அனுமதித்தவுடன் வணங்கி விட்டுக் கிளம்பினான். அவன் வெளியே வந்த பின் நிம்மதியாக மூச்சு விட்டான்.

 

(தொடரும்)

என்.கணேசன்