Thursday, March 28, 2024

சாணக்கியன் 102


சில மனிதர்கள் என்றுமே அதிருப்தியில் இருப்பவர்கள். எந்த நன்மையும் அவர்களை நீண்ட காலத்திற்குத் திருப்திகரமாக இருத்தி விட முடியாது. விரைவிலேயே நன்மைகளை மறந்து அல்லது குறைத்து மதிப்பிட்டு மறுபடி குறைகளை ஆழமாக யோசித்து, துக்கித்து, கோபித்து அனைவரும் தங்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவோ, அலட்சியப்படுத்தி விடுவதாகவோ புலம்ப ஆரம்பித்து விடுவார்கள். ஏதாவது செய்து தங்கள் முக்கியத்துவத்தை ஸ்திரப்படுத்திக் கொண்டுவிட வேண்டும் என்ற துடிப்பும் அவர்களிடம் மேலோங்க ஆரம்பித்துவிடும்.

 

யூடெமஸ் அந்த வகை மனிதன் என்பதை புஷ்கலாவதியில் தங்கியிருந்த அந்த இரண்டு நாட்களில் சசிகுப்தன் கண்டுபிடித்தான். அலெக்ஸாண்டருக்குக் கிடைத்த மரியாதையும், கௌரவமும் அலெக்ஸாண்டரால் சத்ரப்பாக நியமிக்கப்பட்ட தனக்கும் கிடைக்க வேண்டும் என்று யூடெமஸ் எதிர்பார்த்தான். என்றுமே அவன் அலெக்ஸாண்டர் ஆகி விட முடியாது என்பதை யூடெமஸ் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அலெக்ஸாண்டர் மீதே கூட அவன் பாரதத்தில் இருந்த போது அங்குள்ளவர்களுக்கு இருந்த பயம் அவன் பாரதத்தை விட்டுப் போன பிறகு இருக்கவில்லை. தொலைவில் செல்லச் செல்லச் செல்லரித்துப் போன அந்தப் பயம் அவன் இறந்த பின் எள்ளளவும் இல்லாமல் போய் விட்டது. நிலைமை இப்படி இருக்கையில் அலெக்ஸாண்டரின் இரண்டு சத்ரப்களில் ஒருவன் என்ற அதிகாரத்திற்குப் பெரிய மரியாதை எதிர்பார்க்க ஒன்றுமில்லை என்று மறைமுகமாகவும், கோடி காட்டியும் சொல்லிப் பார்த்த சசிகுப்தன் யூடெமஸின் காதுகள் கேட்க விரும்புவதை மட்டுமே கேட்கும் விசேஷத் தன்மை வாய்ந்தவை என்று இறுதியாக உணர்ந்தான்.

 

அதனால் இவனுக்கு அறிவுரை சொல்லி தன்னுடைய சக்தியை இனி விரயமாக்கக் கூடாது என்று சசிகுப்தன் முடிவு செய்தான். ஆனால் யூடெமஸ் அவ்வப்போது அதிகம் யோசிப்பதையும் ஏதோ திட்டமிடுவதையும் பார்த்த போது அது என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் சசிகுப்தனுக்கு அதிகரித்தது.

 

வரவர யூடெமஸும் அலெக்ஸாண்டராகிக் கொண்டு வருவது போல் எனக்குத் தோன்றுகிறதுஎன்று சசிகுப்தன் மெல்லச் சொன்னான்.  

 

அவனை அலெக்ஸாண்டருடன் ஒப்பிட்டுப் பேசியதில் மட்டற்ற மகிழ்ச்சியை உணர்ந்த யூடெமஸ் கேட்டான். “ஏன் அப்படிச் சொல்கிறாய் சசிகுப்தா?”

 

அலெக்ஸாண்டரும் ஏதாவது திட்டம் தீட்டும் போது இப்படித் தான் ஆழமாய் யோசித்தபடி உட்கார்ந்திருப்பதை நான் பல முறை பார்த்திருக்கிறேன். முடிவில் ஒரு அருமையான திட்டம் உருவாகியிருக்கும்.”

 

சசிகுப்தன் சொன்னதைக் கேட்டுப் பெருமையாகப் புன்னகைத்த யூடெமஸ் மெல்லக் கேட்டான். “சசிகுப்தா நான் கேட்டதில் மற்றவற்றைத் தராவிட்டாலும் கூடப் பரவாயில்லை. குறைந்தபட்சம் யானகளையாவது புருஷோத்தமன் அனுப்பியிருக்கலாம். கேகயப்படையில் எத்தனை யானைகள் இருக்கலாம் என்பது உன் அனுமானம் சசிகுப்தா?”

 

ஆயிரத்திற்கு மேலிருக்கும்

 

அதில் பாதியையாவது அவன் எனக்கு அனுப்பியிருக்க வேண்டும். புஷ்கலாவதியில் சத்ரப்பாக நான் ஆட்சி நடத்த வேண்டும் என்று சொன்னால் குறைந்தபட்ச கௌரவமாவது எனக்கு வேண்டாமா? குதிரைகள், வீர்ர்கள் எல்லாம் ஏற்கனவே என்னிடமிருக்கின்றன. யானைகளும் இருந்தால் தானே சிறப்பாக இருக்கும்

 

உண்மை தான்என்று சசிகுப்தன் சொல்லி வைத்தான்.

 

இதை எல்லாம் கடிதம் அனுப்பிக் கேட்டுக் கொண்டிருந்தால் ஒரு பயனும் இல்லை. அதனால் நானே நேரில் கேகயத்திற்குப் போவது என்று முடிவு செய்திருக்கிறேன் சசிகுப்தா. என் அதிகாரத்திற்குற்பட்ட பகுதியைப் பார்வையிட்டு வந்த்து போலவும் இருக்கும். நான் யார் என்பதை அவர்களுக்கு உணர்த்தியது போலிருக்கும்

 

உன் மீது அவர்கள் தெரியாமல் வைத்திருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையையும் நீ இழந்து விடப்போகிறாய்என்று மனதிற்குள் எண்ணியதை சசிகுப்தன் வாய் விட்டுச் சொல்லவில்லை. தலையை மட்டும் அசைத்தான்.

 

எதிராகக் கருத்து தெரிவிப்பதை சசிகுப்தன் நிறுத்திக் கொண்டது யூடெமஸுக்குத் திருப்தியாக இருந்தது. அவன் சசிகுப்தனிடம் கேகயத்தின் யானைப் படை பற்றிச் சொல்லச் சொன்னான். அலெக்ஸாண்டரே கேகயத்தின் யானைப்படையைப் பார்த்து பிரமித்ததாக யூடெமஸ் கேள்விப்பட்டிருக்கிறான். அந்தப் போரின் போது சசிகுப்தனும் அலெக்ஸாண்டரோடு இருந்தவன் என்பதால் அவன் வாயால் கேட்பது சரியாக இருக்கும் என்று யூடெமஸ் நினைத்தான்.


சசிகுப்தன் சொல்லச் சொல்ல யூடெமஸ் விழிகளில் தெரிந்த ஏதோ ஒன்று ஆபத்தானதாக சசிகுப்தனுக்குத் தோன்றியது.  வாய் விட்டுச் சொல்லாத ஏதோ ஒரு சதித்திட்டம் இவன் மனதில் உருவாகியிருக்கிறது என்று உள்ளுணர்வு எச்சரித்தது. அலெக்ஸாண்டரே புருஷோத்தமனிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டான், பலகாலப் பகையிருந்தும் சத்ரப் ஆக பதவி கிடைத்தும் கூட ஆம்பி குமாரன் கூட புருஷோத்தமனிடம் பிறகு பிரச்னை செய்யப் போகவில்லை. ஆனால் புருஷோத்தமனுக்கு யூடெமஸ் மூலம் பிரச்சினை உருவாகப் போகிறது என்று தோன்றியது. பழைய நட்பை நினைவில் கொண்டு புருஷோத்தமனை எச்சரிக்க நினைத்த சசிகுப்தன் யூடெமஸிடமிருந்து விடைபெற்று புஷ்கலாவதியிலிருந்து வெளியேறியவுடன் முதல் வேலையாக புருஷோத்தமனுக்கு ஒற்றன் மூலமாக ஒரு கடிதம் அனுப்பி வைத்தான்.

 

நண்பரே, தங்களது புதிய யவனத் தலைவன் வெகுசீக்கிரம் அங்கு வரவிருக்கிறான். அவன் சூழ்ச்சிக்காரன் என்பதால் மிக எச்சரிக்கையாக இருக்கவும். அவனை எக்காரணம் கொண்டும் குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம்.”

 

யாருக்கு யார் அனுப்பியது என்ற குறிப்பில்லாமல், எந்த முத்திரையும் இல்லாமல், கடிதத்திற்குள்ளூம் எந்தப் பெயரும் இல்லாமல், இது போன்ற பொதுவான வார்த்தைப் பிரயோகங்கள் கொண்ட கடிதம் புரிய வேண்டியவர்களுக்குப் புரியும். ஒருவேளை இடையில் வேறு ஒருவர் கையில் கடிதம் சிக்கினாலும் எந்தப் பிரச்னையுமில்லை.  சசிகுப்தன் தன்னால் முடிந்த எச்சரிக்கையைச் செய்திருக்கும் திருப்தியுடன் பயணத்தைத் தொடர்ந்தான்.

 

 

பொதுவாகத் தூதர்கள் கடிதம் அல்லது தகவல் கொண்டு வந்தால் பதில் கடிதம் அல்லது தகவல் வாங்கிக் கொண்டே செல்வது வழக்கம். சசிகுப்தன் அனுப்பியதாகச் சொல்லி கடிதத்தை புருஷோத்தமனிடம் தந்த ஒற்றன் பதில் எதற்கும் காத்திராமல் விடைபெற்றான். கடிதத்தில் சசிகுப்தனின்  முத்திரை எதுவும் இல்லை. இரண்டுமே புருஷோத்தமனை ஆச்சரியப்படுத்தின. அந்தச் சுருக்கமான கடிதத்தைப் படித்த அவர் குழப்பத்துடன் அந்தக் கடிதத்தை இந்திரதத்திடம் தந்தார்.

 

கடிதத்தைப் படித்த இந்திரதத்திடம் புருஷோத்தமன் சொன்னார். “எல்லாமே குழப்பமாகவே இருக்கிறதே. சசிகுப்தன் அனுப்பியது தானா இது? “

 

இந்திரதத் புன்னகையுடன் சொன்னார். “சசிகுப்தனின் முத்திரை கடிதத்தில் இல்லாத போதும் சசிகுப்தனின் பாணி கடிதத்தில் தெளிவாகவே இருக்கிறது அரசே”

 

“யூடெமஸ் பற்றி தான் சசிகுப்தன் எச்சரிக்கிறான் என்று நினைக்கிறேன். ஆனால் எச்சரிக்குமளவு சசிகுப்தனுக்கு என்ன தகவல் கிடைத்தது, எப்படிக் கிடைத்தது என்ற தகவல் எல்லாம் இல்லையே”

 

“புஷ்கலாவதிக்கு சசிகுப்தன் சென்றிருக்கலாம். அங்கு அவன் கேள்விப்பட்டதோ, அறிந்ததோ நம்மை எச்சரிக்கத் தூண்டியிருக்கலாம். கேள்விப்பட்டதை எல்லாம் கடிதத்தில் எழுதுவதும் ஒரு ஆளிடம் சொல்லி அனுப்புவதும் இன்றைய சூழ்நிலையில் உகந்தது அல்லவே”

 

”அலெக்ஸாண்டரையே எதிர்த்துச் சமாளித்தவன் நான். அலெக்ஸாண்டருக்கே நான் பயந்தது கிடையாது. அப்படி இருக்கையில் யூடெமஸிடம் நான் பயப்படுவேனா என்ன?”

 

”அரசே, சசிகுப்தன் மகாபுத்திசாலி. அலெக்ஸாண்டர் பாரசீகத்தை வென்ற காலத்திலிருந்து இங்கே வரும் வரை தன்னுடனேயே அவனை இருத்திக் கொண்டது அவன் வீரத்திற்காக என்று சொல்வதை விட அவனுடைய நுண்ணறிவுக்காக என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். பாரசீகத்தில் மறுபடி பிரச்னை எதோ வெடித்த போதும் சசிகுப்தன் அங்கு செல்வது நிலைமையைச் சமாளிக்க உதவும் என்று நம்பியே சசிகுப்தனை அங்கே அனுப்பி வைத்தான். அப்படிப்பட்ட ஒருவன் சரியான காரணமில்லாமல் இப்படி ஒரு எச்சரிக்கையை நமக்கு அனுப்பி வைத்திருக்க மாட்டான். அதனால் நாம் மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது.”

 

”அரசன் அரியணை ஏறிய கணத்திலிருந்தே எச்சரிக்கையாக இருக்க வேண்டியவன் தான் இந்திரதத். ஏனென்றால் அந்தக் கணத்திலிருந்தே ஆபத்துகள் அவனைச் சூழ ஆரம்பித்து விடுகின்றன. ஆனால் பயந்து பயந்து வாழ்வதிலும் அர்த்தமில்லை. வருவது எதுவாக இருந்தாலும் அவன் அதைச் சந்தித்தே ஆக வேண்டும்”

 

ஆபத்து மூன்று நாட்களில் வந்து சேர்ந்தது.

 

(தொடரும்)

என்.கணேசன்   


1 comment:

  1. ஒருமுறை ஆம்பிக்குமாரனுக்கு பாடம் புகட்டி நட்பின் காரணமாக மன்னித்து விட்டனர்.... அதேபோல் யூடெமஸ்க்கு பாடம் புகட்டி தண்டிக்கப் போகிறார்கள்...

    ReplyDelete