Monday, March 18, 2024

யோகி 41

சேதுமாதவன் வீட்டு மாடியில் இரண்டு அறைகள் இருந்தன. ஆனால் சேதுமாதவன் சொல்லாமலேயே  பரசுராமன் சரியாக சைத்ராவின் அறைக்குள் நுழைந்தார். உள்ளே நுழைந்தவர் அங்கும் கண்களை மூடிக் கொண்டு ஒரு நிமிடம் நின்றார். பின் மெல்ல கண்களைத் திறந்தவர் சேதுமாதவனிடம் கேட்டார். “உங்க பேத்தி கிட்ட இருந்து என்ன தெரிஞ்சுக்க விரும்பறீங்க?”

 

சேதுமாதவன் திகைத்தார். பின் சொன்னார். “அவ எதையெல்லாம்  என் கிட்ட சொல்லணும்னு நினைக்கிறாளோ அதையெல்லாம் தெரிஞ்சுக்க விரும்பறேன்

 

பரசுராமன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து மறுபடியும் நேரத்தைக் குறித்துக் கொண்ட மாதிரி இருந்தது. பின் சைத்ரா எப்போதும் அமரும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு எதிரே இருந்த அவளுடைய கட்டிலில் அமரும்படி சேதுமாதவனிடம் கைகாட்டினார்.

 

சேதுமாதவன் பரபரப்புடன் கட்டிலில் அமர்ந்து கொண்டார். மறுபடி பரசுராமன் கண்களை மூடிக் கொண்டார். காலம் மெல்ல நகர்ந்தது. பரசுராமன் உறங்கி விட்டாரோ என்று ஒரு கட்டத்தில் சேதுமாதவனுக்கு சந்தேகம் வந்தது. ஆனால் சிலை போல் உட்கார்ந்து யாரும் உறங்க  முடியாது என்பதால் பரசுராமன் உறங்கியிருக்க வழியில்லை. மேலும், அவருடைய தலையும் தொய்வில்லாமல் நேராகவே இருந்தது.

 

சேதுமாதவன் சுவரில் இருந்த பேத்தியின் படத்தை, பாசத்துடன் பார்த்தார். நிஜமாகவே பேத்தியிடமிருந்து எதாவது செய்தி அவருக்கு, பரசுராமன் மூலம் கிடைக்குமா? பரசுராமனுக்கு நிஜமாகவே ஆவிகளைத் தொடர்பு கொள்ளும் சக்தி இருக்கிறதா? ஒன்றும் தெரியவில்லை. ஆனால் அவருக்குப் பரபரப்பாக இருந்தது.

 

நாற்பத்தியெட்டு நிமிடங்கள் கழிந்த பின் பரசுராமனின் உதடுகள் லேசாக அசைந்தன. ”தாத்தா…?” குரல் மிகவும் தாழ்ந்திருந்தது.

 

சேதுமாதவனின் உடலில் மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது. அவர் காதில் கேட்டது அவருடைய பேத்தியின் குரல் தான்…. அவரால் நம்ப முடியவில்லை. கனவா இது என்ற சந்தேகம் எழுந்தது. இல்லைகனவில்லை…. நிஜம் தான்…. அவருடைய கைகளில் மயிர்க்கூச்செறிந்தது. கண்களில் நீர் மல்க, குரல் உடைய அவர் சொன்னார். “சைத்ரா

 

மிகவும் சன்னமாக சைத்ராவின் குரல் ஒலித்தது. “தாத்தாநீங்க யோகியை ஒரு தடவையாவது…. சந்திக்கணும்…..”

 

சேதுமாதவன் திகைத்தார். பின் மெல்லக் கேட்டார். “பிரம்மானந்தாவையா?”

 

அப்படி சேதுமாதவன் கேட்டதை சைத்ராவின் ஆவி அபத்தமாக நினைத்தது போலிருந்தது.

 

உடனே பதில் வந்தது. “அவரில்லை தாத்தா.... இவர் நிஜமான யோகி. ரகுராமன் அவர் பெயர். நீங்க கண்டிப்பா ஒரு தடவையாவது அவரைச் சந்திக்கணும்....” குரல் தாழ்ந்து இருந்தாலும் உணர்வு பூர்வமாக இருந்தது.

 

சேதுமாதவனுக்கு என்ன நினைப்பது என்று தெரியவில்லை. அவர் எதை எதிர்பார்த்திருந்தாலும், கண்டிப்பாக இதை எதிர்பார்க்கவில்லை. கொலை செய்தவர்கள் பற்றியும், அதற்கான காரணம் பற்றியும் தான் சைத்ராவின் ஆவி அவரிடம் தெரிவிக்கும் என்று தான் நினைத்திருந்தார். அதற்குச் சம்பந்தமில்லாத இதை ஏன் சைத்ரா அவரிடம் சொல்ல வேண்டும் என்று அவருக்குப் புரியவில்லை. தவறி வேறு எதாவது ஆவி பரசுராமனிடம் வந்து விட்டதா என்று நினைக்கவும் வழியில்லை. காரணம், பேசிய குரல் சைத்ராவின் குரல் தான். மேலும், அவள் உயிரோடு இருக்கையில் மிக உயர்வாக எதையாவது நினைத்துப் பேசும் போதெல்லாம்  இந்தத் தொனியில் தான் பேசுவாள்.

 

“... அவரை நான் பார்த்தப்ப முதல்ல நினைச்சது உங்களைத் தான் தாத்தா. அவரைச் சந்திச்சா நீங்க ரொம்ப பரவசமாவீங்கன்னு தோணுச்சு....”

 

சேதுமாதவன் தலையசைத்தார். கொலையைப் பற்றியும், கொலைகாரர்கள் பற்றியும்  அடுத்ததாகச் சொல்வாளோ என்னவோ...

 

உங்க அன்புக்கும்,  உங்க நல்ல மனசுக்கும் தேங்க்ஸ் தாத்தா.. நான். போறேன்... பை பை

 

சைத்ராவின் ஆவி கடைசியாய் சொன்னதைக் கேட்டு அவர் கண்கள் தானாகக் கலங்கின என்றாலும் அவள் முக்கியமான எதையும் சொல்லாமல் போய் விட்டதில் அவர் ஏமாற்றமடைந்தார். ஒரு கணம் வாயடைத்துப் போன அவர் சுதாரித்துக் கொண்டு பதற்றத்துடன் அவசரமாக, கொலை பற்றிக் கேட்க வாயைத் திறப்பதற்குள் பரசுராமன் கண்களைத் திறந்து இயல்பு நிலைக்குத் திரும்ப வந்து விட்டார். 

 

பரசுராமன் முதலில் பார்த்தது கைக்கடிகாரத்தைத் தான். அந்த நேரத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அவர் சிறிது நேரம் மனதில் எதையோ கணக்குப் போடுவது தெரிந்தது. பின் ஏதோ முடிவுக்கு வந்த பரசுராமன், அதைச் சொல்லாமல், சேதுமாதவனிடம்  ஆர்வமாகக் கேட்டார். “உங்க பேத்தி என்ன சொன்னா?”

 

சேதுராமன் குழப்பத்தோடு அவரைப் பார்த்தார். ’இவர் மூலமாகத் தானே சைத்ரா பேசினாள்? பின் ஏன் இவர் தெரியாதது போல் கேட்கிறார்?’

 

அவர் பார்வையிலிருந்து அவர் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு, பரசுராமன் சொன்னார். “ஒரு ஆவியோட ஊடகமாய் மாறிய பிறகு, அந்த உடலுக்கும், உயிருக்கும் ஆபத்து வந்தால் ஒழிய, நடக்கிறது எதுவும் அந்த ஆவி ஊடக மனிதனுக்குத் தெரிய வராது.”

 

சேதுமாதவன் சைத்ராவின் ஆவி சொன்னதை எல்லாம் பரசுராமனிடம் தெரிவித்து விட்டு வருத்தத்துடன் சொன்னார். “... யார் கொலை செஞ்சாங்க, என்ன காரணம், என்ன நடந்துச்சுன்னு கேட்கறதுக்குள்ளே  நான் போறேன்.... பை.. பைன்னு சொல்லிட்டா

 

பரசுராமன் சொன்னார். “அவ எதையெல்லாம்  உங்க கிட்ட சொல்லணும்னு நினைக்கிறாளோ அதையெல்லாம் தெரிஞ்சுக்க விரும்பறதா சொன்னீங்க... அவளும் அப்படியே சொல்லணும்னு ஆசைப்பட்டதை சொல்லிட்டுப் போயிட்டா. நீங்க இப்ப கேட்க நினைக்கிறதை முதல்லயே கேட்க ஆசைப்பட்டிருந்தா அவ அதைச் சொல்லியிருக்கலாம்...”

 

சேதுமாதவன் கேட்டார். “அப்படின்னா, மறுபடியும் அவளைக் கேட்கலாமா?”

 

தலையசைத்த பரசுராமன் கண்களை மூடி மறுபடி சைத்ராவின் ஆவியைத் தொடர்பு கொள்ள முயன்றார்.  பின் இரண்டு நிமிடங்கள் கழித்து மெல்ல கண்களைத் திறந்து சேதுமாதவனிடம் இரக்கத்துடன் சொன்னார். “அவ ஆவி போயாச்சு. இனி எதுவும் அவ கிட்ட நீங்க கேட்க முடியாது. ஏன்னா அவளுக்கு பழைய வாழ்க்கையோட கணக்குல எதுவும் பாக்கியில்லாமல், பூஜ்ஜியமாயிடுச்சு போலத் தெரியுது. அவபை பைசொன்னது இந்த தடவை வந்துட்டு போனதுக்கல்ல. ஒட்டு மொத்தமாவே சொல்லிட்டு போயிருக்கா.”

 

சேதுமாதவன் திகைத்தார். “அவ ஏன் அந்தக் கொலை பத்தி எதுவும் சொல்லலை?”

 

அந்த யோகியைப் பத்தி சொன்ன தகவல் அளவுக்கு அந்தக் கொலை பத்தின தகவல் முக்கியமில்லைன்னு அவ நினைச்சிருக்கலாம்...” என்று சொன்ன பரசுராமனுக்கு இனி அந்த இருக்கையில் அமர்ந்திருப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது. அவர் மெல்ல எழுந்து அந்த அறையை விட்டு வெளியே வந்தார்.

 

அவரைப் பின் தொடர்ந்து வந்த சேதுமாதவனுக்கு அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளைக் கொலை செய்தவர்கள் பற்றிய தகவலை விட அந்த யோகியைப் பற்றிய தகவல் எப்படி கூடுதல் முக்கியமாக முடியும்? அந்தத் தகவல் எதுவும் சொல்லாமல் எப்படி அவள் பழைய கணக்குகள் பூஜ்ஜியமாக முடியும்? இருவரும் படியிறங்கிக் கீழே வருகையில் தன் அந்தச் சந்தேகத்தை சேதுமாதவன் வெளிப்படையாகவே பரசுராமனிடம் கேட்டார்.

 

பரசுராமன் ஹாலிலிருந்த சோபாவில் அமர்ந்தபடி அமைதியாகச் சொன்னார். “இறந்த பிறகு ஆத்மாவோட முக்கியத்துவங்க மாறிடுது. வாழும் போது மனுஷனுக்கு முக்கியமாய் தெரியற விஷயங்கள், இறந்த பிறகு முக்கியமாய் தெரியறதில்லை. நேசிக்கறவங்களுக்கு ரொம்ப முக்கியமானது எதையாவது தெரியப்படுத்தணும்னு அந்த ஆவி நினைக்கற வரைக்கும் ஏதாவது வகையில அவங்கள சுத்திகிட்டிருக்கும். அல்லது அது செய்ய ஆசைப்பட்ட விஷயம் எதாவது இருந்து, இறந்த பிறகும் அந்த முக்கியத்துவம் அதே அளவுல குறையாம இருந்துச்சுன்னாலும், அதைச் செய்ய வைக்க ஏதாவது முயற்சி எடுக்கும். ஆனா எல்லா வேலையும் முடிஞ்சுதுன்னு உணர்ந்தா அதற்கப்புறம் அது இருக்கறதில்லை...”

 

சேதுமாதவனும் அவருக்கெதிரே அமர்ந்தபடி அவர் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டார். ஆனால் பரசுராமன் சொன்னது, தன் பேத்தி விஷயத்தில் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று அவருக்கு இப்போதும் தோன்றியது. அவர் யோசனையோடு பரசுராமனிடம் சொன்னார். “என் பேத்தி எப்பவுமே நீதிக்காகப் போராடறவ. அநீதியோ, அயோக்கியத்தனமோ எங்கே நடந்தாலும் அவளால அதைச் சகிச்சுக்க முடியாது. அப்படி இருக்கறப்ப, அவள் கொல்லப்பட்டதையே அவளால் எப்படி சகிக்க முடியும்? அந்தக் கொலைக்கான தகவல்களைச் சொல்றதை முக்கியமில்லாததாய் எப்படி விட்டுட முடியும்?”


(தொடரும்)

என்.கணேசன்



 

3 comments:

  1. யோகி ரகுராமனிடமே அவள் மரணம் பற்றிய ரகசியமும் அடங்கியிருக்குமோ?

    ReplyDelete
  2. அப்போ சைத்ரா இறப்பு உண்மைதானா?

    நான் 40 அத்தியாயமாக ரொம்ப நம்பினேன், சைத்ராவ மறைச்சு வைத்திருக்கிறார்களோனு..

    ஒரு குடும்பமே சிதைந்துவிட்டது...

    ReplyDelete
  3. 'நல்லவரான சேதுமாதவனுக்கு இந்த கடைசி காலத்தில் எதற்கு இப்படிப்பட்ட துன்பம்?' என்ற வினா இருந்தது...
    அவர் யோகி ரகுராமனை சந்திப்பதன் மூலம் முழுமை பெறுவதற்கு...தான் இயற்கை அவரை இருத்தி வைத்துள்ளது என நினைக்கிறேன்.....

    ReplyDelete