Monday, March 11, 2024

யோகி 40

 

யோகாலயத்து முக்கியஸ்தர்களை நினைக்கையில் செல்வத்துக்குத் தன் நிலைமை மிகப் பரிதாபமாகத் தோன்றியது. நாம் மட்டும், எவன் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஒரு புகார் கடிதத்தோடு வந்து நம் எதிரேயே நிற்கலாம் என்ற நிலையில் இருக்கிறோமே என்று அவர் மனம் நொந்த போது, ஒரு ஏழைப் பெண் கையில் ஒரு காகிதத்துடன் அவர் அறை வாசலில் நின்றாள்.   எரிச்சலுடன்போய் உட்கார்என்று அவளிடம் சைகையால் தெரிவித்து விட்டு செல்வம் யோகாலயத்துக்குப் போன் செய்தார்.

 

போனில் பேசிய துறவியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுபாண்டியன் சாரிடம் பேச வேண்டும்என்று செல்வம் தெரிவித்த போது, அந்தத் துறவி, “சார் பிசியாய் இருக்கார். என்ன விஷயம்னு சொன்னீங்கன்னா அவர் ஃப்ரியாய் இருக்கறப்ப தெரிவிக்கிறேன்என்றார்.

 

இந்த நாய்களுக்கு எத்தனை பெரிய உதவியை எல்லாம் நான் செய்திருக்கிறேன். அந்த நன்றி விசுவாசம் இதுகளுக்கு இப்போதில்லையே.  மேனேஜர் சார் பிசியாம். இவன் கிட்ட விஷயத்தைச் சொன்னால் அவன் ஃப்ரியாய் இருக்கறப்ப தெரிவிப்பானாம். எல்லாம் என் நேரம்...’ என்று மனதுக்குள் வெடித்த செல்வம் கோபத்தை உள்ளே அமுக்கியபடி பணிவான குரலில் சொன்னார். “எனக்கு திடீர்னு தூத்துக்குடிக்கு ட்ரான்ஸ்ஃபர் செஞ்சுட்டாங்க. ஒரு வாரத்துக்குள்ளே அங்கே ரிப்போர்ட் பண்ணச் சொல்லி இருக்காங்க. யோகிஜி மனசு வெச்சு சி எம் கிட்ட பேசினா அதை கேன்சல் பண்ணலாம். அதான்...”

 

சரிங்க. நான் மேனேஜர் சார் கிட்ட சொல்றேன்.”

 

நான் திரும்ப எப்ப போன் பண்ணட்டும்?”

 

நாளைக்குப் பண்ணுங்களேன். அதுக்குள்ளே நான் கேட்டு சொல்றேன்

 

அந்தத் துறவி ரிசீவரை வைத்து விட்டார். 

 

நாளைக்கா?’ நன்றி கெட்ட உலகம் என்று நினைத்து செல்வம் மனம் கொதித்தார்.

 

யோகாலயத்தில் அன்று வந்திருந்த முக்கியமான அழைப்புகள் மற்றும் தகவல்கள் கொண்ட அறிக்கையை மேனேஜர் பாண்டியனின் மேஜையில் வைக்கச் சென்ற போது தான் அந்தத் துறவி, இன்ஸ்பெக்டர் செல்வம் அழைத்துச் சொன்ன வேண்டுகோளை அவரிடம் தெரிவித்தார்.

 

பாண்டியன் அந்த வேண்டுகோளை அலட்சியத்துடன் கேட்டுக் கொண்டார். அவரைப் பொருத்தவரை எந்தவொரு வேலைக்கும் கூலியைத் தாராளமாகவே தந்துவிடுவார். அதற்கு மேலும் அந்த வேலையின் அடிப்படையில் கூடுதலாக யாரும் எதையும் எதிர்பார்ப்பது அவருக்குப் பிடித்தமானதல்ல. இன்ஸ்பெக்டர் செல்வம் அவர்களுக்குச் செய்துவரும் சலுகைகளுக்கு அவ்வப்போது பணம் தாராளமாகத் தரப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அப்பகுதி இன்ஸ்பெக்டர் என்பதால் மாதா மாதம் ஒரு தொகையும் தரப்படுகிறது. அந்த ஆள் தூத்துக்குடிக்குப் போவதில் யோகாலயத்துக்கு எந்த நஷ்டமும் இல்லை. அந்தப் போலீஸ் ஸ்டேஷனுக்கு வேறு ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வரத்தான் போகிறார். புதிதாய் வருபவருக்கும் பணத்தேவை கண்டிப்பாக இருக்கும். தொடர்ச்சியாய் கூடுதல் வருமானம் வருவதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? பணத்தை தாராளமாக வீசினால் அவரும் அனுசரித்துப் போகப் போகிறார்.

 

மேலும் சைத்ரா விஷயத்தில் ஏற்பட்ட தவறு இன்னொரு முறை யோகாலயத்தில் ஏற்படப்போவதில்லை. ஒரு தவறைச் செய்து, அதிலிருந்து பாடம் கற்ற பின்னும், அதே தவறை மீண்டும் ஒரு முட்டாள் மட்டுமே செய்ய முடியும். அதனால் போலீஸாரின் கூடுதல் தயவு இப்போதைக்கு அவசியமில்லை...

 

பாண்டியன் தன் மேஜையில் வைக்கப்பட்டிருந்த தகவல்களைப் பார்த்தார். அவர் தலையிட்டுத் தீர்மானிக்க வேண்டியது எதுவும் அவற்றில் இருக்கவில்லை.  கண்களை மூடியபடி சிறிது நேரம் அமர்ந்திருந்தவர் மனதில் ஒரே ஒரு நெருடல் தான் இப்போதும் இருக்கிறது. யோகாலயத்தில் இருக்கிற கருப்பு ஆட்டை இன்னமும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. கருப்பு ஆடு உஷாராகி விட்டது போல் தோன்றியது. அது ஏதாவது நடவடிக்கையில் இறங்கினால் அதை அடையாளம் கண்டுபிடிப்பது சுலபம். அதை அறிந்து அது மிக எச்சரிக்கையுடன் பதுங்கியே இருக்கிறது. யார் அது?...   

 

செல்வத்தின் வேண்டுகோளுக்கு ஏதாவது ஒரு பதில் சொல்ல வேண்டும் என்று கூட பாண்டியன் நினைக்கவில்லை என்பதை அந்தத் துறவி உணர்ந்தார். ஆனால் செல்வம் நாளை திரும்பவும் போன் செய்வதாகச் சொல்லியிருப்பதால், அந்தத் துறவியே பாண்டியனிடம் கேட்டார். “அந்த இன்ஸ்பெக்டர் நாளைக்குப் போன் செய்யறதாய் சொல்லியிருக்கார். அவருக்கு நான் என்ன சொல்லட்டும்?”

 

பாண்டியன் சொன்னார். “சி எம் ஆபரேஷன் முடிஞ்சு வந்து ரெஸ்ட்ல இருக்கறதால அவர் கிட்ட போன்லயே கூடப் பேச முடியாத நிலைமை இருக்கு. அதனால இப்போதைக்கு எதுவும் செய்யறதுக்கில்லைன்னு சொல்லிடுங்க.”

 

அந்தத் துறவி தலையசைத்து விட்டு நகர்ந்தார்.  

 

ரசுராமனைப் பற்றிய முக்கிய விவரங்களை சேதுமாதவனிடம் அருணாச்சலம் போனில் தெரிவித்து விட்டுச் சொன்னார். “அவன் ரொம்ப வித்தியாசமானவன் சேது. அவன் நடந்துக்கறதும் ரொம்ப வினோதமாய் இருக்கும். ஆனா திறமையானவன். மாந்திரீகம், ஆவி சம்பந்தமான விஷயங்கள்ல அவன் தான் நம்பர் ஒன்னுன்னு பலரும் சொல்றதைக் கேட்டிருக்கேன். உன் குடும்பத்துல நடந்ததை எல்லாம் அவன் கிட்ட நான் சொல்லியிருக்கேன். அவன் மூலமாய் நமக்கு எதாவது தெரிய வருதான்னு பார்ப்போம். அவன் நாளைக்கு உன் வீட்டுக்கு வருவான். எந்த நேரம் வருவான்கிறதை அவனே போன் செஞ்சு சொல்வான். அவன் சொல்றபடி செய். அவன் என்ன செஞ்சாலும் ஆச்சரியப்படாதே.... அவன் வந்துட்டு போனவுடன எனக்குப் போன் பண்ணுஅதற்கு மேல் அருணாச்சலம் எதையும் சொல்லவில்லை.

 

அன்றிரவு பரசுராமன் சேதுமாதவனை போனில் அழைத்துப் பேசினார். முதல்வரின் தாய்மாமனின் மகன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் சொன்னார். “மச்சான் உங்களைப் பத்தி என்கிட்ட ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடியே சொல்லியிருக்கார். சமீபத்துல நடந்ததையும் சொன்னார்.  அவர் மாதிரியே நானும் வருத்தப்பட்டேன். ஆனால் தொடர்ந்து கஷ்டத்தைக் கொடுத்த கடவுள் அதைத் தாங்கற மனோ தைரியத்தையும் உங்களுக்கு கொடுத்திருக்கறது ஆறுதலாயிருக்கு.... நாளைக்கு ராத்திரி மணி ஏழு நாற்பத்தி ஏழுக்கு நான் உங்க வீட்டுக்கு வர்றேன். அந்த சமயத்துல உங்க வீட்டுல உங்களைத் தவிர வேற யாரும் இல்லாமலிருந்தா நல்லது. அதோட, நான் வர்றதும் யாருக்கும் தெரியாமல் இருந்தால் நல்லது.”

 

7.47 என்று துல்லிய நேரத்தை அவர் சொன்னதும், அவர் வருவது மற்ற யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொன்னதும் சேதுமாதவனுக்குப் புதிராய் இருந்தது. ஆனால் அவர் அதற்கு விளக்கம் கேட்கவில்லை. அந்த நேரம் பெரும்பாலும் அவர் வாக்கிங் போய் திரும்பி வந்து அமீர்பாய் மற்றும் மைக்கேலுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் நேரம்...

 

மறுநாள் மாலை வாக்கிங் போகும் போது, ஏழரை மணிக்கு வீட்டுக்கு தூரத்து உறவினர் வரப்போவதாக நண்பர்களிடம் சொன்னார். அதனால் அவர்கள் இருவரும் வாக்கிங் முடிந்தபின் அவர் வீட்டுக்கு வராமல் அவரவர் வீட்டுக்கே போய் விட்டார்கள்.

 

சேதுமாதவன் பரசுராமனுக்காக ஆர்வத்துடன் காத்திருந்தார். சரியாக 7.46க்கு அவர் வீட்டுக்கு வெளியே பரசுராமனின் கார் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கி அவர் வீட்டுக்குள் நுழைந்த போது நேரம் சரியாக 7.47 ஆக இருந்தது. பரசுராமன் காவி உடை அணிந்திருந்தார். தலையில் காவித் துணி கட்டியிருந்தார். நெற்றியில் நீளவாக்கில் குங்குமம் இட்டிருந்தார். 

 

பரசுராமன் சேதுமாதவனைப் பார்த்து கைகூப்பினார். சேதுமாதவனும்  கைகூப்பி  அவரை அமரச் சொன்னார். ஆனால் பரசுராமன் அமரவில்லை. கண்களை மூடி சில வினாடிகள் அப்படியே நின்றார். பின் சொன்னார். “பேத்தி ரூம் மாடில தானே?”

 

சேதுமாதவன் திகைப்புடன் சொன்னார். “ஆமா

 

பரசுராமன் வேறெதுவும் சொல்லாமல் மாடிப்படி ஏற ஆரம்பித்தார். சேதுமாதவன் திகைப்புடன் அவரைப் பின் தொடர்ந்தார். திடீரென்று பல்லி சத்தமிட்டது. பரசுராமன் அப்படியே நின்றார். பின் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். பின், ஒரு கால் ஒரு படியிலேயும், இன்னொரு கால் இன்னொரு படியிலேயும் இருக்க அவர் எத்தனாவது படியில் நிற்கிறோம் என்பதைக் கணக்கிட்டது சேதுமாதவனுக்குத் தெரிந்தது. எதையோ மனதில் குறித்துக் கொண்டு மௌனமாய் மறுபடியும் பரசுராமன் படியேற ஆரம்பித்தார்.

 (தொடரும்)

என்.கணேசன்


விரைவில் வெளிவருகிறது ’சதுரங்கம்’




6 comments:

  1. Super sceneல இப்டி full stop வச்சுட்டீங்களே.

    ReplyDelete
  2. ஆவல் அதிகரித்து வருகிறது

    ReplyDelete
  3. பரசுராமனுக்கு சில குறிப்புகள் மட்டுமே கிடைக்கும்... முழு உண்மையை சைத்ரா சொல்ல மாட்டார்... என நினைக்கிறேன்....

    ReplyDelete
  4. Definitely Parasuram is going to find something shocking. I wish Chaithra is still alive, as her body was not shown to anyone after the death.

    ReplyDelete
  5. interesting waiting for next week

    ReplyDelete