Monday, March 4, 2024

யோகி 39

 

சிவசங்கரன் சொன்னார். “இல்லை. பேசிக் கிடைக்கற ஞானமும், நிறைவும், பேசாமயே கிடைக்கறப்ப, பேச்சு கூட ஒரு குறுக்கீடாய் ஏனோ தோணுச்சு. அதனாலேயே அவர் கூட பேச நான் முயற்சி எடுத்துக்கல. ஆனா ப்ரேம் ஆனந்த் அவர் கிட்ட பேசியிருக்கான்....”

 

ஷ்ரவன் ஆர்வத்தோடு அவரைப் பார்த்தான். பிற்காலத்தில் பெயரளவில் யோகியாக மாறிய பிரம்மானந்தா ஒரு உண்மை யோகியைச் சந்தித்துப் பேசியது என்ன என்பதை அறிய அவன் ஆவலாக இருந்தான்.

 

அதை அவனுடைய பார்வையிலேயே படித்த சிவசங்கரன் புன்னகைத்தார். “ஒரு நாள் ப்ரேம் ஆனந்த் இங்கே வந்தப்ப நான் இந்த ஜன்னல் வழியாய் அந்த யோகியைப் பார்த்துகிட்டிருந்தேன். “நாமெல்லாம் படிக்கிறோம், பேசறோம், விவாதம் பண்றோமில்லையா, அதை வாழ்ந்துட்டிருக்கிறவர் அவர்னு சொல்லி ப்ரேம் ஆனந்த் கிட்ட அவரை அடையாளமும் காட்டினேன். அவனும் பிரமிப்போட அவரைப் பார்த்தான். நான் உணர்ந்ததை அவனும் உணர்ந்தான்னு புரிஞ்சுது. அவர் போகிற வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் அவரையே பார்த்தபடி இந்த ஜன்னல் பக்கத்துலயே நின்னுகிட்டிருந்தோம். அவர் போன பிறகு அவரைப் பத்தி தான் பேசிகிட்டிருந்தோம். அவன் உன்னை மாதிரியே என்கிட்ட கேட்டான். “நீங்க அவர் கிட்ட எப்பவாவது பேசியிருக்கீங்களா சார்?” உன் கிட்ட சொன்ன பதிலையே அவன் கிட்டயும் சொன்னேன். ஆனால் அவன் அப்படி நினைக்கல. அடுத்த வாரமும் அதே கிழமைல இங்கே வந்த அவன், அவர் வேலையை முடிச்சுக் கிளம்பறப்ப, அவர் கூடப் பேசக் கிளம்பிப் போயிட்டான்...”

 

அவர் பிரம்மானந்தாவும், அந்த யோகியும் என்ன பேசினார்கள் என்பதைச் சொல்வார் என்று ஒரு நிமிடம் காத்திருந்தான். ஆனால் அவர் எதுவும் சொல்லாமல் அந்த ஜன்னலையே பார்த்தபடி மௌனமாக நின்றிருந்தார்.

 

ஷ்ரவன் கேட்டான். “அந்த யோகி அவர் கிட்ட என்ன சொன்னாராம் சார்?”

 

பிரம்மானந்தா அந்த யோகியுடன் என்ன பேசினார் என்பது சிவசங்கரனுக்கும் தெரிந்திருக்கவில்லை. அவர் ஷ்ரவனிடம் சொன்னார். “தெரியல. ஏன்னா அதுக்கப்பறம் ப்ரேம் ஆனந்த் என் கிட்ட பேச மறுபடி வரலை. அவனும் யோகியாயிட்டதா எனக்குத் தகவல் மட்டும் கிடைச்சுது.. சஞ்சீவி மலைல சுந்தர மகாலிங்கமும், கோரக்கரும் அவனுக்குக் காட்சி கொடுத்த கதை எல்லாம் பிற்பாடு உருவானது தான்....”

 

சொல்லி விட்டு சிவசங்கரன் சிரித்தார்.  அந்தச் சந்திப்பில் ஏதாவது விசேஷமாய் நடந்திருக்க வேண்டும் என்று ஷ்ரவனுக்குத் தோன்றியது. இல்லா விட்டால் அந்த நாளோடு இங்கே வருவதை பிரம்மானந்தா நிறுத்தியிருக்க வழியில்லை....

 

ஷ்ரவனும் சிரித்தபடி சொன்னான். “அந்த யோகி அவரும் யோகியாய் மாற இன்ஸ்பிரேஷனாய் இருந்திருக்கார் போல இருக்கு.”

 

சிவசங்கரன் இகழ்ச்சியான தொனியில் சொன்னார். “அப்படிச் சொல்றது அந்த யோகியைக் கேவலப்படுத்தற மாதிரியாயிடும்.”

 

லேசாகத் தலையசைத்து விட்டு ஷ்ரவன் கேட்டான். “ஆனால் அந்த யோகி அப்பறமும் வாரா வாரம் தோட்ட வேலைக்கு வந்துகிட்டிருந்தாரா?”

 

அவர் வந்துகிட்டிருந்தார். அப்புறம் பக்கத்து வீட்டுக்காரர் வீட்டை வித்துட்டு டெல்லில இருக்கற அவர் மகன் கிட்ட போயிட்டார். அதனால அந்த யோகியும் வர்றது நின்னு போச்சு. அவரைப் பார்க்காம இருக்கறது எனக்கு ஏதோ இழந்தது மாதிரி தோண ஆரம்பிச்சுது. பக்கத்துலயே இருந்தும் அவர் கிட்ட பேசாமல் இருந்து விட்டோமேன்னு வருத்தப்பட்டேன். அவரைத் திரும்பவும் சந்திக்க நிறைய முயற்சி எடுத்துகிட்டேன். பக்கத்து வீட்டுக்காரருக்கும் அவர் அட்ரஸ் தெரிஞ்சிருக்கல. யார் மூலமாகவோ தான் அவரைத் தெரிய வந்ததுன்னு இன்னொருத்தர் போன் நம்பரைக் கொடுத்தார். அவருக்குப் போன் பண்ணிப் பார்த்தேன். அவருக்கும் அந்த யோகியோட அட்ரஸ் தெரியல. இன்னொரு வீட்டுல தோட்ட வேலை செஞ்சிட்டிருந்தப்ப பார்த்ததுன்னு சொன்னார். அந்த இன்னொரு வீட்டு அட்ரஸையும் வாங்கிப் போய் பார்த்தேன். அங்கேயும் இப்ப வர்றதில்லைன்னும், வெளியூர் போறதாச் சொல்லிப் போயிட்டார்னும் தெரிஞ்சுது. அதோட அந்த யோகியைத் தரிசிக்கற பாக்கியம் நின்னு போச்சு. கண்டவனெல்லாம் யோகின்னு சொல்லிட்டு திரியறதைப் பார்க்கற துரதிர்ஷ்டம் வந்து சேர்ந்துகிச்சு

 

ஷ்ரவன் சிவசங்கரன் வீட்டில் மேலும் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தான். சிவசங்கரனிடமிருந்து பிரம்மானந்தா பற்றியோ, யோகாலயம் பற்றியோ எந்தப் புதிய தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் சிவசங்கரன் அந்த யோகி பற்றிப் பேசிய போது அவர் மிக மென்மையாக மாறியதும், பிரம்மானந்தா பற்றிப் பேசிய போது  இகழ்ச்சியும், கசப்புமாய் பேசியதும், அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. ஒருவேளை பிரம்மானந்தா பிற்காலத்தில் இவரை மதித்து நடத்தியிருந்தாலும் இதே உணர்வுகள் தான் இவரிடம் மேலோங்கி இருந்திருக்குமா என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் தொழிலில் தோட்டக்காரனாக இருந்தாலும், ஒரு முறை கூடப் பேசியிருக்கா விட்டாலும், யோகி என்று ஒரு மனிதரை அடையாளம் தெரிந்து கொண்டதிலும், அவரை மனதாரக் கொண்டாடியதிலும் சிவசங்கரனின் தனித்தன்மை தெரிந்தது. அவரிடமிருக்கும் விஷயஞானம் ஆழமுள்ளதாகவும் அவனுக்குத் தெரிந்தது.

 

அவர் வீட்டிலிருந்து அந்த யோகியிடம் பேசக் கிளம்பிய பிரம்மானந்தா பின் எப்போதும் திரும்பி வராததற்கு எதாவது பிரத்தியேக காரணம் இருக்கும் என்ற வகையில் சிவசங்கரன் யோசிக்கவில்லை. சிறிது காலத்திலேயே யோகாலயம் ஆரம்பித்து, தானே ஒரு மெய்ஞானம் கிடைக்கப் பெற்ற யோகி என்று மற்றவர்களிடம் ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்ட பின் பிரம்மானந்தாவுக்கு அவரிடம் வர வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது என்று தான் சிவசங்கரன் நினைத்தார் என்பது ஷ்ரவனுக்குப் புரிந்தது. ஒரு விதத்தில் அது சரியாகவும் இருக்கலாம். அனைவருக்கும் ஞான விளக்கம் அளிக்க முடிந்த யோகி, தன் சந்தேகங்களைக் கேட்க சிவசங்கரனிடம் செல்வது சரியாகவும் இருக்காது.

 

ஆனாலும் அந்த யோகியும், பிரம்மானந்தாவும் என்ன பேசிக் கொண்டார்கள், பின்பும் தொடர்பில் இருந்தார்களா என்பதை அறிந்து கொள்ள ஷ்ரவனுக்கு ஆர்வமாக இருந்தது. சைத்ரா வழக்குக்கு அது தேவையில்லாத தகவலாக இருந்தாலும், பிரம்மானந்தா அந்த யோகியிடம் என்ன கேட்டார், அந்தச் சந்திப்பின் மூலம் என்ன பெற்றார், அது அவரை எந்த விதத்திலாவது மாற்றியதா என்று தெரிந்து கொள்வது, பிரம்மானந்தா குறித்து ஒரு தெளிவான அபிப்பிராயம் வருவதற்கு உதவும் என்று ஷ்ரவனுக்குத் தோன்றியது.  ஆனால் இது சம்பந்தமாய் இவரிடமிருந்து இனி அறிய வேண்டியது ஒன்றும் இல்லையென்பதால் ஷ்ரவன் இனி அதிக நேரம் அங்கிருக்க விரும்பவில்லை.

 

தத்துவத்தில் ஒரு சந்தேகம் என்று கேட்டு தான் சிவசங்கரனிடம் பேச அனுமதி பெற்றிருந்ததால் அத்வைதம் மற்றும் காஷ்மீர சைவம் இரண்டுக்கும் இடையே வித்தியாசம் உள்ளதா என்று கேட்க வந்ததாக அவன் சொன்னான். ஸ்ரீகாந்த் சொன்னது போல் சிவசங்கரன் பல தகவல்களை விரல் நுனியில் வைத்திருந்தார். தங்குதடையில்லாமல் அவரிடமிருந்து பல தகவல்கள் அவனுக்குக் கிடைத்தன அத்வைதத்திற்கும்,  காஷ்மீர் சைவத்துக்கும் இடையே உள்ள நுணுக்கமான வித்தியாசங்களை அவர் மிக விரிவாக அவனுக்கு விளக்கினார். கடைசியில் அவருக்கு நன்றி சொல்லி விட்டு ஷ்ரவன் கிளம்பினான்.

 

செல்வத்துக்கு தூத்துக்குடிக்குச் செல்வதை நினைக்கும் போதே வயிற்றைக் கலக்கியது. அங்கு போகாமலிருக்க என்ன செய்யவும் அவர் தயாராக இருந்தார். பணம் எத்தனை செலவழிக்கவும் அவர் தயாராகவும் இருந்த போதிலும், இந்த முறை பணத்தினால் இது ஆகக்கூடிய வேலையல்ல என்பது நண்பர் மூலம் உறுதிப்பட்டு விட்டதால் அடுத்து என்ன செய்வது என்று  தீவிரமாக யோசித்தார். முதலமைச்சர் அலுவலகம் வரை செல்வாக்குள்ள நபர்கள் என்று யோசித்த போது யோகி பிரம்மானந்தா நினைவுக்கு வந்தார்.

 

பெரிய நிலையில் இல்லாதவர்கள் யாரும் யோகி பிரம்மானந்தாவை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாது. செல்வம் அந்த நிலையில் மட்டுமல்லாமல் பல நிலைகள் கீழே இருப்பதால் ஆட்கள் மூலமாகவும் தொடர்பு கொள்ள முடியாது.  அதற்கு அவசியமும் இல்லை. செல்வத்துக்குத் தன் காரியம் ஆனால் போதும் என்று இருந்தது. அதற்கு யோகாலயத்தின் மேனேஜராக இருக்கும் பாண்டியனைத் தொடர்பு கொண்டால் போதும். பிரம்மானந்தாவின் வலது கரம் போன்ற பாண்டியன் மனம் வைத்தால் அது பிரம்மானந்தா மனம் வைத்தது போலத் தான். ஆனால் பிரச்சினை என்னவென்றால் பாண்டியனிடமும், யாரும் உடனே நேரடியாகப் பேசி விட முடியாது.

 

(தொடரும்)

என்.கணேசன்





புதிய நாவல் ஒரு வாரத்தில் வெளியாகவுள்ளது.




4 comments:

  1. பிரம்மானந்தாவின் மஹா சிவராத்திரி அலப்பறைகள் வரும் என்று எதிர்பார்த்தேன்...

    ReplyDelete
    Replies
    1. அதே எண்ணம் தான் எனக்கும் தோன்றுகிறது.

      Delete
  2. பிரம்மானந்தா அந்த யோகியிடம் இருந்து ஏதேனும் ஒரு சிறு விஷயத்தை கற்றிருப்பார்...அதை வைத்து இவ்வளவு தூரம் வளர்ந்திருப்பார்...என நினைக்கிறேன்....

    ReplyDelete
  3. Super sir! We are interested to know about Kashmir Saivam

    ReplyDelete