Thursday, February 8, 2024

சாணக்கியன் 95

 

சாணக்கியருக்கு அவர்கள் அடுத்துச் செய்ய வேண்டியது குறித்து சந்திரகுப்தனிடம் பேச நிறைய இருந்தது. ஆனால் அவன் தன் தாயாருடன் கழித்துக் கொண்டிருக்கும் காலத்தைப் பிடுங்கிக் கொள்ள அவர் விரும்பவில்லை. சிறுவயதிலிருந்தே அவன் அவருடன் இருந்த காலங்களில் எப்போதாவது சில சமயங்களில் அவன் கண்களில் அவர் ஏக்கத்தைப் பார்த்திருக்கிறார்.  அவன் தாயன்புக்காக ஏங்குகிறான் என்பது அவன் சொல்லாமலேயே அவருக்குப் புரிந்திருக்கிறது. அந்தச் சமயங்களில் சீக்கிரமே அவன் அதிலிருந்து மீண்டு வந்தாலும் மனதின் ஆழத்தில் ஒரு மூலையில் அந்த ஏக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும் என்பதை அவர் அறிவார். ஏனென்றால் அவரும் அந்த ஏக்கத்தை அனுபவித்தவர். அவனுக்காவது அவன் தாய் உயிரோடிருக்கிறாள், இன்றில்லா விட்டாலும் இன்னொரு நாள் அவளைப் பார்க்க முடியும் என்கிற நம்பிக்கை இருந்தது. அவருக்கு அதுவும் இருக்கவில்லை. அவர் தந்தையைத் தனநந்தனின் வீரர்கள் கைது செய்து கொண்டு போன பின் துக்கத்தாலும், பட்டினியாலும் வாடி இறந்த தாயை நினைக்கையில் இதயத்தின் பழைய காயங்கள் புதுப்பிக்கப்பட்டன.  எத்தனை வயதானாலும் குழந்தைப் பிராய நினைவுகள் மனதின் ஆழத்தில் பசுமையாய் இருக்கவே செய்கின்றன. தனிமையில் இருக்கையிலும் மற்ற குழந்தைகளைப் பார்க்கையிலும் அவ்வப்போது அந்த நினைவுகள் எழத்தான் செய்கின்றன.

 

எல்லாம் எண்ணிப் பார்க்கையில் அவர் மனம் மிக லேசானது. சந்திரகுப்தன் பல வருடங்கள் கழித்துத் தன் தாயைப் பார்க்கிறான். அவனுக்கு அவளிடம் கேட்கவும் சொல்லவும் நிறைய இருக்கும். அந்தத் தாய்க்கும் அப்படித் தான். அவர்கள் பேசட்டும்.... அவர்கள் மனதில் இருக்கும் ஏக்கங்கள் குறையட்டும்....

 

சாணக்கியர் தன் பழைய துக்கங்களை ஒரு கணம் மனதிலிருந்து ஒதுக்கி வைத்தார். எதெல்லாம் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் உதவாதோ அதையெல்லாம் எண்ணி அதிலேயே ஆழ்ந்து போவது கால விரயம் அல்லாமல் வேல்ல. சுயபச்சாதாபம் யாருக்கும் எந்த வகையிலும் உதவப் போவதுமில்லை. முக்கியமாக அடுத்து ஆக வேண்டிய வேலைகளின் பட்டியலை அவர் மனதில் நினைவுபடுத்திக் கொண்டார்.  சந்திரகுப்தன் வருவதற்கு முன் அவர் செய்து முடிக்க முடிந்த ஒரு வேலை நினைவுக்கு வர பாடலிபுத்திரத்தில் இருக்கும் ஜீவசித்திக்கு ஒரு கடிதம் எழுத ஆரம்பித்தார். எழுதிய பின் அதை இரகசியமாக அவனிடம் சேர்ப்பிக்க ஏற்பாடு செய்து விட்டு சந்திரகுப்தன் வரவுக்காக மறுபடி காத்திருந்தவர் அப்படியே கண்ணயர்ந்தார்.

 

சற்று முன் ஆழமாக பெற்றோரை எண்ணியதாலோ என்னவோ அவர் கனவில் அவர் தந்தையும் தாயும் வந்தார்கள். கனவில் அவர் ஏழு வயதுச் சிறுவனாக இருந்தார். சாணக் அவருக்கு மந்திரங்கள் உபதேசித்தார். தாய் அவருக்கு உணவு பரிமாறினாள்

 

வணக்கம் ஆச்சாரியரேஎன்ற சந்திரகுப்தனின் குரல் அவர் கனவைக் கலைத்தது. கண்விழித்த அவர், எதிரில் சந்திரகுப்தனையும் மூராவையும் பார்த்தார். சந்திரகுப்தன் அவர் காலைத் தொட்டு வணங்க மூராவும் அப்படியே வணங்கினாள்.

 

அவளைப் பார்த்துக் கைகூப்பிய சாணக்கியர் புன்னகையுடன் கேட்டார். “அரசர் என்ன சொல்கிறார் தாயே?”

 

மூரா உணர்ச்சிவசப்பட்டவளாகக் கண்கலங்கி கைகூப்பியபடி சொன்னாள். ”தெய்வமே அனுப்பியது போல எங்கள் வாழ்க்கையில் ஒரு வரமாக வந்தீர்கள். மாடு மேய்த்துக் கொண்டிருந்த என் மகனை மன்னன் ஆக்கினீர்கள். எத்தனை பிறவி எடுத்து தங்களுக்குச் சேவை செய்தாலும் இந்தத் தாய் பட்ட கடன் தீராது ஆச்சாரியரே.”   

 

சாணக்கியர் நெகிழ்ச்சியுடன் சொன்னார். “தகுதி உள்ளவர்களுக்குச் சந்தர்ப்பம் ஏதாவது வழியில் இறைவன் சித்தப்படி கிடைக்கின்றது தாயே. அதனால் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். அப்படி நன்றி எனக்குச் சொல்வதானால் நானும் எனக்கு இப்படி ஒரு மாணவனைப் பெற்றுத் தந்ததற்குத் தங்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்..”

 

அதைக் கேட்டு சந்திரகுப்தன் கண்கலங்கினான். இன்று அவனிடம் இருக்கும் ஒவ்வொரு உயர்வுக்கும், அறிவுக்கும் அவரே காரணம் என்பதை அவன் அறிவான். ஆனால் அவர் ஒருமுறை கூட அதைச் சுட்டிக் காட்டியதில்லை என்பதோடு யாராவது சுட்டிக் காட்டும் பட்சத்தில் அதை அங்கீகரித்ததும் இல்லை.. ஒரு குடையின் கீழ் பாரதத்தைக் கொண்டு வர வேண்டும், பாரதம் சுபிட்சமடைய வேண்டும் என்பதற்காக எதையும் செய்யத் துணிந்த அவர் தன்னலத்திற்காக இது வரை எதையும் யாரிடமும் கேட்டும், செய்தும் அவன் பார்த்ததில்லை. இவரைப் போன்ற ஒரு மாமனிதனைப் பார்ப்பது அரிது என்று சற்று முன் தான் அவன் தன் தாயிடம் தெரிவித்திருந்தான். அவளும் அதை அச்சமயத்தில் உணர்ந்ததாக அவள் பார்வையில் தெரிந்த பிரமிப்பு சொன்னது.

 

சாணக்கியர் சந்திரகுப்தனிடம் குறிப்பிட்ட ஜீவசித்தி மகதத்தலைநகரில்  காவலர்களின் தலைவன். எந்தெந்தக் காவலர்களை எங்கெங்கு காவலுக்கு நிறுத்துவது என்பதைத் தீர்மானித்து அவர்களை அங்கங்கு நிறுத்தும் நிர்வாகப் பொறுப்பு அவனுடையது. காவலர்களில் யாராவது நோய்வாய்ப்பட்டாலோ, விடுப்பில் சென்றாலோ அவர்களுக்குப் பதிலாக மாற்று ஏற்பாடுகள் செய்து முக்கியமான காவல் வேலைகள் தடைப்பட்டு விடாமல் அவன் பார்த்துக் கொள்வதும் அதில் ஏதாவது குறை இருந்தால் ராக்‌ஷசருக்குப் பதில் சொல்ல வேண்டியதும் அவன் பொறுப்பு. மன்னரின் அரண்மனையிலும், அரசவையிலும், அமைச்சர்கள், சேனாதிபதி ஆகியோரின் மாளிகைகளிலும், அலுவலகங்கங்களிலும்  தேவைப்படும் காவலர்களை அனுப்பி வைப்பதும், நகரக் காவல் தலைவன் நகரவாயிலுக்கும், நகரின் பகல் மற்றும் இரவு நேரக் கண்காணிப்புக்கும் தேவையெனக் கேட்கும் காவலர்களை அனுப்பி வைப்பதும் அவன் தான்.

 

பல வருடங்களாக அந்தப் பணியிலிருக்கும் ஜீவசித்தி மீது இது வரை எந்தப் புகாரும், அவன் பணியில் குறைபாடும் வந்ததில்லை என்பதால்  அவன் ராக்‌ஷசரிடம் நல்ல பெயர் வாங்கியிருந்தான்.  ராக்‌ஷசரிடம் நல்ல பெயர் வாங்குவது சுலபமல்ல. அவருடைய கழுகுக் கண்கள் ஊழியர்கள் செய்யும் தவறுகளை உடனடியாகக் கண்டுபிடித்து விடும். அவனுக்குக் கட்டளையிடுவது ராக்‌ஷசர் தான், அவன் பதில் சொல்ல வேண்டியிருப்பதும் அவரிடம் தான் என்பதால்  நேரடியாக தனநந்தனிடம் பேசும் வாய்ப்பும், பழகும் வாய்ப்பும் அவனுக்குக் குறைவு. தனநந்தனும் யாரிடமும் சகஜமாகப் பழகக் கூடியவன் அல்ல.  அவன் அதிகம் நெருங்கிப் பழகுவது ராக்‌ஷசரிடம் மட்டுமே. அடுத்தபடியாக அவன் ஓரளவாவது சேனாதிபதி பத்ரசாலிடம் நெருங்கிப் பழகுவான். ராக்‌ஷசர் தவிர மற்ற அமைச்சர்களே கூட அவனிடம் நெருக்கமாக இருக்க முடிந்ததில்லை என்பதால் ஜீவசித்தி போன்ற மற்ற அதிகாரிகளும் அவனிடம் விலகியே இருந்தார்கள்.

 

விலகி இருந்தாலும் ஜீவசித்திக்கு ஆரம்பத்தில் மன்னன் மீது வெறுப்பு ஏற்பட்டதில்லை. குடிமக்கள் தனநந்தனை வெறுத்த போதிலும் ராக்‌ஷசர் தயவால் ஊழியர்களுக்கு ஊதியம் நன்றாகவே கிடைத்துக் கொண்டிருந்தபடியால்  ஜீவசித்தியும் திருப்தியுடனே தான் இருந்து வந்தான் – சாணக்கியர் அவனைச் சந்தித்துப் பேசும் வரை.

 

ஜீவசித்தி சாணக்கியரை முதலில் கண்டது அரசவையில் தனநந்தனிடம் வேண்டுகோளோடு வந்த போது தான். தனநந்தன் மறுத்து அவரை அவமதித்துப் பேசியதும், அவர் சபதமிட்டதும் அவன் அரசவையில் இருந்த போதே நடந்த நிகழ்வுகள். ஒரு சாதாரண அந்தணர் மகத மன்னருக்கு எதிராக எந்தப் பயமும் இன்றிப் பேசியதும், தூக்கி எறியப்படும் போது கூட அசராமல் அமைதி இழக்காமல் இருந்ததும் அவனுக்குப் பேராச்சரியத்தை அளித்தன. பின்னர் சிலர் அந்த அந்தணர் சில வருடங்களுக்கு முன் வந்து மன்னரிடம் அலட்சியமாய்ப் பேசி விட்டுப் போன நிகழ்வை நினைவுகூர்ந்து அவனிடம் சொன்னார்கள். அவரது தைரியத்தை அவனால் உள்ளூரப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சில நாட்களில் அவரை அவன் மறந்தும் போனான்.

 

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு அவர் மாறுவேடத்தில் அவன் வீட்டுக்கு வந்தார்.  தலைப்பாகை கட்டியிருந்த அவரை அவனுக்கு உடனடியாக அடையாளம் தெரியவில்லை. அவன் கேட்டான். “உங்களுக்கு என்ன வேண்டும்? நீங்கள் யார்?”

 

சாணக்கியர் அமைதியாகச் சொன்னார். “எனக்கு எதுவும் வேண்டியதில்லை. நான் உன் தந்தையை அவர் இறந்த தருணத்தில் பார்த்தவன்”

 

ஜீவசித்தி திகைத்தான். அவன் தந்தையின் மரணம் அன்று வரை அவனுக்கு மர்மமாகவே இருந்ததால் அவர் சொன்ன பதிலைக் கேட்டு அவன் ஒரு கணம் மூச்சு விட மறந்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்




1 comment:

  1. குரு பயணித்து வந்த பாதை முள் பாதையாக இருக்கும்... வாழ்க்கையில் பல அடிகளை வாங்கி ஒவ்வொன்றையும் கற்றிருப்பார்... ஆனால், தான் கற்றதை தகுதியான ஒரு மாணவனிடம் அளிக்கும் போதே... மழு நிறைவையும் ஆத்ம திருப்தியையும் உணர்வார்.....

    ReplyDelete