Thursday, January 4, 2024

சாணக்கியன் 90

புருஷோத்தமன் அனுப்பியிருந்த பதில் கடிதம் யூடெமஸைக் கோபமூட்டியது. வாஹிக் பிரதேசத்தில் புரட்சிப் படையினர் வலிமை அதிகரித்து வருவதால் கேகயத்தில் இருக்கும் படைகள் இப்போதைய சூழ்நிலையைச் சமாளிக்கவே போதுமானதல்ல என்றும், அதனால் சத்ரப் யூடெமஸ் கேட்டுக் கொண்டபடி படைகள் அனுப்ப முடியாத நிலையில் இருப்பதாகவும் புருஷோத்தமன் எழுதியிருந்தார். அதில் சம்பிரதாயத்திற்காகக் கூட அவர் வருத்தம் தெரிவிக்கவில்லை. அலெக்ஸாண்டர் உயிரோடியிருந்தால் அலெக்ஸாண்டரின் சத்ரப்புக்கு இப்படி ஒரு கடிதம் எழுத புருஷோத்தமன் துணிந்திருப்பாரா என்று நினைத்து யூடெமஸ் ஆத்திரமடைந்தான். அவனுடைய ஆத்திரத்தை எல்லாம் அவன் சசிகுப்தனிடம் கொட்டித் தீர்த்தான்.

 

சசிகுப்தன் மரியாதை நிமித்தமாகத் தான் அவனைக் கண்டு செல்ல வந்திருந்தான். புஷ்கலாவதிக்கு ஓரளவாவது அருகில் இருப்பவன் அவன் மட்டுமே என்பதால் பாரதத்தின் புதிய சத்ரப்பைக் கண்டு செல்ல வந்திருந்த அவன்  யூடெமஸின் ஆத்திர வார்த்தைகளைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு விட்டு சொன்னான். “கோபப்பட்டு எந்தப் பலனும் இல்லை யூடெமஸ்.  கேகயமும் புரட்சிப் படையினர் எந்தப் பக்கம் திரும்புவார்கள் என்று எச்சரிக்கையுடன் தான் இருக்க வேண்டியிருக்கிறது. மக்களும் புரட்சிக் காரர்களை ஆதரிக்கும் மனநிலையில் தான் இருக்கிறார்கள்

 

யூடெமஸ் உண்மையைப் பற்றிக் கவலைப்படாதவனாகவும், தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவனாகவும் இருந்ததால் சசிகுப்தன் சொன்னதைப் புரிந்து கொள்ள விரும்பாதவனாக இருந்தான். அவன் கோபம் புரட்சிப் படையினர் மீது திரும்பியது. “அலெக்ஸாண்டர் இருக்கும் வரை இருக்குமிடம் தெரியாமல் இருந்தவர்கள் அவர் அங்கிருந்து போனதும் இப்படித் தைரியமாகச் செயல்பட ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை அடக்க ஆம்பி குமாரனாலும் முடியவில்லையே. இத்தனைக்கும் தட்சசீலத்தில் தான் அந்த ஆசிரியரும், மாணவர்களும் ஆரம்பத்திலிருந்தே இருந்திருக்கிறார்கள். சத்ரப் பிலிப்பின் மரணத்திற்குப் பின்பும் அந்த ஆசிரியர் தட்ச சீலத்துக்குத் தைரியமாக வந்து போயிருப்பதாக ஒற்றர்கள் சொல்கிறார்கள். அந்தச் சமயத்திலாவது ஆம்பி குமாரன் சிறிது வீரத்தைக் காட்டியிருக்கலாம்.”

 

வீரத்தைக் காட்டிய பிலிப் உயிர்விட்ட பிறகு, வீரத்தை விட உயிர் முக்கியம் என்று ஆம்பி குமாரன் முடிவெடுத்திருக்கலாம்என்று சசிகுப்தன் சொன்னான். யூடெமஸ் விரக்தியுடன் மௌனமானான்.

 

ணக்கம் அரசே

தலை நிமிர்ந்த சந்திரகுப்தன் சாணக்கியரைப் பார்த்ததும் ஒருங்கே சந்தோஷமும், வருத்தமும் அடைந்தான். நீண்ட நாட்கள் கழித்து அவரைச் சந்தித்ததில் சந்தோஷம். அவர் வணக்கம் அரசே என்றழைத்ததில் வருத்தம். எழுந்து ஓடி வந்து அவர் காலைத் தொட்டு வணங்கிய சந்திரகுப்தன்ஆச்சாரியரே நான் உங்களுக்கு என்றும் சந்திரகுப்தன் தான். உங்கள் மாணவன் சந்திரகுப்தனாகவே இருக்கவே நான் எப்போதும் விரும்புகிறேன்.” என்று சொன்னான்.

 

உன்னை அரசே என்று அழைத்துப் பார்க்க ஆசையாக இருந்தது சந்திரகுப்தா. அதனால் தான் அப்படி அழைத்து ஆனந்தம் அடைந்தேன்.” என்று சொன்ன சாணக்கியர் தொடர்ந்து சொன்னார். “இல்லா விட்டாலும் கூட நான் நாம் தனிமையில் இருக்கும் சந்தர்ப்பங்கள் தவிர உன்னை அப்படி அழைப்பதே இனி சரி. சபை மரியாதை என்று ஒன்று இருக்கிறது.”

 

ஆச்சாரியரே. நான் அடைந்திருக்கும் எல்லா உயர்வும் நீங்கள் போட்ட பிச்சையே. அதனால் நீங்கள் அரசே என்றழைக்கும் போது நான் கூனிக் குறுக வேண்டியதாகிறதுஎன்று சந்திரகுப்தன் ஆத்மார்த்தமாகச் சொன்னான்.

 

சாணக்கியர் சொன்னார்தகுதியும் திறமையும் இருப்பவனுக்கு தான் யாரும் எதையும் கற்பிக்க முடியும் சந்திரகுப்தா. அவையிரண்டும் இல்லாவிட்டால் கற்பிக்கப்படுவது ஒருவனுக்குப் புரியாது, புரிந்தாலும் அவனால் அதைப் பின்பற்றவும் முடியாது. அதனால் நீ அடைந்த உயர்வுகள் நீ சம்பாதித்தது. நீ எப்போதும் கூனிக் குறுக வேண்டியதில்லை. சொல்லிக் கொடுப்பது தான் பெருமை சேர்க்கிறது என்றால் என் மாணவர்கள் அனைவரும் சந்திரகுப்தனின் நிலையை அடைந்திருக்க வேண்டும். பல நூறு மாணவர்களுக்கு ஆசிரியராக நான் இருந்திருந்தாலும் ஒரு சந்திரகுப்தன் தான் உருவாகியிருக்கிறான் என்றால் அது சந்திரகுப்தனின் தனித்தன்மையால் என்றே அல்லவா சொல்ல வேண்டும்.”

 

சந்திரகுப்தன் கண்கள் ஈரமாக அவரைப் பார்த்தான். இப்படி ஒரு மனிதர் அவன் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் மாடு மேய்ப்பவனாக, அல்லது அதிக பட்சமாக ஒரு மாட்டு வியாபாரியாக அல்லவா அவன் இருந்திருப்பான்? அப்படியிருந்தும் என்றும் அவர் தன்னை உயர்த்திக் கொண்டதில்லை. எதற்கும் பெருமை கொண்டாடியதில்லை. “சாணக்கியர் இல்லா விட்டால் சந்திரகுப்தன் இல்லை என்பதே வரலாற்று உண்மையாக இருக்கும் ஆச்சாரியரே.”

 

சாணக்கியர் அவனை பெருமிதத்துடன் பார்த்தார். அவன் வயதில் அவன் அடைந்திருக்கும் நிலையில் கர்வம் வந்து சேர்வது இயற்கை. ஆனால் அவன் ஒரு நாளும் கர்வம் காட்டியதில்லை. இவனைப் போன்ற ஒரு மாணவனைக் காண நேர்ந்தது அவர் செய்த பாக்கியம் என்றே அவருக்குத் தோன்றியது....

 

சந்திரகுப்தன் சொன்னான். “அமருங்கள் ஆச்சாரியரே. உங்களைப் பார்த்து பல நாட்களாகி விட்டது என்று கடந்த ஒரு வாரமாக தினமும் நினைக்கிறேன். திடீரென்று உங்களைப் பார்த்தவுடன் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது

 

சாணக்கியர் புன்னகைத்தபடி அமர்ந்து அவனையும் அமரச் சைகை செய்தார். அவன் பழைய பணிவுடனேயே அவர் அருகில் அமர்ந்தான். அவர்கள் வசம் உள்ள பகுதிகளின் நிலவரம் பற்றியும், நிர்வாகம் பற்றியும் விசாரித்து திருப்தி அடைந்த சாணக்கியர் அவர்களது அடுத்த இலக்கு பற்றி பேச ஆரம்பித்தார்.

 

நம் அடுத்த இலக்கு மகதம் சந்திரகுப்தா. அந்த இலக்குக்கு நம் பழைய திட்டங்கள் உதவாது.  ஏனென்றால் மகதத்தின் நிலைமையும் சூழலும் வலிமையும் வேறு. இது வரை நம் வலிமையையும், மக்கள் வலிமையையும் மட்டுமே நம்பியிருந்தோம். நம் அடுத்த இலக்குக்கு அது போதாது. நம்முடன் மற்றவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். அவர்கள் பல விதமானவர்களாக இருந்தாலும் அவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டி இருக்கும். அது கண்டிப்பாக முழுவதுமாக சுமுகமாக இருக்காது என்றாலும் சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும்

 

சந்திரகுப்தன் புன்னகைத்தான். “இலக்கு பெரிதாக இருக்கும் போது அதில் சிக்கல்கள், சிரமங்கள், உழைப்பு எல்லாம் அதிகமாக இருப்பது இயற்கையே அல்லவா ஆச்சாரியரே. வழிநடத்துவது நீங்களாக இருக்கும் போது அதன்படி நடப்பது எங்களுக்குப் பெரிய விஷயமில்லை

 

ஒரு மனிதன் வெற்றி அடைவானா தோல்வி அடைவானா என்று வித்தியாசப்படுத்துவது அவர்கள் மனநிலை தான் என்பதற்கு சந்திரகுப்தனே நல்ல உதாரணம் என்று சாணக்கியர் மனதில் தன் மாணவனை மெச்சிக் கொண்டார். எதிலும் சிக்கல்கள், சிரமங்கள், அதிக உழைப்பு குறித்து அவன் என்றுமே முணுமுணுத்தது கூடக் கிடையாது. அவை இல்லாத வெற்றி இல்லை என்ற அவனுடைய புரிதல் தான் அவன் மிகப் பெரிய பலம்!

 

சாணக்கியர் தொடர்ந்து சொன்னார். “மகதத்தின் மிகப்பெரிய பலம் பிரதம அமைச்சர் ராக்ஷசரும் அவரது மற்ற அமைச்சர்களும் தான். அவர்களுடைய நிர்வாகம் மிகச் சிறந்ததாகவும்,  கட்டுக் கோப்பானதாகவும் இருக்கிறது. ராக்ஷசர் மன்னனிடமிருந்து கூடுமான வரை மக்களைக் காப்பாற்றுகிறவராகவும், மக்களிடமிருந்து மன்னனைப் பாதுகாக்கிறவராகவும் இருக்கிறார். அவர் மிகச் சிறந்த அறிவாளி. தனநந்தனின் விசுவாசி. அதனால் அவரை நாம் மிகக் கவனமாகச் சமாளிக்க வேண்டும். அடுத்த மிகப் பெரிய பலம் மகதத்தின் படை வலிமை. மகதத்தின் மிகப் பெரிய பலவீனம் தனநந்தன். அவன் அகங்காரி. பணப்பேராசை பிடித்தவன், அளவுக்கு மீறி வரிவசூல் செய்து வருவதன் மூலம் மக்களின் பெரும் அதிருப்தியைப் பெற்றிருப்பவன். கர்வமுள்ளவனை வீழ்த்துவது மிகச் சுலபம் என்றாலும் மகதத்தின் மிகப்பெரிய பலங்களான ராக்ஷசரையும், படைகளையும் தாண்டியே நாம் அவனை அணுக முடியும் என்ற நிலைமை இருக்கிறது....”

 

சந்திரகுப்தன் சொன்னான். “அவன் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தையும் அவன் வலிமையாகச் சொல்ல வேண்டுமல்லவா ஆச்சாரியரே?”

 

சாணக்கியர் புன்னகைத்தார். “செல்வம் மற்றவர் கவர்ந்து செல்லக் கூடியது என்பதால் அதன் வலிமையை நாம் மிகைப்படுத்த வேண்டியதில்லை சந்திரகுப்தா. செல்வம் யார் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களுடையதாகி விடுகிறது. இன்று அவனுடையதாக இருப்பது நாளை நம்முடையதும் ஆகலாம். அது அவனை வீழ்த்தவும் பயன்படலாம்”

 

ஆச்சாரியர் ஆக முடிந்ததை ஆக்கிக் கொள்ளாமல் விடுபவரல்ல. அதனால் ஏதாவது ஒரு வழியை அவர் கண்டிப்பாகக் கண்டுபிடித்திருக்க வேண்டும் என்று அவன் உள்ளுணர்வு சொன்னது. சந்திரகுப்தனும் புன்னகைத்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்

 


 

 


 

3 comments:

  1. திறமையான ஆசிரியருக்கு திறமையான மாணவன் கிடைப்பதும், திறமையான மாணவனுக்கு திறமையான ஆசிரியர் கிடைப்பதும் அற்புதமான விசயம்.... சாணக்கியர் மற்றும் சந்திரகுப்தன் இருவருடைய குரு சிஷ்ய பந்தமும் அருமை....

    ReplyDelete
  2. திறமையான ஆசிரியருக்கு திறமையான மாணவன் கிடைப்பதும் திறமையான மாணவனுக்கு திறமையான ஆசிரியர் கிடைப்பதும் அற்புதமான விசயம்தான். அதில் சந்தேகமில்லை தான்.
    ஆனால் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடந்த சரித்திர நிகழ்வை வியக்கத்தக்க வகையில் தன்னுடைய அற்புதமான திறமையை எழுத்துருவில் நாம் வியந்து ரசிக்கும் வகையில் கொடுத்து வரும் இவரது அறிவுதக்கூர்மையை எண்ணி வியப்பது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

    ReplyDelete
  3. 2nd paragraph spelling correction Yuthitemas to Ydemas...BTW very interesting one as usual Ganesan sir style of writing like other novels...episode by episode curiosity to know whats next...in between gentle life snippets to follow...great going...keep it going...we will follow and enjoy your writing...happy to be part of this journey...

    ReplyDelete