Thursday, December 28, 2023

சாணக்கியன் 89

 

கதத்தின் பிரதம அமைச்சரின் இயற்பெயர் என்னவென்று அறிந்தவர்கள் மிகவும் குறைவு.  காத்யாயன் என்று அவரை அழைப்பவர்கள் நெருங்கிய சில உறவுகள் மட்டுமே. கடுமையான மனிதர் என்பதால் அவரை ராக்ஷசர் என்று தான் அனைவரும் அழைத்தார்கள். ஆரம்பத்தில் இருந்தே அவர் அதைப் பொருட்படுத்தாததால் அந்தப் பெயரே நிலைத்து விட்டது. தனநந்தனே கூட அவரை அப்படித் தான் அழைத்தான்.

 

எந்த விஷயத்திற்காகவும் ராக்ஷசரிடம் செல்வதை மற்ற அமைச்சர்கள் உட்பட யாருமே விரும்புவதில்லை. காரணம் அவரிடம் பேசுவது சுமுகமானதாக இருப்பது மிக அபூர்வம். மேலும் புன்னகையின் சாயல் கூட வராத அவர் முகத்தில் அவர் என்ன நினைக்கிறார் என்பதை யூகிக்கவும் வழியில்லை. அவர் தனநந்தனைத் தவிர வேறு யாரிடமும் புன்னகைப்பது அனாவசியம் என்று நினைப்பதாக இன்னொரு மூத்த அமைச்சரான வரருசி ஒருமுறை சொன்னது அரண்மனை வட்டாரத்தில் மிகச்சரியான கருத்தாக நீண்ட காலம் பேசப்பட்டது. அதனால் அவராக அழைத்தால் ஒழிய மற்றவர்கள் தாங்களாக வலியப் போய் அவரிடம் பேசுவது மிகமிகக் குறைவு. போக வேண்டிய நிர்ப்பந்தம் வந்தாலும் பேச்சை முடித்துக் கொண்டு உடனே அங்கிருந்து போய் விட வேண்டும் என்ற உணர்வை போகிறவர்களிடம் அவர் ஏற்படுத்தி விடுவார்.     

 

அப்படித்தான் மகதத்தின் முன்னாள் சிறைக் காப்பாளரும் உணர்ந்தார். தள்ளாத வயதில் இந்த ராக்ஷசனிடம் போக நேரிட்டு விட்டதே. என்ன கேட்பார்? பழைய தவறு எதையாவது கண்டுபிடித்து விட்டாரா? என்றெல்லாம் எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்த அந்த முதியவரைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு போய் பல்லக்குத் தூக்கிகள் ராக்ஷசர் முன் நிறுத்தினார்கள். ஒரு குற்றவாளியைப் பார்க்கும் நீதிபதி போல் அவரைக் கடுமையாகப் பார்த்த ராக்ஷசர் அங்கிருந்த இருக்கைக்குப் பார்வையைத் திருப்பி அமர வைக்க அந்த ஆட்களுக்குப் பார்வையாலேயே கட்டளையிட, அவர்கள் முதியவரை அந்த இருக்கையில் அமர வைத்துவிட்டுப் போனார்கள்.

 

ராக்ஷசர் ஒரு ஆராய்ச்சிப் பொருளை ஆராய்வது போல அவரைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கேட்டார். “நீங்கள் ஓய்வு பெற்று எத்தனை ஆண்டுகள் ஆகி விட்டன?”

 

முதியவர் மனதில் வருடங்களைக் கணக்கிட்டு விட்டு பலவீனமான குரலில் சொன்னார். “பன்னிரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன பிரபு

 

நீங்கள் பாடலிபுத்திரம் வந்து எத்தனை காலமாகி விட்டது?”

 

நான் பிறந்து வளர்ந்த ஊரே பாடலிபுத்திரம் தான் பிரபு

 

உங்களுக்குச் சிறைக் காப்பாளர் பதவி எப்படிக் கிடைத்தது?”

 

என் தந்தை இங்கே சிறைக்காப்பாளராக இருந்தார் பிரபு. நான் பெரியவனானவுடன் அவருக்கு உதவியாளனாக வேலை செய்தேன். என் வேலை திருப்திகரமாக இருந்ததால் என் தந்தைக்குப் பிறகு அந்த வேலைக்கு என்னைஅப்போதைய பிரதம அமைச்சர் ஷக்தார் தேர்ந்தெடுத்தார் பிரபு

 

சிறைக் காப்பாளராக இருந்த போது உங்கள் வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறீர்களா?”

 

ஆம் பிரபு.”

 

உங்களை அந்த வேலைக்குத் தேர்ந்தெடுத்த பிரதம அமைச்சரைக் கூட ஒரு காலத்தில் சிறைப்படுத்தியிருக்கிறீர்கள்

 

முதியவர் முகத்தில் வேதனை தெரிந்தது. அவர் குரல் மேலும் பலவீனமாகியது. “ஆம் பிரபு….. அது மன்னரின் உத்தரவு

 

ஷக்தார் எவ்வளவு காலம் சிறையிலிருந்தார்?”

 

சுமார் ஒரு வருட காலம் பிரபு. பிறகு மன்னர் அவரை விடுவித்து விட்டார்

 

ஷக்தார் பின் என்ன ஆனார்? எங்கே போனார்?”

 

இந்தக் கேள்விகளை ராக்ஷசர் அவரிடம் ஏன் கேட்கிறார் என்பது முதியவருக்குப் புரியவில்லை. வேறெதோ ஒன்று முக்கியமாய் கேட்கப் போகிறார், இக்கேள்விகள் அதற்கான முன்னோடி என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. முதியவர் மெல்லச் சொன்னார். “அவர் மகளுக்குத் திருமணம் ஆகும் வரை பாடலிபுத்திரத்தில் இருந்தார். பின் இங்கேயிருந்து போய் விட்டார்….. எங்கே போனார் என்று தெரியவில்லை….”

 

ஷக்தாருக்கு சாணக் என்ற பண்டிதர் ஒருவர் நண்பராக இருந்தார். நினைவிருக்கிறதா?”

 

அந்தக் கேள்வியைக் கேட்டவுடன் முதியவர் முகம் மாறியதை ராக்ஷசர் கவனித்தார். கிழவர் மெள்ளத் தலையை மட்டும் ஆட்டினார். உண்மையில் இவர் அறிய வேண்டியிருந்தது சாணக் பற்றித் தான் என்பது முதியவருக்குப் புரிந்தது.

 

ராக்ஷசர் ஷக்தாரைப் பற்றி விசாரித்த தொனியிலேயே சாணக்கைப் பற்றியும் விசாரித்தார். “சாணக்கும் சிறையில் அடைக்கப்பட்டாரல்லவா? என்ன குற்றத்திற்காக?”

 

முதியவர் தயக்கத்துடன் சொன்னார். “ராஜத் துரோகத்திற்காக

 

சாணக் எவ்வளவு காலம் சிறையிலிருந்தார்?”

 

முதியவர் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையை உணர்ந்தார். ’இவர் மன்னரின் வலது கரம் போன்றவர் அல்லவா? அப்படி இருக்கையில் மன்னரைக் கேட்பதற்குப் பதிலாக என்னிடம் ஏன் கேட்க வேண்டும்? இது ஒருவித பரிட்சையோ?’ முதியவருக்கு ஒன்றும் புரியவில்லை.

 

ராக்ஷசர் கடுமையாகக் கேட்டார். “உங்களுக்குக் காது கேட்கிறதல்லவா?”

 

முதியவருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. குழப்பத்துடன் சிறிது யோசித்து விட்டுக் கைகளை கூப்பியபடி சொன்னார். “பிரபு. இந்த ஏழையைக் கேட்பதை விட மன்னரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால் நான் மன்னரின் ஆணையை மீறாதபடி இருக்கும். சாணக்கின் சிறைவாசம் பற்றி யாரிடமும் எப்போதும் எதுவும் நான் பேசக்கூடாது என்பது மன்னரின் ஆணை”

 

ராக்ஷசர் அந்த முதியவரின் ராஜபக்தியை மனதில் மெச்சியபடி மென்மையாகச் சொன்னார். “மன்னருக்கும் நாட்டுக்கும் ஆபத்து நேரலாம் என்ற நிலை ஒன்று உருவாகி வருகிறது. அதற்கும் சாணக்கிற்கும் ஒரு தொடர்பு இருப்பதாக நான் சந்தேகிக்கிறேன். மன்னரிடம் இது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வதில் எனக்குப் பிரச்சினை எதுவும் இல்லை. மன்னர் உண்மையை என்னிடம் மறைக்கப் போவதுமில்லை. ஆனால் அவர் ஏன் என்று கேட்டால் நான் அந்த ஆபத்து பற்றிச் சொல்லி அவர் நிம்மதியைக் கெடுக்க வேண்டியிருக்கும் என்பதால் தான் உங்களிடம் கேட்கிறேன். நீங்கள் சொல்லும் தகவல் என்னை விட்டு இன்னொருவரிடம் செல்லாது என்பதால் நீங்கள் தைரியமாகச் சொல்லலாம்.”

 

ராக்ஷசர் அப்படிச் சொன்னதைக் கேட்ட பின் முதியவர் அதற்கு மேல் உண்மையை மறைக்க முயற்சிக்கவில்லை. “சிறையில் சாணக் நாங்கள் தரும் உணவையும் உண்ண மறுத்து விட்டார். தண்ணீர் கூடக் குடிக்கவில்லை. மன்னர் தயவில் வாழ்வதை விட உயிரை விடுவது உயர்வானது என்று சொல்லி உண்ணாவிரதம் இருந்து உயிரை விட்டார் பிரபு. அவர் இறந்ததை மன்னரிடம் சொன்ன போது அதை வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் பிணத்தை ரகசியமாக எரித்து விட வேண்டும் என்றும் கட்டளையிட்டார். அப்படியே செய்து விட்டோம் பிரபு.”

 

பொதுவாக சிறையிலிருப்பவர்கள் சிறையில் இறந்தால், அவர்கள் குடும்பத்தினர்கள் அப்பகுதியிலேயே இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் பிணத்தை ஒப்படைப்பது தான் வழக்கம். ஆனால் சாணக்கின் விஷயத்தில் அதைப் பின்பற்றவும் தனநந்தன் அனுமதிக்கவில்லை என்பது ராக்‌ஷசருக்குப் புரிந்தது.   

 

ராக்ஷசர் சந்தேகத்துடன் கேட்டார். “இந்த உண்மையை நீங்கள் வேறு யாரிடம் சொல்லியிருக்கிறீர்கள்?”

 

“சத்தியமாக யாரிடமும் சொன்னதில்லை பிரபு. நீங்களே மன்னர் நலனைச் சொல்லிக் கேட்டதால் தான் உங்களிடமே சொன்னேன்.”

 

சாணக்கின் குடும்பம் என்ன ஆனது?”

 

சாணக்கின் மனைவியும் கணவன் சிறைப்பட்ட துக்கத்தில் சில மாதங்களிலேயே இறந்து விட்டாள் பிரபு. அவர்களுக்கு ஒரு மகன் இருந்ததாக நினைவு. தாயும் இறந்த பின் அந்தச் சிறுவன் இங்கிருந்து போய் விட்டான் பிரபு. எங்கு போனானோ என்ன ஆனானோ தெரியவில்லை

 

அந்த முதியவரின் முகத்தில் மெலிதாய் சோகம் தெரிந்ததுஅந்தச் சிறுவன் இன்று இருக்கும் நிலைமை பற்றி முதியவருக்கு எதுவும் தெரியாது என்பது ராக்ஷசருக்குப் புரிந்தது. யார் சொல்லியிருக்கா விட்டாலும் சாணக் இறந்து விட்ட செய்தியை சாணக்கின் நண்பர்களும், விஷ்ணுகுப்தரும் யூகித்திருக்க வேண்டும் என்பதும் புரிந்தது.

 

அந்த முதியவரை அனுப்பி விட்டு ராக்ஷசர் விஷ்ணு குப்தரைப் பற்றியே நினைத்தவராக நிறைய நேரம் அமர்ந்திருந்தார். வாஹிக் பிரதேசத்தை தன் வசப்படுத்திக் கொண்ட பின் ஆச்சாரியரின் கவனம் மகதத்தின் பக்கம் திரும்பும் வாய்ப்பு அதிகம் என்று அவர் உள்ளுணர்வு சொன்னது. ஆனால் அன்னியரைத் துரத்த வேண்டும் என்று அங்கெல்லாம் மக்களிடம் புரட்சியைத் தூண்டிய யுக்திக்கு இங்கே வாய்ப்பில்லை. மேலும் என்ன தான் படைகளைத் திரட்டினாலும் அவற்றை மகதப்படைகளுடன் ஒப்பிடும் போது மலையை மடுவுடன் ஒப்பிடுவது போலத் தான் இருக்கும். என்ன தான் பழைய வன்மத்தை ஆச்சாரியர் வளர்த்துக் கொண்டாலும் இங்கே அவர் செய்ய முடிந்தது எதுவுமில்லை என்று எத்தனை தான் நம்பினாலும் ராக்ஷசரால் ஆச்சாரியரை அலட்சியப்படுத்தி விடமுடியவில்லை. வழியில்லாத இடத்திலும் வழிகளை உருவாக்கிக் கொள்ள முடிந்த மனிதரிடம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதென்று அவருக்குத் தோன்றியது.

 

(தொடரும்)

என்.கணேசன்

2 comments:

  1. Rakshasar character is very impressive.

    ReplyDelete
  2. ராக்‌ஷசர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும்... ஆச்சாரியரின் திட்டத்தை அறிய முடியாது....
    யவனர்களின் மனதில் குடும்பத்துடன் சேர வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் தோன்ற வைத்ததை அறிய வாய்ப்பில்லை....

    ReplyDelete