Thursday, November 9, 2023

சாணக்கியன் 82

 

னிதர்கள் சந்திக்கும் சில அபூர்வ தருணங்கள் குழப்பமானவையாகவும் இருப்பதுண்டு. அந்தச் சூழ்நிலைகளை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் குழம்புவதற்குக் காரணமே அவை எப்படியும் எடுத்துக் கொள்ளக் கூடியவையாக இருப்பது தான். அது போன்ற மதில் மேல் பூனையாக மக்கள் இருக்கும் தருணங்களைத் தாங்கள் விரும்பும் வகையில் சாய்த்து வழிநடத்த முடிபவர்களே வரலாற்றில் பெரும் திருப்புமுனைகளை ஏற்பட முடிந்தவர்களாக இருக்கிறார்கள்.

 

பிலிப்பும், யவன சேனாதிபதியும் கொல்லப்பட்ட பின்பு அந்த முகாமில் அதுபோன்ற குழப்பமான சூழ்நிலையே நிலவியது. வீரசேனனும், சூரசேனனும் பிலிப்பின் கூடாரத்தை விட்டு வெளியே வந்து மீதமிருக்கும் இரண்டு காவல் வீரர்களையும் வீழ்த்தி முடித்த பின் வீரசேனன் வானை நோக்கி தீப்பந்தத்தை வீச, சூரசேனன் கேட்டான். “இனி நாம் என்ன செய்வது?”

 

அதற்கான பதில் வீரசேனனுக்கும் தெளிவாகத் தெரியவில்லை. உயிர் காத்துக் கொள்ளும் அவசியத்திலும், சந்திரகுப்தனின் படை உதவிக்கு இருக்கிறது என்ற தைரியத்திலும் இத்தனையும் நடந்து விட்டதே ஒழிய இனி என்ன செய்வது என்பது அவனுக்கும் தெரியவில்லை. அவன் சொன்னான். “எனக்கும் தெரியவில்லை. ஆனால் நமக்கு உதவிக்கு வரும் புரட்சிப்படையினர் எல்லாவற்றையும் யோசித்து வைத்திருப்பவர்கள். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைச் செய்வோம். எதற்கும் நம் படைப்பிரிவினரை நாம் தயார்ப்படுத்தி வைப்போம் தம்பி”

 

சூரசேனன் சொன்னான். “நான் ஏற்கெனவே அதற்கான ஏற்பாட்டைச் செய்து வைத்திருக்கிறேன். இன்னேரம் அவர்கள் தயாராக இருப்பார்கள். அழைத்தவுடன் அவர்கள் வந்து விடுவார்கள்”. சொல்லி விட்டு அவன் அவர்களை அழைக்க விரைந்தான்.

 

புரட்சிப் படையினரின் வருகை குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்டுத் தெரியவரவே யவனப் படையினரும், மற்ற படைப்பிரிவினரும் மெல்ல விழிப்படைந்து அவசர அவசரமாக வெளியே வந்தார்கள். அவர்கள் வெளியே வந்த போது வீரசேனனின் படைவீரர்களும், சூரசேனனின் படைவீரர்களும் அங்கே ஆயுதங்களோடு குழுமியிருந்தார்கள். வீரசேனன் கர்ஜிக்கும் குரலில் அறிவித்துக் கொண்டிருந்தான். “யவனர்கள் நம்பத் தகுந்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து விட்டார்கள் வீரர்களே. இவர்களுக்காக உயிரையும் பணயம் வைத்துப் போரிட்டு காயப்பட்டுத் தப்பி வந்த என்னைப் பாராட்டுவதற்குப் பதிலாகச் சற்று முன் கொல்லப் பார்த்தார்கள். இறையருளால் தற்காத்துக் கொண்டேன். இனி இவர்கள் அன்னியர்கள். இவர்களிடமிருந்து விடுபடுவதே நம் லட்சியம். புரட்சிக்காரர்கள் உண்மையில் நம் நண்பர்கள். நமக்கு உதவ வந்து விட்டார்கள்….”

 

யவனப்படை வீரர்கள் திகைத்தார்கள். முன்பே வீரசேனனால் தடுக்கப்பட்டு வீரசேனன் மீது அனைவரிடமும் புகார் சொல்லிக் கொண்டிருந்த யவனப்படைத் தலைவன் வேகமாக சத்ரப்பின் கூடாரம் நோக்கி ஓடினான். உள்ளே போய் பிலிப்பும் சேனாதிபதியும் ஒரு காவல்வீரனும் கொல்லப்பட்டு இருப்பதைக் கண்டவன் அதிர்ந்து போய்த் திரும்பி வந்து கத்தினான். “நம் சத்ரப்பையும், சேனாதிபதியையும் இவர்கள் கொன்று விட்டார்கள்” யவனப் படைவீரர்கள் மட்டுமல்லாமல் மற்றப்படைப் பிரிவினரும் அதிர்ந்து நின்றார்கள். யாருக்கும் இனி என்ன செய்வது என்ற தெளிவிருக்கவில்லை.  நம்மை விட மற்றவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்ற பயம் யவனர்களை எச்சரித்தது. வீரசேனன், சூரசேனன் அல்லாத மற்றப் படைப் பிரிவினர் சத்ரப்பும், சேனாதிபதியும் கொல்லப்பட்டு, யவனர்களுக்கு எதிராக இவர்கள் திரும்பி விட்ட பிறகு, நாம் என்ன செய்வது எந்தப் பக்கம் சேர்வது என்ற குழப்பத்தில் இருந்தார்கள்.     

 

முகாமை நெருங்கி விட்ட சந்திரகுப்தன் காதுகளில் “நம் சத்ரப்பையும், சேனாதிபதியையும் இவர்கள் கொன்று விட்டார்கள்” என்று யவனப்படைத் தலைவன் கத்தியது தேனாகப் பாய்ந்தது. எல்லாரும் என்ன செய்வது என்று குழம்பிய நிலையில் இருப்பதையும் அவன் முதல் பார்வையிலேயே உணர்ந்தான். இயல்பாகவே தலைமைப் பண்புகள் வளர்ந்திருந்ததால் நிலைமையைத் தன்வசப்படுத்திக் கொண்டு உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டுச் செயல்படுத்த முடிந்த அவன் உச்ச ஸ்தாயியில் கர்ஜித்தான். “நம் இலக்கு யவனர்கள் மட்டுமே. அவர்களை மட்டுமே தாக்குங்கள். மற்றவர்கள் நம் சகோதரர்கள். நம்மவர்கள். அவர்களுக்கு ஒரு தீங்கும் வரக்கூடாது”

 

அதைக் கேட்டு வீரசேனனும் கத்தினான். “யவனர்கள் தான் நம் எதிரிகள். அவர்களை மட்டும் தாக்குங்கள்”

 

மற்றப் படைப்பிரிவின் தலைவர்கள் யோசித்தார்கள். புரட்சிப்படை வீரர்கள் அவர்களை எதிரிகளாக நினைக்கவில்லை. அவர்களைச் சகோதரர்கள் என்கிறார்கள். யவனர்கள் அன்னியர்கள், நம்பத் தகுந்தவர்கள் அல்ல என்ற செய்தி முன்பிருந்தே குடிமக்கள் சொல்லி வருவது அவர்களுக்குத் தெரியும். அவர்களுடன் இணைந்து போரிட்ட வீரசேனனும் சொந்த அனுபவத்தால் அதையே இப்போது சொல்கிறான். அவன் சகோதரனும் அவனுடன் தான் இருக்கிறான். சத்ரப்பும் சேனாதிபதியும் கூட இறந்து விட்ட பிறகு யவனர்கள் பக்கம் இருப்பதற்கு அவசியமுமில்லை. ஒரு காலத்தில் சாதாரண குடிமக்கள். குழந்தைகள், பெண்கள் உட்பட கொன்று குவித்தவர்கள் இந்த யவனர்கள்….

 

சூழ்நிலை உடனடியாக யவனர்களுக்கு எதிராக மற்றவர்களை ஒன்று சேர்த்தது. ஒரு புதிய வரலாறு அந்த நள்ளிரவில் எழுதப்பட்டது.

 

லெக்ஸாண்டர்  ஒற்றன் சொன்ன செய்திகளைத் திகைப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். “சக்கரவர்த்தி. புரட்சி வீரர்களுடன் நம் யவனப்படை தவிர மற்ற படைப்பிரிவினர் அனைவரும் சேர்ந்து கொண்டதால் நம் யவனப்படை சரணடைந்து விட்டது. ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு நம் வீரர்கள் உயிர் தப்பினால் போதும் என்று அங்கிருந்து ஓடிவிட்டார்கள். அதன் பின் சந்திரகுப்தன் தலைமையை அனைத்துப் படைகளும் ஏற்றுக் கொண்டார்கள். மாளவத்தில் நடந்தது போலவே, ஷுத்ரகத்திலும், சௌரப்நகரிலும், ஸ்கந்தாவரிலும் புரட்சிப் படைகள் மக்களுடன் சேர்ந்து யவனப்படைகளைத் தனிமைப்படுத்தி விட்டார்கள். ஆனால் மற்ற படைப்பிரிவினரை தங்களுடன் இணைத்துக் கொண்டு விட்டார்கள். மாளவம், கத், ஷுத்ரகம் பகுதிகளைக் கொண்ட வாஹிக் பிரதேசம் முழுவதும் சந்திரகுப்தனின் தலைமையின் கீழ் வந்து விட்டது. அருகிலிருக்கும் மற்ற சிறு சிறு குடியரசுகளூம், சிற்றரசுகளும் கூட சந்திரகுப்தன் தலைமையை ஏற்றுக் கொண்டு விட்டன.”

 

தட்சசீலக் கல்விக்கூடத்தின் மாணவனாக இருந்த ஒரு இளைஞன் இப்படி யவனர்களுக்கு எதிரியாக பாரதத்தில் முளைப்பான், ஒரு பெரும்பகுதியை அவர்களிடமிருந்து வெற்றிகரமாகப் பறித்துக் கொள்வான் என்று அலெக்ஸாண்டர் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. சென்ற மாதம் தான் பிலிப் பாரதத்தின் பல பகுதிகளிலும் கலவரக்காரர்கள் உருவாகி வருகிறார்கள் என்றும் அவர்களை உருவாக்குவது தட்சசீலத்தின் கல்விக்கூடத்தின் ஆசிரியர் விஷ்ணுகுப்தர் மற்றும் அவரது மாணவர்கள் என்றும் குற்றம் சாட்டித் தகவல் அனுப்பியிருந்தான். விஷ்ணுகுப்தர் ஒரு காலத்தில் ஆம்பி குமாரனுக்கு ஆசிரியராக இருந்தவர் என்றும் அவன் மீது அதிருப்தி கொண்டு கல்வி முடிவதற்கு முன்னரே அவனை அனுப்பி வைத்தவர் என்றும், கேகய அமைச்சர் இந்திரதத் அவரது நண்பர் என்றும் எழுதியிருந்தான். இந்திரதத்தும்  கேகய அரசர் புருஷோத்தமனும் விஷ்ணுகுப்தரையும் இந்தக் கலவரக்காரர்களையும் ஊக்குவிக்கிறார்கள் என்ற சந்தேகம் தனக்கிருப்பதாகவும்  கூட எழுதியிருந்தான். இதெல்லாம் எழுதிய அவனுக்கு அவன் உயிரும்  பறிகொடுக்க வாய்ப்பிருக்கிறது என்ற சந்தேகம் சிறிதும் வந்திருக்கவில்லை. அலெக்ஸாண்டர் இந்தப் புதிய சூழல் உருவான போது சமாளிக்க பாரதத்தில் தானில்லாமல் போய் விட்டதற்கு வருத்தப்பட்டான்.

 

அலெக்ஸாண்டர் கேட்டான். “இவர்களுக்கு இந்த அளவு செயல்பட செல்வம் எங்கிருந்து வருகிறது?”

 

ஒற்றன் சொன்னான். “சந்திரகுப்தனுக்கு ஆதரவு பல இடங்களிலும் பெருகிக் கொண்டே வருவதால் விவசாயிகள் தங்கள் விளைச்சல்களை அவனுக்கு மகிழ்ச்சியுடன் தருகிறார்கள். வணிகர்கள் தங்கள் பொருள்களைத் தருகிறார்கள். செல்வந்தர்கள் தாராளமாகத் தங்கள் செல்வத்தைத் தருகிறார்கள். சாதாரணக் குடிமக்கள் கூடத் தங்களால் முடிந்ததைத் தருகிறார்கள்.  ‘நம் தாய்நாடான புண்ணிய பாரதத்தை அன்னியர்களிடமிருந்து காப்பாற்றுவோம்’ என்ற கோஷம் எல்லா மூலைகளிலும் எழுந்து பல இடங்களில் மகத்தான வெற்றியைப் புரட்சிக்காரர்களுக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறது சக்கரவர்த்தி. தங்கள் தாய்நாட்டை மீட்க நம்மால் ஆனது எதையாவது கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை எல்லோர் மனதிலும் வித்திட்டவரும், புரட்சியை வழிநடத்துபவரும் விஷ்ணுகுப்தர் தான். அப்படிச் செய்து அவர் தன் மாணவனான சந்திரகுப்தனை ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவாக்கியதில் மகத்தான வெற்றி கண்டு விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.”

 

ஒரு ஆசிரியரிடம் தோற்றுப் போக நேரிடும் என்று அலெக்ஸாண்டர் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அந்த ஆசிரியர் சாதாரண ஆசிரியர் அல்ல என்பது இப்போது புரிகிறது. சாதாரண குடிமக்களையும் ஒரு சேனையாக உருவாக்க முடியும் என்று புதிய சிந்தனையை வெற்றிகரமாகச் செயல்படுத்திக்காட்டிய விஷ்ணுகுப்தரை அவனால் மெச்சாமல் இருக்க முடியவில்லை. யோசனையில் சிறிது நேரம் ஆழ்ந்து விட்டு அலெக்ஸாண்டர் கேட்டான். “காந்தாரம் கேகயம் இரண்டு இடங்களிலும் என்ன நிலைமை?”

 

“இரண்டு நாடுகளிலும் கோஷங்கள் இருந்த போதிலும் அது புரட்சியாக வெடிக்காமல் ஆம்பி குமாரனும், புருஷோத்தமனும் அடக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு அவர்கள் தங்கள் முழுப்படைகளையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டியிருக்கிறது. அது எத்தனை நாட்கள் சாத்தியம் என்று தெரியவில்லை.”

 

பாரதத்திலிருந்து நீண்ட தூரத்திற்கு வந்திருந்த அலெக்ஸாண்டர் தற்போது மாசிடோனியாவிற்கும் தொலைவில் தான் இருக்கிறான். தாயகம் போகத் துடிக்கும் அவனுடைய வீரர்களை அங்கு கொண்டு போய்ச் சேர்க்காமல் பாரதத்திற்கு அவன் திரும்பியும் போக முடியாது. பிலிப் இறந்து விட்டதால் அவனுக்குப் பதிலாக மாற்று ஏற்பாடுகளை பாரதத்தில் செய்தாக வேண்டும்…. நன்றாக யோசித்து விட்டு அவன் புதிய ஆணை பிறப்பித்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்

2 comments:

  1. Beautifully explained how Chandragupta-Chanakya combo used the turn of events to their favour.

    ReplyDelete
  2. சாணக்கியர் வயதானவர்களை கோஷமிட வைத்ததன் அர்த்தம் இப்போது புரிகிறது.... ஒரு குழப்பமான சூழல் நிலவும் போது அதை தன் வசப்படுத்திக் கொண்டு சந்திரகுப்தன் செயல்பட்ட விதம் சிறப்பு.... இனி.., அப்பகுதிக்கு சத்ரப்பாக வர மற்றவர்கள் அச்சப்படுவார்கள் .,.

    ReplyDelete