Monday, November 27, 2023

யோகி 25

 

யோகாலயத்தில் ஒவ்வொரு நாளும் மாலை ஏழரை மணியளவில் அந்த நபரின் மேசையில் ஒரு தகவல் தாள் இருக்கும். சில நாட்களில் அது ஒரு தாளாக இருக்கும். சில நாட்களில் அது பல தாள்களாக இருக்கும். சில சமயங்களில் ஒரு பென் டிரைவும் அதனுடன் வைத்திருக்கப்படும். அதில் சில புகைப்படங்களும், வீடியோக்களும் இருக்கும். அந்த நபர் மிகவும் பொறுமையாக அந்த அறிக்கையைப் படித்துப் பார்ப்பார். அவ்வப்போது வைக்கப்படும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பார்ப்பார்.  பல சமயங்களில் அதன் பிறகு எந்தக் கருத்தும், கட்டளையும் அவரிடம் இருக்காது. அபூர்வமாய் சில சமயங்களில் அவர் கட்டளைகள் பிறப்பிப்பார். அவை உடனுக்குடன் நிறைவேற்றப்படும்.

 

அன்று அவர் மேசையில் இருந்த அறிக்கையில் இந்த வார யோகா-தியான வகுப்புகளில் கலந்து கொண்டவர்கள் குறித்த விவரங்கள், அவர்களில் சிலர் பின்னணி, செயல்பாடுகள் குறித்த விவரங்கள் இருந்தன. அதைப் படித்த பின் அதில் குறிப்புகள் எழுதவோ, கட்டளைகள் பிறப்பிக்கவோ அவசியமிருக்கவில்லை. அந்த அறிக்கையில் புதிதாய் வேலைக்குச் சேர்ந்து இருப்பவர்களின் செயல்முறைகள் குறித்த தகவலும் இருக்கும். சமீப காலத்தில் ஒரு புதிய தோட்டக்காரனும், சமையல்காரனுக்கு உதவியாள் ஒருவனும் தான் சேர்ந்திருக்கிறார்கள். அவர்களும் சந்தேகத்திற்கு இடந்தரும் வகையில் நடந்து கொள்ளவில்லை

 

அந்த நபர் திருப்தியுடன் அந்த அறிக்கையைத் தள்ளி வைத்தார். சைத்ரா சம்பவத்திற்குப் பிறகு தான் யோகாலயத்தில் பல நிலைகளிலும் கண்காணிப்பை அவர் தீவிரப்படுத்தியிருக்கிறார். ஆனால் மொட்டைக் கடிதம் எழுதிய நபரை மட்டும் இன்னமும் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த நபர் அடுத்ததாய் எந்த வில்லங்கமான செயலையும் செய்யவில்லை. இப்போதெல்லாம் தீவிரக் கண்காணிப்பு அங்கிருப்பதால், அந்த நபருக்கு மொட்டைக் கடிதம் எழுதினாலும் அதைத் தபால் பெட்டியில் போடுவது உட்பட எதுவும் செய்து விட முடியாது என்பது தான் யதார்த்த நிலைமை. ஆனாலும்  அவர் இருக்கும் இடத்தில் அப்படி ஒரு துரோகி என்னும் களை ரகசியமாய் முளைத்திருப்பது அவருக்குச் சவால் தான்! 

 

திங்கட்கிழமை காலை ஏழு மணிக்கு ஷ்ரவன் யோகாலயம் போய்ச் சேர்ந்தான். சில நாட்களாகவே அவன் தன் நடை, உடை, பேச்சு, தோற்றத்தில் சில நுணுக்கமான மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தான். யோகாலயம் அவனை இனி இப்படித் தான் காணப்போகிறது. ஒரு கைதேர்ந்த நடிகன் புதிய கதாபாத்திரத்தை எப்படி மனதில் ஆழமாக உள்வாங்கி அப்படியே மாறி விடுகிறானோ அப்படி மாறும் திறமை ஷ்ரவனுக்கு இருந்தது. இதற்கு முன்பு ஒரு நக்சலைட் கும்பலைப் பிடித்துக் கொடுப்பதிலும் அவனுக்குப் பெரிதும் உதவியாக இருந்தது அத்திறமை தான்.

 

யோகாலயத்தில், ஒரு வார காலம் அங்கு யோகா கற்றுக் கொள்ள அவன் அனுமதிக்கப்பட்ட மெயிலைக் காண்பித்த பின்பும் அவன் அந்த பெயருக்கான ஐ,டியையும் காட்டிய பின்பு தான் பிரதான வெளிக்கதவைத் தாண்டி ஷ்ரவன் உள்ளே செல்ல முடிந்தது.

 

ரிசப்ஷனில் இருந்த இளைஞன் ஷ்ரவன் காட்டிய ஆதாரங்களை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டு அவனுக்கு ஏழாம் எண் அறை ஒதுக்கப்பட்டிருப்பதாகச் சொன்னான். யோகா வகுப்பில் கலந்து கொள்ள வருபவர்கள் இரண்டிரண்டு பேருக்கு ஒவ்வொரு அறை ஒதுக்கப்படும் என்று முன்பே அவனுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் தன்னுடன் தங்கும் ஆள் யாரென்று அறிந்து கொள்ள ஷ்ரவன் விரும்பினான். ரிசப்ஷனிஸ்ட் மேஜை மீது இருந்த ரிஜிஸ்டரில் பார்த்து விட்டு அந்த நபர் பெயர் ஸ்ரீகாந்த் என்றும், அவன் சற்று முன் தான் வந்து சேர்ந்தான் என்றும் தெரிவித்தான்.

 

ஷ்ரவன் புதிய இடத்தை ஆர்வத்துடன் பார்க்கும் பாவனை காட்டி வரவேற்பறையை நோட்டமிட்டான். அங்கு மூன்று இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் இருந்தது தெரிந்தது. ரிசப்ஷனிஸ்ட் சொன்னான். “இடது பக்கம் ஐந்தாவது ரூம் சார்

 

அவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு ஷ்ரவன் நகர்ந்தான். ஏழாம் எண் அறையில் அவனை வரவேற்ற ஸ்ரீகாந்த் பேசுவதில் சலிப்பில்லாதவனாய் இருந்தான். கால் மணி நேரத்தில் அவனுடைய வரலாறையே ஷ்ரவன் அறிந்து கொண்டிருந்தான்.

 

ஸ்ரீகாந்த் திருச்சியைச் சேர்ந்தவன். வயது 35. இன்னும் திருமணமாகாதவன். இரண்டு வருடம் முன்பு வரை துபாயில் ஒரு நல்ல வேலையில் இருந்து நிறைய சம்பாதித்திருக்கிறான். அதை அவன் ஷேர் மார்க்கெட்டில் மிக புத்திசாலித்தனமாய் முதலீடு செய்திருப்பதால் திருப்திகரமான வருமானம் அவனுக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டு வருடங்களில் அவன் கலந்து கொள்ளாத தியான வகுப்புகள் இல்லை என்று சொல்லி விடலாம். ஹரித்வார், ரிஷிகேஷ், டில்லி, புனே, பெங்களூர், கோயமுத்தூர் ஆகிய நகரங்களில் பல தியானம் மற்றும் யோகா வகுப்புகளில் கற்றிருக்கிறான். எல்லாம் ஒன்றையே தான் சில சின்ன மாறுதல்களோடு புதியது போல சொல்லித் தருகின்றன என்று அவன் சொன்ன போது ஷ்ரவன் புன்னகையோடு கேட்டான். “பின் ஏன் இந்த அறிமுக வகுப்புக்கும் வந்து சேர்ந்திருக்கீங்க?”

 

ஸ்ரீகாந்த் புன்னகையுடன் சொன்னான். “இங்கேயாவது ஏதாவது புதுசா சொல்லித் தர்றாங்களான்னு பார்க்கத் தான்  

 

பல விஷயங்களில் ஆர்வம், நகைச்சுவை உணர்வு, கூர்மையான அறிவு, தன் குறைகளை ஒத்துக் கொள்வதில் தயக்கமில்லாத தன்மை கொண்ட ஸ்ரீகாந்தை  ஷ்ரவனுக்கு மிகவும் பிடித்து விட்டது. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்கள் இருவரும் யோகா வகுப்புக்குச் சென்றார்கள்.

 

அந்த வார யோகா பயிற்சிகளுக்கு மொத்தம் 21 ஆட்கள் வந்திருந்தார்கள். பத்து பெண்கள், பதினோரு ஆண்கள். அவர்களில் எட்டு பேர் முதியவர்கள். ஏழு பேர் நடுத்தர வயதினர், ஆறு பேர் இளம் வயதினர்.  யோகா வகுப்பறையில் முதல் முதலாகச் சந்தித்துக் கொண்ட அவர்களில் பலருக்கு ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது. தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.   

 

அவர்களுடன் பேசிக் கொண்டே ஷ்ரவன் தன் பார்வையை வகுப்பறையில் சுழல விட்டான்.  அங்கேயும் இரண்டு கண்காணிப்பு காமிராக்கள் இருந்தன.

 

இரண்டு துறவிகள் யோகா பயிற்சியாளராக வந்தார்கள். ஒரு ஆண், ஒரு பெண். அனைவருடைய செல் போன்களையும் ஸ்விட்ச் ஆஃப் செய்து விடச் சொன்னார்கள். பிறகு பிரார்த்தனை, அறிமுகப்படுத்திக் கொள்தல், முடிந்தவுடன் அங்கு இந்த ஒரு வாரம் தங்கியிருக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைச் சொன்னார்கள். மது குடித்தல், புகை பிடித்தல், ஒழுங்கீனமாய் நடந்து கொள்தல் - மூன்றும் கூடாதென்று சொன்னார்கள். அடுத்ததாய் யோகாலயத்தின் பின்பகுதிக்குச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்று சொன்னார்கள். பின் பகுதியில் துறவிகள் வசிக்கும் பகுதி என்பதால் அங்கே மற்றவர்கள் செல்வது அவர்களது தியானத்திற்கும், துறவு வாழ்க்கைக்கும் தொந்தரவாக இருக்கும் என்று சொன்னார்கள்.

 

ஷ்ரவன் இவர்கள் சொல்வது மட்டும் தான் பின் பகுதிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுவதற்குக் காரணம் என்று நம்பவில்லை. பின் பகுதியில் தான் பிரம்மானந்தாவும் வசித்து வருகிறார். வேறு ரகசியங்களும் பின்பகுதியில் இருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. அப்பகுதியில் தான் சைத்ரா வாழ்ந்தாள், அங்கு தான் கொலைக்கான காரணமும் புதைந்திருக்கிறது.

 

பின் ஆண் துறவி சென்று விட பெண் துறவி யோகா வகுப்பை ஆரம்பித்தார். அவர் பேச்சும், வகுப்பை நடத்திய முறையும் மிக நேர்த்தியாக இருந்தன. அவருக்குப் பிறகு பயிற்சி சொல்லித் தர வந்த துறவியும் சிறப்பாகவே பாடம் நடத்தினார்.  ஆனால் இருவரும் அதிகமாக யோகி பிரம்மானந்தா சொன்னதையே மேற்கோள் காட்டினார்கள். ஒரு கட்டத்தில் சற்று எரிச்சல் அடைந்த ஸ்ரீகாந்த் இடைமறித்து இரண்டாவது வந்த துறவியிடம்இந்தக் கருத்து பிரம்மானந்தாவுக்கும் பல நூற்றாண்டுகளுக்கும் முன்னாலேயே பதஞ்சலி மகரிஷியால் சொல்லப்பட்டது அல்லவா?” என்று கேட்க அந்தத் துறவி சற்று தர்மசங்கடத்துடன் பார்த்து விட்டு, சமாளித்தபடி சொன்னார். “உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இந்த யோகா முறை அதற்கும் முந்தையது. வேதகாலத்து விஷயமிது. அதை தொகுத்துக் கொடுத்த பதஞ்சலி மகரிஷி வேறு யாருமல்ல, யோகி பிரம்மானந்தரின் முற்பிறவி குரு. ஆனால் பதஞ்சலி மகரிஷியின் கருத்துகள் எல்லாருக்கும் புரியும்படியான எளிய வார்த்தைகளில் இல்லை. அதையே அவருடைய பிரதான சீடராக இருந்த யோகி பிரம்மானந்தா இப்பிறவியில் மிக எளிமையான முறையில் விளக்கியவர் என்பதால் தான் அவரை நான் மேற்கோள் காட்டினேன்…”

 

ஸ்ரீகாந்த் ஷ்ரவனிடம் முணுமுணுத்தான். ”இதென்ன புதுக்கதை. பதஞ்சலி சொன்னதை சுவாமி சின்மயானந்தாவும், மகரிஷி மகேஷ் யோகியும் கூட எளிமையாகத் தான் சொல்லி இருக்கிறார்கள். இப்போது இந்த ஆள் பிரம்மானந்தா சொன்னதாய் சொன்ன வார்த்தைகள் எல்லாம் சின்மயானந்தா பயன்படுத்திய அதே வார்த்தைகள்   

 

ஷ்ரவன் புன்னகைத்தான். ‘இந்த ஒருவார வகுப்புகள் ஸ்ரீகாந்த் தயவால் சுவாரசியமாகத் தான் இருக்கப் போகின்றன.’


(தொடரும்)

என்.கணேசன்





 

6 comments:

  1. எனக்கும் இனி வருவதை படிக்க சுவாரஸ்யமாக தான் இரு

    ReplyDelete
  2. Thrilling to read. Eagerly waiting for next Monday

    ReplyDelete
  3. எனக்கும் இனி வருவதை படிக்க சுவாரஸ்யமாக தான் இருக்கும்... நானும் ஸ்ரீகாந்த் போல பல கேள்விகள் கேட்டேன்.... அதற்கு இந்த பயிற்சியை செய்யுங்கள் சரியாகி விடும் என்றார்கள்....

    கடைசி நாள் வகுப்பில் சில பொருட்களை விற்றார்கள்.... அதை அவர்கள் முன் சோதனை செய்த போது...வேலை செய்யவில்லை ... அதற்கு 'உங்களுடைய எதிர்மறை அதிர்வுகளால் தான் வேலை செய்யவில்லை' என்றார்கள்....

    ReplyDelete
  4. Hello Ganesan sir,

    This story revolves and possibly revealing (I think like that) about a particular real yoga center. They are known for their atrocious behaviour on land snatching in that area. Just curious to know, have you faced any threats for writing this story?

    ReplyDelete
  5. I appreciate your brave for selecting this story to write.congratulations.

    ReplyDelete
  6. Feeling like watching a very nice movie

    ReplyDelete