Monday, November 13, 2023

யோகி 23

 

பிரம்மானந்தாவின் மெய்சிலிர்த்த ஆன்மீக அனுபவ வர்ணனை தொடர்ந்தது. “அந்தப் பிரம்மாண்ட ஜோதியின் நடுவில் நான் ஈசனைப் பார்த்து மெய் மறந்து எத்தனை நேரம் இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. நான் நிகழ்காலத்திற்குத் திரும்பிய போது ஜோதியும், மகாலிங்கமும் மறைந்திருந்தன. கோரக்கரும், மற்ற சித்தர்களும் மறைந்திருந்தார்கள். ஆனாலும் அந்தப் பேரானந்த உணர்வு மட்டும் எனக்குள் நிறைந்தே இருந்தது. எனக்கு மலையிலிருந்து கீழே இறங்க மனமேயில்லை. அங்கேயே அப்படியே தங்கி விட வேண்டும் என்று என் மனம் துடித்தது. இறைவன் எனக்குக் காட்சி அளித்தது ஏதோ ஒரு காரணத்திற்காகத் தான், நான் இந்த மானுட சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று என் ஆத்மா சொன்னது. எனக்குக் கிடைத்த இந்த ஆன்மிகப் பேரானந்தம் என்னுடனேயே முடிந்து விடக்கூடாது, மற்றவர்களும் இதைப் பெற நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று அந்தக் கணத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்டேன். லேசாக இருட்டவும் ஆரம்பித்து விட்டதால் மலையிலிருந்து கீழிறங்கத் தீர்மானித்தேன்.”

 

கீழே இறங்கி வரும் போது, மிக நிதானமாக இறங்கிக் கொண்டிருந்த ஒரு முதியவர் என்னைத் திரும்பிப் பார்த்தார். பார்த்தவுடன் திகைத்து கைகூப்பினார். அவர் கண்களில் ஒரு பிரமிப்பு தெரிந்தது. அவர் கண்களிலிருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது. அப்போது தான் நான் என்னையே பார்த்தேன். என் உடலில் இருந்தும் ஒரு ஒளி ஒளிர்ந்து கொண்டிருந்தது. அந்த ஜோதியிலிருந்து ஒரு ஜுவாலை என்னிடமும் இடம் பெயர்ந்து விட்டதோ! அவரிடம் ஒன்றும் பேசாமல் மளமளவென்று கீழே இறங்கினேன். மலை அடிவாரத்தில் மரச்சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த இரண்டு பெண்கள் என்னைப் பார்த்தவுடன் தலைக்கு மேல் கைகளை உயர்த்தி வணங்கினார்கள். எனக்கு கூச்சமாகப் போய் விட்டது. நான் ஸ்கூட்டரில் திரும்பி வரும் போது தான் எனக்குள் ஒளிர்ந்த அந்த ஒளி மெள்ள குறைய ஆரம்பித்தது.... ஆனால் அந்த அனுபவமும், அப்போது உணர்ந்த ஆனந்தமும் எனக்குள் நிரந்தரமாகத் தங்கி விட்டது...”

 

படித்து ஷ்ரவன் புன்னகைத்தான். அந்த நூலில் அந்த ஆன்மீக அனுபவத்தை விவரித்து எழுதியது போல் தன் அதற்கு முந்தைய வாழ்க்கையை அவர் விவரித்திருக்கவில்லை. அவருக்கு யோகா சொல்லிக் கொடுத்த பத்மநாப நம்பூதிரி பற்றிய விவரங்கள் எதுவும் இல்லை. அவரிடம் கற்றுக் கொண்ட பயிற்சிகள் பற்றியும் எந்த விவரிப்பும் இல்லை. அந்த மெய்ஞான அனுபவத்திற்கு பிறகு, தானாக அவர் யோகப் பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்து விட்டதாகவும், பின் யோகா பயிற்சியாளராகி, சென்னைக்கு இடம் பெயர்ந்ததாகவும் மிகச் சுருக்கமாகத் தகவல் அந்த நூலில் சொல்லப்பட்டு விட்டது.  விரிவான தகவல்களை எல்லாம் வேறிடங்களிலிருந்து தான் ஷ்ரவன் பெற்றிருந்தான். அதற்குப் பின் நடந்ததும் கூட அப்படித்தான்.

 

சென்னை திரும்பிய பிறகு யோகாலயம் ஆரம்பிக்கும் வரை பிரம்மானந்தா அவர் சதுரகிரி மலையில் பெற்ற ஆன்மீக அனுபவத்தை யாரிடமும் சொன்னதாகத் தெரியவில்லை. அவரிடம் யோகா கற்றுக் கொள்ள வந்த செல்வந்தர்களிடம் யோகாலயம் ஆரம்பிக்கும் தன் ஆசையைச் சொல்லி இருக்கிறார். அவர்களில் நான்கைந்து பேர் சற்றுப் பெரிய தொகைகளைத் தந்து யோகாலயத்துக்கான இடம் வாங்க உதவியிருக்கிறார்கள். அந்த ஆட்களைப் பற்றியும் அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலில் எந்த இடத்திலும் பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை. சென்னை திரும்பிய பின் இரண்டு வருடங்களில் யோகாலயத்திற்கான இடம் வாங்கி அங்கே போய் விட்டதாக ஒரு வாக்கியத்தில் அந்தத் தகவலும் முடிந்து விட்டது.      

 

ஒரு மனிதன் எதை விரிவாகச் சொல்கிறான், எதைச் சுருக்கமாகச் சொல்கிறான், எதைச் சொல்ல மறக்கிறான் என்ற தகவல்களை வைத்து அவனைப் பற்றி ஏராளமாகத் தெரிந்து கொள்ள முடியும்! ஷ்ரவன் அப்படி பிரம்மானந்தா பற்றி நிறைய தெரிந்து கொண்டான்.

 

யோகாலயம் ஆரம்பித்தவுடன் பிரம்மானந்தாவின் நடை, உடை, பாவனை எல்லாம் ஓஷோ ரஜனீஷினுடையதைப் போலவே மாற ஆரம்பித்தது. பல நிறங்களில் குல்லாயும், கண்ணைக் கவரும்படியாக விலையுயர்ந்த ஆடைகளும் அணிய ஆரம்பித்தார். அவருடைய தாடியும் ஓஷோவின் பாணியில் மாறியது.

 

யோகாலயத்தை ஆரம்பத்தில் சிறிய அளவில் தான் பிரம்மானந்தா ஆரம்பித்தார் என்றாலும் போகப் போகச் சுற்றி இருக்கின்ற இடங்களை வாங்கி பெரிதுபடுத்திக் கொண்டார். பக்தர்களும், விசுவாசிகளும் தந்த நன்கொடைகள் மூலம் யோகாலயத்தை விரிவுபடுத்துவது சாத்தியமானது என்று அதற்கும் ஒரே வரி தான். பிரம்மானந்தா பல அரசியல்வாதிகளின் பினாமியாக இருக்கிறார் என்றும் அவரது அசுர வளர்ச்சிக்கு அது தான் காரணம் என்றும் ஒரு குற்றச்சாட்டை அவருடைய எதிரிகள் சொன்னார்கள் என்றாலும் எதற்கும் ஆதாரமில்லை.

 

பல அரசியல் தலைவர்களும், நடிகர் நடிகைகளும் அவரது யோகாலயத்தில் நடக்கும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கலந்து கொண்டார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் ஆன்மீகப் பெரியோர், பிரபல ஆன்மீகப் பேச்சாளர்கள் கலந்து கொண்டது மிக மிகக் குறைவு. பிரபலமானவர்கள் மட்டுமே அவரைக் கண்டு பேச முடிகிறது என்றும், பிரபலமில்லாத ஆன்மீக அன்பர்கள் அவரை நெருங்கவும் முடிவதில்லை என்றும் பலரும் குற்றம் சாட்டினார்கள். அதற்கெல்லாம் அவர் பதிலளிக்கும் சிரமத்தை எடுத்துக் கொள்ளவில்லை.

 

ஷ்ரவனுக்கு அவர் பேட்டிகளும், சொற்பொழிவுகளும் கூட மிகவும் சுவாரசியமாக இருந்தன.

 

ப்ரேமானந்த் என்பது தான் அவரது இயற்பெயர் என்பதால் ப்ரேமானந்தா என்று பெயர் வைத்துக் கொள்ளாமல் பிரம்மானந்தா என்ற பெயர் வைத்துக் கொள்ள என்ன காரணம் என்று ஒரு நிருபர் கேட்ட போது அவர் சொன்னார். “சதுரகிரி மலையில் எனக்குக் கிடைத்த அந்த பேரானந்த அனுபவத்தில் நான் பிரம்ம ஞானத்தையும் பெற்று விட்டிருந்தேன். அதனால் தான் அந்தப் பெயரே எனக்கு மிகவும் பொருத்தமாகத் தோன்றியது.” அவரது விமர்சகர்களோ ப்ரேமானந்தா என்ற பெயரில் ஏற்கெனவே ஒரு துறவி பெயரைக் கெடுத்துக் கொண்டு இருந்ததால் தான் அந்தப் பெயரை அவர் தவிர்த்தார் என்று கூறினார்கள்.

 

அவர் பேட்டிகளிலும், பேச்சுகளிலும் மற்றவரை வியக்க வைக்க வேண்டும், திகைக்க வைக்க வேண்டும், பிரமிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் தீவிரமாக இருந்ததாக ஷ்ரவனுக்குத் தோன்றியது. ஒரு பேட்டியில் கேள்விபதில் இப்படி இருந்தது.

 

தாங்கள் மெய்ஞானம் பெற்ற தினத்தில் சதுரகிரியில் கோரக்கர் என்ற சித்தரையும், மற்ற சித்தர்களையும், பார்த்ததாகச் சொல்லியிருந்தீர்கள். அந்த சித்தர்களைப் பின் எப்போதாவது காணும் பாக்கியம் கிடைத்திருக்கிறதா?”

 

பிரம்மானந்தா புன்முறுவலுடன் சொன்னார். “சித்தர்களை முதல் முறை பார்ப்பது தான் ஆச்சரியமும் செய்தியும். பின் அதெல்லாம் கூட சகஜமாகவே போய்விடுகிறது.”  

 

அப்படியானால் அந்த சித்தர்களை மறுபடியும் பார்த்திருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?”

 

பழைய புன்முறுவல் மாறாமல் பதில் வந்தது. ”அந்தக் கேள்விக்கு நான் தெளிவாகவே பதில் சொல்லி விட்டதாக நினைக்கிறேன்.”

 

பேட்டியாளர் குழப்பத்துடன் அவரைப் பார்த்து விட்டு அடுத்த கேள்வியைக் கேட்டார். “அபூர்வ சக்திகளுடனான அனுபவம் தங்களுக்கு ஏதாவது இருக்கிறதா?”

 

அந்த சதுரகிரி அனுபவத்திற்கு ஆறு மாதங்களுக்குப் பின்பு நடந்த ஒரு சம்பவம். அப்போது நான் சென்னையிலிருந்து மகாபலிபுரத்திற்கு பைக்கில் வேகமாகச் சென்று கொண்டிருந்தேன்.   வழியில் ஒரு நாய் குறுக்கே வந்து விட்டது. நாய் மீது மோதி அதற்குக் காயத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்று திடீரென்று வண்டியைத் திருப்ப நேரிட்ட போது கீழே விழுந்து விட்டேன். வலது காலில் அடிபட்டு வீங்கி விட்டது. கால் எலும்பில் கடுமையான வலி. பக்கத்திலிருந்த ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ் ரே எடுத்துப் பார்த்த போது என் கால் எலும்பில் விரிசல் ஏற்பட்டு விட்டது, உடனடியாக ஆபரேஷன் செய்து மாவுக்கட்டு போட வேண்டும் என்றார்கள்.   நான் சொன்னேன். “எனக்கு ஐந்து நிமிடம் தனியாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். அதற்கு அனுமதி தர முடியுமா?”

 

அவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். ஆனாலும் என்ன தோன்றியதோ. அந்த ஆஸ்பத்திரியிலேயே ஒரு காலி அறையில் தியானம் செய்ய என்னை அனுமதித்தார்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து நான் வெளியே வந்த போது  என் வலது காலில் முழுவதுமாக வீக்கம் போய் விட்டிருந்தது. ”இப்போது எக்ஸ் ரே எடுத்துப் பாருங்கள் என்றேன்.” அவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது வலது கால் எலும்பில் விரிசல் இருந்ததற்கான அறிகுறியே இல்லை. அவர்கள் ஆச்சரியப்பட்டு என்னைப் பார்த்தார்கள். இரண்டு முறை எக்ஸ்ரே எடுத்ததற்கு மட்டும் பணத்தைக் கட்டி விட்டுக் கேட்டேன். ”ஐந்து நிமிடம் தியானம் செய்ய அறை தந்ததற்கு நான் பணம் ஏதாவது தரவேண்டுமா?” அவர்கள் கைகூப்பி என்னை அனுப்பி விட்டார்கள்என்று சொல்லி பிரம்மானந்தா கலகலவென்று சிரித்தார்.

 

ஷ்ரவனும் வாய் விட்டுச் சிரித்து விட்டான்.


(தொடரும்)

என்.கணேசன்


 

3 comments:

  1. மிக அருமை...

    ReplyDelete
  2. முற்றிலும் உண்மை..., பல சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்படும்...
    அதற்கு புவியியல்,மருத்துவம்,அணு விஞ்ஞானம், உயிரியல் போன்ற பலவற்றை உதாரணமாக காட்டி பதில் சொல்வார்... ஆனால், கேள்விக்கும், பதிலுக்கும் சம்பந்தமே இருக்காது....

    நம்ம ஒரு கேள்வி கேட்டா! நம்மளை அசர வைக்கிற மாதிரி ஒரு பதில் சொல்வார்...

    ReplyDelete