Thursday, October 5, 2023

சாணக்கியன் 77

 

வீரசேனன் முகத்தில் தெரிந்த கவலையைக் கண்ட சாணக்கியர் அவனிடம் கேட்டார். “என்ன யோசிக்கிறாய்?”

 

வீரசேனன் சொன்னான். “நான் திரும்பிப் போகாததால் இப்போதே கூட என்னைச் சந்தேகப்பட்டு என் சகோதரனை அவர்கள் துன்புறுத்த வாய்ப்பு இருக்கிறது அந்தணரே

 

உன் சகோதரன் அங்கு ஏதாவது பொறுப்பில் இருக்கிறானா?”

 

அவன் இன்னொரு படைத்தலைவனாக இருக்கிறான்.”

 

சாணக்கியர் கேட்டார். “நீ திரும்பிப் போகாததால் மட்டுமல்லாமல் எப்போதுமே உன்னை யவனர்கள் சந்தேகிக்க ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அது உனக்குத் தெரியுமா?”

 

என்ன காரணம்?”

 

நீ யவனன் அல்ல என்பது தான் வீரசேனா. உனக்குப் பதிலாக யவனப்படைத் தலைவன் ஒருவன் இங்கே சிக்கி விட்டிருந்தால், அவன் திரும்பிப் போயிருக்கா விட்டாலும் கூட அவனை அவர்கள் சந்தேகித்திருக்க மாட்டார்கள். புரிகிறதா?”

 

வீரசேனன் யோசித்துப் பார்த்தான். அவர் சொன்னது சரியென்று தான் அவனுக்குத் தோன்றியது. மெல்லத் தலையசைத்தான். இங்கே எல்லாம் இவர் தான் தீர்மானிப்பார் போல் தெரிகிறது. இவர் அவனை என்ன செய்வது என்று தீர்மானித்திருக்கிறாரோ தெரியவில்லை. இவர் அதைச் சொல்லாமல் இவர் மாணவர்களுக்குப் பாடம் நடத்தி விட்டுக் கேள்விகள் கேட்பது போல் அவனிடம் கேள்விகள் கேட்கிறார்.

 

சாணக்கியர் சொன்னார். “எங்கிருந்தோ வந்த அன்னியன் உன்னைத் தங்களில் ஒருவனாக நினைப்பதில் அவனுக்குச் சிக்கல் இருப்பது உனக்கே தெரிகிறது. ஆனால் அவனை உன் எஜமானனாகவும், ஆட்சியாளனாகவும் நினைப்பதில் உனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அவனை ஏற்றுக் கொண்டு அவனுக்கு ஊழியம் செய்து வாழ்வதில் தவறில்லை என்று நீ முடிவெடுத்து வாழ்கிறாய். இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் உனக்கு நம் அடிமை மனப்பாங்கின் முட்டாள்தனம் புரியும். இதற்கெல்லாம் மூலகாரணமான பிரச்சினை என்ன தெரியுமா? நாம் நம் மூல வேரை மறந்து விட்டோம். நம் தாய் மண்ணை மறந்து விட்டோம். நீ உன் தாயகமாக மாளவத்தை நினைக்கிறாய். உன் அண்டை தேசத்துக்காரன் ஷூத்ரகத்தைத் தன் தாயகமாக நினைக்கிறான். இப்படித் தான் ஒவ்வொரு சிறுபகுதியைச் சேர்ந்தவனும் தான் வாழும் பகுதியையே தாயகமாக நினைக்கிறான். அங்கு வசிக்கும் அடையாளத்தையே தன் அடையாளமாக நம்புகிறான். வேதங்கள் பிறந்த இந்தப் புண்ணிய பூமியில் நாம் பிறந்திருந்தும், இந்த பாரதத்தைத் தாயகமாக நினைக்கத் தவறி விட்டதனால் தான் எங்கிருந்தோ வந்த யவனர்கள் நம்மை எல்லாம் வென்று ஆள முடிகிறது வீரசேனா….”

 

வீரசேனன் அவரைப் பரிதாபமாகப் பார்த்தான். அதைக் கவனித்த விஜயன் சாரங்கராவின் காதுகளில் சொன்னான். “இதைவிட ஆச்சாரியர் அவனுக்குப் பத்து கசையடி தந்திருக்கலாம் என்று வீரசேனன் நினைக்கிறான் என்று நான் நினைக்கிறேன்

 

சாரங்கராவ் தன் சிரிப்பை அடக்கச் சிரமப்பட்டான்.

 

வீரசேனன் சாணக்கியரிடம் சொன்னான். “அந்தணரே. நான் படித்தவன் அல்ல. தங்களைப் போல் எனக்குச் சொல்லித் தருபவர்களும் யாரும் இருந்ததில்லை. அதனால் அந்தந்த சமயங்களில் எது உசிதம் என்று தோன்றுகிறதோ, என்னுடன் இருப்பவர்கள் அனைவரும் என்ன செய்கிறார்களோ அதையே செய்து பழக்கப்பட்டவனாக நான் இருக்கிறேன். அதனால்  நீங்கள் சொல்லும் விஷயங்கள் ஆமென்று தோன்றினாலும் நான் என் கடந்த கால நிகழ்வுகளை மாற்றிவிட முடியாது. அதனால் உங்கள் எதிரியான எனக்கு என்ன தண்டனை தருவது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்து விடுங்கள். ஒரு வீரனாக அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.”

 

சாணக்கியர் சொன்னார். “வீரசேனா. நீ எங்களுக்கு எதிரியல்ல. பாரதத் தாயின் புதல்வர்களான எங்களுக்கு நீ சகோதரனே. எங்கள் எதிரிகளிடம் பணிபுரியும் நிர்ப்பந்தம் உனக்கு ஏற்பட்டிருந்திருந்தாலும் கூட அது நீ எங்கள் சகோதரன் என்பதை மாற்றி விடாது. சகோதரர்கள் தவறு செய்தாலும் கூட அவர்கள் திருத்தப்பட வேண்டியவர்களே ஒழிய தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.”

 

வீரசேனன் திகைப்புடன் அவரைப் பார்த்தான். அவர் சந்திரகுப்தனைப் பார்க்க சந்திரகுப்தன் சொன்னான். “வீரசேனரே! எங்களுடைய வேண்டுகோள், அன்னியர்களுக்குச் சேவகம் செய்து கொண்டிருந்த நீங்கள் எங்களுடன் சேர்ந்து பாரதத்திற்குச் சேவை செய்ய வேண்டும் என்பது தான்.”

 

வீரசேனன் அவர்களுடைய பெருந்தன்மையால் நெகிழ்ந்த போதும் அவர்கள் வேண்டுகோளை ஏற்கவில்லை. அவன் வருத்தத்துடன் சொன்னான். “வீரனே. நான் முன்பே சொன்னபடி என் சகோதரன் அங்கே படைத்தலைவனாக இருக்கிறான். என் குடும்பமும் மாளவத்தில் தான் இருக்கிறது. உங்களுடன் நான் இணைந்தால் அவர்கள் அங்கே தண்டிக்கப்படுவார்கள்.”

 

சாணக்கியர் சொன்னார். “உன் சகோதரனையும், உன் குடும்பத்தினரையும் ஆபத்திற்குள்ளாக்கி விட்டு நீ எங்களுடன் இணைவதை நாங்களும் விரும்பவில்லை வீரசேனா. அவர்கள் எங்களுக்கும் சகோதரனும், குடும்பத்தினரும் போலத் தான். அதனால் நீ திரும்பிச் செல்ல அனுமதிக்கிறோம். நீ போகலாம்

 

வீரசேனன் இதைச் சிறிதும் எதிர்பார்க்காமல் திகைத்தான். சில கணங்கள் பேச்சிழந்து அவர்களைப் பார்த்த அவன் கண்கள் ஈரமாக, தழுதழுத்த குரலில் சொன்னான். “எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்களுக்கு எப்படிக் கைம்மாறு செய்வதென்றே புரியவில்லை.”

 

சந்திரகுப்தன் சொன்னான். “ஒருவேளை யவனர்கள் உன்னை ஏற்க மறுத்தால், நீ எங்களுடன் இணையத் தயங்கக்கூடாது வீரனே. அதுவே நீ செய்யும் கைம்மாறாக இருக்கும்….”

 

ஈரமான கண்கள் குளமாயின.  வீரசேனன் தன் இரு கைகளையும் கூப்பினான். ஆனால் யவனர்கள் அவனை ஏற்க மறுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சந்திரகுப்தன் சொன்னது மட்டும் மனதில் நெருடலாக இருந்தது. அவன் திரும்பிப் போனாலும், அவன் கலவரத்தில் ஈடுபட்ட சிறுவர்களை யவனப்படைத்தலைவன் தாக்க அனுமதிக்காதது அவனுக்கு எதிராக மாறுமோ? அதனால் அவனை ஏற்க அவர்கள் மறுப்பார்களோ?

 

சாணக்கியர் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டுப் பிறகு சந்திரகுப்தனிடம் சொன்னார். “யவனர்கள் யாரையும் வெறுமனே ஏற்க மறுத்து விட்டுத் திருப்பி அனுப்பி விடுபவர்கள் அல்ல சந்திரகுப்தா. அப்படி திருப்பி அனுப்பினால் கண்டிப்பாகக் கொல்ல பின்னாலேயே ஆளை அவர்கள் அனுப்புவார்கள். மஸ்காவதியில் நடந்ததை நாம் மறந்து விடக்கூடாது

 

வீரசேனன் அவர் வார்த்தைகளில் இருக்கும் உண்மையை உணர்ந்து திகைத்தான். அவன் போகாமலேயே இருந்தால் பிணம் அகப்படுகிற வரை அவர்கள் திருப்தியடைய மாட்டார்கள். யவனர்களிடம் சில காலம் ஊழியம் புரிந்ததில் அவன் அறிந்த உண்மை அது. பிணம் கிடைக்கா விட்டால் சதி செய்து விட்டான் என்று எண்ணி அவர்கள் சூரசேனனைத் தூண்டிலாக வைத்து அவனை வரவழைக்கப் பார்ப்பார்கள். குடும்பத்தினரைத் துன்புறுத்துவதையாவது மற்ற வீரர்களின் எதிர்ப்பைக் கிளப்பக்கூடும் என்று அவர்கள் முயற்சி செய்யத் தயங்குவார்கள். ஆனால் சூரசேனன் அவர்கள் படைத்தலைவன் அவனை அவர்கள் எதுவும் செய்யலாம். பின் பொய்த் தகவல்களைச் சொல்லி, செய்ததை அவர்கள் மூடி மறைக்கக்கூடும். அவனால் அவன் சகோதரனுக்கு ஆபத்து வருகிறது என்பதை அவனால் சகிக்க முடியவில்லை. இவர்களைப் பின் தொடர்ந்து வந்தது புலி வாலைப் பிடித்தது போல் ஆகி விட்டதே என்று அவன் மனம் கலங்கியது.  

 

அவன் நிலைமையை உணர்ந்தவனாக சந்திரகுப்தன் சொன்னான். “வீரசேனரே. கவலைப்படாதீர்கள். நீங்கள் திரும்பிச் செல்லுங்கள். நிலவரம் என்ன என்று பாருங்கள். உங்களைக் கண்டவுடன் அவர்கள் நடந்து  கொள்ளும் விதத்தை வைத்தே நீங்கள் நிலைமையை யூகிக்கலாம். ஆபத்து இல்லை என்று உங்கள் உள்ளுணர்வு உறுதியாக நம்பினால் நீங்கள்  அவர்களுடன் இணைந்து கொள்ளுங்கள். ஆபத்து என்று உங்கள் உள்மனம் எச்சரித்தால் ….”

 

சந்திரகுப்தன் சொல்லி விட்டு நிறுத்தவே படபடக்கும் மனதுடன் வீரசேனன் கேட்டான். “ஆபத்து என்று புரிந்தால் நான் என்ன செய்வது?”

 

சந்திரகுப்தன் அமைதியாக அவன் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்ல ஆரம்பித்தான். அவன் சொல்லச் சொல்ல சாணக்கியருக்கு அவன் தன் மாணவன் என்று பெருமையாக இருந்தது.

 

வீரசேனனோ சந்திரகுப்தனின் அறிவுகூர்மையை வியந்தாலும் இதெல்லாம் சாத்தியமா என்று திகைப்புடன் பார்த்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்

1 comment:

  1. வீரசேனனின் மனநிலை அப்படியே எழுத்துக்கள் மூலம் காட்டியுள்ளார்கள்... அற்புதம் ஐயா.....

    ReplyDelete