Monday, September 11, 2023

யோகி 13

 

றுநாள் காலை சேதுமாதவனின் வீட்டுக்கு வந்த அமீர் பாயும், மைக்கேலும் முதல்வரைச் சந்திக்க ஒரே நாளில் சேதுமாதவனுக்கு அனுமதி கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால் மைக்கேல் இணையத்தில் விரிவாக அறிந்து கொண்ட சில எதிரான தகவல்களை நண்பரிடம் முன்பே தெரிவித்து எச்சரிப்பது உசிதம் என்று நினைத்தார். வரிசையாகச் சோதனைகளை அனுபவித்து வரும் நண்பர், இதில் நிறைய நம்பிக்கை வைத்து, பின் ஏமாற வேண்டி வந்தால், மேலும் வேதனைப்படுவார் என்று மைக்கேல் பயப்பட்டார். அதனால் எதிரான தகவல்களையும் சேதுமாதவன் முன்பே தெரிந்திருப்பது நல்லது என்று நினைத்து தானறிந்த தகவல்களைச் சொன்னார்.

 

சார் யோகி பிரம்மானந்தாவும், முதல்வரும் ரொம்ப நெருக்கமானவர்களாய் தெரியுது. நாலு வருஷங்களுக்கு முன்னாடி யோகாலயத்துக்குள்ளே ஒரு புது கட்டிடம் கட்டினதை முதல்வர் தான் திறந்து வெச்சிருக்கார். யோகாலயத்துல நடந்த சில நிகழ்ச்சிகள்லயும் முதல்வர் கலந்துகிட்ட ஃபோட்டோஸும் நெட்ல நிறைய இருக்கு. பல பேர் பிரம்மானந்தா அரசியல்வாதிகளோட பினாமின்னு சொல்றாங்க. பல அரசியல்வாதிகளோட பணம் பிரம்மானந்தா கிட்ட இருக்குன்னும் சொல்றாங்க. இதெல்லாம் எந்த அளவு உண்மைன்னு தெரியல. முதல்வர் கிட்ட பேசப் போகிறதுக்கு முன்னாடி இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கறது நல்லதுன்னு நினைக்கிறேன்…”

 

சேதுமாதவன் தலையசைத்தார். நேற்றிரவே அவர் எல்லா சாத்தியக்கூறுகளையும் யோசித்து முடித்திருந்தார். உறங்கப் போகும் முன் படித்திருந்த பகவத் கீதை எப்போதும் போல் அவரது மனப்பக்குவத்தை உறுதிப்படுத்தியிருந்தது. சேதுமாதவன் அமைதியாகச்  சொன்னார். “பகவத் கீதைலநீ உன் கடமையைச் செய். பலனைப் பத்திக் கவலைப்படாதே. பலனைக் கொடுக்கறது என்னோட வேலைன்னு கிருஷ்ணர் சொல்றார். என் மகனோட கடைசி ஆசைப்படி முதல்வரைச் சந்திச்சு வேண்டிக்கறது என் கடமை. அதோட என் கடமை முடிஞ்சுது. அதற்கப்பறம் நடக்கறது கடவுளோட சித்தப்படி தான் இருக்கும். அதை என் கவலையோ, விருப்பமோ மாத்திட முடியாது. ஆனால், முதல்வர் ஒரு நடவடிக்கையும் எடுக்காட்டியும், என் பேத்தியைக் கொன்னவங்க கர்மா, அவங்களைத் தண்டிக்காமல் விட்டுடாது. அது எப்போ நடக்கும்னு தெரியாட்டியும், கண்டிப்பா நடக்கும்னு மட்டும் நான் உறுதியாய் நம்பறேன்.”

 

மைக்கேல் மனதிற்குள் சேதுமாதவனின் மனப்பக்குவத்தை மெச்சினார். அங்கிருந்து திரும்பி வரும் போது அமீர் பாய் மைக்கேலிடம் சொன்னார். “இவரோட நண்பர்னு சொல்லிக்க முதலமைச்சருக்குத் தகுதி இருந்தா அவர் கண்டிப்பாய் நீதி கிடைக்க உதவி செய்வார். அப்படிச் செய்யலைன்னா அவருக்குத் தகுதியில்லைன்னு அர்த்தம். பார்ப்போம் என்ன செய்யறார்னு.”

 

போக்குவரத்து நெரிசல் காரணமாக, முதல்வரின் வீட்டுக்குத்  தாமதமாகச் சென்று விடக்கூடாது என்ற நோக்கத்தில் சேதுமாதவன் சீக்கிரமாகக் கிளம்பியதில் அரை மணி நேரம் சீக்கிரமாகவே அங்கு போய்ச் சேர்ந்து விட்டார். முதல்வரின் காரியதரிசி அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்பறையில் அமர வைத்தான். முதல்வரின் மருத்துவர்கள் வழக்கமான பரிசோதனைக்காக வந்திருக்கிறார்கள் என்றும், அரை மணி நேரத்திற்குள் பரிசோதனையை முடித்து விடுவார்கள் என்றும் அவன் சொன்னான்.

 

காத்திருக்கும் காலம் ஆமை வேகத்தில் நகர்வது போல் சேதுமாதவனுக்குத் தோன்றியது. இருபது நிமிடங்களில் மருத்துவர்கள் வெளிவந்த பிறகு காரியதரிசி உள்ளே போய் சிறிது நேரம் கழித்து வந்து சேதுமாதவனை உள்ளே அனுப்பினான். சேதுமாதவன் இதயம் படபடக்க உள்ளே சென்றார்.

 

உள்ளே ஒரு சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த அருணாச்சலம், தொலைக்காட்சியில் தெரிந்ததை விடவும் பலவீனமாகத் தெரிந்தார்.  நண்பரைப் பார்த்தவுடன் எழுந்து வந்து உற்சாகத்துடன்சேதுஎன்று அழைத்தபடி அரவணைத்துக் கொண்டார். சேதுமாதவன் இப்படியொரு அன்பான வரவேற்பை எதிர்பார்த்திருக்கவில்லை. 

 

பலவீனமாகத் தெரிந்த நண்பரை மிகுந்த அன்போடும், அக்கறையோடும் சேதுமாதவன் கேட்டார். “எப்படியிருக்கிறாய் அருணா?”

 

நல்லாயிருக்கேன். உட்கார்என்று சொல்லி நண்பரை அருகே சோபாவில் அமர வைத்த அருணாச்சலம், நண்பர் அமர்ந்தவுடன், தானும் அமர்ந்தபடி சொன்னார். “நான் உன்னைப் பார்க்க சம்மதிச்சதே உன் கிட்ட நல்லா சண்டை போடத்தான். நேத்தே உன் போன் நம்பரை என் செக்ரட்டரி கிட்ட வாங்கிட்டேன். உன் கிட்ட உடனடியா பேசணும்னு கூட அப்பவே நினைச்சேன். ஆனா நேர்ல சண்டை போடற திருப்தி போன்ல சண்டை போட்டா இருக்காதுன்னு தான் நான் போன்ல பேசல. நாம பார்த்து எத்தனை வருஷமாச்சு? இத்தனை வருஷங்கள்ல உனக்கு என்னை ஒரு தடவை கூட வந்து பார்க்கத் தோணலையல்லவா?”

 

படபடவென்று கோபமான தொனியில் பேசிய நண்பனிடம் சேதுமாதவன் தயக்கத்துடன் சொன்னார். “அறுபது வயசு வரைக்கும் நானும் வெளியூர்கள்ல தான் இருந்தேன். பிறகு தான் சென்னை வந்து சேர்ந்தேன். பெரிய பொறுப்புல இருக்கற நீ ரொம்ப பிசியாக இருப்பாய்ங்கறதால சும்மா வந்து உன்னைத் தொந்தரவு செய்ய விரும்பலை

 

ஒரு நண்பன் எப்படித் தொந்தரவாக முடியும் சேது?”

 

அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சேதுமாதவன் விழித்தார். இத்தனை காலம் கடந்த பின்னும் நண்பர் இந்த அளவு அன்பு வைத்திருப்பார் என்றும், நினைவு வைத்திருப்பார் என்றும் தெரிந்திருந்தால் வந்து பார்த்திருக்கலாம் என்று இப்போது சேதுமாதவனுக்குத் தோன்றியது. ஆனால் அதை வாய்விட்டுச் சொல்வது சரியாக இருக்காது என்று எண்ணி அவர் தர்மசங்கடத்துடன் மௌனம் சாதித்தார்.

 

அருணாச்சலம் மென்மையாகச் சொன்னார். “பரவாயில்லை, இப்போதாவது உனக்கு என்னை வந்து பார்க்கணும்னு தோணிச்சே. அது போதும்

 

அதைக் கேட்டவுடன் சேதுமாதவன் குற்றவுணர்ச்சியால் குறுகினார். இன்றும் நண்பனைப் பார்க்க வேண்டும் என்று அவர் வரவில்லை. ஒரு உதவி தேவைப்படுவதால் தான் வந்திருக்கிறார். சேதுமாதவன் தர்மசங்கடத்துடன் எச்சிலை விழுங்கினார்.   

 

அருணாச்சலத்துக்கு நண்பனின் குற்றவுணர்ச்சியையும், தர்மசங்கடத்தையும், படிக்க முடிந்தது. காலம் அவர் நண்பன் சேதுவைச் சிறிதும் மாற்றி விடவில்லை. இத்தனை ஆண்டுகள் கழிந்தும் அதே நேர்மையும், நியாயவுணர்வும் சேதுவிடம் இருக்கிறது! இன்னமும் அவர் நடிக்கப் பழகவில்லை; பாசாங்கு செய்யக் கற்றுக் கொள்ளவில்லை. பல்லாண்டு அரசியல் வாழ்க்கையில் பலதரப்பட்ட மோசமான மனிதர்களையே அதிகம் பார்த்துச் சலித்த அருணாச்சலத்துக்கு காலவெள்ளத்திலும் எந்த நற்குணங்களையும் சிறிதும் இழந்துவிடாமல் தக்க வைத்துக் கொண்டிருக்கும் நண்பன் மேலிருக்கும் மதிப்பு கூடியது.

 

சேதுமாதவன் கேட்டார். “உன் மகள் எப்படியிருக்கிறாள் அருணா?”

 

அருணாச்சலம் சொன்னார். “நல்லாயிருக்கா சேது. மாப்பிள்ளையும் அவளும் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகி விட்டார்கள். அவங்க குழந்தைகளும் அங்கத்து ஆள்களாவே மாறிட்டாங்க. நான் சிகிச்சைக்குப் போயிருந்தப்ப அங்கே என் கூடவே இருந்தாங்க. கிளம்பறப்ப ஏர்போர்ட் வரைக்கும் வந்து வழியனுப்பினாங்க. அவங்களுக்கு இந்தியா வர்ற உத்தேசம் இல்லை. ஆனா மகள் தினமும் போன்ல பேசறா. நலம் விசாரிக்கறா. அதோட சரி. அந்த நிலைமைல தான் உறவுகள் இருக்கு

 

அதைச் சொல்கையில் சிறியதாக சோகம் அவர் வார்த்தைகளில் இழையோடியது. ஆனால் அதில் அவர் அதிகம் தங்காமல் சேது மாதவனை விசாரித்தார். “உன் குடும்பம் எப்படியிருக்கு சேது? உனக்கு ஒரு மகன் அல்லவா? அவன் என்ன செய்யறான்? எப்படி இருக்கான்? அவனுக்கு எவ்வளவு குழந்தைகள்?”

 

சேதுமாதவன் வருத்தத்துடன் சொன்னார். “இப்ப நான் தனிமரம் அருணா. என் மனைவி இறந்து முப்பது வருஷமாச்சு. மகன் மனைவி இறந்து பத்து வருஷமாச்சு. மகனுக்கு ஒரே மகள். அவள் இறந்து மூனு மாசமாச்சு. என் மகன் இறந்து பத்து நாளாச்சு...”

 

அருணாச்சலம் திகைப்புடன் நண்பனைப் பார்த்தார். சேதுமாதவன் கண்கலங்கியபடி தொடர்ந்து சொன்னார். “முதல் ரெண்டு மரணங்களும் இயற்கையானது தான். கடைசி ரெண்டு மரணங்களும் இயற்கையில்லை. என் பேத்தியைக் கொன்னுட்டாங்க. என் மகன் தற்கொலை பண்ணிகிட்டான்.”

 

அருணாச்சலம் அதிர்ச்சியுடன் தன் நண்பனைப் பார்த்தார். ”என்ன சொல்றே சேது? உன் பேத்தியை யார் ஏன் எங்கே கொன்னாங்க?  எல்லாம் எப்படி நடந்துச்சு? கொலையாளியைப் பிடிச்சுட்டாங்களா? விளக்கமாய் சொல்...”

 

சேதுமாதவன் தன் சோகக் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.


(தொடரும்)

என்.கணேசன்


To buy yogi online in Amazon, link -

https://www.amazon.in/dp/8195612881


3 comments:

  1. அருணாசலம் எப்படிபட்டவர்னு காண்பிக்காமலே முடிஞ்சிடிச்சி... அவர் இதற்கு என்ன சொல்வாரோ??

    ReplyDelete
  2. How many episodes are there sir?

    ReplyDelete