Thursday, August 3, 2023

சாணக்கியன் 68

 

“காந்தார அரசர் தங்களைக் காண வந்திருக்கிறார் ஆச்சாரியரே” என்று விஜயன் வந்து சொன்ன போது சாணக்கியருடன் சந்திரகுப்தன் ரகசிய ஆலோசனையில் இருந்தான்.  அவனையும் அறியாமல் அவனது வலது கை இடையில் செருகியிருந்த  வாளுக்குச் சென்றது.

 

சந்திரகுப்தன் தாழ்ந்த குரலில் ஆச்சாரியரிடம் சொன்னான். “நான் தட்சசீலம் வந்ததிலிருந்து கவனித்து வருகிறேன் ஆச்சாரியரே. ஆம்பி குமாரனின் ஒற்றர்கள் நம்மையும் நம் கல்விக்கூடம் மற்றும் பயிற்சிக்கூடத்தையும் கண்காணிப்பதையே முழுநேர வேலையாக மேற்கொண்டிருக்கிறார்கள். அவனுக்கு நம் மீது சந்தேகம் வந்திருக்கிறது. இப்போது உங்களைச் சந்திக்க வந்திருக்கிறான் என்றால் உங்கள் மீது குற்றம் சாட்டவோ விசாரிக்கவோ இருக்கலாம்...”

 

“எதையும் நேரடியாகச் செய்து ஆம்பி குமாரனுக்குப் பழக்கமில்லை சந்திரகுப்தா. நீ சொல்வது போல அவனுக்கு நம் மீது  சந்தேகம் வந்திருக்கிறது உண்மையாகவே இருந்தாலும் கூட அவன் வந்த உத்தேசம் வேறெதாவது வஞ்சகத் திட்டமாக இருக்கலாம். என் முன்னாள் மாணவன் என்ன திட்டத்தோடு வந்திருக்கிறான் என்று பார்ப்போம். வா” என்றவர் எழுந்தார். சந்திரகுப்தனும் எழுந்தான்.

 

ஆம்பி குமாரன் கல்விக்கூடத்தின் முன்னறையில் இருக்கையில் யோசனையுடன் அமர்ந்திருந்தான். ஆச்சாரியர் தட்சசீலம் திரும்பி வந்து ஐந்து நாட்கள் ஆகின்றன. அவனுடைய திட்டத்தின் இறுதி வேலைகள் சில பாக்கி இருந்ததால் அவனால் உடனடியாக இங்கு வர முடியவில்லை. ஒரு விதத்தில் அதுவும் நல்லதெனவே தோன்றியது. ஏனென்றால் அவர் வந்தவுடன் அவன் அங்கு வந்திருந்தால் ஆச்சாரியர் அவன் மீது சந்தேகம் கொள்ளச் சாத்தியமிருக்கிறது. அவர் மகா புத்திசாலி. தந்திரமும் நிறைந்தவர். அதனால் அந்த இறுதி வேலைகளைத் துரிதப்படுத்தி முடித்து விட்டு ஆம்பி குமாரன் வந்திருக்கிறான். பிலிப் கேகயம் போயிருக்கிறான். அவன் தட்சசீலம் திரும்பி வருவதற்குள் அவன் ஆச்சாரியரின் கதையை முடிக்க வேண்டும்.

 

பிலிப்புக்கு ஆம்பி குமாரன் மீது மரியாதைக் குறைவு இருப்பதை ஆம்பி குமாரன் அறிவான். ஆம்பி குமாரனுக்கு அறிவுக்குறைவு இருப்பதாக பிலிப் நம்புவதை ஆம்பி குமாரன் பல முறை உணர்ந்திருக்கிறான். ஆம்பி குமாரன் ஆச்சாரிய விஷ்ணுகுப்தரை எப்படிச் சாமர்த்தியமாக அப்புறப்படுத்துகிறான் என்பதைப் பார்த்த பின் பிலிப் தன் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்வான். அது நிச்சயம். எதையும் சொல்லி விட்டுச் செய்வதை விட, செய்து விட்டு, தானாக மற்றவர்களை உணர வைப்பது சக்தி வாய்ந்த முறையாக இருக்கும். அப்போது தான் பிலிப் ஆம்பி குமாரனின் அறிவுத்திறமையையும் தந்திரத்தையும் சரியாகத் தெரிந்து கொண்டு வியப்பான்....

 

ஆச்சாரியர் தன் பழைய மாணவன் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பதைப் பார்த்துப் புன்னகை செய்தபடியே சொன்னார். “இன்னும் இந்தப் பழைய ஆசிரியனை நீ நினைவு வைத்திருப்பாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை ஆம்பி குமாரா. நான் பாக்கியம் செய்தவன் என்றே தோன்றுகிறது”

 

ஆம்பி குமாரன் சிந்தனைகளிலிருந்து மீண்டு எழுந்தான். ஆச்சாரியர் அப்படியே இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. ஆச்சாரியர் பின்னால் வந்து நின்ற மாணவனிடம் கம்பீரம் தெரிந்தது. அவன் இடையில் வாள் சொருகப்பட்டிருப்பது தெரிந்தது. அதைக் கண்டவுடன் ஆம்பி குமாரன் மனதில் கோபம் மெல்ல எழுந்தது. அரசனுக்கு அருகில் வரும் போது இப்படி ஆயுதங்களைத் தன்னுடன் வைத்திருக்கலாகாது என்று கூட இந்த இளைஞனுக்குத் தெரியவில்லை. எதை எதையோ சொல்லித் தரும் இந்த ஆச்சாரியர் இந்த அடிப்படை விஷயங்களை தன் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை போலும்...

 

ஆம்பி குமாரன் பணிவின் திருவுருவாக மாறி ஆச்சாரியரின் பாதம் தொட்டு வணங்கினான். “நாட்டுக்கு அரசனானாலும் ஆசிரியருக்கு நான் என்றும் மாணவன் அல்லவா ஆச்சாரியரே. தங்களை ஒரு முறை சந்தித்தவர்களே தங்களை என்றைக்கும் மறக்க முடியாது. அப்படி இருக்கையில் தங்களிடம் கல்வி கற்ற இந்த பாக்கியசாலிக்குத் தங்களை எப்படி மறக்க முடியும்.?”

 

“தீர்க்காயுளோடு இரு ஆம்பி குமாரா. சொல்லி அனுப்பி இருந்தால் நானே உன்னைச் சந்தித்திருப்பேனே”

 

“மற்றவர்களுக்குச் சொல்லி அனுப்பலாம். ஆனால் தங்களை நானே நேரில் வந்து சந்திப்பதல்லவா முறை.   சென்ற முறை நான் என் பட்டாபிஷேக சமயத்தில் தங்களைச் சந்திக்க வந்த போது தாங்கள் எங்கேயோ யாத்திரை போயிருந்தீர்கள். அதனால் தலைமை ஆசிரியரை மட்டும் சந்தித்து அழைப்பு விடுத்துப் போனேன். பின் இங்கு வரமுடியாதபடி பல நெருக்கடி சூழல்கள். என் நண்பன் அலெக்ஸாண்டர் தட்சசீலம் வந்த போது அழைத்து வந்து அறிமுகப்படுத்த எண்ணினேன். பின் நீங்கள் அன்னிய தேசத்தவரைச் சந்திப்பதை விரும்ப மாட்டீர்கள் என்று தோன்றியதால் அந்த எண்ணத்தையும் கைவிட்டேன்...”

 

“அன்னிய தேசத்தவர் என் தேசம் மீது ஆதிக்கம் செலுத்துவதைத் தான் நான் விரும்ப மாட்டேனேயொழிய அன்னிய தேசத்தவரையே விரும்ப மாட்டேன் என்று சொல்வது சரியல்ல. அனைத்து உயிர்களிலும் அந்தராத்மாவில் இருப்பது அந்தப் பரமாத்மனே என்று பகவத் கீதை சொல்வதைக் கற்றுத்தரும் நான் அப்படி அடுத்துள்ளவர்களை வெறுத்தால் என் கல்வியே ஏளனத்திற்கு உரியது அல்லவா?”

 

“கற்பதும், கற்றுத் தருவதும் வேறு, வாழும் விதம் வேறு, என்ற வகையிலேயே பல ஆசிரியர்கள் இருக்க, மனம், வாக்கு, செயல் என்ற மூன்றிலும் ஒருமித்து வாழும் உங்களைப் போன்ற ஒருவரது மாணவனாக நானும் இருந்திருக்கிறேன் என்பதைப் பெருமையுடன் நினைக்கிறேன் ஆச்சாரியரே. அந்த நினைவில் தான் உங்களை ஒரு கோரிக்கையோடு நான் சந்திக்க வந்திருக்கிறேன்”

 

“அமர்ந்து கொண்டு பேசு ஆம்பி குமாரா. பெரிய பெரிய வார்த்தைகளைச் சொல்கிறாய். எனக்கு எதுவும் புரியவில்லை. என்ன கோரிக்கை?”

 

இருக்கையில் அமர்ந்து கொண்ட ஆம்பி குமாரன் ஆச்சாரியர் அமரும் வரைக் காத்திருந்தான். ஆச்சாரியரின் அருகே வாளோடு மாவீரனைப் போல் தெரிந்த அந்த இளைஞன் தான் சந்திரகுப்தன் என்ற பெயருடையவனாக இருக்க வேண்டும் ஆம்பி குமாரன் அனுமானித்தான். சந்திரகுப்தன் ஆச்சாரியர் அமர்ந்த போது அவருக்குப் பாதுகாவலனைப் போல் உறுதியாக அருகிலேயே நின்றிருந்தான்.

 

ஆம்பி குமாரன் சொன்னான். “கற்ற காலத்தில் சரியாக நான் கற்கவில்லை என்ற மன உறுத்தல் எனக்கு இன்றும் இருக்கிறது ஆச்சாரியரே. அதன் விளைவுகளை நான் அரியணையில் அமர்ந்த பின் சில சமயங்களில் வலிமையாக உணர்கிறேன். அதனால் ராஜகுருவாக நீங்கள் ஆகி எனக்கு நல்லுபதேசங்களும், ஆலோசனைகளும் சொல்லித் தந்து என்னையும் என் ஆட்சியையும் சிறப்பித்துத் தரும்படி தங்களைப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அரியணையில் அமர்ந்து இத்தனை காலம் கழித்து ஏனிந்த ஞானோதயம் என்று நீங்கள் கேட்கக்கூடும். உண்மையில் முன்பே இந்த ஆசை என் மனதில் எழுந்திருந்தாலும் ராஜகுருவாகத் தாங்கள் ஆன பிறகு தங்களுக்குரிய மரியாதையோடு வாழும்படியான ஒரு மாளிகையைக் கட்டி விட்டு உங்களுக்கு அழைப்பு விடுப்பதே சிறப்பு என்று நான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன் ஆச்சாரியரே. அந்த மாளிகையின் வேலைகள் நேற்று மாலை தான் முடிவடைந்தன. அதனால் தான் இன்று தங்களைக் காண வந்திருக்கிறேன்...”

 

சாணக்கியரின் கூரிய பார்வை ஆம்பி குமாரனின் முகத்தை விட்டு விலகவில்லை.  ”அன்பினாலும், மரியாதையாலும் என்னை திக்குமுக்காட வைக்கிறாய் ஆம்பி குமாரா. இந்த எளிய ஆசிரியனுக்கு அதெல்லாம் அவசியம் இல்லாதது.”

 

ஆம்பி குமாரன் கைகளைக் கூப்பிக் கொண்டு உருக்கமாகச் சொன்னான். ”நான் இங்கு கற்ற போதும் சரி, நான் அரியணையில் அமர்ந்த பின்னும் சரி, என்  செயல்களும் நிலைப்பாடுகளும் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்ததை நான் அறிவேன் ஆச்சாரியரே. நடந்தவைகளை மாற்றிக் கொள்ள முடியாது. ஆனால் நடக்க இருப்பதை நான் சரி செய்து கொள்ளலாமே? அதற்கு எனக்கும் காந்தாரத்திற்கும் ஒரு வாய்ப்பு தாருங்கள் ஆச்சாரியரே....”

 

சாணக்கியர் இதற்கு என்ன சொல்வது என்று யோசிப்பதைக் கவனித்த ஆம்பி குமாரன் சொன்னான். “நீங்கள் சம்மதிக்கும் வரை இங்கிருந்து நான் நகர மாட்டேன் ஆச்சாரியரே. நீங்கள் நான் மாணவனாக இருந்த போது ஒரு முறை சொல்லியது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ”நல்லது செய்ய வாய்ப்பு வரும் போது அதைச் செய்ய மறுப்பவன் தான் கற்ற கல்விக்கும், தன் ஆத்மாவுக்கும் துரோகம் இழைத்தவன் ஆகிறான்” என்று எனக்குப் போதித்திருந்தீர்கள். இப்போது நான் சொல்லும் வாய்ப்பில் நானும், காந்தாரமும் மட்டுமல்லாமல் இந்த பாரதமே நன்மையடையக்கூடும் என்பதால் நீங்கள் சம்மதித்தே ஆக வேண்டும் ஆச்சாரியரே?”

 

பல முறை மனதில் சொல்லி ஒத்திகை பார்த்திருந்ததைச் சரியாகச் சொன்ன திருப்தி ஆம்பி குமாரனுக்கு இருந்தது. இதற்கு ஆச்சாரியர் மறுப்பு தெரிவித்தால் சற்று முன் அவரே சொன்னது போல் அந்த மறுப்பு அவர் கற்ற கல்வியையே ஏளனம் செய்வது போலத் தான் என்றாகி விடும். ஆம்பி குமாரன் கூப்பிய கைகளை விலக்காமல் அவரைப் பார்த்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்

3 comments:

  1. ஆச்சாரியர், ஆம்பிக்குமாரானை நன்றாக அரிவார்... அவன் இப்படி பேசிய உடனே அவருக்கு சந்தேகம் வந்திருக்கும்...

    ReplyDelete
  2. Remembering RS Manohar Sanakyan Sabadam character.

    ReplyDelete