Thursday, July 20, 2023

சாணக்கியன் 66

 

பிலிப் கேகய நாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும் அவன் மனமெல்லாம் சமீப காலமாய் நிலவும் ஒரு விசித்திர சூழ்நிலையையே அலசிக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு சதியாலோசனை பின்னப்படுவது போல அவன் உள்மனம் உணர்ந்தது. ஆனால் இன்னமும் பயப்படுவது போல் எங்கும் எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் நடக்கக்கூடிய ஒரு சூழ்நிலை அனைத்து இடங்களிலும் நிலவுவதை அவனால் மறுக்க முடியவில்லை. அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் எல்லாப் பகுதிகளிலும் மக்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். ஏதோ பேசிக் கொள்கிறார்கள். மக்கள் நடமாட்டம் எல்லாப் பகுதிகளிலும் அதிகரித்திருக்கிறது.  மக்கள் பலரும் வெளியூர்ப் பயணங்களையும் அதிகம் மேற்கொள்கிறார்கள். மேலோட்டமாகப் பார்க்கையில் அதில் சந்தேகம் கொள்வதற்கு எதுவுமில்லை தான். ஆனால் சிறிது காலத்திற்கு முன்பு இப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. எல்லோரும் அமைதியாக அவரவர் வீடுகளிலும், ஊர்களிலும் அடங்கியிருந்தார்கள்.

 

பெரும்பாலான இடங்களில் இந்த மாற்றங்கள் எல்லாம் ஏற்படத் துவங்குவதற்கு முன்பு தட்சசீல மாணவர்களின் வருகை இருந்திருக்கிறது. அது தற்செயல் என்று பிலிப்புக்குத் தோன்றவில்லை. ஓரிரு இடங்களில் நிகழ்வது தற்செயலாக இருக்கலாம். எல்லா இடங்களிலும் ஒரே போன்ற சூழல் பின் உருவாகிறது என்பது தற்செயலாக இருக்க முடியாது. ஆம்பி குமாரனிடம் முழுவதுமாக அவன் தன் எண்ணங்களைப் பகிரவில்லை. அறிவு குறைவானவர்களிடம் அவர்கள் அறிவுக்கு அதிகமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஒரு பயனும் இருக்கப் போவதில்லை. ஆனால் திரும்பத் திரும்ப அவன் அந்த மாணவர்களையும், அந்த மாணவர்களின் பிரச்சினைக்குரிய ஆசிரியரையும் கண்காணிப்பிலும், கட்டுப்பாட்டிலும் வைக்க வேண்டும் என்று ஆம்பி குமாரனிடம் சொல்லியிருக்கிறான். சொன்ன போது எல்லாம்கவலையே வேண்டாம். ஆச்சாரியர் தட்சசீலம் திரும்பட்டும். அவர் இனி எப்போதும் எங்கும் பிரச்சினை செய்யாதபடி பார்த்துக் கொள்கிறேன்என்று ஆம்பி குமாரன் உறுதியளித்திருக்கிறான்.

 

அந்த ஆச்சாரியர் மகா புத்திசாலி என்றும் பிரச்சினையானவர் என்றும் ஆம்பி குமாரனே பிலிப்பிடம் சொல்லி இருக்கிறான். அப்படிப்பட்ட ஆளை ஆம்பி குமாரனைப் போன்ற குறையறிவு படைத்தவன் எப்படி கட்டுப்படுத்த முடியும் என்பது பிலிப்புக்கு விளங்கவில்லை. அவனும் அதை விளக்கவில்லை. தட்சசீல கல்விக்கூட மாணவர்களைக் கண்டுபிடிக்க முடிந்தது போல அவர்களது ஆசிரியரை எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் போல அல்லாமல் அந்த ஆள் தன் அடையாளத்தை வெளிக்காட்டாமல் பயணம் செய்து கொண்டிருப்பார் போல் தோன்றியது. இந்த தேசத்தில் யாத்திரீகர்கள் எப்போதும் எப்பகுதியிலும் அதிகம் என்பதால் அவர்களில் ஒருவராக அவர் பயணம் செய்தால் கண்டுபிடிப்பது எளிதல்ல. அவரை அறிந்த ஒற்றர் யாராவது பார்வையில் அவர் பட்டால் தான் உண்டு. அவர் தன் தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் அறிந்தவரும் கண்டுபிடிப்பது கஷ்டம்....

 

இதை எல்லாம் யோசிக்கையில் சத்ரப் ஆக அலெக்ஸாண்டரால் தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சியை முழுவதுமாக பிலிப்பால் உணர முடியவில்லை…. பின்னால் வேகமாக வந்து கொண்டிருக்கும் ஒரு குதிரையின் காலடியோசை அவர்கள் குதிரைகளின் காலடியோசைக்குப் பொருத்தமில்லாமல் ஒலிப்பது கேட்டவுடன் பிலிப் தன் குதிரையை நிறுத்தி, கையை உயர்த்தி தன்னுடன் பயணிக்கும் வீரர்களையும் நிறுத்தச் சொன்னான். அவர்கள் குதிரைகள் நின்ற பின்பும் பின்னால் வந்து கொண்டிருக்கும் குதிரையின் காலடிச் சத்தம் அதே அதிக வேகத்தில் நெருங்கிக் கொண்டிருந்தது. 

 

திரும்பிப் பார்த்தபடி அவர்கள் நிற்க சிறிது நேரத்தில் அவர்கள் ஒற்றன் தெரிந்தான். பிலிப்பின் அருகில் வந்து நின்று வணங்கிய ஒற்றன் கொண்டு வந்திருக்கும் தகவல் நல்லதாக இருக்க வாய்ப்பில்லை என்று பிலிப்புக்குத் தோன்றியது. அவன் நினைத்தது போல் அவனை வணங்கி விட்டு ஒற்றன் தெரிவித்தான். ”தட்சசீல வனப்பகுதியில் நம் வீரர்கள் பன்னிரண்டு பேர் பயணம் செய்து கொண்டிருக்கையில் வழிப்பறிக் கொள்ளையர்களால் கொல்லப் பட்டிருக்கிறார்கள் பிரபு. அவர்கள் தங்களிடம் தர எடுத்து வந்திருந்த பல பகுதிகளின் கப்பத் தொகையுடன் அவர்களுடைய குதிரைகள், ஆயுதங்கள், எல்லாமே கொள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன. அவர்களைத் தேடிச் சென்ற நம் வீரர்கள் அவர்கள் சடலங்களைக் கண்டு தட்சசீலத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்….”

 

பிலிப்புக்கு ஏனோ இது கொள்ளையர்களின் செயலாகத் தெரியவில்லை. கொள்ளையர் பெரும்பாலும் செல்வந்தர்கள், வணிகர்களை வழிமறித்துக் கொள்ளையடிப்பார்களேயொழிய இப்படி வீரர்களிடமே கொள்ளையடித்துக் கொலையும் செய்ய மாட்டார்கள். அவன் எதிர்பார்த்திருக்கும் பிரச்சினைகளுக்கு இது முன்னோடியோ?

 

ஒற்றன் தொடர்ந்து சொன்னான். “ஆம்பி குமாரர் என்ன செய்ய வேண்டும் என்று உங்களைக் கேட்கச் சொன்னார்.”

 

ஆம்பி குமாரன் சில நேரங்களில் காந்தார அரசனாகச் செயல்படுகிறான். பிரச்சினையான நேரங்களிலும், யவனர்கள் மட்டும் சம்பந்தப்பட்டிருக்கும் விஷயங்களிலும்நீ என்ன சொல்கிறாயோ செய்கிறேன்என்ற வகையில் நடந்து கொள்கிறான்…. பிலிப் ஒற்றனிடம் தன் ஆணையைப் பிறப்பித்து விட்டு மறுபடியும் பயணத்தைத் தொடர்ந்தான். அவன் மனம் ஏனோ சஞ்சலமாக இருந்தது.  

 

புருஷோத்தமன் தன் முன் வந்து நின்ற இந்திரதத்தைக் கேள்விக்குறியுடன் பார்த்தார்.

 

இந்திரதத் சொன்னார். “பிலிப்பை விருந்தினர் மாளிகையில் இருத்தியிருக்கிறேன். அவனை நான் வரவேற்றது போதவில்லை என்றும் நீங்கள் நேரில் வந்து வரவேற்காதது அதிருப்தியை அளித்திருக்கிறது என்றும் தோன்றுகிறது.”

 

புருஷோத்தமன் சொன்னார். “அலெக்ஸாண்டர் வந்திருந்தால் நான் நேரில் சென்று வரவேற்றிருப்பேன். பிலிப் அலெக்ஸாண்டருக்குக் கிடைக்கும் மரியாதையை எதிர்பார்ப்பது தவறல்லவா இந்திரதத்

 

சத்ரப் ஆக அலெக்ஸாண்டரால் நியமிக்கப்பட்ட பிறகு அவன் தன்னை அலெக்ஸாண்டராகவே பாவிக்க ஆரம்பித்து விட்டது போல் தெரிகிறது அரசே. தங்களை உடனே பார்த்துப் பேச வேண்டும் என்று சொன்னான்.”

 

புருஷோத்தமன் வேண்டாவெறுப்புடன் பிலிப்பைச் சந்திக்கக் கிளம்பினார்.

 

பிலிப்பின் தோரணை இந்திரதத் சொன்னது போல் நிறைய மாறித்தான் இருந்தது. அலெக்ஸாண்டர் இருந்த போது இருக்கும் இடம் தெரியாதபடி இருந்தவன் இப்போது சர்வ வல்லமையுள்ளவனாகக் காட்டிக் கொண்டான். தனக்குக் கீழ்நிலையில் உள்ள ஒருவனுக்கு, பெருந்தன்மையின் காரணமாக மரியாதை தருவது போல் காட்டிக் கொண்டு அவருக்கு மரியாதை செய்த அவன் அவர் இருக்கையில் அமர்ந்தவுடன் கேட்டான். “கேகயத்தில் நிலைமை எப்படி இருக்கிறது புருஷோத்தமரே?”

 

புருஷோத்தமன் சொன்னார். “எல்லாம் சிறப்பாக இருக்கிறது. சொல்லப் போனால் மக்களிடம் புதிய ஒரு எழுச்சியைப் பார்க்க முடிகிறது.”

 

அந்த எழுச்சி நாம் இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்தும் அளவு போய் விடாதல்லவா புருஷோத்தமரே?”

 

புருஷோத்தமன் திகைப்புடன் கேட்டார். “ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?”

 

இல்லை. பல இடங்களில் இந்த எழுச்சி தெரிவதால் தான் சந்தேகத்துடன் கேட்டேன். அலெக்ஸாண்டர் என்னை இங்குள்ள பகுதிகளின் சத்ரப் ஆக நியமித்திருப்பதால் என்னால் ஆபத்தின் அறிகுறிகளை அலட்சியப்படுத்த முடியவில்லை

 

புருஷோத்தமன் சொன்னார். “ஆபத்தின் அறிகுறிகள் என்று நீங்கள் நினைத்தால் கவனமாக இருப்பது அவசியம் பிலிப். விரிவாகச் சொன்னால் நலமாக இருக்கும்

 

பிலிப் தட்சசீல மாணவர்கள் பற்றியும் அவர்களுடைய பிரச்சினைக்குரிய ஆசிரியர் பற்றியும் தற்போது நிலவும் விசித்திர சூழ்நிலை பற்றியும் சொன்னான். கேட்டுக் கொண்டிருந்த புருஷோத்தமன் இந்திரதத்தைப் பார்த்தார். இந்திரதத் தன் நண்பரைப் பற்றிக் கேள்விப்படுவது போல் காட்டிக் கொள்ளவில்லை. ”எல்லாம் புதிராக இருக்கிறதுஎன்று பொதுவாகச் சொன்னார்.

 

புருஷோத்தமன் சொன்னார். “நிலைமை அப்படி இருக்கிறது என்றால் பல இடங்களில் இருக்கிற எங்கள் படைகளை இங்கு திருப்பி அனுப்புவது நல்லது பிலிப். எல்லாவற்றையும் முழுக்கட்டுப்பாட்டில் வைக்க அது உதவும்

 

அப்படியானால் மற்ற பகுதிகளின் கதி?” என்று பிலிப் கேட்டான். “புருஷோத்தமரே. எங்கள் படை உங்கள் படை என்ற சிந்தனையே தவறு. எல்லாமே அலெக்ஸாண்டரின் படைகளே. அவரால் அவர் விரும்பிய இடங்களில் நிறுத்தப்பட்டவையே. இங்காவது நீங்கள் இருக்கிறீர்கள். பல இடங்களில் வலிமையான தலைமை கூட இல்லை. அங்கெல்லாம் படைகளின் வலிமை கூடுதலாகத் தேவைப்படுகிறது. அலெக்ஸாண்டருடன் படைகளின் ஒரு பெரிய பகுதி சென்ற பிறகு மீதமிருப்பதைத் தான் பிரித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது….”

 

புருஷோத்தமனின் முகம் இறுகியது. கேகயப்படை என்று நீ உரிமை கொண்டாடக்கூட முடியாது என்கிறான் இவன். எல்லாமே அலெக்ஸாண்டர் படை என்கிறான். இப்படியொரு நிலைமைக்கு வந்து சேர்ந்திருக்கிறோமே என மனம் வெதும்பியது.

 

இந்திரதத் சொன்னார். “இங்கிருக்கும் நிலவரத்தை இங்கிருந்த படைவீரர்களால் எளிதாகக் கட்டுப்படுத்த முடியும் என்று அரசர் சொல்கிறார். புதியவர்களுக்கு அது சுலபமாக இருக்காது. மேலும் குறைவான படையை வைத்துக் கொண்டு கடுமையான சூழலைச் சமாளிக்க முடியாது அல்லவா?”

 

இது இங்கு மட்டுமல்ல அமைச்சரே. எல்லா இடங்களிலும் இது தான் நிலைமை.  உதாரணத்திற்கு காந்தாரத்திலும் அங்கிருந்த படையில் பாதி தான் இப்போது அங்கிருக்கிறது. அது தவிர்க்க முடியாதது. இருக்கும் படைகளை வைத்துக் கொண்டு சிறப்பாகச் சமாளிப்பது எப்படி என்பது பற்றி தான் நாம் யோசிக்க வேண்டும்

 

(தொடரும்)

என்.கணேசன்

2 comments:

  1. I feel this is the best novel among all yours in my opinion. Thank you Sir.

    ReplyDelete
  2. புரட்சி ஆரம்பித்து விட்டது... இனி வரும் தொடர்களில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது....

    ReplyDelete