Thursday, May 25, 2023

சாணக்கியன் 58

லெக்ஸாண்டர் செய்த பலிபூஜையில் கிடைத்த சகுனங்களும் பிரச்னைகளையும், நஷ்டங்களையுமே காட்டின. அலெக்ஸாண்டர் மனம் நொந்து போனான். விதி, தெய்வங்கள், அவன் வீரர்கள் உட்பட ஓரணியில் இருந்து கொண்டு அவனை எதிர்க்கத் தீர்மானித்து விட்டது போல் அவனுக்குத் தோன்றியது. சகுனங்களும் சாதகமாக இல்லை என்றான பிறகு மகதம் நோக்கி முன்னேறுவதில் அவனுக்கு விருப்பம் இருக்கவில்லை. மேலான சக்திகள் எச்சரிக்கும் போது அனுசரித்துப் போவதே சரி என்று அவன் முடிவு செய்தான். ஆனால் அந்த முடிவு அவன் மனதில் காயத்தையும் ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தாமல் இருக்கவில்லை. அவனுக்குத் தன்னையே தேற்றிக் கொள்ள கூடுதல் காலம் தேவைப்பட்டது.

 

நீண்ட நாள் கனவைக் குழி தோண்டிப் புதைப்பது அவனைப் போன்ற ஒருவனுக்கு எளிதான விஷயமாக இருக்கவில்லை. அவன் வீரர்கள் மேற்கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்த இந்த இடத்தோடு அவன் சாம்ராஜ்ஜிய எல்லை முடிந்து போவதில் அவன் வேதனையை உணர்ந்தான். அரிஸ்டாட்டிலின் மாணவனான அவன் தன் எல்லைகளை அடுத்தவர்களோ விதியோ தீர்மானிக்க இதுவரை அனுமதித்தது கிடையாது. அவன் விதியை அவனே தான் தீர்மானிப்பான் என்பதில் மிக உறுதியாக இருந்தவன் அவன். அவன் உறுதியையும், அவன் தீவிரத்தையும் ஆரம்பத்தில் இருந்தே கவனித்திருந்த அரிஸ்டாட்டில் ஒரு கட்டத்தில் நிதானத்தையும், மிதவாதப் போக்கையும் அனுசரிக்க வேண்டிய கட்டாயத்தை அவனுக்கு வலியுறுத்திச் சொல்லியிருந்தார்.  

 

எல்லா நேரங்களிலும் தனிமனித தீர்மானங்களே நிறைவேறி விடுவதில்லை, அலெக்ஸாண்டர். பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியின் தீர்மானத்திற்கு ஒத்துப் போகும் தீர்மானங்களையே நம்மால் நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. அதற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற முடியாமல் தோல்விகளையே தழுவுகின்றன. அந்த சமயத்தில் நாம் பிரபஞ்சத்தின் தீர்மானத்தையே பணிவுடன் ஏற்றுக் கொள்ளும்படியாகி விடுகின்றது. அதனால் எதிலும் கண்மூடித்தனமான தீவிரம் நல்லதல்ல. அது நமக்கு வேதனையையே ஏற்படுத்தும்.”

 

ஆனால் அந்தக் காலத்தில் அந்தப் போதனையை தத்துவஞானி ஒருவரின் சமரசக் கொள்கையாக அலெக்ஸாண்டர் எடுத்துக் கொண்டிருந்தான். அவனைப் போன்ற மாவீரனுக்கு அந்தச் சாமானியர்களின் விதி பொருந்தாது என்று அவன் நினைத்திருந்தான்.  ஆனால் இப்போது நிஜம் புரிய வரும் போது கடுமையாகச் சுடுகின்றது.  பிரபஞ்சத்தின் கணக்கில் அவனும் சாமானியனாகி விட்டதை கசப்போடு அவன் உணர்கிறான். நிகழ்கால நிஜத்தை ஜீரணித்துக் கொள்ளவும் வருத்தத்தை விழுங்கிக் கொண்டு பழைய அலெக்ஸாண்டராக அனைவருக்கும் காட்டிக் கொள்ளவும் அவனுக்குச் சிறிது காலம் தேவைப்பட்டது.

 

பின் மறுபடி வீரர்களைக் கூட்ட செல்யூகஸுக்கு ஆணையிட்டான். அவனுடைய வீரர்கள் அவனுடைய தீர்மானத்தை அறிய மிகவும் ஆவலுடனும், படபடப்புடனும் இருந்தார்கள். அவர்கள் முன்பு வந்து நின்ற அலெக்ஸாண்டர் என்ன சொல்லப் போகிறான் என்பதை அவர்களால் அவன் முகபாவனையை வைத்துத் தீர்மானிக்க முடியவில்லை. சிறிது நேரம் அமைதியாக அவர்களைக் கூர்ந்து பார்த்தபடி நின்று விட்டு அலெக்ஸாண்டர் பேச ஆரம்பித்தான்.

 

எனதருமை வீரர்களே. ஒரு மகத்தான இலக்கோடு கிளம்பிய நாம் இத்தனை தூரம் வெற்றிகரமாக வந்து சேர்ந்திருக்கிறோம். நம் கால்பட்ட இடத்தை எல்லாம் நம்முடையதாக்கிக் கொண்டிருக்கிறோம். நம் பராக்கிரமப் பயணத்தைத் தொடர்வதில் உங்களுக்கு விருப்பமில்லை என்பதை நீங்கள் வெளிப்படையாகவே தெரிவித்தீர்கள். அதில் எனக்கு வருத்தம் தான் என்றாலும் உங்கள் உணர்வுகளில் என்னால் தவறு காண முடியவில்லை. என் முக்கியத்துவமும், உங்கள் முக்கியத்துவமும் வேறுபடுவது மாபெரும் குற்றம் என்று தோன்றவில்லை. நீங்கள் உடன் வரா விட்டாலும் நான் தொடர்ந்து செல்லவிருப்பதாக நான் சொல்லியிருந்தாலும் கூட சொன்னதைச் செயல்படுத்த என்னால் முடியவில்லை. சேர்ந்து கிளம்பியவர்கள் நாம். சேர்ந்து சாதித்தவர்கள் நாம். சேர்ந்தே இத்தனை ஆண்டு காலம் இருந்தவர்கள் நாம். இனி திரும்பிப் போவதானாலும் சேர்ந்தே போவோம் என்று உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு முடிவெடுத்திருக்கிறேன்…”

 

அவன் நிறுத்திய போது அவன் படைவீரர்கள் ஒரு கணம் தங்கள் காதில் விழுந்த வார்த்தைகளை நம்ப முடியாமல் திகைத்துச் சிலையாக நின்று விட்டுப் பின் தங்களைச் சுதாரித்துக் கொண்டு கண்கலங்கியபடி அவனை வாழ்த்தி ஆரவாரம் செய்தார்கள்.

 

கொய்னஸ் உணர்ச்சிவசப்பட்டவனாக வேகமாக முன்னுக்கு வந்து மண்டியிட்டு கண்கள் கலங்க, குரல் உடையச் சொன்னான். “சக்கரவர்த்தி. உங்களைப் போன்ற உயர்ந்த மனிதருக்கே தன் வீரர்களுக்காக தன் நிலையில் இருந்து இறங்கி வந்து இந்த முடிவை எடுக்க முடியும். உலகின் பல பகுதிகளை வெற்றியடைந்தது உங்கள் வீரத்திற்கும், வலிமைக்கும் ஒரு சான்று என்றால், உங்கள் வீரர்களுக்காக உங்கள் மனதை மாற்றிக் கொள்ள முடிவெடுத்து எங்கள் அனைவர் இதயங்களையும் வெற்றி கொண்டது உங்கள் பண்புகளின் உயர்வுக்கு மகத்தான சான்று. உலகம் உள்ளவரை இந்த இரண்டுக்குமாக வரலாறு உங்களை உயர்த்தி நிச்சயம் பேசும். நன்றி சக்கரவர்த்திநன்றி….”

 

கண்ணீர் வழிந்தபடி மானசீகமாக கொய்னஸ் சொல்லி முடித்த போது அனைத்து வீரர்களும் மண்டியிட்டபடி, கண்கலங்க வாழ்த்தி கோஷமிட்டார்கள். அலெக்ஸாண்டர் கண்களும் ஈரமாயின. திடீரென்று அன்னியமாகி விட்டிருந்த அவன் வீரர்களை அவன் திரும்பவும் தன்னுடையதாக உணர்ந்தான்.  அந்த வாழ்த்துக் கோஷங்கள் அவன் மனதை நிறைத்தன. ஆனாலும் அவன் அறிவின் ஒரு பகுதி இதெல்லாம் வளைந்து கொடுத்து அவன் பெறும் வாழ்த்து என்பதைச் சுட்டிக்காட்டி அந்த மனநிறைவை முழுமையாக்காமல் தடுத்தது. அவன் இதழ்களில் விரிந்த புன்னகை சிறிய சோகத்தோடு சற்று குறைந்தது

 

ன்று இரவு கொய்னஸ் அலெக்ஸாண்டரைப் பற்றியே மைனிகாவிடம் அதிகம் பேசினான். எங்கள் சக்கரவர்த்திக்கு ஈடு இணை இல்லை என்று அவன் பெருமிதத்தோடு சொன்னான். நிர்வாக சம்பந்தமான விஷயங்களில் அலெக்ஸாண்டருக்குச் சில முடிவுகள் எடுக்க நான்கைந்து நாட்கள் ஆகுமென்றும், அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கிளம்புவார்கள் என்றும் தெரிந்தது. தான் வந்த காரியம் முடிந்து விட்ட பிறகு அங்கு கூடுதலாகத் தங்குவதில் விருப்பமில்லாத மைனிகா நாளையே தானும் கிளம்பவிருப்பதாகச் சொன்னாள். அவன்நாங்கள் கிளம்பும் வரை நீயும் இங்கேயே இருந்து விடேன்என்ற வகையில் கோரிக்கை எதையும் வைக்காமல் அதை உடனே ஏற்றுக் கொண்டான். அவளுக்குப் பரிசுகள் அளித்தான். இத்தனை நாள் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் நல்ல துணையாக அவள் இருந்ததற்கு நன்றி சொன்னான். அவன் மனதளவில் இப்போதே அவனது குடும்பத்தினரை எட்டி விட்டி விட்டது போல் அவளுக்குத் தோன்றியது.  பேசியபடி சீக்கிரமே அவன் நிம்மதியாக உறங்கி விட்டான். ஆனால் அவளுக்கு அன்றிரவு உறக்கம் சீக்கிரம் வரவில்லை.

 

வந்த வேலை விஷ்ணுகுப்தர் சொன்னபடி இவ்வளவு எளிதாக முடியும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. கொய்னஸைப் போலவே மற்ற யவன வீரர்களும் பெருமகிழ்ச்சியில் இருந்தார்கள். ஒவ்வொருவரிடமும் தங்கள் குடும்பத்தைக் காணப் போகிறோம், மறுபடி அவர்களுடன் இணையப் போகிறோம் என்ற உற்சாகம் பெருமளவில் தெரிந்தது. ஒரு குடும்பஸ்தராக இல்லாமல் ஒரு துறவியைப் போல் வாழ்வை நடத்தும் விஷ்ணுகுப்தர்  மனித மனதையும், குடும்ப பந்த பாசத்தின் வலிமையையும் இந்த அளவு மிக ஆழமாக அறிந்து வைத்திருந்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. கூடவே அப்படி ஒரு அன்பான குடும்ப வாழ்க்கை தன்னைப் போன்ற ஒரு தாசிக்கு விதிக்கப்படவில்லையே என்ற லேசான சோகமும் தலைதூக்கியது.

 

கொய்னஸுடனான உறவு ஆரம்பத்திலிருந்தே ஒரு குறுகிய காலத்திற்கானது என்று இருபக்கமுமே தெளிவு இருந்ததால் பிரிவது இருவரிடமும் எந்தப் பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தி விடவில்லை. அதனால் தான் அவன் தாங்கள் கிளம்பும் வரை இரு என்று கூட அவளிடம் கேட்டுக் கொள்ளவில்லை. பயணக்காலத்தின் நட்பு போல நல்ல நினைவுகளுடன் பிரியும் போக்கே கொய்னஸிடமும் தெரிந்தது. என்றாவது ஒரு நாள் அவன் அவளை நினைத்துப் பார்க்கக்கூடும். அந்த நினைவுகளால் சிறு புன்னகை அவன் உதடுகளில் மிளிரக்கூடும்.  அவ்வளவே. இந்த உறவில் சின்ஹரனுடனான இருந்த உறவின் பிரச்னைகளும் பாசாங்குகளும் இல்லை.  

 

சின்ஹரன் நினைவு அவள் மனதில் இருக்கும் சோகத்தைக் கூட்டியது. ஆரம்பத்தில் அவள் அவனைக் காதலிப்பது போல் நடிக்கத் தான் செய்தாள் என்றாலும் பிறகு அவனை அதிகமாக நேசிப்பதை அவளால் தவிர்க்க முடியவில்லை. அவன் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை அவளை நேசித்தது மட்டும் உண்மையே. ஏமாற்றப்பட்டோம் என்றறிந்த நேரம் அவன் அதிகச் சித்திரவதையை மனதில் அனுபவித்திருப்பான்அவளைக் கண்டிப்பாக வெறுக்க ஆரம்பித்திருப்பான். ஒரு நல்லவனை வேதனைப்படுத்தியதிலும், அவன் வெறுப்பைச் சம்பாதித்திருப்பதிலும் இப்போதும் சிறு வருத்தம் அவளுக்கு இருக்கத் தான் செய்தது....

 

மெல்ல அவளுக்கும் உறக்கம் வந்தது.

 

(தொடரும்)

என்.கணேசன்

1 comment:

  1. அலெக்சாண்டரும் கிளம்பப் போகிறான்... மகதமும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருக்கப் போகிறது.... இந்த நிகழ்வுகளை விஸ்ணுகுப்தர் தனக்கு சாதகமாக பயன்படுத்தப் போகிறார்?

    ReplyDelete