Thursday, May 18, 2023

சாணக்கியன் 57

 

லெக்ஸாண்டர் மூன்றாவது நாளாக இன்று தனிமையில் இருக்கிறான். அவன் யாரிடமும் பேசவில்லை. அவன் அறைக்கு அனுப்பப்படும் உணவும் சிறிதளவு மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டதுஅவனிடம் போய்ப் பேச செல்யூகஸ் உட்பட அனைவரும் பயப்பட்டார்கள். ஏனென்றால் அவன் கடுங்கோபம் அனைவரும் அறிந்ததே. அவன் கடுங்கோபம் அடையும் நேரங்களில் அவன் எந்த அளவு மோசமாக நடந்து கொள்வான் என்பதை யாரும் சொல்ல முடியாதுஅதனால் யாரும் அவனைத் தொந்திரவு செய்யாமல் அமைதி காத்தார்கள். செல்யூகஸ் இரண்டு நாட்களாக மூன்று வேளைகளிலும் வந்து அமைதியாக தொலைவிலேயே சிறிது நேரம் நின்றிருந்து விட்டுப் போகிறான். அலெக்ஸாண்டர் ஏதாவது சொல்வதாக இருந்தால் சொல்லட்டும் என்று காத்திருந்தான். அலெக்ஸாண்டர் அவன் வந்து நிற்பதை அறிந்திருந்தாலும் அந்தப் பக்கம் திரும்புவதையும் தவிர்த்தான். ஆனாலும் கூட செல்யூகஸ் வந்து நின்று விட்டுப் போவதை நிறுத்தவில்லை.

 இன்று மூன்றாவது நாள், இரண்டாவது வேளையாக செல்யூகஸ் வந்து நின்ற போது அலெக்ஸாண்டர் அவன் பக்கம் திரும்பினான். இறுக்கமான முகத்துடன், கரகரத்த குரலில் அவன் செல்யூகஸிடம் கேட்டான். “நம் வீரர்கள் எத்தனை பேர் போய் விட்டார்கள்?”

 செல்யூகஸ் சொன்னான். “இன்னும் யாரும் போகவில்லை சக்கரவர்த்தி.”

 அலெக்ஸாண்டர் கேள்விக்குறியுடன் செல்யூகஸைப் பார்த்தான். செல்யூகஸ் மெல்லச் சொன்னான். “நீங்கள் மறுபடி யோசித்து முடிவெடுக்க அவர்கள் காத்திருக்கிறார்கள்

 அலெக்ஸாண்டர் முகம் மேலும் இறுகியது. மறுபடி அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். செல்யூகஸ் சிறிது நேரம் நின்றிருந்து விட்டு சத்தமில்லாமல் நகர்ந்தான்.

 அலெக்ஸாண்டரின் மனம் குமுறிக் கொண்டிருந்தது. “அவர்கள் எனக்கு யோசிக்க அவகாசம் தந்துக் காத்திருக்கிறார்களா? என்னவொரு நெஞ்சழுத்தம்? யார் யோசிக்க யார் அவகாசம் தருவது?....” ஆனால் அதே சமயம் மனதில் ஒரு மூலையில் சின்ன ஆறுதலும் இருந்தது. போக விருப்பமுள்ளவர்கள் போய்க் கொள்ளலாம் என்று அவன் சொன்னவுடனேயே அவர்கள் யாரும் போய் விடவில்லை. ஆனாலும் அவன் இதயத்தில் கடும் வலியை இப்போதும் உணர்ந்தான்.   உலகை வெற்றி கொள்ளக் கிளம்ப வைத்த கனவு அவனைப் பார்த்து சிரிப்பது போல அவனுக்குத் தோன்றியது. அவன் வீரர்களே அவனுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள். ஒரு சிலர் மட்டும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தால் அவன் இந்த அளவு பாதிக்கப்பட்டிருக்க மாட்டான். அது இதற்கு முன்பு ஒரு முறை நடக்கவும் செய்திருக்கிறது. சிலர் தாயகம் திரும்ப அவனிடம் கோரிக்கை விடுத்து அவன் அவர்களை அனுப்பியும் இருக்கிறான். அப்போதும் போகாமல் அவனுடன் நின்றவர்கள் இந்த வீரர்கள். இதிலும் ஒரு சிறு குழு மட்டும் பிரிந்து தாயகம் திரும்ப ஆசைப்படவில்லை. ஒட்டு மொத்தமாகவே அனைவரும் ஆசைப்படுகிறார்கள். அவன் கனவு அவர்களை எட்டவில்லை. அவன் உற்சாகம் அவர்களை எட்டவில்லை. அவன் தந்த நம்பிக்கை அவர்களை எட்டவில்லை. சொல்லப் போனால் அவனே அவர்களை எட்டவில்லை. அன்னியர்கள் போல் விலகி நின்று அவன் வீர்ர்கள் அவனைப் பார்த்ததை இப்போது நினைத்துப் பார்த்தாலும் அவனுக்கு இதயத்தில் இரத்தம் வடிவது போல் வேதனை ஏற்படுகிறது.

 இறந்தவர்கள் பாக்கியசாலிகள். இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இல்லைஎன்று சொன்ன கொய்னஸின் வார்த்தைகள் இப்போதும் அவனைக் காயப்படுத்தின. அங்கே நிற்பவர்களும் சரி, காயமடைந்தும் வென்ற பகுதிகளைப் பாதுகாப்பதற்காக அங்கங்கே தங்க நேர்ந்தவர்களும் சரி மகிழ்ச்சியாக இல்லை என்று கூட கொய்னஸ் சொல்லி விட்டான். அலெக்ஸாண்டர் தன் உற்சாகமும், பெருமிதமும், கனவும் அவர்களுக்கும் இருக்கும் என்று நம்பியது கற்பனையாகி விட்டது. கொய்னஸ் பேசி முடித்தபின் யவன வீரர்கள் செய்த ஆரவாரம் இப்போதும் காதுகளில் காய்ச்சிய ஈயமாகப் பாய்கிறது.

 இத்தனைக்கும் கொய்னஸ் அலெக்ஸாண்டர் பெரிதும் நம்பியிருந்த சிறுபடைத் தலைவன். எந்தப் போரிலும் இது வரை சலிக்காமல் போராடிய மாவீரன். அவன் எப்படிச் சலித்தான்? மகதம் அவனையும், மற்ற வீரர்களையும் பயமுறுத்தி விட்டதா? இது வரை மிஞ்சியவர்களுக்குக் கூட இனி மகதத்துடன் நடக்கவிருக்கும் போரில் மிஞ்ச முடியாது என்று தோன்ற ஆரம்பித்து விட்டதா? இந்தப் பலவீன எண்ணங்கள் எப்படி என் வீரர்கள் மனதில் தோன்ற ஆரம்பித்தன? யார் செய்த சதி? விதியின் சதியா? இல்லை, கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு எதிரியின் சதியா?   

 நீங்கள் போவதானால் போய்க் கொள்ளுங்கள். என்னுடன் உள்ள அன்னியப் படைகளை வைத்துக் கொண்டு வெற்றி வாகை சூடுவேன்என்று யவன வீரர்களிடம் அவன் சூளுரைத்திருந்த போதும் அது எந்த அளவு சாத்தியம்? அவன் அன்னியப்படைகளை எந்த அளவு நம்ப முடியும்? அவர்களையே நம்பி எத்தனை தூரம் போக முடியும்? நினைக்க நினைக்க அவன் மன அழுத்தம் அதிகமாகியது.

 யோசித்துப் பார்க்கையில் தண்டராயனைப் போன்ற இந்தியத் துறவிகள் மிகுந்த பாக்கியசாலிகள் என்று அலெக்ஸாண்டருக்குத் தோன்றியது. இப்போதும் தண்டராயன் முகத்தில் தெரிந்த பேரமைதியை  அலெக்ஸாண்டர் நினைவுகூர்ந்தான். யாரைப் பற்றியும் கவலைப்படாமல், யாருக்கும் பயப்படாமல் பரிபூரண சுதந்திரத்துடன் பாறையில் படுத்துக் கிடந்த அந்தத் துறவியை  எண்ணுகையில் பொறாமையாக இருந்தது.       

 கொல்ல அவன் வாளை உருவிய போது கூட  இந்தக் கணமில்லா விட்டாலும் ஏதோ ஒரு கணம் இழக்கப் போகிற உயிர் எப்போது போனால் என்ன அலெக்ஸாண்டர்? அதில் கலங்குவதற்கோ பயப்படுவதற்கோ என்ன இருக்கிறது?” என்று கவலையில்லாமல் பாறையில் படுத்துக் கிடந்த கிழவர் அவர். பட்டு மெத்தையில் உறக்கம் வராமல் அவன் தவித்த காலங்கள் எத்தனையோ உண்டு. ஆனால் அந்தத் துறவி பாறையிலும் எந்த அசௌகரியமும் உணராமல் படுத்திருந்தார். அணிய ஆடைகள் கூட இல்லா விட்டாலும் அந்த முகத்தில் தான் எத்தனை தேஜஸ். அந்த விழிகளில் தான் எத்தனை ஞானம். அந்த இடைவிடாத அமைதியும், தெளிவும், நிறைவும் எண்ணிப் பார்க்கையில் அந்த வாழ்க்கை முன் தன் வாழ்க்கை களையிழப்பதை அலெக்ஸாண்டர் உணர்ந்தான்.

 பெற்றிருக்கும் அத்தனையும் சில சந்தர்ப்பங்களில் சந்தோஷமாகத் தெரிந்தாலும் சில சமயங்களில் அவையே விலங்காகி விடுகின்றன. ஏதாவது ஒரு வகையில் துக்கத்திற்கு வழிவகுத்து விடுகின்றன. என்னுடையது என்று எதைச் சொன்னாலும் எதுவும் எத்தனை காலம் என்னுடையதாக இருக்கும் என்று யாரும் நிச்சயமாகக் கூற வழியில்லை. அவன் வீரர்களே இப்போது அவனுடையவர்களாக இல்லாமல் போய் விட்டார்களே.....

 ஒரு கணம் எல்லாவற்றையும் துறந்து விடுவது பெரிய விடுதலையாக அவனுக்குத் தோன்றியது. ஆனாலும் சில கணங்களில் தோன்றும் இந்த உணர்வை அவன் கண்டிப்பாகச் செயல்படுத்த முடியாது என்ற புரிதலுடன் பெருமூச்சு விட்ட அலெக்ஸாண்டர் இப்படியே சுயபச்சாதாபத்தில் இருப்பது தவறு என்று தன்னையே கடிந்து கொண்டான். அரிஸ்டாட்டிலின் சீடன் அவன். வாழ்க்கையின் நிதர்சனங்களால் ஸ்தம்பித்து விடுவது அவனுக்குப் பெருமையல்ல. எல்லாவற்றையும் கடக்க முடிவதே ஒரு வீரனுக்கு அழகு....

 ஆழமாக யோசிக்கையில் கொய்னஸ் சொன்னதிலும் அர்த்தமில்லாமல் இல்லை. அவர்கள் மாசிடோனியாவிலிருந்து கிளம்பியும் நீண்ட காலமாகி விட்டது. குடும்பத்திலிருந்து நீண்ட காலப் பிரிவு, அன்னிய தேசங்களில் எல்லையில்லாத பயணம் எல்லாம் வீரர்களுக்குச் சலிப்பைத் தந்திருப்பதில் வியப்பில்லை... எல்லாமே முடிவில் எதை நோக்கி என்ற கேள்வியை வைத்தே தீர்மானிக்க முடிந்ததாய் இருக்கிறது. பெற்ற வெற்றியைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய ஆட்களை இழந்து விட்டால் அதன் பின் வெற்றியை யாருடன் கொண்டாடுவது கொய்னஸ் கேட்டது முற்றிலும் பொருள் இல்லாதது அல்ல. சாதாரண சிந்தனை தான். சாதாரண மனிதர்களால் சாதாரண விதங்களிலேயே சிந்திக்க முடியும். அதற்கு மேற்பட்ட சிந்தனைகள் அவர்களுக்குச் சாத்தியமல்ல. தகுதிக்கு மீறிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சாமானியர்களை அவன் எதிர்பார்ப்பதும் சரியல்ல. அவன் வீரர்களே அவனுக்கு எதிராகச் சிந்திக்கிறார்கள், தீர்மானிக்கிறார்கள் என்ற சிந்தனை போய் இந்த விதமான சிந்தனை எழ ஆரம்பித்த பின் அவன் மனம் மெல்ல சமாதானம் அடைந்தது.     

 மாலையில் செல்யூகஸ் அலெக்ஸாண்டரின் அறைக்குப் போன போது அலெக்ஸாண்டர் விரக்தியுடனான தெளிவைப் பெற்றிருந்தான். செல்யூகஸிடம் அவன் சொன்னான். “தெய்வங்களுக்குப் பலி கொடுத்து ஆலோசனை கேட்க ஏற்பாடு செய். அதன்படி முடிவெடுப்போம்.”

 (தொடரும்)

என்.கணேசன்


புதிய வரவுகள்






 

 

1 comment:

  1. யவன வீரர்கள் மட்டுமல்ல... அலெக்சாண்டரும் திரும்பிச் செல்வது தான் அவனுக்கு நல்லது...

    ReplyDelete