Thursday, March 16, 2023

சாணக்கியன் 48

 

ம்பி குமாரன் தன் கண்களை நம்ப முடியாமல் திகைத்தான். திடீரென்று யவன காந்தாரப் படைகள் புருஷோத்தமன் முன்னிலையிலிருந்து பின் வாங்க அவன் படைத் தலைவர்களில் மூத்தவரான மேருநாதன் ஆயுதங்கள் எதுவுமில்லாமல் குதிரை மீதேறி புருஷோத்தமனை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். பொதுவாக பேச்சு வார்த்தை நடத்த உத்தேசிக்கும் போது தான்  இவ்வாறு நடப்பது வழக்கம். தோற்றுக் கொண்டிருக்கும் புருஷோத்தமனிடம் பேச்சு நடத்த என்ன இருக்கிறது? மன்னன் அவன் இருக்கையில் மேருநாதனுக்கு ஆணை பிறப்பித்தது யார்? ஆம்பி குமாரன் தனக்குள் எழுந்த கடுங்கோபத்தைப் கட்டுப்படுத்த முடியாமல் திணறினான்.

 

மேருநாதன் அவன் தந்தை காலத்திலிருந்தே படைத்தலைவராக இருப்பவர். அவன் தந்தையின் பெருமதிப்பைப் பெற்றவர். தந்தையின் ஆட்களில் பலரைக் கழற்றி விட்டிருந்தாலும் மேருநாதன் பிரச்சினை இல்லாத நபர் என்பதாலும் சிறந்த போர் வீரர் என்பதாலும் தான் அவன் அவரைத் தக்க வைத்திருந்தான். அவர் புருஷோத்தமனிடம் நட்பு கொண்டவர் என்ற தகவல் இப்போது தான் ஆம்பி குமாரனின் நினைவுக்கு வருகிறது....

 

ஆம்பி குமாரன் கோபத்துடன் சசிகுப்தனை நெருங்கிக் கேட்டான். “என்ன நடக்கிறது இங்கே? மேருநாதன் எதற்கு புருஷோத்தமனிடம் பேசப் போகிறார்? அவருக்கு அனுமதி கொடுத்தது யார்?”

 

சசிகுப்தன் அமைதியாகச் சொன்னான். “சக்கரவர்த்தி”

 

ஆம்பி குமாரன் திகைத்தான். அவனுக்கு என்ன நினைப்பது, என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகப் பலவீனமாகக் கேட்டான். “ஏன்?”


“புருஷோத்தமன் இறப்பதை விட இருப்பது இலாபகரமானது என்று சக்கரவர்த்தி நினைக்கிறார்”

 

ஆம்பி குமாரனால் இதை ஜீரணிக்க முடியவில்லை. அவன் மனத்தாங்கலுடன் சொன்னான். “புருஷோத்தமன் நம் காலில் விழுந்து கெஞ்ச ஆரம்பித்த பிறகு வேண்டுமானால் இந்த அபிப்பிராயத்துக்கு சக்கரவர்த்தி வந்திருக்கலாம். அதற்கு முன்பே சரிசமமானவர்களிடம் பேசுவது போல் புருஷோத்தமனிடம் நாம் பேச ஆளனுப்புவதற்கு அவசியமே இல்லையே...”

 

சசிகுப்தன் சொன்னான். “சக்கரவர்த்தி நம்மிடம் ஆலோசனை கேட்டால் நாம் நம் அபிப்பிராயங்களைத் தெரிவிக்கலாம். அவரே முடிவெடுத்த பிறகு நாம் என்ன சொல்ல முடியும்?”

 

மேருநாதன் வருவதையும், அவர் வருவதற்கு வழி விட்டு யவன காந்தாரப் படைகள் பின்வாங்கியதையும் கவனித்த புருஷோத்தமன் தன் படையினருக்கும் விலகி நிற்க சைகை செய்தார். வருவது மேருநாதனாக இல்லாமல் வேறு யாராக இருந்தாலும்  நெருங்க அவர் அனுமதித்திருக்க மாட்டார். வாய் பேசுவதற்குப் பதிலாக அவர் வாள் பேசியிருக்கும். ஆனால் மேருநாதன் அவர் நண்பர். நல்ல மனிதர்...  செயலற்று ஒரு கணம் அமைதியாக இருக்கையில் தான் புருஷோத்தமன், தான் அதிகமாகக் களைத்துப் போயிருந்ததை உணர்ந்தார். வலது தோள்பட்டையில் வலி மிக அதிகமாக இருந்தது. தாகமும் அவரை வாட்டியது...

 

புருஷோத்தமனை மேருநாதன் நெருங்குவதைக் கவனித்த இந்திரதத் தானும் இருக்கும் இடத்திலிருந்து நகர்ந்து மன்னரை நெருங்கினார். மேருநாதன் குதிரை மீதிருந்து இறங்கி தலைவணங்கி நிற்க புருஷோத்தமனும் சற்று சிரமப்பட்டு யானை மீதிருந்து இறங்கி கைகூப்பினார்.

 

“கேகய மன்னருக்கு மங்களமும், கீர்த்தியும் உண்டாகட்டும் என்று மேருநாதன் வாழ்த்துகிறேன்” என்று  கைகளைக் கூப்பியபடியே மேருநாதன் சொல்ல புருஷோத்தமன் வறண்ட குரலில் சொன்னார். “மேருநாதா வீரமரணம் வாய்க்கட்டும் என்று வாழ்த்துவது இப்போதைய சூழ்நிலையில் மிகவும் பொருத்தமாக இருக்கும்”

 

மேருநாதன் பணிவும் அன்பும் கலந்த குரலில் சொன்னார். “மரணத்தினால் சாதிக்க முடிவது ஏதாவது இருந்தால் அதை வரவேற்பது சரியாக இருக்கும் மன்னரே. ஆனால் அது சாதிக்க முடிவது ஏதுமில்லை என்கிற போது அதை விரும்புவதில் அர்த்தமில்லை.”

 

புருஷோத்தமன் சொன்னார். “நான் உயிரோடு இருக்க என் இரண்டு மகன்கள் இறந்திருக்கிறார்கள். நான் இறந்த பின் எனக்கு ஈமச்சடங்குகள் செய்ய வேண்டியவர்கள் இறந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஈமச்சடங்குகள் செய்ய வேண்டிய நிலையில் இந்த வயதானவனிருக்கிறேன். நீங்கள் முதலில் கூறிய மங்களம் என்பக்கம் இல்லை. அடுத்ததாய்ச் சொன்ன கீர்த்தி வீரமரணத்தின் மூலமாகவே எனக்கு வந்து சேர வேண்டும்... சரி வந்த விஷயத்தைச் சொல்லுங்கள்”

 

மேருநாதன் சொன்னார். “போரின் போக்கு தங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன் கேகய மன்னரே. இதை மேலும் சில காலம் உங்களால் நீட்டிக்க முடியும் என்றாலும் முடிவை மாற்றக்கூடிய நிலையை நீங்கள் எப்போதோ கடந்து விட்டீர்கள். சக்கரவர்த்தி அலெக்ஸாண்டர் தங்கள் வீரத்தை மெச்சுகிறார். நீங்கள் சரணடைந்து அவர் தலைமையை ஏற்றுக் கொண்டால் மேற்கொண்டு இழப்புகளை நீங்கள் தடுக்கலாம்...”

 

புருஷோத்தமன் முகம் கடுமையாகியது. “இந்த வார்த்தையை உங்களைத் தவிர வேறு யார் சொல்லியிருந்தாலும்  என் வாளுக்கிரையாகியிருப்பார்கள் நண்பரே. வெற்றிக்கு அடுத்ததாய் எந்த வீரனும் விரும்புவது வீரமரணத்தையே. சரணாகதி அடைந்து மானமிழந்து வாழ்வது உங்கள் மன்னன் ஆம்பி குமாரனுக்குப் பிடித்தமானதாய் இருக்கலாம். இந்த புருஷோத்தமன் என்றும் அந்த வழியை நாட மாட்டான்….”

 

மேருநாதன் கைகளைக் கூப்பியபடி பணிவாகச் சொன்னார். “என்னை மன்னிக்க வேண்டும் கேகய மன்னரே. சில உண்மைகள் கசப்பானதாய் இருக்கலாம். ஆனால் அவற்றை மறுப்பது அறிவுடைமை ஆகாது. போரைத் தொடர்ந்து தாங்களும் இறக்கலாம். தங்கள் படைவீரர்கள் பலரும் இறக்கலாம். ஆனால் முடிவில் இந்தப் போரின் மூலம் உங்கள் கேகய நாடும், மக்களும் பெறும் நன்மை தான் என்ன? இரண்டு மகன்களை இழந்தாலும் இன்னொரு மகன் பிஞ்சு வயதில் இருக்கிறான். அவன் எதிர்காலம் என்ன? தங்களுக்கு மகளொருத்தி இருக்கிறாள். திருமண பிராயத்தில் இருக்கும் அவள் கதி என்ன? வென்றவர்கள் தோற்றவர்களை எப்படி நடத்துவார்கள் என்பது நீங்கள் அறியாததல்ல. சரணடைந்து அலெக்ஸாண்டர் தலைமையை ஏற்றுக் கொள்வதால் அர்த்தமில்லாத உயிர்ப்பலிகளைத் தடுப்பதோடு தங்கள்  மகளுக்கும், மகனுக்கும், தங்கள் மக்களுக்கும் தேவையான நன்மைகளைச் செய்ய ஒரு வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்…  தயவு செய்து யோசியுங்கள்

 

புருஷோத்தமன் ஒரு கணம் கண்களை மூடியிருந்து விட்டுத் தளர்ச்சியுடன் தன் வலது தோளைச் சுட்டிக் காட்டிச் சொன்னார். “இந்த ரணத்தை விட தங்கள் ஆலோசனை எனக்கு அதிக வேதனையைத் தருகிறது மேருநாதா.”


மேருநாதன் சொன்னார். “மேலான நன்மைகளுக்காக நாம் சில வேதனைகளைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது கேகய மன்னரே.  நம் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய காலஞ்சென்ற காந்தார மன்னர் இறந்த பின் அவரது மகனை மன்னராக ஏற்றுக் கொள்வது எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கவில்லை. ஆனால் மறுத்து நான் எதுவும் செய்வதற்கில்லை என்ற நிலை இருக்கும் போது ஏற்றுக் கொண்டு தொடர்ந்து பணியில் இருப்பதன் மூலமாக என் காந்தாரத்திற்கு ஏதாவது சிறிய வகையிலாவது என்னால் கண்டிப்பாக நன்மை ஏற்படுத்த முடியும் என்று தோன்றியதால் தான் தங்கி விட்டேன் கேகய மன்னரே. மறுத்து ஒதுங்கியிருப்பது கௌரவமாக இருந்திருக்கலாம். ஆனால் என் கௌரவத்தால் என் மக்களும், மண்ணும் பெறப்போகும் நன்மை என்ன என்ற ஒரே ஒரு கேள்வி தான் ஒரு முடிவை எடுக்க எனக்கு உதவியது. நீங்களும் அப்படியே உங்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று பழைய நட்பின் காரணமாக நான் வேண்டிக் கொள்கிறேன் கேகய மன்னரே. தங்கள் வீரம் அலெக்ஸாண்டரை மிகவும் கவர்ந்து விட்டிருப்பதால் தங்களை அவமானப்படுத்தும் சிறுபுத்தி அவரிடம் இருக்காது என்று நான் நம்புகிறேன். அப்படி இருந்திருந்தால் இப்படி ஒரு வாய்ப்பைத் தரும் விதத்தில் என்னைத் தங்களிடம் அனுப்பியிருக்க மாட்டார்….”

 

புருஷோத்தமன் தளர்ச்சியுடன் கண்களை மூடிச் சிறிது நேரம் யோசித்தார். சரணடைவது அவருக்குப் பிடிக்கவில்லை. சரணடைந்து வாழ்வது வெறுப்பாகத் தான் இருந்தது. ஆனால் சகோதரர்களை இழந்திருக்கும் அவர் மகளுக்கும், இளம் மகனுக்கும் இப்போது அவர் மட்டும் தான் இருக்கிறார். அவரும் இறந்து விட்டால் அவர்கள் கதி என்னவாக இருக்கும்? அவர் உயிரோடு இருக்கும் வரை அவர் மக்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்ய முடியும். தோல்வி நிச்சயம் என்றறிந்த பின்னரும் போரைத் தொடர்ந்து இன்னும் எத்தனையோ உயிர்களைப் பலி கொடுப்பது  சரி தானா?


புருஷோத்தமன் திரும்பிப் பார்த்து இந்திரதத்தைக் கேட்டார். “நீ என்ன நினைக்கிறாய் இந்திரதத்?”

 

இந்திரதத் சொன்னார். “உடைவதை விட வளைவது நல்லது மன்னரே”

 

(தொடரும்)

என்.கணேசன்  

5 comments:

  1. வார்த்தைகள் ஒவ்வொன்றையும் செதுக்கி இருக்கிறீர்கள் சார். அருமையிலும் அருமை.

    ReplyDelete
  2. புருஷோத்தமன் என்ன தான் வீரராக இருந்தாலும்... அவருக்கும் சரணடைவதை தவிர வேறு வழியில்லை....

    ReplyDelete
  3. சத்ரபதி சிவாஜி கதையை படித்திருந்தால் தெரியும் வீரத்துடன் விவேகமும் இணைந்து இருப்பது தான் நல்லது.

    ReplyDelete
  4. "Udaivathai vida valaivathu nallathu" - thoughtful words

    ReplyDelete
  5. sir super. purusothamanin valiayai unargiren ungal varathaigalal.

    ReplyDelete