Monday, February 13, 2023

யாரோ ஒருவன்? 125



வேலாயுதம் வெளியே வந்து பார்க்கையில் நாகராஜ் பக்கத்து வீட்டு கேட் கதவைத் திறந்து வெளியே வந்து கொண்டிருந்தான். அவன் கையில் எதுவும் இருக்கவில்லை. வேகமாகத் தன் அறைக்கு ஓடிப் போய் சொன்னார். “அவன் வர்றான். அவன் கையில ஒன்னுமில்லை.

ஆதாரத்தோடு வருகிறேன் என்று சொல்லி விட்டு வெறுங்கையுடன் ஏன் அவன் வருகிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் கல்யாண் யோசித்தான். என்னவாக இருந்தாலும் சரி, போய் நாகராஜை வரவேற்க அவனுக்கு விருப்பமில்லை. வா என்றழைக்காத இடத்தில் நுழைய நாகராஜுக்குச் சுயகௌரவம் விடா விட்டால் இன்னும் நல்லது. அவன் கோபத்தோடு திரும்பிப் போனால் சனியன் விட்டது என்று இருந்து விடலாம். வீட்டில் இருப்பவர்களின் தேவையில்லாத கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டி இருக்காது. அவன் பைத்தியக்காரன் என்று இப்போதாவது புரிகிறதா என்று கேட்கலாம்….

அவன் எண்ணங்களைப் புரிந்து கொண்ட வேலாயுதமும் வேகமாக உள்ளே வந்து ஹாலில் சோபாவில் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டார். நாகராஜின் பார்வை ஒன்று இந்தப்பக்கம் வருவதற்காக தவமாய் தவமிருந்தவர் இனி அவனால் எதுவும் ஆக வேண்டியதில்லை, வருவது உபத்திரமே என்று புரிந்து கொண்டதால் இனி எந்த மரியாதையும் பக்கத்து வீட்டுக்காரனுக்குத் தேவையில்லை என்று முடிவெடுத்து விட்டார்.

நாகராஜை தீபக்கும் தர்ஷினியும் மட்டுமே வெளியே இருந்து இன்முகத்துடன் வரவேற்றார்கள். “வாங்க அங்கிள்

நாகராஜ் அவர்கள் இருவர் மட்டுமே வெளியே இருந்து வரவேற்பதையும் மற்றவர்கள் யாருமே தென்படாததையும் அவமரியாதையாக காட்டிக் கொள்ளாமல் லேசாகத் தலையை மட்டும் அசைத்தான். புன்னகையும் இல்லை.

அவர்கள் இருவரும் அவனை உள்ளே அழைத்துப் போன போது மேகலாவும் ரஞ்சனியும் எழுந்து நின்றார்கள். ஆனால் வேலாயுதம், சரத், கல்யாண் மூன்று பேரும் ஒரு சோபாவில் இறுகிய முகத்துடன் அமர்ந்தே இருந்தார்கள்.

அவர்கள் அப்படி அமர்ந்தேயிருப்பது சரியில்லை என்று தீபக்கும், தர்ஷினியும் நினைத்தாலும் அந்த நேரத்தில் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. பெரிய ஹாலில் மூன்று பேர் அமரக்கூடிய சோபா, இரண்டு பேர் அமரக்கூடிய சோபா, ஒற்றை சோபா என்று இரண்டிரண்டு வட்ட வரிசையில் வைக்கப்பட்டிருந்தனஒற்றை சோபா ஒன்றில் அமர தீபக் மரியாதையுடன் சற்று குனிந்து கை காட்டினான்.

அமைதியாக அமர்ந்த நாகராஜ் நின்றிருந்த மற்றவர்களையும் உட்காரச் சொல்லி சைகை காண்பித்தான்.

வேலாயுதம் உள்ளுக்குள்ளே வெடித்தார். ’யார் வீட்டுல யார் வந்து உட்காரச் சொல்றது. இவன் என்னவோ ராஜா மாதிரி தன்னை நினைச்சுக்கறான். அரசவையில இவன் உட்கார்ந்த உடனே மத்தவங்களை உட்கார்ந்துக்கலாம்னு கை காட்டற மாதிரி கை காட்டறான். இந்த தீபக் தேவையில்லாம இந்த நாய்க்கு ரொம்ப மரியாதை காட்டறான்….’

ரஞ்சனியும் மேகலாவும் ஒரு சோபாவில் அமர, தீபக்கும், தர்ஷினியும் ஒரு சோபாவில் அமர்ந்தார்கள்.

நாகராஜ் தீபக்கையும், தர்ஷினியையும் பார்த்துப் பேச ஆரம்பித்தான். ”நான் அடுத்தவங்க வீட்டுக்குள்ளே நுழைஞ்சு பல வருஷங்களாச்சு. முதல் முறையாய் இங்கே வந்திருக்கேன்னா அது உங்க ரெண்டு பேருக்காகத் தான் தீபக். உன் அம்மா என் கிட்ட கேட்ட கேள்விக்கு நான் சொன்ன பதில் உங்க வீட்டையே சுடுகாடு மாதிரி ஆக்கிடுச்சு, நீங்க சொன்னது உண்மையாய் இருக்க வழியே இல்லை, ஆதாரம் இருந்தா காண்பிங்கன்னு சொன்னாய். உனக்கும், தர்ஷினிக்கும் வழக்கு என்னன்னே தெரியலகுற்றச்சாட்டு என்னன்னே சரியாய் புரியலை. என்ன நடந்துச்சு, எப்ப நடந்துச்சுன்னும் தெரியல, முக்கியமா இறந்தவனைப் பத்தி உங்க ரெண்டு பேருக்கு எதுவுமே தெரியல. முதல்ல நீங்க அவங்க நட்பைத் தெரிஞ்சுக்கணும். பிறகு குற்றவாளிகளையும் தெரிஞ்சுக்கணும். அரைகுறையாய் தெரிஞ்சுகிட்டா குழப்பமா தான் இருக்கும்ஆரம்பத்துல இருந்து பார்க்கறீங்களா?”

அவன் பார்க்கறீங்களா என்று கேட்டதன் அர்த்தம் அவர்கள் இருவருக்கும் விளங்கவில்லை. ஆனாலும் கேட்கறீங்களா என்று சொல்வதற்குப் பதிலாகத் தவறி பார்க்கறீங்களா என்று சொல்லி விட்டிருக்க வேண்டும் என்று எண்ணித் தலையசைத்தார்கள்.

கல்யாணும் அப்படியே நினைத்தாலும் மெல்ல அதில் ஆபத்தை உணர்ந்தான். ஆரம்ப காலக் கதையிலிருந்து இவன் சொல்ல ஆரம்பிப்பது அவசியமில்லாதது, ஆபத்தானது என்று உணர்ந்த அவன் வேலாயுதத்தை அர்த்தத்தோடு ஒரு பார்வை பார்த்தான்.  

அதைப் புரிந்து கொண்ட வேலாயுதம் கறாரான குரலில் சொன்னார். “பாரு. இங்க யாருக்கும் கதை கேட்க நேரமில்லை. இவங்க ரெண்டு பேரும் இவங்க நண்பனைக் கொலை செஞ்சாங்கன்னு சொல்லியிருக்கே. ஆதாரம் உன் கிட்ட இருக்குன்னு சொல்லியிருக்கே. அந்த ஆதாரத்தை முதல்ல காட்டு. போட்டோவா, போலீஸ் ரிப்போர்ட்டா, இல்லை சாட்சி யாராவதா சீக்கிரம் காட்டிகிட்டு போய்கிட்டே இரு…”

தர்ஷினி தாத்தாவைப் பார்த்துச் சொன்னாள். “நீங்க சும்மா இருங்க தாத்தா. எங்களுக்கு ஆரம்பத்துல இருந்து எல்லாம் தெரிஞ்சாகணும். நீங்கல்லாம் சேர்ந்து திடீர்னு என்னென்னவோ பேசிக்கிறீங்க, சொல்லிக்கிறீங்க, கூடிக்கூடிப் பேசிக்கறீங்க. நாங்க ரெண்டு பேரும் குழப்பத்தோட உச்சத்துல இருக்கோம். எங்க அப்பா அம்மா சம்பந்தப்பட்ட ரகசியம் எதுவா இருந்தாலும் எங்களுக்கு ஆரம்பத்துல இருந்து தெரிஞ்சாகணும். அங்கிள் நீங்க ஆரம்பத்துல இருந்தே சொல்லுங்க..”

நாகராஜ் முதல் முறையாக வேலாயுதம், சரத், கல்யாண் பக்கம் திரும்பினான். மூன்று வினாடிகள் பார்த்து விட்டுப் பார்வையை மறுபடி தீபக் தர்ஷினி பக்கம் அவன் திருப்பினான். ஆனால் அந்த மூன்று வினாடிப் பார்வையிலேயே மூவரும் ஏதோ ஒரு சக்தி தங்களைக் கட்டிப்போடுவது போல் உணர்ந்தார்கள். வாயைத் திறக்கவும் கூட அவர்களால் முடியவில்லை. வெளிப்பார்வைக்கு அவர்கள் சாதாரணமாக அமர்ந்திருப்பது போலவே தெரிந்ததால் மற்றவர்கள் கவனம் அவர்கள் பக்கம் திரும்பவில்லை. அவர்கள் நாகராஜ் என்ன சொல்லப்போகிறான் என்பதிலேயே கவனமாய் இருந்தார்கள்.

நாகராஜ் தன் தலைக்கு மேல் கையை நீட்டினான். அவன் தலைக்கு மேல் காட்சிகள் தெரிய ஆரம்பித்தன. திரைப்படம் பார்ப்பது போல் வெட்ட வெளியில் தெரிவது அவர்களைப் பிரமிக்க வைத்தன.

முதலில் மாதவன் புன்னகையும், உற்சாகமுமாய் தெரிய அவன் அருகில் ரஞ்சனி தெரிய அவர்களுக்கு இருபக்கங்களிலும் கல்யாணும் சரத்தும் தெரிந்தார்கள்.

நாகராஜ் சொன்னான். “இது தான் சத்தியமங்கலம்கிற சின்ன ஊர்ல இருந்த ஒரு காலேஜ்ல படிச்ச நால்வர் அணி. அப்படித்தான் எல்லாரும் இவங்கள கூப்பிடுவாங்க. ஏழ்மை நிலைமைல தான் நான்கு பேர் குடும்பங்களும் இருந்துச்சு. ஆனாலும் எல்லையில்லாத சந்தோஷத்தோடவும், எதிர்காலக் கனவுகளோடவும் இருந்தாங்க....”

எல்லோருமே திகைப்புடன் பார்த்தார்கள். அந்த நால்வரும் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் எடுத்த புகைப்படத்தை ஒரு பெரிய திரையில் இப்போது போட்டுக் காட்டுவது போல் தோன்றியது. அடுத்து இரண்டு பேர்களாக, மூன்று பேர்களாக அவர்கள் சேர்ந்திருந்த காட்சிகள் வர ஆரம்பித்தன. எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் கவலையில்லாமல் அவர்கள் இருந்த நட்பின் தருணங்கள் வந்து திரையில் தங்கித் தங்கிப் போயின. ரஞ்சனியின் கண்கள் விரிந்து ஈரமாயின. கல்யாணும், சரத்தும், வேலாயுதமும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். இந்த மாயாவி பழைய படங்களை எப்போது எடுத்தான். எப்படி வெட்ட வெளியில் அதைப் போட்டுக் காட்டுகிறான் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. எல்லாம் தத்ரூபமாக நேரில் பார்ப்பது போலவே இருந்தன.

கல்யாணுக்கு பாம்பாட்டி அந்த விசேஷ நாகரத்தினம் மட்டும் அந்த ஆளுக்குக் கிடைத்தால் கடவுள் மாதிரியாயிடுவான் என்று சொன்னது நினைவுக்கு வந்தது. நாகராஜ் பழைய நிகழ்வுகளைப் படங்களாக பிரபஞ்ச வெளியிலிருந்து வரவழைக்கிறானோ

படமாகத் தெரிந்தது அடுத்தபடியாக வீடியோ காட்சிகளாக விரிய ஆரம்பித்தன. மாதவன், சரத், கல்யாண் மூன்று பேர்களும் சைக்கிளில் போவது தெரிந்தது. போகும் போது ஏதோ அந்தக் காலச் சினிமாப்பாட்டை சத்தமாகப் பாடிக் கொண்டே போனார்கள். நகருக்கு வெளியே எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள். தூரத்தில் நீர்வீழ்ச்சி தெரிந்தது. நெருங்கி வரும் போது அது கொடிவேரி நீர்வீழ்ச்சியாக இருந்தது. அடுத்த காட்சியில் மூன்று பேரும் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

தீபக் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. அவன் கொடிவேரி நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று வந்த காட்சி இது. இவர்கள் மூவர் தான் அன்று அரைகுறையாய் அவனுக்குத் தெரிந்தவர்கள். தீபக் அருகில் இருந்த தர்ஷினியின் கையை இறுக்கப் பிடித்துக் கொண்டான்.


அவளுக்குப் புரிந்தது. அவளிடம் ஏற்கெனவே அவன் நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது மனத்திரையில் தத்ரூபமாய் வந்து போன காட்சியைப் பற்றி சொல்லி இருக்கிறான்.... இது தான் அவன் பார்த்த காட்சியா என்று அவள் வியந்து பார்த்தாள்

(தொடரும்)
என்.கணேசன்


7 comments:

  1. ஆர்வம் அதிகமாகிறது. பழைய நினைவுகள் நண்பர்கள் அனைவரையும் குற்றவுணர்ச்சிக்கு தள்ளிப்போகிறது. அடுத்த பகுதிக்கு காத்திருக்க வேண்டுமே என்ற எண்ணம் எதிர்பார்ப்பை மேலும் தூண்டுகிறது.

    ReplyDelete
  2. Excellent sir. You're really gifted sir. Never expected this.

    ReplyDelete
  3. Expecting new novels like this sir....

    ReplyDelete
  4. அதுக்குள்ள எபிசோட் முடிந்து போயிடிச்சே....

    ReplyDelete
  5. one more week to wait know the suspense

    ReplyDelete
  6. இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வேண்டுமே!

    ReplyDelete
  7. Rajesh GopalakrishnanFebruary 14, 2023 at 12:18 PM

    நான் இன்னும் ஆவலுடன் காத்திருக்கிறேன் .. அருமையான கதை.. அற்புதமான ஒவ்வொரு அத்தியாயமும் அற்புதம், தொடர்ந்து பதிவிடுங்கள் .. கவனமாக இருங்கள் மற்றும் உங்கள் நாளுக்கு இனிய நாளாக அமையட்டும்

    ReplyDelete