Monday, February 6, 2023

யாரோ ஒருவன்? 124


ரேந்திரன் தொடர்ந்து சொன்னான். “நமக்கு இருக்கும் சாதகமான அம்சங்கள் இரண்டு. ஒன்று நாம் அவனைக் கண்டுபிடித்து விட்டோம் என்பது அஜீம் அகமதுக்குத் தெரியாதது. இன்னொன்று அந்தத் தொழிற்சாலை. அந்தத் தொழிற்சாலைக்குள் நம் ஆட்கள் நுழைந்து அவனைக் கண்காணித்து சமயம் பார்த்து .... எதாவது செய்யலாம்.”

அவன் அர்த்தம் பொதிந்த அமைதியுடன் இடைவெளி விட்டு எதாவது செய்யலாம் என்று சொன்னது ரா அதிகாரிகளின் முகங்களில் புன்னகையை வரவழைத்தது.

ஒரு அதிகாரி கேட்டார். “அஜீம் அகமது உஷார்ப் பேர்வழி என்பது எல்லாருக்கும் தெரியும். அப்படியிருக்கையில் நம் அதிகாரிகள் கூர்க்காவின் சந்தேகத்தைக் கிளப்பாமல் எப்படி உள்ளே நுழைய முடியும்? பின் வழி எதாவது இருக்கிறதா?”

பின்னால் வழி எதுவும் இல்லை. கட்டிடங்கள் தான் இருக்கின்றன. முன் வழியாகத் தான் போக வேண்டும். நாங்கள் அந்தத் தொழிற்சாலையின் காமிராக்களைச் செக் செய்த போது எதிர் கூர்க்காக்கள் இரண்டு பேருமே அந்த சரக்கு லாரிகளை ஆரம்பத்திலேயே கண்காணித்து திருப்தி அடைந்து விட்டார்கள் என்பது புரிந்தது. வேறு வாகனம் அங்கே நிதானமாகப் போனாலோ தெரியாத ஆள் வந்தாலோ மிகவும் கூர்ந்து கவனிக்கிற கூர்க்காக்கள் இந்த சரக்கு வாகனங்களைப் பார்த்துப் பழகி விட்டார்கள். இப்போது அவர்கள் அதைக்கூர்ந்து பார்ப்பதைக் கூட விட்டு விட்டார்கள். அந்தச் சரக்கு வாகனத்தில் நம் ஆட்கள் நான்கு பேர் மறைந்திருந்து உள்ளே போகிறார்கள்”

இன்னொரு அதிகாரி சொன்னார். “அத்தனை பெரிய தொழிற்சாலையில் நம் ஆட்கள் போய், அதற்கான காரணமும் தெரிந்தால் கண்டிப்பாக தொழிலாளிகள் வெளியே வரும் போதும், போகும் போதும் அந்த வீட்டை வித்தியாசமாகப் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அந்த வித்தியாசமான பார்வையே நாம் சந்தேகப்படுவதை கூர்க்காவுக்கும் அஜீம் அகமதுக்கும் காட்டிக் கொடுத்து விடுமே நரேந்திரன்

நரேந்திரன் சொன்னான். “அதையும் யோசித்துப் பார்த்து விட்டேன். நம் அதிகாரிகள் போய்ப் பதுங்கி இருப்பதும் கண்காணிப்பதும் தொழிற்சாலையின் முன்பகுதியிலேயே உள்ள ஆபிஸ் ரூமில் இருந்து தான். அங்கிருந்து தான் அந்த வீட்டைக் கண்காணிக்க முடியும். அந்த ஆபீஸ் ரூமில் மேனேஜிங் டைரக்டர், ஒரு அக்கவுண்டண்ட், ஒரு க்ளர்க் மட்டும் தான் இருக்கிறார்கள். அவர்கள் மூன்று பேருக்கு மட்டும் தான் நம் ஆட்கள் எதற்குப் போயிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று தெரியும். அந்த மூன்று பேரை எதிர் வீட்டை சந்தேகப்பட வைக்கக்கூடாது என்றும், மற்ற தொழிலாளிகளுக்கு விஷயம் கசிந்து விடக்கூடாது என்றும் எச்சரித்து கவனமாக இருக்க வைப்பது நமக்கு முடியாத காரியமல்ல.... அவர்கள் அங்கே வேலை செய்வதும் எட்டு மணி நேரம் தான். மற்ற தொழிற்சாலை தொழிலாளிகள் போல அவர்கள் மூன்று ஷிஃப்டில் வேலை செய்வது இல்லை

ரா தலைவர் திருப்தியடைந்து கேட்டார். ”நாம் ஆபரேஷன் எப்போது ஆரம்பிக்கப் போகிறோம்.”

நரேந்திரன் சொன்னான். “நம் ஆட்கள் கண்காணிக்க இன்றிரவே தொழிற்சாலைக்குள் போகிறார்கள். கண்காணித்துக் கிடைக்கிற தகவல்களை வைத்து தான் மற்றதை எல்லாம் நாம் தீர்மானிக்க முடியும்

மாலை ஆறு மணி வரை நேரம் போவது அங்கே எல்லோருக்கும் கஷ்டமாகத் தான் இருந்தது. வேலாயுதம், சரத், கல்யாண் மூவரும் வேலாயுதத்தின் அறைக்கு அவசர ஆலோசனை செய்ய விரைந்தார்கள். தீபக்கும் தர்ஷினியும் தனியாக புல்வெளியில் அமர்ந்து பேச ஆரம்பிக்க, மேகலாவும், ரஞ்சனியும் வீட்டிற்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

ரஞ்சனி மேகலாவிடம் மாதவன் என்ற தங்கள் நெருங்கிய நண்பனைப் பற்றியும் அவன் குடும்பத்தைப் பற்றியும் அவர்கள் நால்வருக்கு இடையே இருந்த ஆழமான நட்பைப் பற்றியும் மனம் விட்டுச் சொல்லிக் கொண்டிருந்தாள். மிக மிக நல்லவனான அந்த நண்பன் கல்யாண், சரத்துடன் மணாலியைச் சுற்றிப்பார்த்து விட்டு அங்கே ட்ரெக்கிங் போய்விட்டு வருவதாகப் போனவன் அங்கு வெடிகுண்டு விபத்தில் இறந்து போனதைச் சொன்னாள். சொல்லும் போது அவள் அழுத அழுகை மேகலாவையும் கண்கலங்க வைத்தது. இப்போதும் மாதவனின் வயதான பெற்றோர் சத்தியமங்கலத்தில் இருக்கிறார்கள் என்றும் ஒரு காலத்தில் மாதவனின் தாய் சமையலை வயிறார சாப்பிட்டு அங்கே நான்கு பேரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்த நாட்கள் அதிகம் என்றும் சொன்னாள்.

மேகலாவுக்கு எல்லாம் புதிய தகவலாக இருந்தன. “என் கிட்ட இவர் இதையெல்லாம் சொன்னதே இல்லை.” என்றாள். அவள் மனதுக்குள்எனக்கு நீங்களே இவரை டா போட்டுப் பேசற அளவுக்கு ஃப்ரண்டுன்னு கூட இன்னைக்கு வரைக்குத் தெரியாதுஎன்றும் சொல்லிக் கொண்டாள்.

ஆனால் அவள் மனதுக்குள் சொன்ன வார்த்தைகளை தர்ஷினி தீபக்கிடம் வாய்விட்டே சொல்லிக் கொண்டிருந்தாள். “... ஏண்டா உனக்குத் தெரியுமா?”

தீபக் சொன்னான். “எனக்கும் தெரியாது.”

உனக்கு கனவுல யாரோ வந்து என் சாவு இயற்கையல்ல. என்னை கொன்னுட்டாங்கன்னு சொல்றமாதிரி கேட்டதா சொன்னியே. அது இவங்க ஃப்ரண்ட் மாதவனா இருக்குமோ?”

இருக்கும்னு இப்ப தோணுதுடி. அந்த மாதவன் தான் ஆவி தான் எங்கம்மாவையும் வந்து பார்த்துகிட்டே இருந்திருக்கு போல. அது தான் அம்மா நாகராஜ் அங்கிள் கிட்ட கேட்க வெச்சு இந்தத் தேவையில்லாத  பிரச்சனை வந்துடுச்சு

ரொம்ப நெருங்கின நண்பன் செத்துப் போனா அவனைப் பத்தி பேசினா கூட மனசு வேதனையாகும்னு பேசாம இவங்க இருந்ததெல்லாம் எனக்கு லூசுத்தனமா தெரியுது. அதை விட லூசுத்தனமா தெரியறது உன்னோட நாகராஜ் அங்கிள் எங்கப்பாவையும், உங்கப்பாவையும், கொலைகாரங்களா சொல்றது தான். நீ அந்த ஆள என்னவோ முக்காலமும் அறிஞ்ச ஞானி மாதிரி சொன்னே. இப்போ அந்த ஆள் இவங்கள விட பெரிய லூசா இருக்காரு

அவர் என்ன கடவுளா? அவருக்கும் சிலது தப்பாகும் தான்.”

சரி தப்பாச்சுன்னா அதை சொல்லிட்டு விட்டுட வேண்டியது தானே. ஆதாரத்தைக் கொண்டு வந்து காமிக்கறேன்கிறாரு. என்ன ஆதாரமா இருக்கும். ஏதாவது போட்டோ மாதிரி இருக்குமா?”

அதே கேள்வியைத் தான் வேலாயுதம் மகனைக் கேட்டுக் கொண்டிருந்தார். கல்யாண் சொன்னான். “போட்டோ எல்லாம் இருக்க வழியே இல்லைப்பா.”

சரத் சந்தேகத்தோடு கேட்டான். “நாகராஜ் அவனோட நாகசக்தியை வெச்சு ஏதாவது போலி போட்டோவை அவனே தயாரிச்சுக் கொண்டு வந்தா

வேலாயுதம் சொன்னார். “ஒரிஜினல் போட்டோவைக் கொண்டு வந்தாலே இது ஜோடிச்சதுன்னு சத்தியம் செஞ்சு சொல்ற காலத்துல நாகராஜ் ஜோடிச்ச போட்டோவைக் கொண்டு வர்றது தமாஷாய் தான் இருக்கும். ஏண்டா அவனுக்கு முதல்லயே மனோரீதியான பிரச்சினைகள் இருக்குன்னு அந்த டிடெக்டிவ் ஏஜென்ஸிகாரன் எழுதி அனுப்பியிருந்தானே ஞாபகம் இருக்கா. அந்த மனப்பிரச்சினைகள் இப்ப முத்தியிருக்குமோ? அதனால தான் இப்படி எல்லாம் சொல்ல ஆரம்பிச்சிருக்கானோ?”

அவர் சொன்ன பிறகு கல்யாணுக்கும் அந்தச் சந்தேகம் பலமாக எழுந்தது. இல்லாவிட்டால் இல்லவே இல்லாத ஆதாரத்தை வீட்டுக்கே வந்து காட்டுகிறேன் என்று சொல்ல மாட்டான். அவனைப் போய்ப் பார்க்க ஐந்து லட்சம், ஐந்து மாத காலக் காத்திருப்பு என்ற உயர்ந்த இடத்தில் இருந்தவன் ரஞ்சனியிடம் சொன்ன அளவு வரை கூட தன் மரியாதையைத் தக்க வைத்துக் கொண்டிருந்தான். தீபக் போய் பேசியதற்கு ஆதாரத்துடன் வீட்டுக்கே வருகிறேன் என்று சொன்ன போது சறுக்கியது தான் பெரிய சறுக்கல்...

என்னடா ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறேஎன்று வேலாயுதம் கேட்டு முன்பே கேட்டிருந்த கேள்விகளை ஞாபகப்படுத்தினார்.

அதைத் தான் நானும் நினைச்சுகிட்டிருந்தேன்ப்பா. அவனுக்குப் பைத்தியம் தான் முத்திடுச்சு....”

சரத் சொன்னான். “நல்ல வேளையா நாளைக்கு இங்கேயிருந்து போறான். அவன் போய்த் தொலைஞ்சாலே நமக்கு நிம்மதி. ஆதாரம்கிற பேர்ல என்னத்த கொண்டு வந்து காமிக்கப்போறானோ தெரியல. அது ஒன்னு தான் மனசுல நெருடலா இருக்கு.”

கல்யாண் நண்பனிடம் கடுமையான குரலில் சொன்னான். “என்ன சொன்னாலும் காமிச்சாலும் அது பொய்ன்னு ஆணித்தரமா சொல்லப் போறோம். நீ வாயடைச்சுப் போறது, பின்னால போய் ஒளியறது, இதை எல்லாம் நிறுத்தணும். நான் பேசறப்ப அதை நீயும் அடிச்சுச் சொல்லணும். மறக்காதே. உனக்கே தெரியும் எந்த மண்ணாங்கட்டி ஆதாரமும் இல்லைன்னு. அப்படி இருக்கறப்ப பயம் என்னத்துக்கு?”

சரத்தும் தைரியம் பெற்று உறுதியாக முகத்தை வைத்துக் கொண்டு தலையாட்டினான். மணி ஆறு ஆகியது.



(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. Waiting more eagerly than kalyan trio.. to see the proof .

    ReplyDelete
  2. I am also eagerly waiting for Nagarajan's proof. Narendran's plan is superb.

    ReplyDelete