Monday, January 16, 2023

யாரோ ஒருவன்? 121



வீட்டுக்குள் ரஞ்சனியை ஒற்றை சோபாவில் அமர வைத்த தீபக் கவலையுடன் கேட்டான். “என்னம்மா ஆச்சு..?.”

அவர்களைத் தொடர்ந்து வெளியே இருந்த மற்றவர்களும் பின் தொடர்ந்து வர உள்ளே இருந்த மேகலா என்ன நடந்து விட்டது என்பதொன்றும் புரியாமல் குழப்பத்துடன் வந்து கேட்டாள். “என்ன ஆச்சு?”

ரஞ்சனி சரத்தையும், கல்யாணையும் வெறித்துப் பார்த்தாள். சரத் தன்னையும் அறியாமல் ஒரு அடி பின்னால் எடுத்து வைக்க கல்யாண் முன்னால் வந்தான். ரஞ்சனி குரல் உடைய அவனிடம் கேட்டாள். “நம்ம மாதவன் எப்படிடா செத்தான்?”

மேகலாவும், தர்ஷினியும், தீபக்கும் அதிர்ந்தார்கள். அவர்கள் அறிந்த வரை சரத்தும், கல்யாணும் நண்பர்கள். கல்யாணுக்கு ரஞ்சனி நண்பனின் மனைவி. அவர்கள் மூவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அதைத் தவிர ரஞ்சனிக்கும், கல்யாணுக்கும் இடையிலிருந்த நெருங்கிய நட்பை அவர்கள் அறிந்ததில்லை. இதுவரை ரஞ்சனியும், கல்யாணும் அதைக் காட்டிக் கொண்டதுமில்லை. எனவே அவள் டா போட்டுப் பேசியது அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.   

அவள் பழைய ரஞ்சனியாக மாறிவிட்டாள் என்பதைப் புரிந்து கொண்ட கல்யாண் அவள் அமர்ந்த சோபாவுக்குப் பக்கவாட்டில் மண்டியிட்டபடி சொன்னான். “இது என்ன கேள்வி ரஞ்சனி. அவன் அந்த வெடிகுண்டு விபத்துல செத்தது எல்லாருக்கும் தெரிஞ்சது தானே?”

அவளுடையடாவிற்கு இணையாக அவனும் அப்படி மண்டியிட்டு அமர்ந்தபடிக் கேட்டது அவர்களை மேலும் ஆச்சரியப்படுத்தியது. அவன் இதற்கு முன் அப்படி யார் அருகிலும் அமர்ந்ததில்லை. அவள் பேசியதும், அவன் அப்படி அமர்ந்ததும் வேலாயுதம், சரத் இருவரையும் ஆச்சரியப்படுத்தவில்லை என்பதையும் கூடக் கவனித்த போது இந்த நட்பு அவர்களுக்குப் புதியதல்ல என்பதையும் புரிய வைத்தது....

ரஞ்சனி கல்யாணின் கண்களைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னாள். “மாதவன் அந்த வெடிகுண்டு விபத்துல சாகலை, நீங்க ரெண்டு பேரும் தான் கொன்னுட்டீங்கன்னு நாகராஜ் சொல்றார்

சரத்தின் முகம் வெளுக்க, கல்யாண் இமைக்காமல் அவளைப் பார்க்க வேலாயுதம் சொன்னார். “உன் புருஷன் மேலயும் சேர்த்து அவன் அபாண்டமா பழி போட்டிருக்கான், நீ அதைக் கேட்டுகிட்டு வந்திருக்கியேம்மா

ரஞ்சனி வேலாயுதம் பக்கம் திரும்பவுமில்லை. தர்ஷினி திகைப்புடன் சத்தமாகக் கேட்டாள். “மாதவன்கிறது யாரு?”

ரஞ்சனி கல்யாணிடம் கரகரத்த குரலில் கேட்டாள். “நம்ம குழந்தைகளுக்கு மாதவன் யாருன்னு கூட நாம ஏன் இதுவரைக்கும் சொன்னதில்லை. சொல்லுடா. அதை விடு. நாம மூனு பேரே கூட ஏன் அவனைப்பத்தி பேசிகிட்டதில்லை. அவன் அவ்வளவு நமக்கு அன்னியமா போயிட்டானா?” 

கல்யாண் நிலைமை சிக்கலாவதை மெள்ள உணர்ந்தான். ஒருவேளை நாகராஜ் ரஞ்சனியிடம் உண்மையைச் சொன்னால் அவள் உடைந்து போவாள், ஆக்ரோஷமடைவாள் என்பதை எல்லாம் அவன் முன்பே யூகித்திருந்தான். அவனுடைய நெருங்கிய நண்பர்கள் மூவரும் எதெதற்கு எப்படியெப்படி நடந்து கொள்வார்கள் என்பது அவனுக்கு அத்துப்படி. அதனால் அவள் அதிர்ச்சிக்குத் தயாராகவே இருந்த அவன், ரஞ்சனி அவர்களைத் தனியாக அழைத்து நாகராஜ் சொன்னதைச் சொல்வாள் என்று நினைத்தான். தன் மகள் மாதவன் பற்றிக் கேட்பாள் என்றோ, அதைக் கேட்டுவிட்டு ரஞ்சனி மாதவனைப் பற்றி நாம் ஏன் நம் குழந்தைகளிடமும் சொன்னதில்லை, நாமே ஏன் பேசிக் கொண்டதில்லை என்று பிள்ளைகள் முன்னாலேயே கேட்பாள் என்றோ அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

கல்யாண் ரஞ்சனியிடம் தாழ்ந்த குரலில் சொன்னான். “அது ஏன்னு உனக்கும் தெரியும் ரஞ்சனி. அவனை நாம அந்த அளவு நேசிச்சோம். அவனைப் பத்தி பேசி நினைவுபடுத்திகிட்டு நம்ம காயங்களைப் புதுப்பிச்சுக்க நாம விரும்பல” 

அவர் என் கிட்ட கேட்டார். நமக்கு மாதவன் ஞாபகம் வரணும்னா அவனைப் பற்றிப் பேசினா தான் வரணுமான்னுஎன்று ரஞ்சனி கேட்டு விட்டு மகன் பக்கம் வேகமாகப் பார்வையை ஒரு முறை கொண்டு போய் விட்டு கல்யாணைப் பார்த்தாள்.

கல்யாண் என்ன சொல்வதென்று யோசித்து மௌனமே உத்தமம் என்று முடிவெடுத்தான்.

ரஞ்சனி சொன்னாள். “மாதவனைப் பத்தி பேசிக்காததும், மாதவனோட வீட்டுக்கு அவன் செத்ததுக்கு அப்பறம் போகாமயே இருக்கிறதும் உங்க ரெண்டு பேரோட குற்ற உணர்ச்சியால தான்னு அவர் சொல்றார்

கல்யாண் கோபத்துடன் சொன்னான். “அதைச் சொல்ல அவன் யாரு. நீ என்ன கேள்வி கேட்கப் போனேன்னு எனக்குத் தெரியாது ரஞ்சனி. ஆனா நீ  கேட்டதுக்குப் பதில் தெரியாட்டி தெரியாதுன்னு சொல்லிட்டு அவன் மூடிகிட்டு இருக்கணும். அதை விட்டுட்டு வாய்க்கு வந்த மாதிரியெல்லாம் அவன் பேசக்கூடாது. ஆரம்பத்துல இருந்தே அவன் மேல எனக்கு சந்தேகம். இப்ப நிரூபணம் ஆயிடுச்சு. எங்க மேல அபாண்டமா பழி சுமத்தணும்னே இங்கே வந்து சேர்ந்திருக்கான்...”

வேலாயுதம் சொன்னார். “நான் அன்னைக்கே சொன்னேன். அவன் முகத்துல ஒரு திருட்டு லட்சணம் தெரியுதுன்னு. அது சரியாயிடுச்சு பார்த்தியா?”  

தர்ஷினி பார்வையால் தீபக்கிடம்என்ன இதெல்லாம்?” என்று கேட்டாள்.

தீபக் தோள்களைக் குலுக்கி ஒன்றுமே புரியவில்லை என்று சைகையால் சொன்னான்.

அவள் ரஞ்சனியைப் பார்த்து விட்டு தீபக்கிடம்உங்கம்மா கிட்ட கேள்என்று சொன்னாள். என்ன நடக்கிறது என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று ஒன்றுமே புரியாமல் இருப்பதை அவளால் தாங்க முடியவில்லை. அவனும் அதே நிலையில் இருந்ததால் அவன் தாய் அமர்ந்திருந்த சோபாவின் மறுபக்கத்தில் கல்யாணைப் போலவே மண்டியிட்டு உட்கார்ந்து கேட்டான். “அம்மா அங்கிள் கிட்ட நீங்க என்ன கேட்கப் போனீங்க? அவர் என்ன சொன்னாரு?”

ரஞ்சனி எதுவும் சொல்வதற்கு முன் வேலாயுதம் சொன்னார். “நீ இன்னும் அவனை அங்கிள்னு சொல்லியே கூப்பிடு. அவன் உங்கப்பனை கொலைகாரன்னு சொல்லிகிட்டு திரியறான்

கல்யாண் தந்தையைச் சுட்டெரிப்பது போல் பார்த்தான். ’வாயைத் தான் மூடிக் கொண்டிருங்களேன்என்று அவன் கண்கள் கட்டளையிட்டன. பேச்சின் இடையே சொன்னது அமுங்குவது போலிருக்கையில் இவர் அதை அடிக்கோடிட்டுச் சொல்வது போல் சொல்லும் அவசியம் தான் என்ன?

தர்ஷினி சொன்னாள். “நீங்கல்லாம் என்ன பேசிக்கிறீங்க என்ன சொல்றீங்கன்னு சின்னவங்க எங்களுக்கு ஒன்னுமே புரியலை.”

மேகலா சொன்னாள். “பெரியவ எனக்கே புரியல. அப்பறம் அல்ல உனக்கு புரியறதுக்கு

இவ்வளவு தூரம் இவர்களும் பேச ஆரம்பித்த பிறகு ரஞ்சனியாக எதையும் சொல்ல ஆரம்பிப்பதற்கு முன் தானே அதை ஒன்றுமில்லாத சிறிய விஷயம் போலச் சொல்வது நல்லது என்று தோன்ற கல்யாண் சுருக்கமாகச் சொன்னான். “எங்க மூனு பேருக்கும் மாதவன்னு ஒரு நெருங்கின நண்பன் இருந்தான். நாங்க மணாலிக்கு போயிருந்தப்ப அங்கே வெடிச்ச வெடிகுண்டு விபத்துல அவன் இறந்துட்டான். அது நடந்து 22 வருஷத்துக்கு மேல ஆச்சு. இப்ப நாங்க தான் அவனைக் கொலை செஞ்சோம்னு பக்கத்து வீட்டுக்காரன் சொல்றானாம். பைத்தியக்காரன்

தர்ஷினி சொன்னாள். “நீங்க யாருமே இது வரைக்கும் மாதவன்னு ஒரு ஃப்ரண்ட் உங்களுக்கு இருந்ததாய் சொல்லவேயில்லை

கல்யாண் சொன்னான். “எங்க நண்பன் இறந்தது எங்களுக்கு ரொம்பவே அதிர்ச்சியாய் இருந்துச்சு. ஏன்னா அந்த அளவு நாங்க நெருங்கி இருந்தோம். அவன் இறந்தபிறகு எங்களுக்குள்ளேயே அவனைப் பத்தி நாங்க அதிகம் பேசிக்கலை. பேசிக்கறது எங்க காயங்களை புதுப்பிச்சுக்கற மாதிரி தோண ஆரம்பிச்சுதுஎல்லாமே ஏதோ ஒரு பழங்கனவு மாதிரியாயிடுச்சு...”

தீபக் தாயிடம் மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டான். ““அம்மா அங்கிள் கிட்ட நீங்க என்ன கேட்கப்போனீங்க? அவர் என்ன சொன்னாரு?””

ரஞ்சனி கண்கலங்கச் சொன்னாள். “எனக்கு சில நாளாவே மாதவன் நம்ம வீட்டுல வந்து நிற்கற மாதிரி பார்க்கற மாதிரி எல்லாம் தோணுது. அது எதனாலன்னு கேட்கப் போனேன்.... அவன்... அவன்.... விபத்துல சாகல.... நண்பர்கள் ரெண்டு பேரும் தான்.......அவனை கொலை பண்ணிட்டாங்கன்னு அவர் சொல்றார்

கல்யாண் ஆவேசமாகச் சொன்னான். “யாராவது நெருங்கின நண்பனைக் கொலை பண்ணுவாங்களா? அப்படிப் பண்ணக் காரணம் என்னன்னு அந்த ஆள் கிட்ட நீ கேக்கலியா ரஞ்சனி?”

கேட்டேன்.... சொல்லலை. உங்க ரெண்டு பேர் கிட்ட நேரடியா கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்னு சொல்லிட்டார்

கல்யாண் பதுங்கியபடி பின்னால் நின்ற சரத்தை முறைத்தான். சந்தேகப்படுகிற மாதிரி பின்னால் போய் நிற்காதே. நீயும் ஏதாவது சொல்லு என்று பார்வையால் கட்டளையிட சரத் முன்னால் வந்து வருத்தம் கலந்த குரலில் சொன்னான். “அந்தக்காலத்துல மாதவனும் எங்க மாதிரி ஒரு அன்னக்காவடி தான். அவனைக் கொன்னு எங்களுக்கு என்ன லாபம்? சும்மா அந்த ஆள் அவதூறாய் பேசறான்

சிறிது நேரம் மயான அமைதி அங்கே நிலவியது. திடீரென்று தீபக் எழுந்து வெளியே போனான். தர்ஷினி அவன் பின்னாலேயே போனாள். சந்தேகத்துடன் வேலாயுதமும் பின்னால் போய் விட்டு  ஒரு நிமிடத்தில் ஓடி வந்து சொன்னார். ”ரெண்டு பேரும் பக்கத்து வீட்டுக்குள்ளே போறாங்க




(தொடரும்)
என்.கணேசன்



4 comments:

  1. Every week suspense is increasing. Very very interesting.

    ReplyDelete
  2. எந்த ரகசியம் எப்போ வெளி வரனுமோ, அதுக்கு ஒரு நிமிசம் முன்னாடியும் வராது ..ஒரு நிமிசம் பின்னாடியும் வராது. சரிதானே சார்.

    ReplyDelete
  3. tense situation and thrilling. waiting for next episode on the edge of the seat

    ReplyDelete
  4. தீபக் போற நேரத்துல நாகராஜ் அங்க இருப்பாரா???

    ReplyDelete