Monday, January 2, 2023

யாரோ ஒருவன்? 119


ன்வர் அன்று தொழிற்சாலைக்கு வந்த போது ஏதோ யோசனையோடு வருவது போல் காட்டிக் கொண்டான். அமைதியாக உள்ளே போய் குரியர் கவர்களைக் கொடுத்து விட்டு சிந்தனைகளில் ஆழ்ந்தவனாய் யாரையும் பார்க்காமல் போய் விட்டான். அவன் வந்ததிலிருந்து போகும் வரை வேறு எங்கும் பார்வையைத் திருப்பாமல் சந்தேகத்துடன் அவனையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த எதிர் வீட்டு கூர்க்கா அவன் போன பின்பு நிம்மதி அடைந்தான். தேவையில்லாமல் இவனைச் சந்தேகப்பட்டு விட்டோம் என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது.

சுமார் ஒரு மணி நேரத்தில் நீல நிறச் சீருடையில் ஒருவன் பைக்கில் தொழிற்சாலை வாசலில் வந்து தன்னுடைய சட்டைப்பையிலிருந்து ஒரு பெரிய காகிதத்தை எடுத்து தொழிற்சாலையின் பெரிய பெயர்ப்பலகையையும், காகிதத்தில் உள்ள பெயரையும் சரி பார்த்துக் கொண்டு உள்ளே போனான். கூர்க்கா அவனையும் கூர்ந்து பார்த்தான். ஆனால் அந்த ஆள் அந்த வீட்டையோ கூர்க்காவையோ திரும்பியும் பார்க்கவில்லை.

சற்று முன் தான் ரா அலுவலத்திலிருந்து தொழிற்சாலை மானேஜிங் டைரக்டருக்குப் போன்கால் போயிருந்தது. அவர் சொல்லி தொழிற்சாலை வாசலில் உள்ள சிசிடிவி கேமராவின் மூன்று நாள் பதிவுகளை அலுவலகத்தில் எடுத்து வைத்திருந்தார்கள். நீல நிறச் சீருடையில் வந்தவன் அதை வாங்கிக் கொண்டு போனான். அவன் போகும் போதும்  எதிர் வீட்டையோ கூர்க்காவையோ பார்க்கவில்லை.    

அந்த காமிராப் பதிவுகளை நரேந்திரனும் அவன் ஆட்களும் கவனமாகப் பார்த்தார்கள். அதைப் பார்க்கும் போது தான் அவர்களுக்கு காலை ஒன்பது மணியிலிருந்து, இரவு ஒன்பது மணி வரை ஒரு கூர்க்காவும், இரவு ஒன்பது மணியிலிருந்து காலை ஒன்பது மணி வரை இன்னொரு கூர்க்காவும் காவலுக்கு இருப்பது தெரிந்தது. காலை ஆறுமணி அளவில் யாரோ ஒருவன் வந்து சில பொருள்களைத் தந்து விட்டுப் போவதும் அதை கூர்க்கா எடுத்துக் கொண்டு போய் வாசற்கதவைத் திறந்து உள்ளே வைத்து விட்டு மீண்டும் கதவைச் சாத்திக் கொண்டு திரும்ப வருவது தெரிந்தது. வேறு யாரும் வந்து போகிறவர்கள் இல்லை.

இரண்டு நாள் முன்பு மட்டும் இரவு பதினோரு மணிக்கு ஒரு கார் அந்த வீட்டு முன் வந்து நின்று இரண்டு பேர் இறங்கி வேகமாக உள்ளே போனார்கள். அரை மணி நேரம் இருந்து விட்டுத் திரும்பி வந்தார்கள். வந்தவர்கள் வேகமாகப் போய் விட்டார்கள், வீட்டுக்கு முன் விளக்கு எதுவும் இல்லாததால் போகும் போது முகங்கள் சரியாகத் தெரியவில்லை. திரும்ப வரும் போது மட்டும் தொழிற்சாலையின் முகப்பு வாசல் பெரிய விளக்கில் முகங்கள் ஓரளவு தெரிந்தன. நரேந்திரன் அந்த இரண்டு பேர் முகங்களையும் பெரிதுபடுத்திப் பார்த்தான். இருவரில் ஒருவன் அஜீம் அகமதின் மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திமான ஆள்.

“அப்படியானால் அந்த வீட்டில் இருப்பது அஜீம் அகமது தான்.” நரேந்திரன் உற்சாகத்தோடு கூவினான்.


ஞ்சனி தாம்பாளத்தட்டோடு பக்கத்து வீட்டுக் கேட் கதவைத் திறக்கும் போது காம்பவுண்டு சுவர் அருகே நின்று கொண்டே தீபக் அங்கே வெளியே சுதர்ஷன் தெரிகிறானா என்று எட்டிப் பார்த்தான். சுதர்ஷன் வெளியே தெரியவில்லை. ஆனால் கதவு திறந்தே இருந்தது. ரஞ்சனி திரும்பிப் பார்த்து மகனிடம் ’இனி நீ போ. நான் போய்க் கொள்கிறேன்’ என்று பார்வையாலேயே சொல்லி விட்டு உள்ளே நுழைந்தாள்.

வரவேற்பறையில் கருப்புக் கண்ணாடி போட்டு அமர்ந்திருந்த மனிதன் தான் நாகராஜாக இருக்க வேண்டும் என்று அனுமானித்தவளாக “நமஸ்காரம் ஐயா” என்று பயபக்தியுடன் சொன்னாள்.

நாகராஜ் வார்த்தைகள் இல்லாமல் கைகூப்பினான். எதிரில் காலியாக இருந்த நாற்காலியைக் காட்டி அமரும்படி அவன் சைகை காட்டினான். தாம்பாளத் தட்டை அவன் நாற்காலிக்கு அருகே கீழே வைத்து விட்டு அவளும் கைகூப்பி வணங்கி விட்டு அந்த எதிர் நாற்காலியில் அமர்ந்தாள்.

அவன் கருப்புக் கண்ணாடி போட்டிருப்பான் என்று தீபக் சொல்லி இருக்காதது ரஞ்சனிக்கு சிறிய மனக்குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏதாவது கண்பிரச்னையாக இருக்குமோ, அதுகுறித்து ஏதாவது சம்பிரதாயத்திற்காகக் கேட்க வேண்டுமோ என்று அவள் யோசித்தாள். ஆனால் அதிகப்பிரசங்கித் தனமாக அது ஆகிவிடுமோ என்ற எண்ணமும் அவளுக்குள் எழுந்தது. ஏற்கெனவே தீபக் பல முறை அறிவுரை சொல்லி இருக்கிறான்...

அவனாக எதாவது சொல்வான் என்று எதிர்பார்த்து அவன் ஒன்றும் சொல்லாமல் போகவே ரஞ்சனி நேரடியாக விஷயத்துக்கு வந்தாள்.

“நான் தீபக்கோட அம்மா.... என் உயிர் சினேகிதன் ஒருத்தன் 22 வருஷங்களுக்கு முன்னாடி ஒரு விபத்துல இறந்து போயிட்டான். எனக்கு சில நாளாவே அவன் வந்து என்னைப் பார்க்கற மாதிரி, கவனிக்கிற மாதிரி தோணுது. கொஞ்ச நேரம் தான். பிறகு மறைஞ்சு போயிடறான்.... அது எதனாலன்னு தெரியணும்....”

நாகராஜ் மெல்லக் கேட்டான். “அப்படி வந்து பார்க்கிறதும், கவனிக்கிறதும் உங்களுக்குத் தொந்திரவா இருக்கா?’

ரஞ்சனி சொன்னாள். “தொந்திரவுன்னு சொல்ல முடியாது. சொர்க்கத்துல எப்பவோ சாந்தி அடைஞ்சிருக்க வேண்டிய ஆத்மா இத்தனை வருஷமா இல்லாம இருந்து இப்ப திடீர்னு ஏன் வரணும்னு தான் புரியலை”

நாகராஜ் கேட்டான். “இத்தனை வருஷமா உங்களுக்கு அந்த நண்பன் ஞாபகம் வந்ததில்லையா?”

ரஞ்சனி லேசாகக் கண்கலங்கியபடி சொன்னாள். “சில பேர் நம்ம வாழ்க்கைல ஒரு பகுதியாவே ஆயிடுவாங்க. அப்படி ஆயிட்டவங்கள மறக்க முடிஞ்சா தான பிறகு நினைச்சுப் பார்க்கறதுக்கு. அந்த நண்பன் எனக்கு என் வாழ்க்கைல ஒரு பகுதியானவன். வாழ்ந்த காலத்துல வார்த்தைகள் இல்லாமயே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுப்போம். அந்த அளவு நெருக்கமானவன்கிறதால அப்பப்ப அவனை நினைச்சுகிட்டே தான் இருப்பேன். ஆனா இப்ப கொஞ்ச நாளா தான் அவன் நேர்ல வந்து பார்த்துட்டிருக்கற மாதிரி உணர்றேன். அதனால தான் ஏன்னு கேட்க வந்தேன்.”

நாகராஜ் கேட்டான். “அந்த நண்பன் பெயர் மாதவனா?”

ரஞ்சனி ஆச்சரியத்துடன் சொன்னாள். “ஆமாங்க”

நாகராஜ் அமைதியாகச் சொன்னான். “அவன் மரணம் இயற்கையாய் நடக்கலை. அவனைக் கொன்னிருக்காங்க”

ரஞ்சனி வருத்ததுடன் சொன்னாள். “உண்மை தான் அது. வெடிகுண்டு விபத்துல இறந்தான்”

நாகராஜ் சொன்னான். “மாதவன் அந்தக் கார் வெடிகுண்டு விபத்துல சாகல. வேற விதமாய் அவனைக் கொன்னுருக்காங்கன்னு சொல்றேன்”

ரஞ்சனி திகைப்புடன் பார்த்தபடி சொன்னாள். “தீபக் கனவுல கூட யாரோ ஒருத்தர் என் மரணம் இயற்கையாய் நடக்கல. என்னைக் கொன்னுட்டாங்கன்னு சொல்றதா சொன்னான். அது மாதவன் தானா?”

”ஆமா”

“நீங்க கூட அந்த ஆத்மா கிட்ட யாரோ ஒரு பொண்ணு கவிதை சொல்றதாகவும், அந்த ஆத்மா ரசிச்சுக் கேட்கறதாவும் ஒரு காட்சி தெரியறதாவும் சொல்லி இருந்தீங்க”

“ஆமா. அந்தப் பொண்ணு நீங்க தான். அதை நான் தீபக் கிட்ட சொல்லலை. அதைச் சொன்னா மாதவன் யாருன்னும் நான் அவன் கிட்ட சொல்ல வேண்டி வரும்னு சொல்லலை.”  

ரஞ்சனி அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள். அவன் அமைதியாகவே இருந்தான். சிறிது நேரம் இருவருமே ஒன்றும் பேசவில்லை.

மெல்ல ரஞ்சனி கேட்டாள். “மாதவனை யார் கொன்னாங்க?”

“அவனோட நெருங்கிய நண்பர்கள் ரெண்டு பேர்”

அண்டசராசரங்களே இடிந்து அவள் மேல் விழுவதைப் போல ரஞ்சனி உணர்ந்தாள். நிலைகுலைந்து போன அவள் சகல பலத்தையும் திரட்டி தன்னை மீட்டுக் கொண்டு உறுதியாகச் சொன்னாள். “இல்லை.... அவங்க அப்படி பண்ணியிருக்க மாட்டாங்க. நான் அவனை நேசிச்ச அளவுக்கே அவங்களும் அவனை நேசிச்சாங்க.... எனக்குத் தெரியும். ஏன்னா நாங்க நாலு பேரும் அவ்வளவு நெருங்கின நண்பர்களா இருந்தோம்...”

நாகராஜ் மௌனமாக இருந்தான். அவன் எதாவது சொல்வான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ரஞ்சனி உடைந்த குரலில் சொன்னாள். “எதாவது சொல்லுங்க....”

நாகராஜ் சொன்னான். “நான் உண்மை என்னன்னு சொல்லிட்டேன். நீங்க அப்படி இருக்காதுன்னு சொல்றீங்க. அதுக்கு நான் என்ன சொல்ல முடியும்? பல சமயங்கள்ல பொய் தான் நம்ப சுலபமானதாகவும், நிம்மதியைத் தர்றதாகவும் இருக்கு. உண்மை எப்பவுமே அப்படி சுலபமா ஜீரணிக்க முடிஞ்சதா இருக்கறதில்லை.”

ரஞ்சனி அழுகுரலில் கேட்டாள். “யாராவது நெருங்கின நண்பனையே காரணமில்லாமல் கொல்வாங்களா?”

(தொடரும்)
என்.கணேசன்




4 comments:

  1. Thrilling on both places. Eagerly waiting for next Monday

    ReplyDelete
  2. Interesting. Can't wait till next monday though :/

    ReplyDelete
  3. அடுத்த வாரம் மாதவன்‌ பற்றி உண்மை வெளிவரும்.... ஆனால், இடையில் பீம்சிங் பற்றி கதை வராமல் ...இவர்களுடைய சந்திப்பு தொடர்ந்தால் நன்றாக இருக்கும்...

    ReplyDelete