Thursday, December 1, 2022

சாணக்கியன் 33


சாணக்கியர் பாடலிபுத்திரத்தை விட்டு நெடுந்தொலைவு வந்து விட்டார். ஆனாலும் அவருடைய மனம் மட்டும் இன்னும் பாடலிபுத்திரத்தில் நடந்த நிகழ்விலேயே தங்கி இருந்தது. தனநந்தன் பாரதத்தின் மீதுள்ள பாசத்தின் காரணமாக அலெக்ஸாண்டரைத் தடுத்து நிறுத்த வர மாட்டான் என்று அவர் நிச்சயமாக அறிந்திருந்தாலும், இலாபநோக்கு கருதியாவது அவர் பேச்சுக்குச் செவிமடுப்பான் என்று எதிர்பார்த்திருந்தார். மகத சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தவும், புகழ்பெறவும் அவனுக்கு இது ஒரு அருமையான சந்தர்ப்பம் என்று சொன்னது அவர் சொன்னது அவனுக்கு ஒருவேளை புரியா விட்டாலும் ராக்ஷசருக்காவது புரியும் என்று நினைத்திருந்தார்.  ஆனால் ராக்ஷசரும்யாரோடு எப்போது போரிட வேண்டுமென்பதை நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். உன் ஆலோசனை தேவையில்லைஎன்று சொல்லி விடுவார் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. ’தாயகத்தை அன்னியரின் ஊடுருவலிருந்து காப்பாற்ற முடியாது போலிருக்கிறதே!’ என்று எண்ணுகையில் அவர் இதயத்தில் இரத்தம் கசிந்தது.

 

இப்போது யோசிக்கும் போது ராக்ஷசரின் மனக்கணக்கை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. அலெக்ஸாண்டர் மகதத்தை நெருங்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று அவர் நினைத்திருக்க வேண்டும். அப்போது அவன் படையை பாரத எல்லை வரை   துரத்தியடித்துக் கொண்டே போய் சுலபமாக அத்தனை பகுதிகளையும் கையகப்படுத்தி விடலாம் என்று அவர் கணக்குப் போட்டிருப்பார். ஏற்கெனவே தோற்றுப் போய் பலவீனமாக இருக்கும் பகுதிகள் வலிமையான மகதப்படையுடன் போரிடும் நிலைமையில் கண்டிப்பாக இருக்க வழியில்லை என்று நினைத்திருக்கலாம். மகதத்தைத் தாயகமாக நினைக்க முடிந்த ராக்ஷசருக்கு பாரதத்தைத் தாயகமாக நினைக்க முடியவில்லை…. குறுகிய இதயங்களால் விரிந்துபட்ட பாரதத்தைத் தங்கள் தாயகமாக நினைக்க முடியவில்லை போலும்! முயற்சி செய்தால் அறிவை அடுத்தவர்களுக்குக் கற்றுத் தரலாம். உணர்வுகளை யாரும் கற்றுத் தர முடியாது.

 

நடந்து முடிந்ததை எண்ணிக் காலத்தை வீணாக்குவதில் அர்த்தமில்லை என்று பெருமூச்சு விட்டபடி சாணக்கியர் நினைத்துக் கொண்டார். இனி நடக்க வேண்டியதை யோசிக்க வேண்டும். சபதமிட்டு அதை நிறைவேற்ற முடியாதவராக அவர் கண்டிப்பாக இருக்கப் போவதில்லை.  அப்படி ஒருவேளை இருந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் அவர் தனநந்தனின் அரசவையில் சபதமிட்டிருக்கிறார். கோபத்தை அவர் அடக்க முடியாதவரல்ல. அப்படி முடிந்தும் அவர் கோபத்தை அடக்க முயற்சிக்கவில்லை என்பதற்கு ஒரே காரணம் இனிவரும் முயற்சிகளில் எந்த மெத்தனமும் இருந்து விடக்கூடாது என்பது தான். பகிரங்கமாகப் பலர் முன்னால் அவர் போட்டிருக்கும் பெருஞ்சபதம் போட்ட பின் அவரே நினைத்தாலும் பின்வாங்க முடியாது. போட்ட சபதம் இனி ஒவ்வொரு கணமும் அவர் இதயத்தில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.  அதை நிறைவேற்றாமல் இருக்கவோ, இறக்கவோ அவரால் கண்டிப்பாக முடியாது.

 

ஒருவிதத்தில் நடப்பதெல்லாம் நன்மைக்கே.  அவர் தந்தையின் மரணத்திற்கும் சேர்த்து தனநந்தனின் கணக்கை அவர் தீர்ப்பார்.  வலிமையான மகதத்தின் அரசனான தனநந்தனையும், அலெக்ஸாண்டர் போன்ற மாவீரனையும் எதிராளிகளாக நினைத்து எப்படி வெற்றி பெறப் போகிறோம்என்ற சந்தேகமோ, தயக்கமோ அவர் மனதில் சிறிதும் எழவில்லை. இப்போது அதற்கு வழியில்லாமல் இருக்கலாம். ஆனால் எல்லா வழிகளும் எப்போதோ யாராலோ உண்டாக்கப்பட்டவையே. அவரும் வழிகளை உண்டாக்குவார்.  அலெக்ஸாண்டருக்கு ஒரு வழி, தனநந்தனுக்கு ஒரு வழி. இரண்டு எதிரிகளையும் விரட்டியடித்து ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கி அதற்கு சந்திரகுப்தனை சக்கர்வர்த்தியாக அமர வைக்கும் வரை அவர் ஓயப்போவதில்லை. இனி ஒவ்வொரு கணமும் அவர் அதற்காகவே வாழ்வார். அது நிச்சயம்....!

 

இது தான் இலக்கு என்று முழுவதுமாக முடிவெடுத்த பின் அவர் மனதில் பேரமைதி நிலவியது. நடந்தவை அனைத்தும் நன்மைக்கே. பாரதம் தனநந்தனால் ஆளப்படுவது, அலெக்ஸாண்டரால் ஆளப்படுவதற்குச் சற்றும் குறைவில்லாத இழிநிலையே.  தனநந்தன் இந்த மண்ணின் மைந்தனாக இருக்கலாம். ஆனால் அந்த உணர்வில்லாமல் இருக்கும் போது அவன் இந்த மண்ணுக்கு அன்னியனே. பிடுங்கி எறியப்பட வேண்டிய களையே. இந்த மண்ணில் இருந்து பிடுங்கி எறிய நிறைய களைகள் இருக்கின்றன. செழிப்பான வளமான விளைச்சல் இந்த பாரத மண்ணில் விளைய வேண்டும் என்றால் இது போன்ற களைகள் பிடுங்கி எறியப்படத்தான் வேண்டும். அதை அவர் நிச்சயம் செய்வார்.

 

சாணக்கியருக்குத் தான் எடுத்திருக்கும் வேலையின் பிரம்மாண்டம் சிறிதும் அசர வைக்கவில்லை.  எல்லாப் பிரம்மாண்டங்களும் ஏராளமான சிறிய காரியங்களின் தொகுப்பு தான். ஒவ்வொரு காரியமாக முடித்துக் கொண்டே வந்தால் எந்தப் பிரம்மாண்டமும் செய்து முடித்து வெற்றி காணமுடிந்த விஷயம் தான். இந்தச் சிந்தனையை எட்டிய பின் அவர் மனம் வைராக்கியத்துடன் பேரமைதியும் பெற்றது. தெளிந்த மனதுடன் தட்சசீலம் நோக்கிய தன் நெடும்பயணத்தை அவர் தொடர்ந்தார்.  

 

ம்பிகுமாரன் பரம திருப்தியுடன் இருந்தான். அவன் தந்தையின் மரணத்திற்குப் பின் அவன் வாழ்வில் எல்லாம் அவன் எண்ணப்படியே நடக்க ஆரம்பித்திருக்கின்றன.   அவன் தந்தை இருந்த வரை அவனுக்குச் சுதந்திரம் இருக்கவில்லை.  அவனால் எதையும் முழுவதுமாகத் தன் விருப்பப்படி செய்ய முடிந்ததில்லை. அவர் இறந்து அவன் அரியணை ஏறிய பின் அந்தப் பிரச்சினை இல்லை. அவன் பட்டாபிஷேக நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கின்றன. அண்டை நாடுகளில் கேகய நாட்டைத் தவிர மற்ற அனைவருக்கும் அவன் அழைப்பு அனுப்பியிருந்தான். அங்கிருந்து பிரதிநிதிகள் வந்து அவன் பட்டாபிஷேக நிகழ்ச்சிகளைச் சிறப்பித்திருந்தார்கள்.  அனைவரும் அரசே என்று அழைத்த போது அவன் காதுகளுக்கு மிக இனிமையாக இருந்தது.

 

தன் பட்டாபிஷேகத்திற்கு அவன் தட்சசீல கல்விக்கூடத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தான். அவனைப் படிப்பிலிருந்து பாதியில் துரத்தியிருந்தாலும் பலரும் வந்திருக்கும் நிகழ்ச்சியில் ஆசிரியர்களில் ஒருவரும் வரவில்லை என்றால் அது ஒரு குறையாகவே இருக்கும் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. பலரும் உயர்வாக நினைக்கும் அந்தக் கல்விக்கூடம் அவன் தலைநகரிலேயே இருக்கையில், அதுவும் அவன் படித்த கல்விக்கூடமாகவே இருக்கையில் அங்கிருந்து யாரும் வரவில்லை என்றால் அவர்கள் அங்கீகரிக்க மறுக்கும் பட்டாபிஷேகம் போன்ற தோற்றத்தை அது ஏற்படுத்தி விடலாம் என்று அவனுக்குத் தோன்றியது.  அந்தக் குறையை நீக்கத் தான் அவன் நேரில் சென்று அழைப்பு விடுத்தான்.

 

அங்கு அவனுக்குப் பிடிக்காத விஷ்ணுகுப்தர் இருக்கவில்லை. எங்கேயோ யாத்திரை போயிருப்பதாகச் சொன்னார்கள்.  அவன் அரசனாக அரியணை ஏறப்போகிறான் என்று தெரிந்து கூட அந்த அகம்பாவம் பிடித்த மனிதர் அங்கிருக்கப் பிடிக்காமல் யாத்திரை போயிருக்கலாம்.  அதுவும் நல்லது தான் என்று அவனுக்குத் தோன்றியது. ஒருவேளை அவர் இருந்து அவனுடைய பட்டாபிஷேகத்திற்கு வந்திருந்தால் தன்னுடைய அலட்சியமான பார்வையை வீசி அவன் சந்தோஷத்தைக் குறைத்திருப்பார். அதனால் அவர் வராததே அவனுக்குத் திருப்திகரமாய் தான் இருந்தது.

 

கல்விக்கூடத்தின் தலைமை ஆசிரியர் வந்திருந்தார். அந்த வயதான மனிதர் மென்மையானவர். நல்லவர்.  விஷ்ணுகுப்தர் போல அவர் அகம்பாவி அல்ல. வந்திருந்து மரியாதை கொடுத்து வாழ்த்தி விட்டுச் சென்றார். அவனும் குருதட்சிணையை அவருக்கு மிகுந்த மரியாதையுடன் தாராளமாகத் தந்திருந்தான். எல்லாம் நல்லபடியாக முடிந்திருந்தது.        

 

அதன் தொடர்ச்சியாக மற்ற நல்ல காரியங்களும் நடந்தன.  அலெக்ஸாண்டரிடம் நட்புக்கரம் நீட்டி அவன் தூது அனுப்பி இருந்ததற்கு அலெக்ஸாண்டரும்  நட்பைத் தெரிவித்து தூதனுப்பியிருந்தான். அவனைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லியிருந்தான். காந்தாரத்திற்கு வந்து தங்களைக் கௌரவிக்கும்படி ஆம்பிகுமாரன் அழைப்பு விடுத்ததற்கும் அலெக்ஸாண்டர் சம்மதம் தெரிவித்திருந்தான். இன்னும் சில நாட்களில் யவன மாமன்னன், மாவீரன் அலெக்ஸாண்டர் காந்தாரம் வந்து சேருவான்.

 

காந்தாரப்படையுடன் யவனப்படையும் சேர்ந்தால் இந்தக் கூட்டணிப்படை மகத்தான சக்தி படைத்ததாக இருக்கும். கேகய நாடு மட்டுமல்ல தெற்கில் உள்ள அனைத்து நாடுகளும் அவர்களைப் பார்த்து நடுங்கப் போகின்றன. தானாக வந்து சரணடைபவர்களே அதிகமாக இருப்பார்கள். சரணடையாதவர்களை அலெக்ஸாண்டருடன் சேர்ந்து வெல்வது மிகவும் எளிதாக இருக்கும். அலெக்ஸாண்டர் எங்குமே தங்கியிருக்க முடியாதவன். அவன் அடுத்த வெற்றிகளைத் தேடி பாரதக் கண்டம் விட்டுப் போகும் போது ஆம்பிகுமாரன் அவன் நண்பனாகவும், பிரதிநிதியாகவும் இந்தக் கண்டத்தையே ஆளப்போகிறான்.  முன்பு துச்சமாக நினைத்தவர்கள் எல்லாம் நடுநடுங்கி அவனை வணங்க ஆரம்பிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. நினைக்க நினைக்க ஆம்பிகுமாரனுக்கு ஆனந்தமாக இருந்தது.

 

எல்லைப் பகுதி வரை தன்னுடைய பெரும்படையுடன் நேரில் சென்று அலெக்ஸாண்டரை வரவேற்க ஆம்பிகுமாரன் நிச்சயித்திருந்தான். இரண்டு நாட்களில் ஆம்பிகுமாரன் கிளம்பப் போகிறான். அவன் பெரும்படையையும், அவன் நேரில் வந்ததையும் கண்டு அலெக்ஸாண்டர் ஆனந்தமடையப் போகிறான்.  ஆம்பிகுமாரன் இந்தக் கண்டத்திலிருந்து முதல் நட்புக்கரம் நீட்டியவன் என்பதையும், பிரமிக்கத்தக்க வரவேற்பு தந்தவன் என்பதையும் அலெக்ஸாண்டர் என்றும் மறந்துவிட முடியாது, மறந்துவிட மாட்டான் என்று நினைத்தவனாக  ஆம்பிகுமாரன் புன்னகைத்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்   


3 comments:

  1. Great man great thoughts; petty man petty thoughts. Nice characterization sir.

    ReplyDelete
  2. இரண்டு மாபெரும் எதிரிகளை வெறும் ஆசிரியராக இருக்கும் சாணக்கியர் வெல்லும் முறையை அறிய ஆவலாக உள்ளது...

    ReplyDelete
  3. எல்லாப் பிரம்மாண்டங்களும் ஏராளமான சிறிய காரியங்களின் தொகுப்பு தான். ஒவ்வொரு காரியமாக முடித்துக் கொண்டே வந்தால் எந்தப் பிரம்மாண்டமும் செய்து முடித்து வெற்றி காணமுடிந்த விஷயம் தான்.

    - தன்னம்பிக்கை வரிகள்...

    கவனத்தை சிறிய காரியங்களில் செலுத்தினாலே, பெரிய காரியங்கள் தானாகவே நடக்கும்...

    ReplyDelete