Monday, November 28, 2022

யாரோ ஒருவன்? 114


ன்வரும் அவன் சகாக்களும் குரியர் கம்பெனியில் வேலைக்குச் சென்று இரண்டு நாட்களாகி விட்டிருந்தன. எந்த சந்தேகப்படும் இடத்தையும் ஒரு நேரத்தில் ஒரு முறைக்கு மேல் உற்றுப் பார்ப்பதை அவர்கள் தவிர்த்ததால் இந்த இரண்டு நாட்களில் அவர்கள் நிச்சயமாகச் சந்தேகப்படும் இடங்களைக் கண்டுபிடித்திருக்கவில்லைஇது போன்ற உளவு வேலைகளில் அவசரப்படுவது கண்டிப்பாக தவறுகள் செய்வதில் முடியும் என்பதால் நரேந்திரனும் அவர்களை அவசரப்படுத்தவில்லை.

நரேந்திரன் அவர்களிடம் சொன்னான். “அஜீம் அகமது ஆரம்பத்தில் ஏழ்மையில் இருந்தவன் தான் என்றாலும் இப்போது செல்வச்செழிப்பில் தான் வாழ்கிறான். அவன் இப்போதெல்லாம் வசதிக்குறைவான வீடுகளிலும், சூழ்நிலைகளிலும் வாழ விரும்புவதில்லை என்று சொல்கிறார்கள். மேலும் இப்போது அவன் தனிமை விரும்பி. கும்பலான இடங்களை முடிந்த அளவு தவிர்ப்பவன். அதனால் மற்ற வீடுகளை விட்டுத் தள்ளியிருக்கும் பங்களாக்கள்வசதியான வீடுகளை அதிகம் பாருங்கள். ஆட்கள் போக்குவரத்து அதிகமிருக்காத வீடுகளைப் பாருங்கள். அவன் சம்பந்தப்பட்டிருக்கும் இயக்கத்திற்கு ஈரானில் பிரச்சினை அதிகமாகி வருகிறது என்று சொல்கிறார்கள். அங்கே நெருக்கடி அதிகமாவதால் அதைச் சமாளிக்க அவன் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவை விட்டுப் போகலாம் என்று எதிர்பார்க்கிறேன். இங்கே வந்ததற்கு எதையும் செய்யாமல் போக அவனுக்கு மனம் வராது. அவன் எதாவது செய்வதற்குள் நாம் அவனை எதாவது செய்தாக வேண்டும்...”

அவர்களுக்கு நிலவரம் புரிந்து சுறுசுறுப்பானார்கள்.


ரா தலைவர் நரேந்திரனுக்குத் தெரியாமல் இரவு நேரத்தில் ஒரு விசேஷக் கூட்டத்தை ரா தலைமைச் செயலகத்தில் கூட்டியிருந்தார். உயர் அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

“.... இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்னால் நம் அமைப்பில் உயர் அதிகாரியாக இருந்த மகேந்திரன் திடீரென்று தலைமறைவான போது ஆரம்பத்தில் அவர் அஜீம் அகமதைப் பிடிக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார், அதனால் தான் தலைமறைவாகச் செயல்படுகிறார் என்று நினைத்தோம். ஆனால் பிறகு அஜீம் அகமது வெளிநாட்டில் திடகாத்திரமாக இருக்கிறான் என்பது தெரிந்த போது தான் அவருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நம் அமைப்புக்கு வந்தது. அப்போதைய தலைவர் அவரைத் தேட எடுத்துக் கொண்ட முயற்சிகள் நமக்குப் பலன் அளிக்கவில்லை. காரணம் மகேந்திரனுக்கு உதவி அதிகாரியாக இருந்த சஞ்சய் ஷர்மா என்ற துரோகி என்று பிறகு தெரிந்த போது அப்போதைய தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொந்தளித்தார். ஆனால் சஞ்சய் ஷர்மாவின் மாமா ஜனார்தன் த்ரிவேதி அப்போது மத்திய மந்திரியாக இருந்தார், அவர் கட்சி தான் அப்போது ஆட்சியில் இருந்தது. அதனால் மேற்கொண்டு விசாரணை எதுவும் நடக்காமல் அப்போதைய அரசு பார்த்துக் கொண்டது. சஞ்சய் ஷர்மாவை ராஜினாமா செய்ய வைக்க மட்டுமே அப்போதைய தலைவரால் முடிந்தது. அதுவும் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கொடுத்து மிரட்டிய பிறகு தான் முடிந்தது.”

மகேந்திரன் இறந்திருக்க வேண்டும் என்று அப்போதே சந்தேகப்பட்டோம். ஆனால் அதற்கான தடயம், ஆதாரம் எதுவுமே கிடைக்காததால் அப்படியே கிடப்பில் போடப்பட்ட வழக்காக அது இருந்து விட்டது. ஒரு இராணுவ வீரன் தன் கடமைக்காலத்தில் இறந்து போனால் அவன் பிணத்தின் மீது தேசியக்கொடி வைக்கப்படுகிறது, அவன் வணங்கப்படுகிறான், கௌரவப்படுத்தப்படுகிறான். ஆனால் நம் போன்ற ரகசிய உளவு அமைப்புகளில் வேலை செய்யும் போது ஒருவன் இறந்து போனால் அது நாம் வெளிப்படுத்த முடியாத தனிப்பட்ட மரணமாகவே போய் விடுகிறது. ஒரு சர்வதேசத் தீவிரவாதி அரசியல்வாதிகளின் துணையோடு நம் உயர் அதிகாரியைக் கொன்று இங்கிருந்து தப்பித்துப் போயும் நம்மால் எதுவும் செய்ய முடியாத கையாலாகாத நிலைமை. அது குறித்து விசாரிக்க விடாமல் அரசியல் நெருக்கடியும் இருந்து கிடப்பில் போட்ட அந்த வழக்கை விசாரிக்க மகேந்திரனின் மகனே நம் அமைப்பில் வந்து சேர்ந்த போது எனக்குள்ளே எழுந்த ஒரு குற்ற உணர்ச்சியை என்னால் தாங்க முடியவில்லை நண்பர்களே.”

நம் அதிகாரி கொல்லப்பட்டிருகிறார் என்று நம்மால் யூகிக்க முடிந்தும், கொன்றவன் யாராக இருப்பான் என்று தெரிந்திருந்தும், உதவி செய்திருக்கக் கூடியவர்களை நமக்கு அடையாளம் தெரிந்தும் நாம் மேற்கொண்டு செய்யத் தவறி விட்ட வேலையை அவர் மகன் நரேந்திரன் கஷ்டப்பட்டு ஐபிஎஸ் படித்துத் தேர்வாகி, ரா அதிகாரியாக வரவும் பாடுபட்டு தேர்வாகி, தந்தையின் வழக்கைத் திரும்ப விசாரிக்க பிரதமரிடம் அனுமதி பெற்றும் என் முன்னால் வந்து நின்ற போது, நாம் செய்யத் தவற விட்ட வேலையை அந்த இளைஞனே வந்து செய்யும்படி விட்டு வைத்திருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி என்னை ஆட்கொண்டது. அவனுக்கு ஆட்சி மாற்றம் மிக சாதகமான அம்சமாக இருந்தது என்பதை மறுக்க முடியாவிட்டாலும், அவன் வந்திரா விட்டால் ஞாபகமாக இந்த வழக்கை நாம் யாரும் கண்டிப்பாக மீட்டு எடுத்திருக்க மாட்டோம் என்பதையும் என்னால் மறுக்க முடியவில்லை

நரேந்திரன் வழக்கமான சட்டபூர்வமான விசாரணையில் எதையும் நாம் கண்டுபிடித்து விட முடியாது என்பதைப் புரிந்துகொண்டு தன் வழியில் எல்லாவற்றையும் விசாரிப்பது என்று முடிவு செய்த போது நான் அதிகாரபூர்வமாக உனக்கு அனுமதி என்னாலும் வழங்க முடியாது, இதில் ஏதாவது பிரச்சினைகள் வந்தால் அதை நீயே சந்திக்க வேண்டி இருக்கும், ரா உனக்கு எந்த வகையிலும் உதவ முடியாது என்ற உண்மையையும் சொன்னேன். அதற்கும் சம்மதித்து அவன் வழியில் அதைக் கையாண்டான். உண்மைகளைத் தெரிந்து கொண்டான். சட்டத்தின் பிடியில் சிக்கியிருக்க வேண்டிய அவனைக் காப்பாற்ற இறைவனே ஒருவனை அனுப்பி அதிலும் அவன் நம் உதவியில்லாமலேயே தப்பித்துக் கொண்டான். நரேந்திரனின் வேகம் அஜீம் அகமதுவை மறுபடி இந்தியாவுக்கு வரவழைத்திருக்கிறது. இப்போது அஜீம் அகமது இந்தியாவில் இருக்கிறான்...”

நமக்கு அஜீம் அகமதை நன்றாகத் தெரியும். தனக்குச் சவால் விடுபவர்களை அவன் ரசிப்பதில்லை. அவர்களை அப்புறப்படுத்துவதில் வல்லவன் அவன். மகேந்திரனை அப்படியே செய்தவன். அவனுடைய வழக்கமான பாணியில் அவன் அடுத்ததாகச் செய்ய கண்டிப்பாக முயற்சி செய்யப்போவது நரேந்திரனை அப்புறப்படுத்துவதைத் தான். நண்பர்களே. நாம் நரேந்திரனின் தந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. அவரைக் கொன்றவர்களைப் பழி வாங்க முடியவில்லை. அந்த வேலையை நரேந்திரனே ஏற்றுக் கொண்டு தன்னால் முடிந்ததை எல்லாம் செய்து வருகிறான். இதுவரை நாம் அவனுக்கு எந்த வகையிலும் உதவவில்லை. ஆனால் இப்போதும் நாம் அவனுக்கு உதவவில்லை என்றால் நம்மையே நாம் மன்னிக்க முடியாது. நரேந்திரன் அஜீம் அகமதுவைப் பழி வாங்கும் முயற்சியில் செத்தாலும் பரவாயில்லை என்ற தீர்க்கமான முடிவுடன் தான் இருக்கிறான்.  அஜீம் அகமதுவின் இப்போதைய முழு இலக்கும் நரேந்திரனாகத் தான் இருப்பான். நரேந்திரன் தன்னை நெருங்கும் முன் அவனைக் கொன்றுவிட வேண்டும் என்ற வெறியோடு தான் இருப்பான். அறிவுக்கூர்மையில் அவனை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. முடிந்தால் நரேந்திரனை நெருங்கும் அவனைக் கொல்ல நாம் திட்டமிட வேண்டும். ஒருவேளை அவனைக் கொல்வது நம்மால் முடியாமல் போனாலும் நாம் நரேந்திரனின் பாதுகாப்புக்கு சிறு குறையும் இல்லாத முழு முயற்சிகளும் எல்லா விதங்களிலும் எடுக்க வேண்டும். இது அவன் தந்தைக்கு நாம் செய்திருக்க வேண்டிய ஒரு கடமை. அன்று அரசியல் சூழல் காரணமாகத் தவற விட்டு விட்டோம். இன்று மகனையாவது நாம் காப்பாற்ற வேண்டும். அவனைக் காப்பாற்றத் தவறினால் ரா தனது கௌரவத்தையும் காப்பாற்றத் தவறுவது போல் ஆகி விடும். எனவே இந்தக் கடமையை எப்படிச் செய்யப் போகிறோம் என்பதற்கு உங்களிடமிருந்து தெளிவான திட்டங்களை இப்போது நான் எதிர்பார்க்கிறேன்….”

அவரது உணர்வுபூர்வமான பேச்சு அங்கிருப்பவர்கள் ஒவ்வொருவரையும் மிகவும் பாதித்திருப்பது அவர்கள் முகங்களைப் பார்க்கையில் தெரிந்தது….

இரண்டு மணி நேரம் கழித்து கூட்டம் முடிவடையும் போது என்ன செய்வதென்ற முடிவை அவர்கள் தெளிவாக எட்டியிருந்தார்கள்.

    
(தொடரும்)
என்.கணேசன்
    



2 comments:

  1. சூப்பர்... அஜீம் அகமது தன்னுடைய இரண்டாவது திட்டத்தை நிறைவேற்ற ஆரம்பித்தால்... ரா அவனை தீர்த்துக்கட்ட தயார் நிலையில் உள்ளது,...

    ReplyDelete