Thursday, November 17, 2022

சாணக்கியன் 31

 

ற்றன் பாடலிபுத்திர ஆசிரியர் கோபாலனை அறிவான். அதனால் உள்ளூர் நபரைக் கண்காணிக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைத்தவனாக வேகமாக சாணக்கியரைப் பின் தொடர்ந்து போனான். நகர வாயிற்கதவைத் தாண்டி அவர் வெளியேறுவதைப் பார்த்து விட்டு ராக்ஷசர் மாளிகைக்குச் சென்றான். அவரிடம் அவன் கண்ட விவரங்களைச் சொன்னான்.

 

ஒற்றன் சொன்ன விஷயங்கள் தட்சசீல ஆச்சாரியரை மேலும் விசித்திர மனிதராக ராக்ஷசருக்கு அடையாளம் காட்டின. வெளியே வீசப்பட்ட மனிதர் இந்த அளவு அமைதியாக தரை மண்ணை நெற்றியில் பூசிக் கொண்டு, வித்தியாசமாக எதுவும் நடக்கவில்லை என்பது போல நடந்து கொண்டதும், பின் நகரை விட்டு வெளியேறியதும் அவருக்கு விசித்திரமாகவே தோன்றியது.  தட்சசீல ஆச்சாரியர் பாடலிபுத்திர ஆசிரியர் ஒருவரைப் பார்த்து விட்டு வேகமாகப் போனதும், அந்த ஆசிரியரும் முன்கூட்டியே அறிந்தவர் போல ஆச்சாரியர் போவதைக் கூர்ந்து பார்த்ததும் இருவரும் முன்பே அறிமுகமானவர்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்தவே உடனடியாக அந்த உள்ளூர் ஆசிரியரை அழைத்து வர காவலர்களை அனுப்பினார்.

 

பிரதம அமைச்சர் ராக்ஷசர் தங்களைச் சந்திக்க விரும்புகிறார்என்று காவலர்கள் வந்து சொன்ன போது கோபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை. மகதத்தில் மன்னருக்கு அடுத்தபடியான சக்தி வாய்ந்த மனிதரான ராக்ஷசர் அவரைச் சந்திக்க விரும்புவது நன்மையின் அறிகுறியாகவும் தெரியவில்லை. இந்தச் சாதாரண ஆசிரியனைச் சந்திக்க ராக்ஷசருக்கு என்ன காரணம் இருக்கும் என்று பதற்றத்துடன் யோசித்தபடியே கோபாலன் உடனே கிளம்பிப் போனார்.  

 

ராக்ஷசர் தன் முன் வந்து நின்ற ஆசிரியரை ஒரு குற்றவாளியை ஆராய்ந்து பார்ப்பது போல் கூர்ந்து பார்த்தார்.  கோபாலனின் தர்மசங்கட நெளியலை அவர் லட்சியம் செய்யவில்லை. பின் மெல்லக் கேட்டார். “தட்சசீல ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரை உங்களுக்கு எப்படித் தெரியும்?”

 

கோபாலன் திகைத்துப் போனார். ஒரு கணத்தில் எல்லாம் பிடிபடுவது போல் இருந்தது. இன்று பயணியர் விடுதியிலிருந்து குதிரையில் வேகமாகப் போன நபர் அவர் சந்தேகப்பட்டது போலவே நண்பன் விஷ்ணுவாகவே இருந்திருக்க வேண்டும். விஷ்ணு அவரைப் பார்த்ததாக அவருக்குத் தோன்றியது பிரமையல்ல. பார்த்து விட்டும் பார்க்காதது போல் விஷ்ணுகுப்தர் போகிறார் என்றால் கண்டிப்பாக எதாவது காரணம் இருக்க வேண்டும்.  அந்த சமயத்தில் யாராவது கண்காணித்துக் கொண்டிருந்திருக்கலாம். சந்திப்பது பிரச்னை ஆகலாம் என்று தவிர்த்திருக்கலாம்.  மேலும் யோசித்த போது குதிரையில் அமர்ந்தபடி ஒருவன் அவரையே பார்த்துக் கொண்டிருந்ததும் நினைவுக்கு வந்தது. அவன் மகத ஒற்றனாக இருந்திருக்கக்கூடும்.      

 

விஷ்ணுகுப்தரைத் தெரியாது என்று சொன்னால் என்ன என்று ஒரு கணம் கோபாலனுக்குத் தோன்றினாலும் அது ஆபத்து என்று உடனே புரிந்தது. ராக்ஷசர் விஷ்ணுகுப்தரைத் தெரியுமா என்று கேட்கவில்லை. எப்படித் தெரியும் என்று தான் கேட்கிறார். ஆக தெரியாது என்று சொன்னால் தான் ஆபத்து என்று உணர்ந்தவராக கோபாலன் மெல்லச் சொன்னார். “நாங்கள் இருவரும் ஒரே குருகுலத்தில் படித்தவர்கள்

 

ராக்ஷசர் பார்வையில் கூர்மை கூடியது. ”ந்த குருகுலத்தில்?”

 

”பாடலிபுத்திர குருகுலத்தில் தான்”

 

ராக்‌ஷசர் உள்ளுக்குள் திகைத்தாலும் வெளிப்பார்வைக்குத் தன் திகைப்பைச் சிறிதும் காட்டிக் கொள்ளவில்லை. அடுத்த கேள்வியை அமைதியாகக் கேட்டார். “அவர் தந்தை யார்?”

 

“சாணக்”

 

அப்படியானால் சபதமிட்ட போது சாணக்கின் மகன் என்று விஷ்ணுகுப்தர் சொன்னது பைத்தியம் முற்றி அல்ல.... ராக்‌ஷசர் சிறிது நேரம் பேச்சிழந்தார். சாணக் சிறைப்பிடிக்கப்பட்ட சிறிது காலத்தில் அவர் மனைவி இறந்து, சிறுவனான மகன் ஊரை விட்டுச் சென்று விட்ட கதையை அவரும் கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால் அந்த மகன் தான் ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் என்ற உண்மை இப்போது தான் தெரிகிறது.... யோசித்துப் பார்த்தால் விஷ்ணுகுப்தர் யாராகவே இருந்தாலும் தனியொரு மனிதனை எண்ணி பயப்படக் காரணம் இல்லை. ஆனால் இனம் தெரியாத ஏதோ ஒன்று ராக்‌ஷசருக்கு அடையாளம் தெரியாத ஒரு நெருடலை ஏற்படுத்த ஆரம்பித்தது. அந்த மனிதரின் அறிவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார். அறிவோடு கூடிய அமைதியைக் கண்கூடாகவே பார்த்திருக்கிறார். ஆழத்திலிருந்து வெளிப்பட்ட வெறுப்பையும் கோபத்தையும் கூடப் பார்த்திருக்கிறார். தனி ஒரு மனிதனின் அறிவு, அமைதி, வெறுப்பு, கோபம் எல்லாம் மிக வலிமையான ராஜ்ஜியமான மகதத்தையும். தனந்ந்தனையும் இம்மியளவும் பாதிக்க வாய்ப்பே இல்லை….. இருந்தாலும்…..

 

ராக்‌ஷசர் எண்ண ஓட்டத்தை நிறுத்திக் கொண்டு கேட்டார். “நீங்களும் விஷ்ணுகுப்தரும் நெருங்கிய நண்பர்களா?”

 

கோபாலன் இந்தக் கேள்வியில் ஆபத்தை உணர்ந்தார்.  சென்ற முறை இங்கு விஷ்ணுகுப்தர் வந்திருந்த போது மறுநாள் அரசவையில் நடந்த அறிஞர்களின் சிறப்புக் கூட்டத்திற்குச் செல்லவிருப்பதாகச் சொன்னதும், கோபாலன் மறுநாளே வெளியூர் சென்றுவிட்ட போதிலும், அவருடைய சக ஆசிரியர் ஒருவர் மூலமாக அந்தச் சிறப்புக் கூட்டத்தில் நடந்ததை அறிந்ததும் நினைவுக்கு வந்தது. பாடலிபுத்திரத்தில் தனநந்தனை மனதார மதிப்பவர்களும், நேசிப்பவர்களும் அரிதிலும் அரிது. அதனால் விஷ்ணுகுப்தர் கோபாலனின் நண்பர் என்பதை அறியாமல் அந்த சக ஆசிரியர் தட்சசீலத்தில் இருந்து வந்த விஷ்ணுகுப்தர் என்ற ஆசிரியர் தனநந்தனிடம் ‘காரமாக’ப் பேசியதை வரிக்கு வரி சொல்லி குதூகலப்பட்டது இப்போதும் கோபாலனுக்கு நினைவு இருக்கிறது. இந்த முறை வந்து விஷ்ணு என்ன செய்து விட்டுப் போயிருக்கிறானோ தெரியவில்லை. பிரதம அமைச்சரின் இறுக்கமான முகத்தைப் பார்த்தால் அது நல்லதாக இருக்கவும் வாய்ப்பில்லை. அதனால் தான் நண்பனை பார்த்தும்,  பேசி நட்பை வெளிப்படுத்தி நண்பனுக்குப் பிரச்னை ஏற்படுத்த வேண்டாம் என்று எண்ணிப் போயிருக்க வேண்டும் என்பது கோபாலனுக்கு உறுதியாகியது. அதனால் கோபாலன் தயக்கத்துடன் சொன்னார். “சிறு வயதில் நண்பர்கள்”

 

ராட்ஷசர் உடனே கேட்டார். “அப்படியானால் இப்போது நீங்கள் இருவரும் நண்பர்கள் இல்லையா?”    

 

கோபாலன் சொன்னார். “சிறுவயதில் இங்கிருந்து விஷ்ணு போன பிறகு எங்களுக்குள் இருந்த தொடர்பு போய் விட்டது.”

 

ராட்ஷசர் அதை முழுவதும் நம்ப முடியாதவர் போல கோபாலனைப் பார்த்தார். கோபாலன் இதற்குள் என்ன சொல்வது என்று மனதில் தயார்ப்படுத்திக் கொண்டிருந்ததால் தொடர்ந்து சொன்னார். ”சுமார் பத்து வருடங்களுக்கு முன் பாடலிபுத்திரத்தில் மறுபடியும் பார்த்தேன். முதலில் அடையாளம் தெரியவில்லை. அவரும் என்னைத் தெரிந்தது போலக் காட்டிக் கொள்ளவில்லை. நானாக சந்தேகம் கொண்டு கேட்டேன். பிறகு தான் மெல்ல ஒப்புக் கொண்டார். தட்சசீலத்தில் ஆசிரியராக இருப்பதாகவும், அறிஞர்களின் சிறப்புக் கூட்டத்திற்கு வந்திருப்பதாகவும் சொன்னார். வீட்டிற்கு அழைத்தும் அவர் வரவில்லை. புகழ்பெற்ற தட்சசீல கல்விக்கூடத்தில் பிரபலமான ஆசிரியராக இருப்பதால் என்னைப் போன்ற சிறியவனிடம் நட்பு பாராட்டுவதோ, அடியவன் வீட்டுக்கு வருவதோ அவருக்குப் பிடிக்கவில்லை என்று புரிந்து கொண்டேன். அந்த முறை இங்கிருந்து போகும் போது கூடச் சொல்லிக் கொண்டு போகவில்லை. இப்போதும் சற்று முன் பயணியர் விடுதி முன்னால் அவரைப் போன்ற தோற்றமுள்ள ஒருவர் குதிரையேறிப் போவதைப் பார்த்தேன். ஆனால் அவரா என்று தெரியவில்லை. அவராக இல்லாமலும் இருக்கலாம். சென்ற முறையும் நானாகப் பேசியதால் தான் அவர் பேசினார். இந்த முறை அவர் என்னைப் பார்த்தது போல் இருந்தது. ஆனாலும் நின்று பேசிவிட்டுப் போகவில்லை. அதனால் நெருங்கிய நண்பர்கள் என்று எங்களைச் சொல்வதற்கில்லை.”

 

ராக்‌ஷசருக்கு கோபாலன் சொல்வதில் எதையும் பொய் என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. சென்ற முறையும் அரசவை நிகழ்ச்சிக்குப் பிறகு சிறிது நேரத்திலிருந்து விஷ்ணுகுப்தரை ஒற்றன் பின் தொடர்ந்து போயிருக்கிறான். அப்போதும் அவர் இந்த ஆளைச் சந்தித்துப் பேசியதை ஒற்றன் பார்க்கவில்லை. இந்த முறையும் விஷ்ணுகுப்தர் பாடலிபுத்திரம் நுழைந்த கணத்திலிருந்து ஒற்றன் அவரைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். இப்போதும் அது நிகழவில்லை. விஷ்ணுகுப்தர் கோபாலனைப் பார்த்தது போலிருந்தது, ஆனால் பேசாமல் வேகமாகப் போய் விட்டார் என்பதை ஒற்றனும் சொல்லியிருக்கிறான்.... அதனால் இவர் சொல்வதெல்லாம் சரிதானாக இருக்க வேண்டும்... இந்த ஆளை அழைத்துப் பேசியதில் விஷ்ணுகுப்தர் பாடலிபுத்திரத்திற்குப் புதியவர் அல்ல என்பதும், சாணக்கின் மகன் என்பதும் உறுதியாகத் தெரிந்து விட்டது.

 

ராக்‌ஷசர் கோபாலனிடம் சொன்னார். ”நீங்கள் போகலாம்”

 

கோபாலன் தயக்கத்துடன் கேட்டார். “நீங்கள் விஷ்ணுகுப்தரைப் பற்றி ஏன் விசாரித்தீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா பிரதம அமைச்சரே?”

 

ராக்‌ஷசர் கடுத்த முகத்துடன் சொன்னார். “அது அரசாங்க காரியம். சொல்வதற்கில்லை”

 

கோபாலன் அதற்கு மேல் எதுவும் பேசாமல்  ராக்‌ஷசரை வணங்கி விட்டு வெளியேறினார்.  அவர் சென்ற பிறகு ராக்‌ஷசர் கண்களை மூடி யோசித்தார்.  ‘மன்னர் தனநந்தனிடம் இதைத் தெரிவிப்பதா வேண்டாமா?”

 

(தொடரும்)

என்.கணேசன்   

6 comments:

  1. As usual going very interesting. I'd like to know the reaction of Dananandan.

    ReplyDelete
    Replies
    1. Vimala SivasubramaniNovember 17, 2022 at 7:35 PM

      He is a man of arrogance Arjun Sir. So he won't bother about this..

      Delete
  2. Sir, is this novel, a friction or actual historical account of what happened or a mix? I am asking this as I am interested to know facts about great Chanakya. Thanks

    ReplyDelete
    Replies
    1. Chanakya's vow and his making Chandragupta Magadha King are facts. Alexander's invasion at that time, his battles and his return from India are also facts. Rest are fiction.

      Delete
    2. நல்ல முயற்சி.நல்ல படைப்பு.

      Delete
  3. விஸ்ணு நண்பனுக்கு பிரச்சினை ஏற்படும் என்று கண்டுகொள்ளாமல் போனதும்... அதனை புரிந்து கொண்டு கோபாலன் செயல்பட்ட விதமும் அற்புதம்....

    ReplyDelete