Monday, October 24, 2022

யாரோ ஒருவன்? 108

(தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி போனஸாக அடுத்த அத்தியாயம் இன்று மாலையே அப்டேட் ஆகும்)

ஜீம் அகமது பீம்சிங்கை மிகத் தைரியமானவனாக எண்ணியிருந்தான். ஆனால் எந்த ஆபத்தான இடத்திற்கும் சென்று திருடும் துணிச்சலும் சாமர்த்தியமும் இருக்கும் பீம்சிங், பாம்புகள் கடிக்காது என்று சுவாமிஜி உத்திரவாதம் தந்தாலும் கூட அந்தக் காட்டுக் கோயிலில் பாம்புகள் மத்தியில் போக இந்த அளவு பயப்படுவான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. சுவாமிஜி பீம்சிங்கைப் பற்றி அவன் எண்ணியவுடனேயே அவனே பொருத்தமான ஆள் என்று கூடச் சொல்லி இருந்ததால் இனி என்ன செய்வது என்ற முடிவை எடுக்க அவரிடமே கேட்கும்படி ஜனார்தன் த்ரிவேதிக்குப் போன் செய்து சொன்னான்.

ஜனார்தன் த்ரிவேதியின் மேனேஜர் காளிங்க சுவாமியின் சீடர்களுக்குப் போன் செய்ய ஆரம்பித்தான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பின் ஒரு சீடனைத் தொடர்பு கொள்ள முடிந்தது. அவன் சுவாமிஜியைக் கேட்டு விட்டுச் சொன்னான். “பீம்சிங் வரும் போது இந்தக் காளிக் கோயிலில் ஒரு பாம்பையும் பார்க்க முடியாது என்று சுவாமிஜி உறுதியளிக்கிறார். அப்படி அவன் தூரத்தில் பார்த்தால் கூட அவன் கோயிலுக்குள் நுழைய வேண்டியதில்லை என்று சுவாமிஜி சொல்கிறார்

ஜனார்தன் த்ரிவேதி ஆச்சரியப்பட்டார். அவருக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து அந்தக் காளிக் கோயில் பாம்புகளால் சூழப்படாமல் இருந்ததேயில்லை. அவர் மந்திரியாக இருந்த போது காட்டு இலாகா அதிகாரிகள் அந்தக் கோயிலின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவு வரை தள்ளியே இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் காளிங்க சுவாமி முதல் முறையாக அவருக்காக இப்படிச் செய்யச் சம்மதித்திருப்பது அவரது அருளாகவே தோன்றியது. போனிலேயே தன் நன்றிகளை அந்தச் சீடனிடம் உணர்ச்சிவசப்பட்டுச் சொன்ன அவர் சுவாமிஜி சொன்ன தகவலை அஜீம் அகமதிடம் தெரிவித்தார்.

அதைக் கேட்டு அஜீம் அகமதும் திருப்தி அடைந்தான். இதை விட சுவாமிஜி இறங்கி வர முடியாது என்று அவனுக்குத் தோன்றியது. சுவாமிஜி சொன்னதை பீம்சிங்கிடம் தெரிவித்த போது தனக்குத் தோன்றியதையும் கூட அவன் சொன்னான்.   

பீம்சிங் யோசித்து விட்டுச் சம்மதித்தான். ஆனால் அந்த வேலைக்கு அவன் பத்து லட்சம் ரூபாய் கேட்டான். முன்பணம் மூன்று லட்சமும் பொருளைத் தரும் போது ஏழு லட்சமும் தர வேண்டும் என்று சொன்னான்.

அஜீம் அகமது சம்மதித்தான். ஜனார்தன் த்ரிவேதிக்குப் பணம் ஒரு பிரச்னையே அல்ல!


ல்யாண் மிகவும் கவலையாக இருப்பதை சரத் காலையிலேயே கவனித்தான். எப்போதுமே சரியான நேரத்தில் ஆபிசுக்குள் நுழைபவன் இன்று தாமதமாகத் தான் வந்தான். வந்ததிலிருந்தே எல்லோரிடமும் எரிந்து விழுந்தான். ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்தது அங்கே ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பப்படவுள்ளதும், கம்பெனியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்த திறமை வாய்ந்த மூன்று பேர் ராஜினாமா செய்ததும் கம்பெனி நிலைமையைப் பரிதாபமாக ஆக்கி உள்ளது. அதனால் தான் கல்யாண் தளர்ந்து போயிருக்கிறான் என்பது சரத்துக்குப் புரிந்தது. கம்பெனி ஆரம்பித்த காலத்திலிருந்து போன மாதம் வரை கம்பெனி வளர்ச்சி ஏறுமுகமாகவும் வேகமாகவும் தான் இருந்தது. முதல் முறையாக வந்திருக்கும் இந்தப் பெரிய பின்னடைவு அவர்கள் சிறிதும் எதிர்பாராதது. எப்போதும் அமைதியிழக்காத கல்யாணையும் அமைதி இழக்க வைத்திருக்கிறது.

மதிய உணவை இருவரும் எப்போதும் சேர்ந்து தான் சாப்பிடுவார்கள். அந்த நேரத்தில் சரத் மெல்லச் சொன்னான். “எத்தனை பெரிய ஆள்களுக்கும் பிரச்சினையான காலம் இருக்கத்தான் செய்யுது. நாம இத்தனை காலம் அதை அனுபவிக்கலைங்கறதால நமக்கு இது ரொம்ப பெருசா தெரியுது. எல்லாம் சரியாயிடும் கல்யாண். “

இதுநாள் வரை கல்யாண் தான் சரத்துக்குத் தைரியமூட்டுபவனாக இருந்தான். முதல் முறையாக இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. கல்யாண் சூனியத்தைப் பார்த்தபடி தலையசைத்தான்.

அந்த நாகரத்தினக்கல் திரும்பக் கிடைக்கும் வரை எதுவும் சரியாகும் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லை. அப்பா சொன்னாரென்று அந்த விஷப்பரிட்சையில் அவன் இறங்காமல் இருந்திருக்கலாம். வேறு எவனாவது இப்படிச் செய்திருந்தால் பெரிய ஆள்களைப் பிடித்து மிரட்டி அதைத் திரும்ப வாங்கியிருக்கலாம். ஆனால் இப்போது நாகராஜ் அவனை விட அதிகார மையத்திற்கு அதிக நெருக்கமானவன். கல்யாணுக்கு மாநில அளவில் ஓரிருவரைத் தெரியும் என்றால் நாகராஜ் நாடு முழுதும் ஆட்களை அறிந்தவனாக இருக்கிறான். அவனுக்கு அடுத்தவர்கள் தயவு கூடத் தேவையில்லை. அடுத்தவர்களுக்குத் தான் அவன் தயவு தேவையாக இருக்கிறது. அதனால் மிரட்டும் வேலைக்குப் போனால் அவன் மறைமுகமாய்ச் சொன்னபடி உயிர்கூட மிஞ்சாது.  அதற்குப் பதிலாக தெரியாமல் தவறு செய்து விட்டோம் என்று அவனிடம் போய் கெஞ்சினால் அவன் அதைத் திரும்பக் கொடுப்பானா? அவனுக்கு அப்படிச் செய்வதற்கு சுயகௌரவம் இடம் தராது என்றாலும் சொன்னால் வேலாயுதம் போய் நாகராஜின் காலில் விழுவார். மன்னித்தேன் என்று சொல்லி அந்த நாகரத்தினக்கல்லைத் திரும்பத் தராதவரை அவன் காலை விட்டு அவர் எழுந்திருக்கவும் மாட்டார். அவ்வளவு வயதானவர் அவன் காலில் விழுவது நாகராஜுக்கும் தர்மசங்கடமாக இருக்கலாம்… அவன் திரும்ப அந்த நாகரத்தினத்தைத் தரவும் வாய்ப்பிருக்கிறது…

சரத்துக்கு நண்பனின் கவனம் வேறெங்கேயோ இருக்கிறது என்பது புரிந்தது. இப்போதிருக்கும் கம்பெனிப் பிரச்சினைகள் மூன்று நாட்களாகவே இருக்கின்றன. நேற்று மாலை வரை கூட கல்யாண் இவ்வளவு மனம் தளர்ந்து போயிருக்கவில்லை. இப்போது இப்படி இருக்கிறான் என்றால் கூடுதலாக எதாவது பிரச்சினை முளைத்திருக்கிறதோ?

சரத் மெல்லக் கேட்டான். “புதுசா எதாவது பிரச்சனையா?”

சரத்திடம் அந்த நாகரத்தினக்கல் காணாமல் போனதைத் தெரிவிக்கலாம் என்று கல்யாண் முடிவு செய்தான். ஏனென்றால் சரத் அந்த நாகரத்தினக்கல்லைப் பற்றி அறிவான். சொல்வது என்று முடிவது செய்த பிறகும் கல்யாண் நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. மற்றவர்களிடம் உண்மையைப் பகுதி பகுதியாக மட்டும் சொல்லும் பழக்கமிருப்பவர்களுக்கு இந்தச் சிக்கல் எப்போதும் உண்டு. யாரிடம் எதை மட்டும் சொல்லி இருக்கிறோம் என்று நினைவுபடுத்திக் கொண்டு அது சம்பந்தமானதை மட்டும் தான் மேற்கொண்டு சொல்ல வேண்டும். இவனிடம் நாகராஜிடம் இருக்கும் மற்ற நாகரத்தினக்கல்களைப் பற்றியோ, விசேஷ நாகரத்தினத்தைப் பற்றியோ, பாம்பாட்டியைப் பற்றியோ அவன் சொல்லி இருக்கவில்லை… மணி கோஷ்டியை வைத்து அந்த விசேஷ நாகரத்தினத்தைத் திருட முயற்சித்து அந்த முயற்சியில் தன் நாகரத்தினத்தை இழந்ததையும் அவனால் சொல்ல முடியாது…

அதை எல்லாம் ஞாபகப்படுத்திக் கொண்டு கல்யாண் சொன்னான். ”என் கிட்ட இருந்த அந்த நாகரத்தினக்கல் காணாமல் போயிடுச்சு சரத். அது, எப்படின்னு தான் தெரியல.”

சரத் அதிர்ச்சியடைந்தான். “எப்ப இது நடந்துச்சு?”

கல்யாண் உண்மையைச் சொல்ல முடியாத நிலையில் இருந்ததால் இயல்பாகப் பாதிப் பொய்யும், பாதி உண்மையும் கலந்து சொன்னான். “அதுவும் தெரியலை. இந்தப் பிரச்சினகள் எல்லாம் வர ஆரம்பிச்சதால அப்பா நேத்து என் கிட்ட அந்த நாகரத்தினக்கல்லை எடுத்து பூஜை பண்ணி திரும்ப உள்ளே வை. சரியாயிடும்னு சொன்னார். சரின்னு எடுக்கப் போறேன். பீரோல இல்லை. வீடு பூராவும் தேடியும் பார்த்துட்டேன். எங்கேயும் இல்லை”

சரத் திகைப்புடன் நண்பனைப் பார்த்தான். “உன் வீட்டு வேலைக்காரி எதாவது…?”

“முதலாவது அவளுக்கு அதோட மதிப்பு தெரியாது. அதுமட்டுமில்லாம அவள் கைக்கு சாவி கிடைக்கவும் வாய்ப்பில்லை. எத்தனையோ தடவ மேகலா மறதில எங்கெங்கேயோ வெச்சிடற நகையை எல்லாம் கூட அந்த வேலைக்காரி எடுத்துக் குடுத்து ஜாக்கிரதையா இருங்கம்மான்னு உரிமையா திட்டக்கூடியவ. அதனால் அவ எடுத்திருக்க கண்டிப்பா வாய்ப்பில்லை.  எனக்கு சந்தேகம் பக்கத்து வீட்டுக்கார நாகராஜ் மேல தான்…”

”அவனுக்கு தான் ஏற்கெனவே எக்கச்சக்கமா காசிருக்கு. அவன் கிட்ட பணம் கொண்டு வந்து கொட்ட ஆள்களும் இருக்காங்க. அபூர்வ சக்திகளும் இருக்கு. அவன் எதுக்கு இதை எடுக்கப் போறான்?” சரத் குழப்பத்துடன் கேட்டான்.

’இவனுக்கு சமயத்துல மூளை நல்லாவே வேலை செய்யுது’ என்று மனதில் நினைத்துக் கொண்ட கல்யாண் மெல்லச் சொன்னான். “அவனுக்கு நம்ம மேலே எதோ பகை இருக்கற மாதிரி எனக்குத் தோணுது சரத். யோசிச்சுப் பார். அவன் என் பக்கத்து வீட்டுக்கு வந்த பிறகு தான் நமக்கு மொட்டைக் கடுதாசி வந்துச்சு… நினைவிருக்கா?”

(தொடரும்)
என்.கணேசன்



  

7 comments:

  1. Thanks for your early update and thanks for the announcement of bonus every year. Wish you happy diwali sir.

    ReplyDelete
  2. நன்றி சார். தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. Happy Deepavali Mr. Ganesan & family. You are a master story teller and a gifted soul. Requesting to write some series on real spiritual topics like expanding human consciousness. You have the ability to simplify even complex subjects. That will be very useful & helpful to current and future generation. Thanks

    ReplyDelete
  4. காளிங்க சுவாமி இவ்வளவு இறங்கி வரக் காரணம் அவருடைய சுயநலமும் இதில் உண்டு...இது அஜீம் அகமது அறிவுக்கு எப்போது எட்டுமோ...

    ReplyDelete