Monday, October 10, 2022

யாரோ ஒருவன்? 106


ல்யாணுக்கு யோசிக்க சிறிது நேரம் தேவைப்பட்டது. அவன் கார்க்கதவைச் சாத்தி விட்டு மறுபடி வீட்டுக்குள்ளே போனான். வேலாயுதம் மகனைப் பின் தொடர்ந்து வந்தார். இருவரும் வேலாயுதத்தின் அறைக்குள் நுழைந்து கொள்ள மேகலா அதைப் பார்த்து விட்டு மகளிடம் அங்கலாய்த்தாள். “வரவர உங்கப்பாவுக்கும் தாத்தாவுக்கும் பைத்தியம் பிடிச்சு அது அதிகமாயிட்டே போற மாதிரி தான் எனக்குத் தோணுது. ஒரு சின்ன ரத்தினக்கல் காணாம போனதுக்கு ரெண்டு பேரும் பண்ற கூத்து தாங்கல. பாரு. இப்ப தான் உங்கப்பா கம்பெனிக்கு கிளம்பினாரு. போனவர் திரும்ப மனசு மாறி உள்ளே வந்து உன் தாத்தா ரூம்ல உட்கார்ந்து திரும்பவும் டிஸ்கஸ் பண்றாங்க.”

தர்ஷினி சொன்னாள். “தாத்தா. பக்கத்து வீட்டுக்கு நாகராஜ் அங்கிள் குடிவந்த பிறகே பைத்தியம் மாதிரி ஆயிட்டார். அப்பா அந்த ரத்தினக்கல் காணாம போனபிறகு அந்த மாதிரியாயிட்டார். அந்த ரத்தினக்கல் என்ன விலை இருக்கும்மா

அதோட சைஸ் பாத்தா அதிக பட்சமாவே பத்தாயிரத்துக்குள்ளே தான் இருக்கும். உங்கப்பாக்கு அதுல ஏதோ செண்டிமெண்ட். அதனால தான் அது காணாம போனது அவருக்குத் தாங்கலஎன்றாள் மேகலா.

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கையில் வேலாயுதம் திரும்பவும் மகனிடம் கேட்டுக் கொண்டிருந்தார். ”அன்னைக்கு என்ன ஆயிருக்கும்னு நீ நினைக்கிறாய்டா

கல்யாண் அன்று நடந்ததாக மணி சொன்னதை நினைவுபடுத்திப் பார்த்தான். உங்க பக்கத்து வீட்டுக் கேட்டை நெருங்கினது தான் தெரியும். பின்னே எதுவும் எங்களுக்கு ஞாபகம் இல்லை.... எங்களுக்கு ஞாபகம் வந்தப்பவும் நாங்க அந்த வீட்டு கேட் முன்னாடியே நின்னுட்டிருந்தோம். மணி மூனே முக்கால் ஆகி இருந்துச்சு... எங்க யாருக்குமே என்ன நடந்துச்சுன்னு தெரியல. ஒரே நேரத்துல அத்தனை பேருக்கும் நினைவு போயிடுச்சு. ஒரே நேரத்துல அத்தனை பேருக்கும் நினைவு வந்துச்சு. இடைப்பட்ட ஒன்னே முக்கால் நேரமும் என்ன நடந்துச்சுன்னு யாருக்கும் தெரியல. எவ்வளவோ யோசிச்சும் நினைவுக்கு வரல...”

ஒன்னே முக்கால் மணி நேரமும் அந்த கேட் முன்னாடியே நின்னுகிட்டா இருந்தீங்க?”

அது தான் தெரியலை.... ஆனா நாங்க எங்க வேலையை ஆரம்பிச்சு முடிச்சிருந்தா எப்படி களைப்பை உணர்வோமோ அந்தக் களைப்பு எங்க எல்லாருக்குமே இருந்துச்சு. எங்க இதயத்துடிப்பு கூட கூடுதலா இருந்துச்சு....”

இப்போது எதிர்வீட்டுக்காரர் சொல்கிறார்உங்கள் வீட்டுக்குள்ளிருந்து ஆட்கள் வெளியே வந்து பக்கத்து வீட்டுக்குள் போனார்கள் என்று”. அப்படியானால் அவர்கள் இந்த வீட்டிலிருந்து அந்த நாகரத்தினக்கல்லைத் திருடி பக்கத்து வீட்டுக்குப் போய் கொடுத்திருக்கிறார்களா? நாகராஜ் அவர்களை வசியம் செய்து அப்படி செய்ய வைத்திருக்கிறானா?... அவர்களை மட்டுமல்ல. வேலாயுதம், கல்யாண், வீட்டாள்கள் எல்லோரையும் என்னவோ செய்து உறங்கச் செய்திருக்கிறான்.... நினைக்க நினைக்க கால்களின் கீழே இருக்கும் நிலம் வெடித்துப் படுகுழியில் சரிந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு கல்யாணுக்கு ஏற்பட்டது. என்ன நடந்திருக்கலாம் என்பதை அவன் வேலாயுதத்திடம் சொல்ல அவர் தலையில் இடி விழுந்தது போல் உணர்ந்து பலவீனமான குரலில் கேட்டார். “என்னடா சொல்றே?”


ரேந்திரன் ரா தலைவரிடம் தன் கோயமுத்தூர் அனுபவங்களை விரிவாகச் சொன்னான். ரா தலைவர் நாகராஜ் பற்றி அவன் சொன்னதை எல்லாம் கேட்டு பிரமித்துப் போனார். அவர் அவனிடம் கேட்டார். “அவர் அங்கிருந்து கொண்டே இங்கே இந்த அற்புதங்களை நிகழ்த்த முடிந்தது அந்த விசேஷ நாகரத்தினத்தினால் தான் என்று நினைக்கிறாயா?”

“அப்படித் தான் தோன்றுகிறது. ஏற்கெனவே அவருக்கிருந்த சக்திகள் மற்ற நாகரத்தினங்களால் அவருக்குக் கிடைத்திருக்கலாம் என்றாலும் இந்த விசேஷ நாகரத்தினம் கடவுளைப் போன்ற சக்திகளைக் கொடுக்கும் என்று அந்த பாம்பாட்டி சொன்னான். அதை நிரூபிக்கிற மாதிரி தான் நடந்திருக்கிறது”

”அவர் அந்த வேலையைச் செய்யாமல் இருந்திருந்தால் ஜனார்தன் த்ரிவேதி இன்று இந்தியா முழுவதும் பேசும் நபராக உன்னைப் பிரபலமடையச் செய்திருப்பார். பாராளுமன்றத்தில் கூட நீ பேசப்பட்டிருப்பாய். ராவின் பெயரும் பெரிய விமர்சனத்திற்குள்ளாகி இருக்கும். அதனால் நீ மட்டுமல்ல, ராவும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது..... அவர் சொல்வதைப் பார்த்தால் அஜீம் அகமது இப்போது இந்தியாவில் இருக்கிறான்”

“ஆமாம் சார். மதன்லால், சஞ்சய் ஷர்மா இருவரையும் கண்டுபிடித்திருக்கும் அறிவுகூர்மையில் அவன் தான் தெரிகிறான். அதை அவன் வெளிநாட்டிலிருந்தே கூடச் செய்திருக்கலாம் என்றாலும், அவன் இங்கே வந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும் இங்கே வந்து சேர்ந்திருக்கிறான். அது என் பாக்கியம்”

அதைச் சொல்லும் போது அவன் கண்கள் மின்னின. அஜீம் அகமதின் வருகை அவனுக்குள் பெரியதொரு எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அவரால் உணர முடிந்தது. தந்தையின் மரணக்கணக்கைத் தீர்க்கும் பெரியதொரு வாய்ப்பு அவனுக்குக் கிடைத்திருக்கிறது என்று அவன் நினைக்கிறான் என்பது புரிந்தது.

ரா தலைவர் சொன்னார். “அவன் சாதாரணமானவன் அல்ல. அவனிடம் நீ மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”

நரேந்திரன் அமைதியாகச் சொன்னான். “தெரியும் சார். அதனால் தான் அவன் இங்கே வந்திருப்பது தெரிந்தும் இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் பயன்படுத்தும் நம் வழக்கமான வழிமுறைகள் எதையும் முடுக்கி விடவில்லை. ஜனார்தன் த்ரிவேதியைக் கூடக் கண்காணிப்பதை நிறுத்தி விட்டேன். இங்கே அபாயம் எதுவுமில்லை என்பதை அவன் உணரட்டும் என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்திருக்கிறேன். அவனுக்கு மிக நெருக்கமான ஆட்களின் நடமாட்டம் டெல்லியில் அதிகரித்திருக்கிறது. அதைக் கவனித்த பிறகும் அந்த ஆட்களைக் கூடப் பின் தொடர வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன்.  இந்த முறை அவனைத் தப்பவிடக்கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்.”

ரா தலைவர் மெல்லக் கேட்டார். “நீ நாகராஜை உதவி கேட்டிருந்தால் அஜீம் அகமதைப் பிடித்துக் கொடுக்க அவர் உனக்கு உதவியிருக்க மாட்டாரா?”

நரேந்திரன் சொன்னான். “அது நான் வாங்கும் சம்பளத்திற்கு அவரை வேலை பார்க்கச் சொல்வது போல ஆகி விடுமல்லவா சார்”

ரா தலைவர் புன்னகைத்தார். அவன் சொன்ன விதம் அவரைக் கவர்ந்தது. நரேந்திரன் சொன்னான். ”அவர்கள் அந்த ஃபேக்டரியைக் கண்காணிக்க ஆரம்பித்து விட்ட பிறகு நான் என்ன செய்தாலும், செய்யாமல் விட்டாலும் எனக்குப் பிரச்சினை தான் என்ற நிலை இருந்தது. என் வாழ்க்கை லட்சியமே நிறைவேறாமல் போய் விடும், வேலை போய் விடும், எதிரிகள் சுலபமாக என்னை அழித்து விடுவார்கள் என்ற நிலைமை இருந்த போது வேறு வழி தெரியாமல், அவர் உதவுவாரா இல்லையா என்ற நிச்சயம் கூட இல்லாமல், அவரிடம் உதவி கேட்டேன். அதில் நியாயம் இருந்தது. இனி நான் பார்த்துக் கொள்வேன் சார்.”

ரா தலைவர் சொன்னார். “நீ சொல்வதும் சரி தான். இனி இது நம் வேலை. அஜீம் அகமது பிடிபடுவது நமக்கு முக்கியம். உன் அப்பாவைக் கொன்றது மூலம் ’ரா’வுக்கே அவன் சவால் விட்டிருக்கிறான்.  அந்த சவாலை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். எத்தனை ஆட்கள் உனக்கு வேண்டுமானாலும் சொல். என் தரப்பிலிருந்து என்ன உதவி வேண்டுமானாலும் சொல். அவன் இந்த முறை இங்கேயிருந்து தப்பி விடக்கூடாது என்பது உன் இலக்கு மட்டுமல்ல. ரா வின் இலக்கும் தான் அது.”

(தொடரும்)
என்.கணேசன்  

பரபரப்பான இந்த நாவலை வாங்கிப்படிக்க என்.கணேசன் புக்ஸை 94863 09351 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.





3 comments:

  1. நரேந்திரனின் இந்த உறுதி கண்டிப்பாக இந்த முறை அஜீம் அகமதை பிடித்துவிடும்....போல

    ReplyDelete