Monday, October 3, 2022

யாரோ ஒருவன்? 105


ஜீம் அகமதும், ஜனார்தன் த்ரிவேதியும் நகர்ந்தவுடனேயே காளிங்க சுவாமி வேகமாக ஜீப்பில் கிளம்பி விட்டார். அவர் ஜீப் போவதையே பார்த்துக் கொண்டு நின்ற அஜீம் அகமது ஜனார்தன் த்ரிவேதியிடம் சொன்னான். “சே... இவரிடம் ஒன்றைக் கேட்காமல் போய் விட்டேன்?”

ஜனார்தன் த்ரிவேதி கேட்டார். “என்னது?”

அஜீம் அகமது சொன்னான். “நாகராஜ் மகராஜ் ஏன் மகேந்திரன் மகனுக்கு உதவி செஞ்சான்னு தெரியலயே”

ஜனார்தன் த்ரிவேதி சொன்னார். “ரெண்டு பேரும் ஒரே ஊர்ல இருந்ததால சந்திச்சிருக்கலாம். பழகியிருக்கலாம். நரேந்திரன் அந்த பழக்கத்தினால உதவி கேட்டிருக்கலாம். நாகராஜ் செஞ்சிருக்கலாம்”

அந்த அனுமானம் சரியாக இருக்கும் என்று அஜீம் அகமது தலையசைத்தான்.  

ஜனார்தன் த்ரிவேதிக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் எழுந்தது. “நாகராஜ் மகராஜோ ரொம்ப சக்தி படைச்சவனா இருக்கிறான். மதன்லால், சஞ்சய் விஷயத்துல அவன் நரேந்திரனுக்கு உதவின மாதிரி மத்த விஷயத்துக்கும் உதவிகிட்டே போனா நமக்கு ஆபத்து தானே,. அந்த ரத்தினத்தை எடுத்துட்டு வர்றதுக்குள்ளே எத்தனையோ நடந்துட வாய்ப்பிருக்கே. அது நமக்கு ஆபத்தல்லவா?” என்று அவர் கவலையோடு கேட்டார்.

அஜீம் அகமது நரேந்திரன் பற்றி அனைத்து தகவல்களும் அறிந்து அவன் எப்படி யோசிப்பான் என்கிற அளவு வரை அவனைப் புரிந்து கொண்டிருந்ததால் புன்னகையுடன் சொன்னான். “அதைப் பத்தி கவலை வேண்டாம் த்ரிவேதிஜி. மகேந்திரன் மகனுக்கு தன்னைப் பத்தி தெரிஞ்சதை விட அவனைப் பத்தி நான் அதிகமா தெரிஞ்சிருக்கேன்.  அவனுக்கு சுயமரியாதை, தன்மானம், ’நான்’கிற கர்வம் எல்லாம் அதிகம். இந்த உதவியை வேற வழியில்லாம ஏற்றுகிட்டிருப்பான். இதுலயே அவனோட ஈகோ நிறைய பாதிச்சிருக்கும். மற்றபடி அடுத்தவங்க உதவியைத் தொடர்ந்து வாங்கி தன் வேலைகளை சாதிச்சுக்கறத அவன் அவமானமாய் நினைப்பான். தன்னோட திறமையாலயும், சாமர்த்தியத்தாலயும் தான் எல்லாத்தையும் செய்யணும்னு நினைக்கிறவன்கிறதால நாகராஜ் மகராஜ் அவனுக்கு உதவ முன்வந்தால் கூட வேண்டாம்னு சொல்லிடுவான்...”  

ஜனார்தன் த்ரிவேதிக்கு நரேந்திரன் அப்படி நினைத்தால் அது வடிகட்டிய முட்டாள்தனம் என்று தோன்றியது.

அவர் முகபாவனை மூலம் அதைப் படிக்க முடிந்த அஜீம் அகமது உள்ளூரப் புன்னகைத்தான். ’சுலபமான வழியில் வேலையாக வேண்டும், அது எப்படியானாலும் சரி’ என்ற கொள்கையோடு வாழ்ந்து வரும் இந்த அரசியல்வாதிக்கு மகேந்திரன் மகனின் சிந்தனைகள், போக்கு எல்லாம் முட்டாள்தனமாகத் தோன்றுவதில் ஆச்சரியமில்லை…

அஜீம் அகமதுவிடம் ஜனார்தன் த்ரிவேதி சொன்னார். “நாகராஜ் மகராஜ் கிட்ட இருந்து ரத்தினக்கல்லை எடுத்துட்டு வரப் போகிற ஆளுக்கு எவ்வளவு பணம் தர்றதாய் இருந்தாலும் அதை நான் ஏத்துக்கறேன் அஜீம்ஜீ. அவன் காரியத்தைக் கச்சிதமாய் முடிக்கறவனா இருந்தால் போதும்...”

“பீம்சிங் இது வரைக்கும் எடுத்துகிட்ட எந்த வேலைலயும் தோல்வியை சந்திச்சதில்லை”


வேலாயுதமும் கல்யாணும் சிவப்புப் பட்டுத்துணியில் வைத்திருந்த நாகரத்தினக்கல்லை மறுபடி மறுபடி தேடிச் சலித்தார்கள். ஒவ்வொரு முறை முயன்று கிடைக்காத போதும் அவர்கள் முகத்தில் பீதி கூடிக் கொண்டே போனது. தர்ஷினியைக் கூப்பிட்டு அவள் எங்காவது பார்த்தாளா அல்லது எடுத்தாளா என்று கேட்டுப் பார்த்தார்கள். இல்லை என்ற அவள் அவர்கள் இருவர் முகத்தில் தெரிந்த பீதியைப் பார்த்து விட்டு அறிவுரை சொன்னாள். “அந்த ரத்தினம் காணோம்னா விடுங்க. இன்னொன்னு வாங்கிக்கலாம். அதுக்குப் போய் சொத்தையே தொலைச்ச மாதிரி அப்பாவும். பிள்ளையும் ஏன் இப்படி டென்ஷன் ஆறீங்க”

அப்படி அது வாங்க முடிந்த ரத்தினம் அல்ல என்று சொல்ல முடியாமல் அவர்கள் இருவரும் தவித்தார்கள். அவர்கள் இருவரும் தனியாக இருக்கையில் வேலாயுதம் மகனிடம் சொன்னார். “உன்னோட இத்தனை பிரச்னைக்கும் காரணம் அது காணாமல் போனது தான். அது இருந்த வரைக்கும் நம்ம கிட்ட இருந்த அந்த அதிர்ஷ்டம் இப்ப நம்ம கிட்ட இருந்து போயிட்ட பிறகு தான் ஒவ்வொரு பிரச்சனையா வர ஆரம்பிச்சிருக்குன்னு நினைக்கிறேன்...”

எப்படி அது காணாமல் போயிருக்கும் என்பதை இருவராலும் யூகிக்க முடியவில்லை.  வேலாயுதம் கேட்டார். “அன்னைக்கு நாம ரெண்டு பேரும் சேர்ந்து தானே உன் பீரோல இருந்து எடுத்துப் பார்த்தோம். பார்த்துட்டு உள்ளே வெச்சியா? நீ வெச்ச ஞாபகம் எனக்கு இருக்கு. இருந்தாலும் நல்லா யோசிச்சுப் பார். ஒருவேளை நானும் சரியா கவனிக்காம நீயும் எதோ யோசனையா வெளியே எங்கயாவது வெச்சு, வேலைக்காரங்க யாராவது எடுத்திருக்க வாய்ப்பு இருக்கான்னு யோசி”

“இல்லைப்பா. நான் மறந்து கூட அதை வெளிய வெச்சிருக்க மாட்டேன். அப்படியே வெச்சிருந்தாலும் வேலைக்காரி திருடற ரகமில்லை. எத்தனையோ தடவை மேகலா நகைகளைக் கழட்டி அங்கங்கே வெச்சி மறந்திருக்கா. ஒரு தடவை கூட அந்த நகைகள்  காணாம போனதில்லை. அப்படி இருக்கறப்ப மதிப்பு தெரியாத இதை அவ எடுத்திருக்க வழியேயில்லை.”

“அப்படின்னா அதோட மதிப்பு தெரிஞ்ச யாரோ தான் எடுத்திருக்கணும்?” வேலாயுதம் திட்டவட்டமாகச் சொன்னார்.

“யாரு? எப்படி? நாம தான் வீட்லயே இருக்கிறோமே” என்று கல்யாண் பரிதவிப்புடன் கேட்டான்.

வேலாயுதம் சொன்னார். “சில சமயங்கள்ல கொஞ்ச நேரம் கழிச்சு திடீர்னு நமக்கு ஏதாவது நினைவுக்கு வரலாம்...”

கல்யாண் தலையசைத்து விட்டு எழுந்து கம்பெனிக்குக் கிளம்பினான். வெளியே வந்து கார் ஏறப் போன போது எதிர் வீட்டுக்காரர் அவர் வீட்டு வாசலில் தெரிந்தார். அவர் அவனைப் பார்த்தவுடன் கையசைத்து விட்டு புன்னகையோடு தெருவைக் கடந்து வந்தார்.

கல்யாணுக்கு இருக்கும் மனநிலையில் அவனுக்கு யாருடனும் பேசப்பிடிக்கவில்லை. எதிர்வீட்டுக்காரர் அந்தமான் தீவுகளுக்குச் சுற்றுலா போய் விட்டு மூன்று நாட்கள் முன்பு தான் திரும்பி வந்திருந்தார். அவர் திரும்பி வந்த பின் அவரிடம் அவன் பேசியிருக்கவில்லை. அதனால் சம்பிரதாயமாகவாவது ஐந்து நிமிடங்கள் பேச வேண்டிய கட்டாயத்தில் கல்யாண் புன்னகைத்தபடி கேட்டான். “ஹலோ சார். எப்ப வந்தீங்க? அந்தமான் பயணமெல்லாம் எப்படியிருந்துச்சு?’

“ரொம்ப நல்லா இருந்துச்சு. இன்னும் நாலு நாள் அங்கேயே இருந்துடலாமான்னு வீட்ல எல்லாருமே நினைச்சோம். அந்த அளவு பிடிச்சுப் போச்சு. மூனு நாள் முன்னாடி அதிகாலையில் மூனரை மணிக்கு தான் வீடு வந்து சேர்ந்தோம். இங்கே வந்து பாத்தா உங்க வீட்டுல இருந்து நாலஞ்சு ஆளுக வெளியே வந்துட்டிருந்தாங்க”

கல்யாண் அதிர்ந்து போனான். மகன் பின்னாலேயே வெளியே வந்து இந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த வேலாயுதம் திகைப்புடன் கேட்டார். “எங்க வீட்டுல இருந்தா? யாரது?”  

“தெரியல. ஆரம்பத்துல நான் அவனுகள திருடங்கன்னு நினைச்சுட்டேன். ஆனா அவனுக எங்கள பாத்த பிறகும் ஓடப்பார்க்கல. சொல்லப்போனா எங்கள கண்டுக்கவே இல்லை. அமைதியா உங்க வீட்டுல்ல இருந்து வெளியே வந்து பக்கத்து வீட்டுக்குப் போறத பார்த்தேன். ஒருவேளை நீங்களும், பக்கத்து வீட்டுக்காரரும் சேர்ந்து எதாவது வேலையை அவனுக கிட்டே கொடுத்திருக்கீங்களோன்னு தோணுச்சு. சரின்னு நாங்க வீட்டுக்குள்ளே போயிட்டோம். கால் மணி நேரம் கழிச்சு ஜன்னல் வழியா பார்க்கறப்ப அவங்க ஏதோ மாருதி வேன் ஏறிப் போறது தெரிஞ்சுது. அவங்க உங்களுக்குத் தெரிஞ்ச ஆளுக தானே.. ”

கல்யாணும் வேலாயுதமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். எதிர் வீட்டுக்காரர் சொல்கிற நாள் நேரம் எல்லாம் வைத்து யோசிக்கையில் அந்த ஆட்கள் அவர்கள் நாகராஜ் வீட்டிலிருந்து நாகரத்தினத்தைத் திருட ஏற்பாடு செய்திருந்த மணியும் அவனது ஆட்களும் என்பது புரிந்தது. அதனால் உள்ளுக்குள் ஏற்பட்ட பூகம்பத்தை மறைத்து அவர்கள் இருவரும் புன்னகையுடன் “ஆமாமா” என்றார்கள்.


“நினைச்சேன். ஆனா நீங்களும் யாரும் வெளியே தெரியலை. அந்தப் பக்கத்து வீட்டுக்காரரும் தெரியலை. அதனால தான் கொஞ்சம் சந்தேகமும் வந்துச்சு” என்று எதிர்வீட்டுக்காரர் சொன்னார்.

அடுத்த இரண்டு மூன்று நிமிடங்கள் எதிர்வீட்டுக்காரர் பேசியதென்னவென்றே அவர்கள் மனதில் பதியவில்லை. அவர்கள் புன்னகையும் தலையசைப்பும் தானாக நடந்தன. அவர் போன பிறகு வேலாயுதம் குரல் நடுங்கக் கேட்டார். “அன்னைக்கு என்னடா நடந்துச்சு?”

(தொடரும்)
என்.கணேசன்  

2 comments:

  1. Sir. Really this novel is vera level. Suspense is still building up.

    ReplyDelete
  2. அட கொடுமையே... மணி இவுங்க வீட்ல திருடி நாகராஜ்கிட்ட கொடுத்துட்டானா...? அப்ப நாகராஜ் இவுங்க நாகரத்தினைத்தை எடுக்க தான் வந்தானா...?

    ReplyDelete