Monday, September 12, 2022

யாரோ ஒருவன்? 102




னார்தன் த்ரிவேதிக்கு அவர் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து அஜீம் அகமது அமாவாசைக்கு முன் தினமே வந்து சேர்ந்த செய்தி கிடைத்தது. அது அவருக்குச் சந்தோஷமாய் இருந்தது. காளிங்க சுவாமியின்  சீடனிடம் பேசி அமாவாசை இரவுக்கு ரிஷிகேசத்துக்கு வந்து விடுவதாகச் சொன்ன போது அவன் “நடந்தது அனைத்தையும் அவர் அறிவார் சுவாமிக்கு நீங்கள் வரப்போவது முன்பே தெரியும். அவர் அமாவாசை இரவில் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.” என்று சொன்னான்.

அஜீம் அகமது வந்து சேர்ந்ததும், காளிங்க சுவாமியின் சீடன் அப்படிச் சொன்னதும் அவருக்கு எல்லாம் இனி சரியாகி விடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. நரேந்திரன், சஞ்சயையும், மதன்லாலையும் கடத்தி சித்திரவதை செய்திருப்பது தெரிந்தும் நரேந்திரனை ஒன்றும் செய்ய முடியாத நிலைமையில் இருப்பது ஒன்று தான் அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது.  அவனிடம் ”நீ செய்திருக்கும் தகிடுதத்தம் எல்லாம் தெரிந்து விட்டது. எங்கள் ஆட்களை உன் பிடியிலிருந்து மீட்டு விட்டோம்” என்று போய் கொக்கரிக்கலாம் என்றால் அவன் மறுப்பதோடு மட்டுமல்லாமல் ”உங்கள் ஆட்களை விசாரிக்க வேண்டும் என்பதால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைத் தெரிவியுங்கள்” என்று சொல்லி விடும் வாய்ப்பு இருக்கிறது. எனவே அவனைச் சந்தித்து மிரட்டும் எண்ணத்தைக் கைவிட்டார்.

அஜீம் அகமதைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போய் காளிங்க சுவாமியைச் சந்திக்க வேண்டும் என்று அவருக்கு ஆசை இருந்தாலும், அவரை ரா ஆட்கள் ரகசியமாய் வேவு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் அஜீம் அகமது அவருடன் ரிஷிகேசம் வருவது ஆபத்து என்ற அச்சம் எழுந்தது. அஜீம் அகமது அவருடன் அங்கு போவது அவனுக்கும் ஆபத்து, அவருக்கும் ஆபத்து.... அஜீம் அகமதுக்கும் அந்த எச்சரிக்கை உணர்வு இருந்தது. அதனால் அவனுக்கும் அவருடன் சேர்ந்து காளிங்க சுவாமியைச் சந்திக்க ஆர்வம் இருந்தாலும் கூட  அவன் ”நீங்களே அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டு வந்து சொல்லுங்கள். பின்பு செய்ய வேண்டியதைச் செய்வோம்” என்று சொன்னான்.  

அவர்கள் பேசி முடித்த ஐந்தாவது நிமிடம் காளிங்க சுவாமியின் சீடன் ஜனார்தன் த்ரிவேதியின் புதிய ரகசிய எண்ணுக்குப் போன் செய்தான். “சுவாமி உங்களைத் தனியாகவும், உங்க நண்பரைத் தனியாகவும் ரிஷிகேசம் வந்து சேரச் சொன்னார். அங்கே வந்த பிறகு உங்க ரெண்டு பேரையும் எந்த உளவாளியும் பார்க்க முடியாதபடி என்ன செய்யணுமோ அதை சுவாமி செய்வார். ஆனால் உங்க நண்பர் அன்றைக்கு வந்து சுவாமியைச் சந்திப்பது ரொம்ப முக்கியம்னு சொல்லச் சொன்னார்”

சற்று முன் பேசிய விஷயத்தை அதற்குள் சுவாமிஜி அறிந்து இப்படிச் சொல்கிறாரே என்று அதிசயித்த ஜனார்தன் த்ரிவேதி அஜீம் அகமதுக்குப் போன் செய்து அந்த விஷயத்தைச் சொன்னார். அஜீம் அகமதுக்கும் அது ஆச்சரியமாக இருந்தாலும் அந்த காளிங்க சுவாமியை எந்த அளவு நம்பலாம் என்று தெரியவில்லை. அவன் ஜனார்தன் த்ரிவேதியிடம் சொன்னான். “த்ரிவேதிஜி. என்னைக் காட்டிக் கொடுத்து அந்த ஆள் பரிசுத் தொகை வாங்கிடலாம்னு நினைச்சிருப்பாரோ”

ஜனார்தன் த்ரிவேதி உறுதியாகச் சொன்னார். “அஜீம்ஜீ. அந்த சுவாமிஜியை நாற்பது வருஷங்களுக்கும் மேலாவே எனக்குத் தெரியும். கோடிகள் கூட அந்த ஆளுக்கு ஒரு பொருட்டே இல்லை. அவர் சொன்னால் அவர் காலடியில் கொண்டு போய் பணத்தைக் கொட்ட என்னை மாதிரி எத்தனையோ பேர் இருக்காங்க. அதனால அந்த சந்தேகம் மட்டும் உங்களுக்கு வேண்டவே வேண்டாம். நான் நாளைக்கு ராத்திரி பத்து மணிக்கு ரிஷிகேசம் வந்து சேர்வேன். நீங்களும் எப்படியாவது பதினோரு மணிக்குள்ளே வந்து சேர்ந்துடுங்க.”

அஜீம் அகமது ஜனார்தன் த்ரிவேதியை நம்பினாலும் கூட தன்னுடைய வழக்கமான எச்சரிக்கை உணர்வைப் புறக்கணிக்காமல் முன்பே காளிங்க சுவாமியைப் பற்றி எல்லாத் தகவல்களும் பெற ஏற்பாடு செய்திருந்தான்.

அந்தத் தகவல்கள் அவனுடைய மின்னஞ்சலுக்கு வந்து சேர்ந்தன. தகவல்களின் கோர்வை -

காளிங்க சுவாமியின் வயது நூறுக்கும் மேல் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். அப்படியிருக்க வாய்ப்பிருக்கிறது. கண்டிப்பாக தொன்னூறுக்கும் மேல் இருக்கும் என்பதற்குப் பல ஆதாரங்கள் இருக்கின்றன.  அவரிடம் அபூர்வ சக்திகள் இருக்கின்றன என்பது நிஜம். உள்ளதை உள்ளபடி சொல்லக்கூடியவர். எல்லா மத ஆட்களும் அமாவாசை இரவுகளில் ரிஷிகேசம் சென்று அவரைப் பார்த்து அருள்வாக்கு கேட்கிறார்கள்.  அவர் சொன்னது எதுவும் இதுவரை பொய்த்ததில்லை என்பது பெரும்பாலானோரின் அனுபவமாக இருக்கிறது. பாம்புகள் மத்தியில் காளிகோயிலில் வாழும் அவரை யாரும் நல்ல வெளிச்சத்தில் பார்த்தது கிடையாது. அவருடைய ஒரே பலவீனம் வெளிச்சத்தில் அவருக்கு உடல் கூசும் பிரச்சினை இருக்கிறது. ஒரு முறை அவரைச் சந்திக்கச் சென்ற பக்தர் அவரைச் சரியாக இருட்டில் பார்க்க முடியாத வருத்தத்தில் டார்ச் லைட் போட்டு பார்க்கப் போய் அவர் அமானுஷ்யமாய் கிறீச்சிட்டு அவருடைய சீடர்கள் அந்த பக்தரை நையப்புடைத்து அனுப்பியதாகச் சொல்கிறார்கள். பெரும்பாலும் அவரைச் சந்திக்கின்ற பக்தர்கள் தங்கள் பிரச்சினைகளையோ, கோரிக்கைகளையோ காளிங்க சுவாமியிடம் வாய் விட்டுச் சொல்லும் அவசியம் இருப்பதில்லை. அவரே ”நீ இதற்காக வந்திருக்கிறாய்” என்று சொல்லிவிட்டு, “இது செய்தால் சரியாகும்” என்றோ “என்ன செய்தாலும் இந்தப் பிரச்னை தீராது” என்றோ ”இந்தத் தேதி வரை இந்தப் பிரச்சினையை நீ தாக்குப்பிடித்தே ஆக வேண்டும்” என்றோ சொல்வது வழக்கம் வந்தவர்களுக்கு ஏதாவது உண்மை தெரிந்தாக வேண்டியிருந்தால் அதை எந்தப் பூச்சும் இல்லாமல் வெளிப்படையாகச் சொல்ல அவர் தயங்கியதில்லை. அமாவாசை இரவுகளில் நள்ளிரவு பூஜை சடங்குகள் முடித்துக் கொள்ளும் வரை எப்படிப்பட்ட பெரிய ஆளும் காத்திருந்தே ஆக வேண்டும். குறுக்கீடு செய்வதோ, அதற்கு முன் அவரைச் சந்திக்க அவசரப்படுவதோ கூடாது... காட்டுக்குள் காளிகோயிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளோடு வசித்து வரும் அவர் இரவு நேரங்களில் சில உக்கிர பூஜைகள் செய்து அறிய விரும்பும் தேவ ரகசியங்களை அறிவார். கண்கட்டு வித்தையில் கெட்டிக்காரர். திடீரென்று மறைய விரும்பினால் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மறைந்து விடுவார்....  

தொடர்ந்து அவன் படித்த விஷயங்கள் எல்லாம் ஜனார்தன் த்ரிவேதி அவனிடம் முன்பே சொன்ன விஷயங்களாக இருந்தன. எந்தக் குறிப்பும் அந்த ஆள் ஏமாற்றுக்காரர் என்கிற வகையிலோ சக்திகள் விஷயத்தில் போலி என்றோ, நடிக்கிறார் என்றோ இருக்கவில்லை. எல்லாம் சுவாரசியமாய் இருக்கவே மாறுவேடத்தில் போய் வருவது என்று அஜீம் அகமது முடிவு செய்தான்.

அவன் வரும் முடிவைத் தெரிவித்த போது ஜனார்தன் த்ரிவேதி மிகவும் சந்தோஷப்பட்டார். “கண்டிப்பாய் நமக்கு ஒரு தெளிவான ஒரு வழியை சுவாமிஜி காட்டுவார் அஜீம்ஜீ” என்று நம்பிக்கை தெரிவித்தார்.  


உண்மையில் அஜீம் அகமது அடுத்தவர்கள் காட்டும் வழியில் போவதை கௌரவக்குறைவாகவே நினைத்தான்.  வழிகாட்டுபவன் எப்படிப்பட்ட பெரிய ஆளாய் இருந்தாலும் ஆட்டு மந்தையாகப் பின்பற்றுவதை அவன் ரசிப்பதில்லை. இந்த காளிங்க சுவாமியே கூட எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும் இந்த ஆளிடம் போய் வழி கேட்பதும், அந்த ஆள் சொன்னபடி செய்வதும் அவனுக்கு உடன்பாடான விஷயமல்ல. ஆனால் சஞ்சய், மதன்லால் இருவருக்கும் ஏற்பட்ட பாம்புக்கடி விஷயத்திலும், அவர்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கும் விஷயத்திலும் நடந்திருப்பது எல்லாம் அவன் அறிவுக்கு எட்டாத மாயா ஜால விஷயமாகவே இருந்தன என்பதால் அந்த மாயா ஜாலம் எப்படி நடத்தப்பட்டிருக்கிறது என்பதை அவன் அறியத் துடித்தான். ஏனென்றால் அவனுக்குப் பிடிபடாத விஷயங்களை அப்படியே விட்டு வைப்பதை வடிகட்டிய முட்டாள்தனம் என்று நினைத்தான். இந்த மாயா ஜால நிகழ்வுகளுக்குப் பதிலடி தர வேண்டுமானால், சமாளிக்க வேண்டுமானால் இதில் வல்லுனரான காளிங்க சுவாமியைப் பயன்படுத்துவது தான் புத்திசாலித்தனம் என்று தோன்றியதால் தான் அவன் போகிறானே ஒழிய மற்றபடி இது போன்ற அபூர்வசக்தி வாய்ந்த ஆசாமிகளின் வழிகாட்டலை நம்பி அவன் இன்றல்ல என்றுமே இருந்ததில்லை



ரிஷிகேசத்திற்கு ஒரு வியாபாரியின் வேடத்தில் போக முடிவு செய்த அஜீம் அகமது தன் பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தான்.     

(தொடரும்)
என்.கணேசன்


2 comments:

  1. Even after 102 chapters, you make us eagerly wait for the next. Super

    ReplyDelete
  2. அடுத்த வார சந்திப்பிற்கு காத்திருக்கிறேன்...

    ReplyDelete