அஜீம் அகமதின் கூர்மையான அறிவுக்கு இப்போது நடந்து கொண்டிருக்கும்
சம்பவங்கள் எதற்கும் காரணம் பிடிபடவில்லை. ஆஸ்பத்திரியில் சஞ்சய் ஷர்மாவும், மதன்லாலும்
நடந்து கொள்ளும் விதங்களைப் பார்க்கையில் அவர்கள் இருவரும் அரைப்பைத்தியங்கள் ஆகி விட்டார்கள்
என்றே தோன்றியது. அவர்களை மகேந்திரன் மகன் கொன்றிருந்தால் அது அவனை ஆச்சரியப்படுத்தியிருக்காது.
அவர்கள் இருவருக்கும் உணவில் ஏதாவது மருந்து வைத்து அதன் மூலமாக அவன் அவர்களுக்குப்
பைத்தியம் பிடிக்க வைத்திருந்தாலும் அதையும் அவனால் புரிந்து கொள்ள முடிந்திருக்கும்.
அவர்கள் வெளியே தப்பித்துப் போனாலும் அவர்கள் அவனைக் காட்டிக் கொடுக்க முடியாது, அல்லது
அவர்கள் சொன்னாலும் அந்தப் பைத்தியக்காரர்கள் சொல்வதை யாரும் பொருட்படுத்த முடியாது
என்ற நிலையை அவன் புத்திசாலித்தனமாக ஏற்படுத்தி விட்டான் என்பதை அவனால் கணிக்க முடிந்திருக்கும். இந்த இரண்டும்
மகேந்திரன் மகனால் சுலபமாகச் சாதிக்க முடிந்திருக்கக்கூடிய காரியங்கள். ஆனால் அந்த
இரண்டையுமே அவன் செய்யவில்லை.
காட்டுப்
பகுதிகளில் மட்டுமே இருக்கக்கூடிய பாம்புகள் தான் அவர்களைக் கடித்திருக்கின்றன என்று
டாக்டர்கள் சொல்கிறார்கள். அவை கடுமையாக கடித்திருந்தால் இருவரும் சம்பவ இடத்திலேயே
இறந்து போயிருக்கக்கூடும் என்றும் சொல்கிறார்கள். இது வரை அந்த ஃபேக்டரி பகுதியில்
அந்த மாதிரியான பாம்புகள் யாரையும் கடித்திருந்த சம்பவம் ஒன்று கூடப் பதிவாகியிருக்கவில்லை.
பின்
எப்படி அவர்களை மட்டும் அந்தப் பாம்புகள் கடித்தன என்றோ அதுவும் அரைப்பைத்தியங்களாக
ஆக்க முடிந்த அளவு மட்டும் அவை கடித்திருக்கின்றன என்றோ அனுமானிக்க முயற்சித்து அவன்
தோற்றுப் போனான்.
இத்தனைக்கும்
மகேந்திரன் மகன் டெல்லியில் அந்தச் சமயத்தில் இல்லை. சற்று முன் தான் அவன் கோயமுத்தூரிலிருந்து
டெல்லி வந்து சேர்ந்திருக்கிறான் என்ற செய்தி கிடைத்தது. அவன் இங்கே இல்லாத நேரத்தில்
வேறு யாரோ அவனுக்கு இந்த மாதிரியான அமானுஷ்யமான முறையில் நடக்க உதவியிருக்கிறார்கள்
என்பதை நினைத்துப் பார்ப்பதே அறிவுக்குப் பொருந்தாத விஷயமாகப் பட்டது. ஆனாலும் கூட
அப்படித் தான் நடந்திருக்கிறது.
ஜனார்தன்
த்ரிவேதி அவர்கள் இருவரையும் டிவி, பத்திரிக்கைக்காரர்கள் மத்தியில் பேச வைத்து மகேந்திரன்
மகனை மட்டுமல்லாமல், நாட்டில் சட்டமும் ஒழுங்கும் எப்படியெல்லாம் சீரழித்துக் கொண்டிருக்கின்றன
என்பதைச் சொல்லி நாட்டின் பிரதமரையே குற்றம் சாட்டி நாட்டு அரசியலில் ஒரு திருப்பத்தை
ஏற்படுத்த வேண்டும் என்ற அளவுக்கு எல்லாம் யோசித்து வைத்திருந்தது வீணானது. இருவரும் பேச முடிந்த
அளவு உடல்நிலை திரும்பியதும் அவர்களை ஆர்வத்துடன் சந்திக்கப் போனவர் ஏமாற்றத்துடன்
திரும்பி வந்தார். அவர்கள் இருவரும் தங்கள் அந்தரங்க விஷயங்களைக் கூட எந்தத் தயக்கமும்
இல்லாமல் வெளிப்படையாகப் பேசுகிறார்கள் என்று தெரிந்தபின் அவர்களைச் சந்திக்கப் போவதையே
தவிர்த்து விட்டார். நடந்த நிகழ்வுகளை எல்லாம் அஜீம் அகமதுக்குத் தெரிவித்து விட்டீர்களா
என்று அவன் ஆட்களிடம் அவர் அடிக்கடி கேட்பதாகவும், அஜீம் அகமதுடன்
முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றும் சொல்வதாகவும் அவன் ஆட்கள் சொன்னார்கள்.
கடைசியில்
அஜீம் அகமது அவரிடம் பேசுவது என்று முடிவு செய்தான்.
ஜனார்தன் த்ரிவேதியின் அலுவலகத்தில் கட்சித்
தொண்டனாக அஜீம் அகமதின் ஆள் இரவு ஏழு மணிக்கு வந்தான். “பாஸ் உங்க கிட்ட பேசணும்னு
சொன்னார்” என்று தெரிவித்தவன் அஜீம் அகமதுக்குப் போன் செய்து அவன் குரல் கேட்டவுடன்
ஜனார்தன் த்ரிவேதியிடம் தன் செல் போனைத் தந்தான்.
ஜனார்தன்
த்ரிவேதி பரபரப்புடன் தன் உள் அறைக்குப் போய் அவனிடம் பேசினார். “அஜீம்ஜீ எப்படி இருக்கீங்க?”
“உங்க
நட்பு இருக்கிற வரையில் எனக்கு என்ன குறைவு இருக்கமுடியும் த்ரிவேதிஜி” என்று அஜீம்
அகமது உருது கலந்த ஹிந்தியில் சொல்ல அவன் குரல் கேட்டவுடனேயே ஜனார்தன் த்ரிவேதி உற்சாகத்தையும்,
நம்பிக்கையையும் பெற்றார்.
“நடந்த
சம்பவங்களை எல்லாம் உங்கள் ஆட்கள் உங்களிடம் சொல்லி இருப்பார்கள் ஜீ. எல்லாம் நம் கை
மீறிப் போய்கிட்டிருக்கு. நரேந்திரன் என்ற சைத்தான் அவன் இஷ்டப்படி எல்லாத்தையும் செய்துகிட்டிருக்கான்.
சஞ்சயையும், மதன்லாலையும் உங்க ஆட்கள் கண்டுபிடிச்சு ஆஸ்பத்திரியில் சேர்த்தவுடனேயே
அதுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கலாம்னு நம்பிக்கையோட போனேன். ஆனால் ரெண்டு பேரையும்
வெளியே விட்டால் பேசியே என் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி வெச்சிடுவாங்க
போலருக்கு. அந்த அளவுக்கு மோசமாயிருக்கு நிலைமை”
“எல்லாத்தையும்
கேள்விப்பட்டேன். எல்லாமே விசித்திரமாய் இருக்கு. இதுல நமக்குத் தெரியாத
ஏதோ ஒன்னு இருக்குஜி. அது தான் புரியல”
ஜனார்தன்
த்ரிவேதி சொன்னார். “எந்த விசித்திரத்தையும் புரிஞ்சுக்கவும், வழிகாட்டவும் ஒரு ஆள்
இந்தியால இருக்கார் அஜீம்ஜீ. ஒரே ஒரு பிரச்சனை என்னன்னா அவரை அமாவாசை ராத்திரி தான்
நேர்ல சந்திக்க முடியும்”
தொடர்ந்து
அவர் காளிங்க சுவாமியைப் பற்றி விரிவாகச் சொன்னார். அஜீம் அகமது இது போன்ற விஷயங்களில்
சிறிதும் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் ஜனார்தன் த்ரிவேதி அவருடைய விஷயங்களில் எப்படியெல்லாம்
காளிங்க சுவாமி நடப்பதை முன்கூட்டியே சொல்லியிருக்கிறார் என்று விவரித்தார். அவர் அடையப்
போகும் தோல்வியையும் காளிங்க சுவாமி முன்கூட்டியே சொல்லியிருக்கிறார் என்பதைச் சொல்லி
அதற்கு எந்தப் பரிகார பூஜையும் உதவாது என்பதால் தோல்வி நிச்சயம் என்று வெளிப்படையாகச்
சொன்னவர் அவர் என்றும் ஜனார்தன் த்ரிவேதி சொன்ன போது அஜீம் அகமதுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
ஜனார்தன்
த்ரிவேதி தொடர்ந்து சொன்னார். “அஜீம்ஜீ. அந்த சமயத்துல எத்தனையோ ஜோசியர்கள், சாமியார்கள்
எல்லாம் என்னென்னவோ செய்தால் வெற்றி நிச்சயம்னு சொல்லி நான் அத்தனையும் செய்தேன். ஆனால்
காளிங்க சுவாமி ஒருத்தர் சொன்ன மாதிரி தான் தேர்தல் முடிவும் இருந்துச்சு. அதுல எனக்கு அவர் மேல வருத்தம் கூட இருந்துச்சு.
இப்ப இங்கே சஞ்சய், மதன்லாலுக்கு பாம்பு கடிச்சது தான் பைத்தியம் பிடிக்க வெச்சிருக்கு.
இந்த காளிங்க சுவாமி நூற்றுக்கணக்கான பாம்புகளுடனேயே வாழ்றவர். அவருக்கு பாம்புகள்
மேல இருக்கற கட்டுப்பாடும் பாம்புகள் பத்தின ஞானமும் அபாரம். அதனால அவரைப் பாத்தா நடந்திருக்கிறது
என்னங்கறதும், இனி என்ன செய்யலாம்கிறதும் தெளிவாய் தெரியும். அதனால நான் அடுத்த அமாவாசை
ராத்திரி அவரைப் போய்ப் பார்க்கறதா இருக்கேன். எனக்கு ஒரு வேண்டுகோள். நீங்க இந்தச்
சமயத்துல இந்தியா வரணும். நடக்கறது எனக்கு மட்டும் ஒரு சவால் அல்ல. நரேந்திரன் உங்களுக்கும்
விடற சவாலா தான் இது இருக்கு. நீங்க அமாவாசைக்குள்ளே
இந்தியா வந்தா நாம சேர்ந்தே காளிங்க சுவாமியை சந்திக்கலாம். பிறகு என்ன செய்யலாம்னு
முடிவெடுக்கிறது நமக்கு சுலபமாகும். என்ன சொல்றீங்க”
அஜீம்
அகமது இப்போதும் இந்தியா வந்து விட்டாயிற்று என்று சொல்லவில்லை. ”கண்டிப்பாய் வர்றேன்
த்ரிவேதிஜி. எனக்கும் உங்க காளிங்க சுவாமியைப் பார்த்துப் பேசி என்ன நடந்திருக்குன்னு
தெரிஞ்சுக்கறதுல ஆர்வமா தான் இருக்கு. ஆனா நான் வரப் போறது உங்களைத் தவிர வேற யாருக்கும்
தெரிய வேண்டாம். இந்தியா வந்த பிறகு இதே மாதிரி உங்களைத் தொடர்பு கொள்றேன்.”
அஜீம்
அகமது பேசி முடித்து விட்டு யோசித்தான். இது போன்ற விஷயங்களில் அவனுக்குப் பொதுவாக
நம்பிக்கை இல்லை என்றாலும் கூட எகிப்திலும் இது போன்ற ஒரு ஆசாமியைப் பற்றி அவன் கேள்விப்பட்டிருக்கிறான்.
அந்த ஆளும் துறவி தான். ஆக சாதாரண அறிவுக்கெட்டாத சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
இதில் ஏமாற்றுக்காரர்கள் தான் அதிகம் என்றாலும் கூட இருக்கும் ஒன்றிரண்டு ஆச்சரியங்களை
அலட்சியப்படுத்திவிட முடியாது. ஜனார்தன் த்ரிவேதி விஷயத்தில் கூட ஒவ்வொரு தடவையும்
வெற்றியாகட்டும் தோல்வியாகட்டும் சரியாக முன் கூட்டியே சொன்ன, பாம்புகளின் சூட்சுமங்கள்
அறிந்த, பாம்புகளுடனேயே வசிக்கின்ற அந்த ஆளை நேரில் சந்தித்து வேண்டிய தகவல்களைத் தெரிந்து
கொள்ள அவனுக்கும் ஆர்வமாகத் தான் இருந்தது.
அமாவாசைக்கு
இன்னும் மூன்றே நாட்கள் தான் இருக்கின்றன…
(தொடரும்)
என்.கணேசன்
Super interesting sir. We are also eager to meet Kalingasami and to know what he says.
ReplyDeleteகாளிங்க சுவாமி உண்மையை சொல்வாரா அல்லது அவர்களை குணமாக்கும் உபாயத்தை சொல்லவாரானு தெரியலையே.....
ReplyDelete