வேலாயுதம் மாலை நாகராஜ் வாக்கிங் போகும் போதும் அவன் பார்வையில்
படும்படி நின்று கொண்டார். அவன் அவரைப் பார்த்து புன்னகைத்து விட்டுப் போனான். உடனே அவர்
கல்யாணுக்குப் போன் செய்து சொன்னார். “அவன் இப்பவும் என்னைப்
பார்த்து புன்னகைச்சுட்டு தான் போறான். காலைலயும் தான்
புன்னகைச்சான். இதை எல்லாம் பார்க்கறப்ப அவனுக்கு நம்ம திட்டம் தெரிஞ்சு
போயிருக்கும்னு எனக்குத் தோணலைடா. என்ன நடந்திருக்கும்னு நான் நினைக்கிறேன் தெரியுமா? அவன் அவங்க
திருட வர்றதை உள்ளேயிருந்து கவனிச்சிருப்பான். உடனே அப்படியே
அவர்கள் மேல அவனோட சக்தியை ஏவி விட்டிருப்பான். அவனுகளும்
அப்படியே ஸ்தம்பிச்சுப் போயிருப்பாங்க. அப்படித்தான் நடந்திருக்கணும்னு
தோணுது. நாம தான் தேவையில்லாம ரொம்பவே பயந்துட்டோம்...”
கல்யாண் சிறிது யோசனைக்குப் பிறகு கேட்டான். “அப்படின்னா
நானும், நீங்களும் மட்டுமில்லாம நம்ம வீட்டுலயே எல்லாருமே அன்னைக்கு
அசந்து தூங்கினது?”
அந்தக் குறிப்பிட்ட இரவில் அவர்கள்
இருவரும் மட்டுமல்லாமல் மேகலாவும், தர்ஷினியும் கூட
அன்று ஆழ்ந்து உறங்கியிருந்ததாகத் தெரிவித்தார்கள். தர்ஷினிக்கு
என்றுமே தூக்கம் ஒரு பிரச்னையாக இருந்ததில்லை. இடி விழுந்தாலும்
தெரியாமல் உறங்கக்கூடியவள் அவள். ஆனால் அதிசயமாக மேகலாவும் பல நாள் கழித்து ஆழ்ந்து உறங்கியதாய்
சொல்லியிருந்தாள். எப்போதும் அவள் தூக்கம் ஆழமாக இருக்காதபடி அவள் உடல் உபாதைகள்
பார்த்துக் கொள்ளும். ஒன்றில்லா விட்டால் வேறொரு உடல்ரீதியான பிரச்னை அவளைப் பாதிப்பதுண்டு. அதனை அவள் மறுநாள் விவரித்துச் சொல்வது மற்றவர்களை ஆயாசப்படுத்துவதுண்டு. ஆனால் அப்படிப்
பட்டவளும் அந்தக் குறிப்பிட்ட இரவு ஆழ்ந்து உறங்கியிருந்தது கல்யாணை மிகவும் குழப்பத்திலும்
சந்தேகத்திலும் ஆழ்த்தியது. கல்யாண் அன்று காலையில் இருந்தே அமைதியைத் தொலைத்திருந்தான். மணி தெரிவித்த
விஷயங்கள் யோசிக்க யோசிக்க அவனுக்குள் அதிகமான திகிலைக் கிளப்பியிருந்தன. அவன் கம்பெனிக்கு
வந்திருந்த போதும் அவன் மனம் வேலையில் லயிக்கவில்லை.
வேலாயுதம் சொன்னார். “நான் என்ன
நினைக்கிறேன்னா நாகராஜ் அந்த அந்தத்
திருடன்கள் மேல் ஏவிவிட்ட மயக்க சக்தி
ரொம்பவே சக்தி வாய்ந்ததாய் இருந்து அது பக்கத்து வீட்டுல இருந்த நம்மையும் தூங்க வெச்சிருக்கலாம். நாம செஞ்சதெல்லாம்
தெரிஞ்சும் அவன் ஏன் நம்மள பார்த்து புன்னகை செய்யணும்? நீ யோசிச்சுப்
பாரு. கட்டாயத்துல சிரிக்க அவன் என்ன நம்ம கிட்ட சம்பந்தமா செஞ்சிருக்கான்....”
அவர் சொன்னதும் சரியாகத் தான் தோன்றியது. கல்யாண் ஓரளவு அமைதி அடைந்தான்.
ஜனார்தன் த்ரிவேதி காணாமல் போன மருமகன் கிடைத்து விட்ட சந்தோஷத்தில்
மிகவும் பரபரப்பாக இருந்தார். அஜீம் அகமது எங்கோ இருந்தபடி அவர் மருமகனையும், மதன்லாலையும்
கண்டுபிடித்துக் கொடுத்திருந்ததை எண்ணுகையில் அவன் அறிவுகூர்மையை அவரை வியக்க வைத்தது. துப்பறியும்
நிறுவனத்தால் கூட இது முடிந்திருக்கவில்லையே....
அஜீம் அகமதின் ஆள் அவரிடம் அவர்கள்
இருவரையும் கடத்தியவன் நரேந்திரனாகத் தான் இருக்க வேண்டும் என்று அஜீம் அகமது சந்தேகப்படுவதாகச்
சொன்னான். “நம்ம ஆளுக கண்காணிக்கறாங்கன்னு தெரிஞ்சவுடனே அவன் உஷாராயிட்டான். அவனுக்கு
அவசரத்துக்கு அவங்கள இடம் மாத்தவும் வழி தெரியலை போலருக்கு. அதனால பாம்புகள
கடிக்க வெச்சுட்டு அதுலயே அவங்க செத்துடுவாங்கன்னு நம்பி கட்டியிருந்த இரும்புச் சங்கிலிய
கழட்டிட்டு போயிருக்கணும்னு பாஸ் நினைக்கிறார். நல்ல வேளையா
அந்த பாம்போட விஷம் போதலை போலருக்கு. அதனால ரெண்டு பேரும்
உயிர் பிழைச்சிட்டாங்க. நாங்க அவங்களை ஆஸ்பத்திரில சேர்க்கறது ஒரு மணி நேரம் தள்ளிப்
போயிருந்தா கூட அவங்க ரெண்டு பேரும் செத்துப் போயிருக்க வாய்ப்பிருக்குன்னு டாக்டர்
சொல்றார்... ஆனா உயிரைக் காப்பாத்தினாலும் அந்த விஷம் அவங்க கொஞ்சம் மூளை
நரம்புகளை பாதிச்சிருக்குங்கறார். அது என்ன பாதிப்புங்கறது அவங்க ரெண்டு பேரும் சுயநினைவுக்கு
வந்தா தான் தெரிய வரும்.... பாஸ் என்ன செலவு ஆனாலும் பரவாயில்லை, எந்த பாதிப்பும்
இல்லாதபடி சிகிச்சை தரச் சொல்லியிருக்கார். அதனால அதைப்பத்தி
கவலை வேண்டாம்... பாஸ் உங்கள அந்த ஃபேக்டரி சொந்தக்காரங்களை விசாரிக்கச் சொல்லியிருக்கார்.”
ஜனார்தன் த்ரிவேதிக்கு அந்த ஃபேக்டரி
உரிமையாளர்கள் மீது கடுங்கோபம் வந்தது. நரேந்திரனுக்கு
அவர்கள் இடம் கொடுத்து உதவியது பச்சை அயோக்கியத்தனமாக அவருக்குத் தோன்றியது. இறந்து
போன அந்த ஃபேக்டரி முதலாளி அவருக்கு நன்றாகத் தெரிந்தவர் தான். தேர்தல்
சமயத்தில் அவர் கட்சிக்கு எப்போதும் ஒரு பெரிய தொகைக் கொடுக்கக்கூடிய ஆள் அவர். அந்த ஆள்
இறந்து போய் இப்போது அவர் பிள்ளைகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தான் ஃபேக்டரியை அவர்கள் இழுத்து
மூடியிருப்பதாக அவர் கேள்விப்பட்டிருந்தார்.
அவர் தன் ஆட்களிடம் இப்போது யாரிடம்
அந்த ஃபேக்டரியின் சாவியும், பராமரிப்பும் இருக்கிறது என்று விசாரித்தார். அந்த ஃபேக்டரி
முதலாளியின் மூத்த மகன் பெயரைச் சொன்னார்கள். உடனே
ஜனார்தன் த்ரிவேதி அந்தத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவருடைய
கட்சிக்காரனை அவனிடம் பேச அனுப்பி வைத்தார்.
உண்மையைச் சொல்லும்படி மிரட்ட வேண்டுமென்றும், அப்படி அந்த ஆள் உண்மையைச் சொன்னால் அதை ஒலிப்பதிவு செய்து கொண்டு வந்துவிடும்படியும் சொல்லி அனுப்பினார். நரேந்திரன் பெயரைச் சொல்ல அந்த ஆள் பயந்தால் ‘பாதுகாப்புக்கு
நாங்கள் இருக்கிறோம். கவலைப்படவேண்டாம்’ என்று நம்பிக்கையூட்டி வாக்குமூலம் பெற்று விடும்படி சொல்லி இருந்தார். அப்படி
அந்த ஆள் நரேந்திரன் பெயரை மட்டும் சொல்லி விட்டால் நரேந்திரன் அந்த வேலையில் இனி இருக்க
முடியாதபடி கண்டிப்பாக அவர் பார்த்துக் கொள்வார். அப்படியே சொல்லா விட்டாலும் உண்மையை உரக்கச்
சொல்ல மதன்லாலும், சஞ்சயும் இருக்கிறார்கள்….. அதனால் நரேந்திரன் அவரிடமிருந்து தப்ப முடியாது…
சற்று முன் தான் அவர் ஆஸ்பத்திரிக்கு வந்தார். ஐசியூவில் இருந்த அவர் மருமகனை
நேரில் பார்த்த போது அவன் மயக்க நிலையில்
இருந்ததும், அடையாளம்
தெரியாதபடி இளைத்திருந்ததும் அவரை வேதனைக்கு உள்ளாக்கியது.
”ரொம்பவே இளைச்சுட்டான்” என்றார் வருத்ததுடன்.
“சரியா உணவு கிடைக்கலை போலருக்குய்யா. உயிர் பிழைச்சிருக்கறதுக்குத்
தேவையான அளவுக்குத் தான் சாப்பிடக் கிடைச்சுருக்கு” என்று டாக்டர்
சொன்னார்.
அவர் மருமகனை உற்றுப் பார்க்கையில் தான் அஜீம் அகமதின் ஆள் சொன்னபடி
கைகளிலும் கால்களிலும் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த வடுக்கள் தெரிந்தன. கண்டிப்பாக அவனிடமிருந்து
நரேந்திரன் உண்மையை வரவழைத்திருப்பான். அதை வீடியோ எடுத்தும்
வைத்திருக்கலாம். சஞ்சய் தைரியமானவனோ, உறுதியானவனோ
அல்ல. அவன் உண்மையில் மிகவும் பயந்தவன். சித்திரவதை யாரும் செய்ய வேண்டியதில்லை. சித்திரவதை செய்யப்
போவதாகச் சொன்னாலே அவன் எல்லா உண்மைகளையும் உளறியிருப்பான். அது
ஒரு பிரச்னை இல்லை. எதை அவன் சொல்லியிருந்தாலும் சித்திரவதை செய்து
வற்புறுத்தி வாங்கப்பட்ட வாக்குமூலம் என்று அலட்டாமல் அறிக்கை விட்டுவிடலாம்.
அரசியல்வாதியின் பலமே அது தானே. உண்மையைப் பொய்யாகவும்,
பொய்யை உண்மையாகவும் நீண்ட காலம் சொல்லி வந்தால் அதை உண்மை என்று நம்ப
ஒரு கூட்டம் இருந்து கொண்டேயல்லவா இருக்கும். அதனால் சஞ்சய் எந்த உண்மையைச் சொல்லியிருந்தாலும்
சரி, அது பற்றி
அவருக்குக் கவலையில்லை.
ஜனார்தன் த்ரிவேதியின் மருமகன் என்று தெரிந்தும் அவனை இந்த நிலைக்கு
ஆளாக்கியிருக்கிறானே அந்த திமிர் பிடித்த நரேந்திரன்! அவனை எண்ணுகையில் அவருக்கு
ரத்தம் கொதித்தது. நரேந்திரன் இதற்குப் பெரிய விலை ஒன்றைக் கண்டிப்பாகத்
தரத்தான் போகிறான். அவர் அவனை சும்மா விடப்போவதில்லை. அவனோடு சேர்ந்து பிரதமரையும் அவர்
பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சிக்கத் தான் போகிறார். பிரதமர் தான் நரேந்திரனுக்கு அந்தப்
பழைய வழக்கை மறுபடி விசாரிக்க அனுமதி தந்தவர். அவர் கொடுத்திருக்கும்
தைரியத்தில் தான் நரேந்திரன் சட்டத்தைத் தன் கையில் எடுத்திருக்கிறான் என்றும் சொல்லப்
போகிறார். சஞ்சயும் மதன்லாலும் சுயநினைவுக்கு வரட்டும்.
அவர் கண்டிப்பாகப் பத்திரிக்கையாளர் கூட்டத்தைக் கூட்டத்தான் போகிறார்.
இவர்களின் பரிதாப
நிலையைப் பார்க்கையில் நரேந்திரனின் அராஜகப் போக்கு எந்த நடுநிலையாளனையும் கூட அதிரவே
வைக்கும்.
அவர் ஆவலோடு டாக்டரிடம் கேட்டார். ”இவங்களுக்கு எப்ப சுயநினைவு
வரும்?”
டாக்டர் சொன்னார்.
“சாயங்காலம் இவங்களுக்கு சுயநினைவு வந்துடும்…”
சாயங்காலம் திரும்பவும் வருவதாகச் சொல்லி ஜனார்தன் த்ரிவேதி
அங்கிருந்து கிளம்பினார். வெளியே காவலுக்கு அவருடைய ஆட்களும், அஜீம் அகமதின் ஆட்களுமாக
குறைந்தது இருபது பேராவது இருந்தார்கள். நரேந்திரனுக்கு சஞ்சயும்,
மதன்லாலும் பிழைத்திருப்பது தெரிந்தாலும் இனி என்றும் அவன் அவர்களை நெருங்க
முடியாது!
(தொடரும்)
என்.கணேசன்
இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -
(அல்லது)
என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம்.
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.
If they become conscious Narendran will face problems. How is he going to manage that? Will Nagaraj help him that also?
ReplyDeleteமாலை அவர்கள் கண்விழித்து சொல்லக் கூடிய உண்மைக்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்... நாகராஜ் எவ்வித பாதிப்பை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்... என்பதை அறிய ஆவலாக உள்ளது....
ReplyDeleteBoth will get consciousness but may not remember anything happened in the past, Nagaraj will make sure that their memories are cleaned up totally.
ReplyDelete