Monday, July 11, 2022

யாரோ ஒருவன் 93

 

ஜீம் அகமது தன் வாழ்க்கையில் பல ரக மனிதர்களைப் பார்த்திருக்கிறான். மிக நல்ல மனிதர்களிலிருந்து மிக மட்டமான மனிதர்கள் வரை, பேரறிவு படைத்த மனிதர்களிலிருந்து அடிமுட்டாள் மனிதர்கள் வரை, எதற்கும் கலங்காத, தைரியமான இரும்புமன மனிதர்களிலிருந்து கோழைத்தனத்தின் உச்ச மனிதர்கள் வரை  கவனித்திருக்கும் அனுபவம் இருக்கிறது. ஆனால் எல்லாருமே சில சின்னஞ்சிறு வித்தியாசங்களுடனாவது ஒரு ரகத்தில் அடக்கி விடமுடிந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் செய்கைகளுக்குப் பின்னால் சில காரணங்களைக் கண்டுபிடித்துவிட முடியும். அதே போல் இதைச் செய்தவர்கள் இனி என்னவெல்லாம் செய்யக்கூடும் என்பதையும் அவனால் யூகிக்க முடிந்தவர்களாக இருந்தார்கள். ஆனால் மகேந்திரன் மகன் அவனைச் சிறிது குழப்பினான்.

 

சஞ்சய் ஷர்மா காணாமல் போன பின் அவனைக் கடத்தியது அவர்களோ, அவர்களுக்குத் தெரிந்த ஆட்களோ இல்லை என்றான பிறகு அவனுக்கு மகேந்திரன் மகன் மீது சந்தேகம் வந்தது. மதன்லாலும் காணாமல் போன பிறகு கடத்தியது மகேந்திரன் மகனே என்பது அவனுக்கு உறுதியாகியது. அவனுடைய பழைய வரலாறு அறிந்திருந்ததால் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்ளத் தயக்கமில்லாத அவன் தான் அந்தக் காரியத்தைச் செய்திருப்பான் என்று புரிந்தது. கடத்தியவனுக்குப் பணம் தான் முக்கியம் என்றால் மதன்லாலை விடப் பணக்காரர்களைக் குறி வைத்திருப்பான். போலீஸ் அதிகாரியையே கடத்தும் மனோதைரியமும், அவசியமும் மகேந்திரன் மகனுக்குத் தான் பொருந்துகிறது என்று கணித்தான். ஐம்பது லட்சம் கேட்டுப் போன் செய்ததை எல்லாம் அஜீம் அகமது உண்மை என்று நம்பவில்லை.

 

அந்தப் பூட்டிய ஃபேக்டரியில் மதன்லாலையும், சஞ்சய் ஷர்மாவையும் கண்டுபிடித்து அவன் ஆட்கள் போன் செய்த போது அங்கு மகேந்திரன் மகன் தான் அவர்களை அடைத்து வைத்திருக்க வேண்டும் என்று உடனே அஜீம் அகமது யூகித்தான். அந்த ரோந்து போலீஸ் அவன் ஆட்களை அழைத்துக் கொண்டு போனதற்கும் கூடப் பின்னணியில் மகேந்திரன் மகன் இருக்கக்கூடும். குறுகிய காலத்தில் அவர்களை அவனால் அப்புறப்படுத்த முடியாமல் போயிருக்கலாம். அதனால் அப்படியே விட்டுப் போயிருக்கலாம். அவன் இடத்தில் அஜீம் அகமது இருந்தால், அவர்களிடம் கறக்க வேண்டிய விஷயங்களைக் கறந்து முடித்திருந்தால், அவன்  அவர்களைக் கொன்று எங்காவது புதைத்திருப்பான். அதை மகேந்திரன் மகனுக்குச் செய்ய முடியாமல் மனசாட்சி தடுத்திருக்கலாம். ஆனால் அவர்களை அப்படியே விட்டு வந்திருந்தால் அவன் அவர்களைக் கடத்தியதை அவர்கள் தெரிவித்திருப்பார்கள். இந்தச் சிக்கல் மகேந்திரன் மகனுக்கு இருந்திருக்கும். இது வரை நூல் பிடித்தது போல் அனுமானிக்க முடிந்த அஜீம் அகமதுக்கு இதன் பின் நடந்தவை எதுவுமே பிடிபடவில்லை.

 

சங்கிலியால் கட்டப்பட்டிருந்த வடுக்கள் இருவர் கை கால்களிலும் தெரிகின்றது. அப்படியானால் சங்கிலிகளைக் கழற்றுவதற்கு முன்னால் பாம்புகளைக் கடிக்க வைத்திருக்கலாம் என்றாலும் ஏன் இப்படி அரைகுறை விஷமுள்ள பாம்புகளால் கடிக்க வைத்திருக்கிறான்? இல்லை விஷமுள்ள பாம்புகளாக நினைத்து அந்தப் பாம்புகளைக் கடிக்க வைத்துப் போய் விட்டானா? அவற்றின் விஷம் போதவில்லையோ? இன்னும் மதன்லாலும், சஞ்சய் ஷர்மாவும் ஐசியூவில் தான் இருக்கிறார்கள். இன்னும் அவர்கள் உடல்நிலையைத் தீர்மானமாக டாக்டர்கள் சொல்லவில்லை. பாம்பு சமாச்சாரம் அவனை நிறையவே குழப்பியது. இது மகேந்திரனின் மகன் முத்திரையாக இல்லை!

 

எதற்கும் டெல்லியின் சுற்றுவட்டாரங்களில் இது போன்ற விஷயங்களுக்கு விஷப்பாம்புகள் கிடைக்குமிடங்களை அஜீம் அகமது விசாரிக்கச் சொன்னான். விசாரித்ததில் ஆக்ராவின் அருகில் ஒரு ஆள் அப்படித் தருவதுண்டு என்ற தகவல் கிடைத்தது. ஒருவேளை அவன் மகேந்திரன் மகனுக்குத் தந்திருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் வந்தது. ஆனால் அந்த ஆள் கடந்த மாதம் தான் அது போல் ஒருவருக்கு வாடகைக்குப் பாம்புகள் தந்ததாகவும் அதன்பின் யாருக்கும் அப்படித் தரவில்லை என்றும் சொன்னான். 

 

இன்னொரு விஷயம் அவனுக்கு நெருடலாக இருந்தது. மகேந்திரன் மகன் இப்போது கோயமுத்தூரில் இருக்கிறான். அவன் இங்கே நேரடியாக எதையும் செய்திருக்க வழியில்லை. அவனுக்கு யாரோ இங்கிருந்து கொண்டே உதவுகிறார்கள். யாரது? ’ராவிலிருந்து யாராவது உதவ வாய்ப்பிருக்கிறது என்று எடுத்துக் கொண்டாலும் பாம்புகளைப் பயன்படுத்தக்குடிய ரா அதிகாரிகள் யாரையும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

அவன் சிந்தனைகளை செல்போன் இசைத்துக் குறுக்கிட்டது. “ஹலோ

 

ஆஸ்பத்திரியில் அவங்க ரெண்டு பேரும் இன்னும் மயக்க நிலையிலேயே இருக்காங்க. ரெண்டு பேரோட லேப் ரிப்போர்ட்ஸும் வந்துடுச்சுன்னும் அவங்க உயிருக்கு ஆபத்து இல்லைன்னாலும் என்ன ஆகும்கிறதுல டாக்டர்களே ரொம்ப குழப்பத்துல இருக்காங்கன்னும் தகவல் வந்திருக்கு பாஸ்……”

 

அஜீம் அகமது யோசித்தான். அவன் இந்தியா வந்திருப்பதையோ, மதன்லாலும், சஞ்சய் ஷர்மாவும் கிடைத்திருப்பதையோ அவன் இன்னமும் ஜனார்தன் த்ரிவேதியிடம் தெரிவித்திருக்கவில்லை. அவன் இந்தியா வந்திருப்பதை மிக அவசியம் என்ற நிலை வந்தால் ஒழிய அவரிடம் தெரிவிக்கும் உத்தேசம் இல்லை. விரலால் எண்ண முடிந்த எண்ணிக்கையைத் தாண்டி அதிகம் பேர் அறிந்தால் தேவையில்லாத ஆபத்து என்று அவன் உறுதியாக நினைத்தான்.  என்ன நடந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்து விட்டால் சஞ்சய் ஷர்மா கிடைத்து விட்டான் என்பதை அவரிடம் தெரிவிக்கலாம். முதலில் டாக்டர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டு என்ன நடந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்வது மிக முக்கியம்அஜீம் அகமது சொன்னான். “உடனடியாய் டாக்டர் கிட்ட நீ போய் பேசு…”

 

டாக்டர் அவர்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட ஆள். சட்ட விரோதமான செயல்களில் அவர்கள் ஆட்கள் ஈடுபட்டு காயமடையும் போது சிகிச்சைக்கு அவருடைய ஆஸ்பத்திரிக்குத் தான் அவர்கள் போவது வழக்கம்.

 

அஜீம் அகமதுக்கு போன் செய்து பேசியவன் அடுத்த அரை மணி நேரத்தில் டாக்டர் முன்னால் அமர்ந்திருந்தான். டாக்டர் அவனிடம் விளக்கினார். “சஞ்சய் ஷர்மா உடம்புல ரெண்டு கால்லயும் பாம்புகள் கடிச்சிருக்கு. வலது கால்ல மூனு இடங்கள்லயும், இடது கால்ல ஒரு இடத்துலயும் பாம்புக்கடி காயங்களைப் பார்க்க முடியுது. மதன்லால் வலது கால்ல ஒரு இடத்துலயும், இடது கைல ரெண்டு இடங்கள்லயும் பாம்பு கடிச்சிருக்கு. கடிச்சது விஷப்பாம்பு. ஆனா அது உயிரை எடுக்கறதுக்குப் பதிலா மூளை நரம்புகளையும், கைகால் நரம்புகளையும் பாதிக்கிற விஷமா இருந்திருக்கு. அதனால என்ன பாதிப்பு எவ்வளவு பாதிப்புங்கறது அவங்க முழு விழிப்புணர்வுக்கு வந்த பிறகு தான் நமக்குத் தெரியும்…”

 

அவங்க விழிப்புணர்வுக்கு இது வரை வரவேயில்லையா?”

 

அரைகுறையா வர்றாங்க…. சில நிமிஷத்துல திரும்பவும் மயக்கமடைஞ்சுடறாங்க….”

 

அப்படி அரைகுறையா நினைவுக்கு வர்றப்ப ஏதாவது சொல்றாங்களா?”

 

பாம்புங்கற வார்த்தையை தான் அதிகம் சொல்றாங்க. ரொம்பவே அது அவங்கள பயப்படுத்திடுச்சுன்னு நினைக்கிறேன்….”

 

வேற எந்த வார்த்தையும் சொல்றதில்லையா?”

 

சப்பாத்தின்னும் அப்பப்ப சொல்றாங்க….”

 

சப்பாத்தின்னா…. ரெண்டு பேருமா?”

 

ஆமாம்

 

பாம்பு என்ற வார்த்தையை அவர்கள் சொல்வதை அந்த ஆளால் புரிந்து கொள்ள முடிந்தது. பயத்தினால் சொன்னது என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இருவருமே சப்பாத்தியைச் சொல்வதற்கு என்ன காரணமிருக்கும் என்பது அவனுக்குப் புரியவில்லை. அவன் டாக்டரைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான். “ஆள் பேர் எதாவது சொல்கிறார்களா?”

 

இல்லைஎப்பவாவது தடியன்னு சொல்றாங்க

 

அவங்க எப்ப முழு விழிப்புணர்வுக்கு வருவாங்க

நாளைக்கு முழு விழிப்புணர்வு வந்துடும்னு நினைக்கிறோம். நான் முதல்லயே சொன்ன மாதிரி அவங்களோட மூளை பாதிப்பின் விளைவுகள் என்னங்கறதை  அப்புறமா தான் நாம தெரிஞ்சுக்க முடியும்.”

 

அடுத்த ஐந்து நிமிடத்தில்  டாக்டரிடம் பேசியதன் ஒலிப்பதிவு அஜீம் அகமதை வந்து சேர்ந்தது. முழுவதுமாகக் கேட்ட அஜீம் அகமது தன் ஆளுக்குப் போன் செய்து சொன்னான். “ஜனார்தன் த்ரிவேதி கிட்ட ரெண்டு பேரும் கிடைச்சுட்ட தகவலைச் சொல். நான் இந்தியா வந்துட்டேன், இங்கே இருக்கேன்கிறது மட்டும் அந்த ஆளுக்குத் தெரிய வேண்டாம். மத்தபடி இவங்க கிடைச்சது எப்படிங்கற விவரங்களை சொல்லு. அந்த ஆள் போய் அவங்க ரெண்டு பேரையும் பார்க்கட்டும். அவங்க என்ன சொல்றாங்கன்னு கேட்கட்டும்.  அதுக்கப்பறம் நாம என்ன செய்யறதுன்னு முடிவு செய்வோம்…”

 

(தொடரும்)

என்.கணேசன்

 

இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

 

2 comments:

  1. The way of Ajeem Ahmed's thinking is superb and intelligent. Next what?

    ReplyDelete
  2. அஜீம் அகமதின் சிந்தனையும் செயலும் அற்புதமாக இருக்கிறது...நரேந்திரனுக்கு சவாலாக இருக்கிறான்...

    ReplyDelete