Thursday, July 28, 2022

சாணக்கியன் 15

 

கேகய தூதர் நடுத்தர வயதைக் கடந்தவர். அனுபவசாலி. இது போன்ற பல கடுமையான பார்வைகளைப் பார்த்துப் பழகியவர். எனவே ஆம்பி குமாரனின் பார்வையால் கடுகளவும் பாதிக்கப்படாமல் அவனையே பார்த்து நின்றிருந்தார். ஆம்பி குமாரனுக்கு அந்தப் பார்வை அவனுடைய ஆசிரியர் விஷ்ணுகுப்தரை நினைவுபடுத்தியது. அவரும் இப்படித் தான் பொருட்படுத்தாத பார்வை பார்த்து வெறுப்பேற்றுவார். இந்தத் தூதரும் அவரிடம் பயிற்சி எடுத்தவரோ? கேகய தூதரின் பார்வையில்நீ என்னை அரசரிடம் அனுப்புகிறாயா இல்லை நான் திரும்பிப் போகட்டுமா?” என்ற தோரணை தெரிந்தது. அவர் கொண்டு வந்திருக்கும் செய்தி என்ன என்பதை அவனால் யூகிக்க முடிந்ததால் மேற்கொண்டு அந்தப் பார்வையைப் பார்த்துக் கொண்டிருக்கப் பிடிக்காமல்யாரங்கேஎன்று குரல் எழுப்பினான்.

அவன் குரல் கேட்டு உள்ளே வந்த வீரனிடம்இவரை மன்னரிடம் அழைத்துப் போஎன்று சொன்னான். கேகய தூதர் அவனை தலை தாழ்த்தி வணங்கிவிட்டு அந்த வீரனின் பின்னால் போனார்.


காந்தார அரசர் தோற்றத்தில் முதுமை மிக அழுத்தமாகத் தெரிந்தது. வணங்கி நின்ற தூதரிடம் அவர்வாருங்கள் கேகய தூதரே. அமருங்கள். என் நண்பரான கேகய மன்னர் நலம் தானா?”

 அமருங்கள் என்ற உபசார வார்த்தையைக் கேட்டு அமர்ந்து விடாத கேகய தூதர் மிகுந்த மரியாதையுடன் சொன்னார். “கேகய மன்னர் பூரண நலம் தான் காந்தார அரசே.”

 என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறீர்கள் தூதரே

 கேகய தூதர் மடை திறந்த வெள்ளம் போல் சொல்ல ஆரம்பித்தார்.  கேகய நாடு காந்தாரத்துடன் பல காலமாகவே நல்ல நட்புடன் தான் இருந்து வருகிறது காந்தார அரசே, தங்கள் மீது எங்கள் மன்னர் வைத்திருக்கும் மரியாதையும் நட்பும் காரணமாக இனியும் அப்படியே இருநாடுகளின் நட்பு தொடர வேண்டும் என்றும் எங்கள் மன்னர் விரும்புகிறார். ஆனால் அந்த விருப்பம் காந்தார நாட்டிற்கு இல்லாமல் இருப்பது அவரை வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது.....”.

 காந்தார அரசர் முகத்தில் குழப்பம் தெரிந்தது. ”காந்தாரமும் அதையே தான் விரும்புகிறது. அப்படி இருக்கையில் தவறான கருத்து கேகய மன்னர் மனதில் எழக் காரணம் என்ன?”

 இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு முறையும், சில நாட்களுக்கு முன்பு ஒரு முறையும்  தங்கள் படைகள் எங்கள் எல்லைகளில் அத்து மீறி நுழைந்து அங்கே பலத்த சேதத்தை ஏற்படுத்தி அங்குள்ள பசுமாடுகளை ஓட்டிக் கொண்டு போயிருக்கின்றன அரசே. அது நட்பு நாடு செய்யக்கூடிய காரியம் அல்ல...”

 காந்தார அரசர் திகைப்புடன் கேகய தூதரைப் பார்த்தபடி சொன்னார். “எங்கள் நாட்டில் என்ன குறைவென்று நாங்கள் இந்த ஈனச் செயலில் ஈடுபட வேண்டும்?”

 அது எங்கள் மன்னர் உங்களிடம் கேட்க விரும்பும் கேள்வி அரசே. நீங்கள் தான் பதில் அளிக்க வேண்டும். எதற்கும் தக்க பதிலடி தர முடியாத நிலையில் கேகய நாடு இல்லை என்பதைத் தாங்களும் அறிவீர்கள் அரசே. தங்களிடம் நட்பு பாராட்டி வரும் ஒரே காரணத்தால் தான் எங்கள் மன்னர் முன்பு நடந்ததைப் பொறுத்துக் கொண்டார். ஆனால் அந்தப் பொறுமையைத் தங்கள் நாடு பலவீனமாக எடுத்துக் கொண்டு சில நாட்களுக்கு முன் மீண்டும் அதே வேலையில் தங்கள் படைகள் செய்திருப்பதை எங்கள் மன்னர் விரும்பவில்லை. எங்கள் எல்லைகளைக் காக்கும் பொறுப்பும், சக்தியும் எங்களுக்கு உண்டு. முறையாகப் போர் அறிவித்தால் எந்தப் படையையும் சந்திக்கும் ஆற்றலும் எங்களுக்குண்டு. அப்படி வீரத்துடன் போரிடாமல் கொள்ளையர் போல் தங்கள் சிறுபடைகள் நடந்து கொண்டிருப்பதை எங்கள் மன்னர் வன்மையாகக் கண்டிக்கிறார்....”

 காந்தார அரசர் கேகய தூதர் சொன்ன தகவலை ஜீரணிக்கச் சிறிது நேரம் எடுத்துக் கொண்டார். அவர் முகத்தில் வருத்தமும், அவமான உணர்வும் வெளிப்படையாகவே தெரிந்தன. இந்தச் செயல்கள் நடந்திருக்கின்றன என்றால் அதன் பின்னணியில் அவர் மகன் தான் இருக்கிறான் என்பது மெள்ள விளங்க அவர் வருத்தத்துடன் சொன்னார். ”உண்மையில் இந்த இரண்டு நிகழ்வுகளும் நான் அறிந்து நடக்கவில்லை. தவறு எப்படி நடந்தது என்று விசாரிக்கிறேன். எங்கிருந்து பசுமாடுகள் அகற்றப்பட்டனவோ அங்கேயே அவை மீண்டும் வந்து சேரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடந்த செயல்களுக்கு மனமார்ந்த வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கேகய மன்னரிடம் சென்று தெரிவியுங்கள் தூதரே. இனி இப்படி நடக்காது என்பதற்கு உத்திரவாதமும் தருகிறேன்...”   

 ”நன்றி அரசரே....”

 தலைவணங்கி விட்டு கேகய தூதர் போன பிறகு காந்தார அரசர் தன் அமைச்சரையும், சேனாதிபதியையும், ஆம்பிகுமாரனையும் வரவழைத்து கேகய தூதன் சொன்ன செய்தியைத் தெரிவித்தார். அமைச்சர் சேனாதிபதி சின்ஹரன் இருவர் முகபாவனையிலிருந்தும் அவர்கள் இருவரும் எல்லையில் நடந்த சம்பவங்களை அறிந்திருந்தார்கள் என்பதும், அதில் அவர்களுக்கு உடன்பாடு இருக்கவில்லை என்பதும் காந்தார அரசருக்குத் தெளிவாகத் தெரிந்தது.  

 “மாவீரர்களாகப் பெயரெடுத்தவர்கள் மாடுபிடி திருடர்களாகப் பெயர் வாங்குவது கேவலமில்லையா சேனாதிபதி” காந்தார அரசர் சின்ஹரனைக் கோபத்துடன் கேட்டார்.

 சின்ஹரன் ஆம்பி குமாரனைப் பார்த்தான். அவனுக்கு சிறுபிள்ளைத்தனமான இந்தச் செயல்களில் ஆரம்பத்திலேயே விருப்பம் இருக்கவில்லை. அவன் அதை அந்தச் சமயங்களிலேயே எதிர்த்திருந்தான். ஆனால் ஆம்பி குமாரன் சிறு படைத்தலைவர்களைத் தேர்ந்தெடுத்து தன் அதிகாரத்திலேயே அவர்களை இந்தச் செயலில் ஈடுபடுத்தியிருந்தான் என்பதால் இதற்கு அவனே பதில் சொல்வது தான் முறையாக இருக்கும் என்று சின்ஹரன் நினைத்தான்.

 ஆம்பி குமாரன் தந்தையிடம் அலட்சியமான குரலில் சொன்னான். “தனி மனிதர்கள் செய்தால் கேவலமாகும் விஷயங்கள் நாடே செய்யும் போது கேவலமாவதில்லை தந்தையே. நான் அங்கிருந்து படையை எதிர்பார்த்தேன். ஆனால் கேகய மன்னன் தூதனை அனுப்பி இருக்கிறான்....”

 காந்தார அரசர் மகனைக் கடுங்கோபத்துடன் பார்த்தார். ”சில செயல்கள் யார் செய்தாலும் கேவலம் தான் மகனே. வீர பரம்பரையில் பிறந்தவர்கள் நினைக்கவும் கூசும் விஷயத்தைச் செய்ததுடன் நல்லெண்ணம் காரணமாக படையை அனுப்பாமல் தூதனை அனுப்பிய கேகய மன்னனை கேலியும் செய்கிறாய். உன் முட்டாள்தனத்திற்கு எல்லையே இல்லையா? உன் இந்தச் செயலுக்கு நீ என்ன காரணம் கூறுகிறாய்?”

 ஆம்பி குமாரன் அமைச்சர், சேனாதிபதி முன்னிலையில் தந்தை பேசிய வார்த்தைகளால் கடுமையாகக் கோபமடைந்தான்.  உங்களைப் போல் வேதாந்தம் பேசுமளவுக்கு எனக்கு வயதாகி விடவில்லை தந்தையே. நாட்டை விரிவாக்குவது தான் வீரம். கேகய நாட்டுடன் போரிட்டு வென்று காந்தாரத்துடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நாமாகப் போருக்குச் செல்ல நீங்கள் அனுமதி தர மறுப்பீர்கள் என்று தான் அவர்களுக்குக் கோபமூட்ட இப்படிச் செய்தேன். கேகய நாட்டுப் படைக்கு நம் நாட்டுப் படை எந்த விதத்திலும் சளைத்ததல்ல தந்தையே. நம் நாட்டின்  எல்லைகளை விரிவாக்கிக் கொண்டே போவதல்லவா வீரம்? அதைச் செய்ய மறுப்பதல்லவா கோழைத்தனம்?

 ”மகனே. வீரம் விவேகத்துடன் சேராமல் செயல்படுமானால் முட்டாள்தனமாகி விடும். கேகய அரசனும் மாவீரன். அவன் படையும் மிகப் பெரிய படை தான். சம பலத்தில் படைகள் போரிடுமானால் வெற்றி எந்தப் பக்கம் இருக்கும் என்பதை யாராலும் நிச்சயமாகச் சொல்ல முடியாது. எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில், இருப்பதைத் தொலைக்கவும் வாய்ப்பு நிறைய உண்டு. அண்டை அயலாருடன் அமைதியாக நலமாக இருக்கிறோம். அதை ஏன் குலைக்க முயல்கிறாய்?”

“வெறுமனே உண்டு, உறங்கி உயிர் வாழப் பிடிக்கவில்லை தந்தையே. இருப்பதைக் காத்துக் கொள்வதே பெரிய விஷயம் என்று நினைப்பது கோழைத்தனம் என்று நினைக்கிறேன். உங்கள் முதுமை உங்களை வீரத்துடன் முயற்சிகள் எடுக்க விடாமல் தடுக்கிறது என்பதைத் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்”

”மகனே முதுமை அனுபவங்களால் அடைந்த பாடங்களையும் தன்னிடம் வைத்திருக்கிறது என்பதை நீ புரிந்து கொள். நீ சிறுவன் அல்ல. நாளை அரியணையில் அமரப் போகிறவன். குலத்துக்கே அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டு அதற்கெல்லாம் வீரம் என்று பெயர் வைத்து உன்னை நீ ஏமாற்றிக் கொள்ளாதே.  நடந்தது நடந்து விட்டது. தவற்றை உணர்ந்து அதைத் திருத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.. கவர்ந்த பசுமாடுகளை அந்தந்த எல்லைப் பகுதிகளிலேயே ஒப்படைப்பதாக நான் கேகய மன்னனுக்கு வாக்களித்திருக்கிறேன். உடனே அதைச் செய்ய ஏற்பாடு செய்.”

ஆம்பி குமாரன் கொதித்துப் போய் எழுந்து நின்றான். “என் உடலில் உயிர் இருக்கிற வரை நான் சம்மதிக்க மாட்டேன் தந்தையே”

சொன்னவன் மறுபேச்சுக்காகக் காத்திராமல் அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.

 (தொடரும்)

என்.கணேசன்


இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்

அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும். 

2 comments:

  1. What I admire most in your writing is that we could see the character in our imagination and we could feel their thoughts in our heart. Example here are the minor characters like Gandhara king and son. Hats off to you sir. Write more and be blessed.

    ReplyDelete
  2. ஆம்பி குமாரனுக்கு பட்டால் தான் புத்தி வரும்... அவனுடைய இந்த சிறுமையான செயல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்....

    ReplyDelete