Monday, June 13, 2022

யாரோ ஒருவன்? 89


க்கத்து வீட்டிலிருந்து ரத்தினங்கள் எடுத்துச் செல்லப்பட்டிருக்கும் என்பதில்  ஏன் இவருக்குச் சந்தேகம் வருகிறது என்று நினைத்தபடி செல்போனை எடுத்து மணியிடம் பேச எண்ணியவன் பின் அந்த எண்ணத்தைக் கைவிட்டான். நாளை எதாவது பிரச்னை ஆகி மணி மாட்டிக் கொண்டால் பின் அவனிடம் போன் செய்து பேசியிருப்பது சிக்கலை ஏற்படுத்தி விடலாம்.

வேலாயுதம் அவனிடம் கேட்டார். “அவன் எப்ப கொண்டு வந்து தர்றதா சொல்லி இருக்கான்?”

அதெதுவும் சொல்லலை. மீதி பணம் அஞ்சு லட்சத்தை தயாரா வெக்கச் சொல்லியிருந்தான். பொருளைக் கொடுத்துட்டு அதை வாங்கிட்டுப் போறதா சொன்னான்.”

அவன் அந்த நாகரத்தினத்தோட அப்படியே கம்பி நீட்டிட மாட்டானே?”

கல்யாண் கஷ்டப்பட்டு பொறுமையை வரவழைத்துக் கொண்டு சொன்னான். “அதோட மதிப்பு அதிகபட்சமாவே ஐம்பது அல்லது அறுபதாயிரம் தான் இருக்கும்னு சொல்லி இருக்கேன்ப்பா. அதனால அந்தப் பயம் வேண்டியதில்லை. அவன் அஞ்சு லட்சத்துல தான் குறியாயிருப்பான்...”

தூரத்தில் நாகராஜ், சுதர்னோடு தீபக்கும் வருவது தெரிந்தது. வேலாயுதம் யோசனையுடன் சொன்னார். “அவன் வழக்கம் போல சாவகாசமா வாக்கிங் போயிட்டு வர்றான்னா அவனுக்கு இன்னமும் நாகரத்தினம் காணாமல் போனது தெரியலைன்னு அர்த்தம். இல்லைன்னா....”

அடுத்த அனுமானத்தை அவர் வாய் விட்டுச் சொல்லா விட்டாலும் அதை உணர்ந்த கல்யாண் உள்ளுக்குள் ஏனோ ஒரு திகிலை உணர்ந்தான். ஒருவேளை உண்மையாகவே நாகரத்தினம் அவனிடமே பத்திரமாக இருந்தால்.... விசேஷ சக்திகள் கொண்டவனாக சொல்லப்படும் நாகராஜ் எச்சரிக்கை அடைந்து பாம்புகளை அந்தத் திருடர்கள் மேல் ஏவியிருந்தால்....  மணியும் அவன் கோஷ்டியும் பாம்புகளைப் பார்த்து விட்டு பதறி ஓடிப்போயிருந்தால்.... 

மகன் முகத்தைப் பார்த்த வேலாயுதமும் அந்தச் சந்தேகங்களால் கவலையடைந்தார்.  “அந்த மணி கிட்ட ஒரு தடவை பேசிடேன்... இந்தக் குழப்பமே வேண்டாம்...”

நாகராஜ் வீட்டை நெருங்கி விட்டான். அவர்கள் இருவரையும் பார்த்து நட்புப் புன்னகையுடன் கையை உயர்த்தி விட்டு சுதர்னோடு பேசியபடி அவன் வீட்டுக்குள் நுழைந்து கொண்டான்வேலாயுதம் தீபக்கை இன்று விடுவதாய் இல்லை. வேகமாக ஓடி வழி மறைத்து நிறுத்திஎன்னடா நீ பெரிய மனுசனாட்டம் கண்டுக்காம போய்கிட்டிருக்கே. வா...” என்று சொல்லி அழைத்து வந்தார். ”என்னடா சொல்றான் அவன். அவனோட பாம்புகளைப் பத்தி ஏதாவது சொன்னானா?”

அதை நானா எப்படி கேக்க முடியும் தாத்தா.... அவர் இன்னிக்கு பொதுவாய் தான் பேசினார். வந்த வேலை சில நாள்ல முடிஞ்சுடுமாம். சீக்கிரமே போயிடுவேன்னு சொன்னார்

கல்யாணும் வேலாயுதமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். கல்யாண் கேட்டான். “அப்படி என்ன வேலையா அவர் வந்துருக்கார்னு கேட்டியா?”

கேட்டேன். அவர் பர்சனல் வேலைன்னார். அதுக்கு மேல கேட்க முடியல

மாடி வராந்தால இருந்து தர்ஷினி தீபக்கை கூப்பிட்டாள். “டேய் ஒரு நிமிஷம் வந்துட்டு போ

அவளைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்த தீபக் வேலாயுதத்திடமிருந்து தப்பித்து உள்ளே போய் விட்டான்.

அந்தச் சமயத்தில் தான் மணியிடமிருந்து ஒரு குறுந்தகவல் கல்யாணின் செல்போனுக்கு வந்து சேர்ந்தது. “காலை பத்து மணிக்கு வீட்டுக்கு வரவும்

அதைப் படித்து விட்டு கல்யாண் தந்தையிடமும் அந்தத் தகவல் சொல்ல, அவர் முகம் மலர்ந்தது. “நல்ல வேளை.... நான் என்னவெல்லாமோ நினைச்சு பயந்தே போயிட்டேன்.... அப்ப இந்த நாகராஜ் என்ன வெத்து வேட்டாடா? வீட்ல இருந்து நாகரத்தினம் காணாமல் போனதே தெரியாம வாக்கிங் போயிட்டு வர்றான்... நாகரத்தினத்தோட அந்த சக்தியும் இவனுக்கு போயிடுச்சா?”


ரேந்திரன் எத்தனையோ சிந்தித்தும் இந்தச் சிக்கலிலிருந்து மீள அவனுக்கு வழி தெரியவில்லை. அவன் தனிப்பட்ட விதத்தில் பொறுப்பேற்றே சஞ்சய் ஷர்மாவையும், மதன்லாலையும் கடத்தி வைத்திருக்கிறான். ரா தலைமை அதை அறிந்திருந்தாலும் வெளிப்படையாக அங்கீகரிக்கவோ, விசாரணை என்று வந்தால் அவனை ஆதரிக்கவோ, காப்பாற்றவோ முடியாத நிலைமையில் இருப்பதையும் அவன் அறிவான். அவன் தந்தையைக் கொன்றவர்களுக்கு உரிய தண்டனை கிடைத்த பின் அவனுக்கு என்னவானாலும் அவன் கவலைப்பட மாட்டான். ஆனால் இடையில் அவர்கள் தப்பித்து அவன் தண்டிக்கப்படும் நிலைமை வருவதை அவனால் தாங்க முடியவில்லை. இதை அவன் முன்பே எதிர்பார்த்திருக்க வேண்டும், அதிலிருந்து தப்பிக்கும் வழியை யோசித்திருக்க வேண்டும் என்றாலும் எல்லாம் யோசித்துச் செய்வதென்றால் எதுவுமே அவனால் செய்திருக்க முடியாது என்பதே யதார்த்த நிலைமை.....

காலை தான் அந்த இரண்டு நபர்களையும் வெளியே விட்டதாக அவனுடைய ரோந்து போலீஸ் நண்பன் தெரிவித்திருந்தான். இன்றிரவு வரை பிரச்னை இருக்காது. ஆனால் ஒரு தடவை கண்காணிக்க முடிவு செய்த இடத்தைச் சீக்கிரமாகச் சோதித்துப் பார்க்காமல் அவர்கள் ஓய மாட்டார்கள் என்பதை அவன் அறிவான். பெரும்பாலும் இன்றிரவே அவர்கள் முயற்சிக்கலாம். அவனால் வெளிப்படையாக அதைத் தடுக்க முடியாது. சந்தேகம் உறுதியானால் மீடியாவுடன் ஜனார்தன் த்ரிவேதி அங்கே வந்து சேரக்கூட வாய்ப்புண்டு. மதன்லாலையும், சஞ்சயையும் இடம் மாற்றலாம் என்றால் எதிரிகள் அறியாமல் வேறு புதிய இடம் பார்த்து உடனே மாற்றி விட முடியாது. இறைவன் தான் காப்பாற்ற வேண்டும், இல்லா விட்டால் சக்தி வாய்ந்த மனிதர்கள் யாராவது அவனைக் காப்பாற்ற வேண்டும். சட்டபூர்வமாக யாரும் காப்பாற்ற முடியாது. சட்டபூர்வமாக இல்லாமல் காப்பாற்றக்கூடிய சக்தி வாய்ந்த மனிதர்கள் யாராவது…… என்ற வகையில் யோசித்துக் கொண்டே வந்த நரேந்திரனுக்கு இந்தக் கட்டத்தில் திடீரென்று நாகராஜின் நினைவு வந்தது.

நாகராஜிடம் விசேஷ சக்திகள் இருக்கின்றன என்பது உண்மை தான். நரேந்திரனின் பூர்வாங்கத்தை அறிந்திருந்ததோடு குறிப்பிட்ட நேரத்தில் அவன் தாய் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பதைக்கூடச் சொன்னவன் நாகராஜ். அவன் உதவ முடியுமா? விசாரிக்கவென்று போவதற்கே அவன் முன்அனுமதி பெற்று மூன்று நாள் காத்திருக்க வேண்டியிருந்தது. உதவி கேட்டுப் போவதென்றால் ஐந்து லட்சம் தரவும், ஐந்து மாதம் காத்திருக்கவும் வேண்டும்இதை நினைத்த போதே மனம் உற்சாகமிழந்தது. அவனைச் சந்தித்த போது கடைசியில் அவன் அக்கறையுடன் எச்சரித்ததும் அவன் குரலில் தெரிந்த மென்மையும் நினைவுக்கு வர நரேந்திரன் நாகராஜிடம் பேசிப் பார்ப்பதில் தவறில்லை என்று நினைத்தான்கடைசி முயற்சி….!


நாகராஜுக்கு போன் செய்த போது நரேந்திரனுக்கு அவன் உதவுவானா, அப்படி உதவினால் எந்த வகையில் அவனால் உதவ முடியும் என்பதெல்லாம் தெரிந்திருக்கவில்லை. முதலில் அவன் சந்திக்க ஒப்புக் கொள்வானா என்பது கூட அவனுக்கு நிச்சயமில்லை. இருந்த போதிலும் இந்தச் சிக்கலில் இருந்து தப்பிக்கும் கடைசி முயற்சியாக அவன் போன் செய்த போது சுதர்ன் தான் முதலில் பேசினான். மிக அவசரமாக நாகராஜிடம் தனிப்பட்ட முறையில் பேச வேண்டும் என்று அவன் மிகப்பணிவாகக் கேட்டுக் கொண்ட போது சில வினாடிகள் யோசித்து விட்டு சுதர்ன் நாகராஜிடம் கேட்டுச் சொல்வதாகச் சொன்னான்.

இரண்டு நிமிடங்கள் கழித்து நாகராஜின் குரல் கேட்டது. “ஹலோ

ஹலோ சார் நான் நரேந்திரன் பேசறேன்.”

சொல்லுங்க என்ன விஷயம்?”

சார் நான் அந்த வழக்கு சம்பந்தமா எடுத்த சில நடவடிக்கைகளால பெரிய சிக்கல்ல மாட்டியிருக்கேன். இதுல இருந்து என்னோட டிபார்ட்மெண்ட் கூட இப்ப என்னைக் காப்பாத்த முடியும்னு தோணல. செத்துப் போனவங்க ஆத்மாவுக்காகக்கூட மனமிரங்கி உதவி செய்யறவங்க நீங்க.... எனக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா?” நரேந்திரன் ஆத்மார்த்தமாகக் கேட்டான்.


நாகராஜ் சில வினாடிகள் பேசவில்லை. சிக்கல் என்று சொன்ன நரேந்திரன் அது என்ன சிக்கல் என்று சொல்லாததால் அது என்ன என்று தன் நாகசக்தியால் பார்த்துக் கொண்டிருக்கிறானோ என்ற சந்தேகம் நரேந்திரனுக்கு வந்தது. அந்த சில வினாடிகள் சில யுகங்களாக நரேந்திரனுக்கு நகர்ந்தன.


(தொடரும்)
என்.கணேசன்


இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)

என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.




2 comments:

  1. இந்த பகுதியிலையும்... சஸ்பென்ஸ் உடையலையே😥😥

    ReplyDelete
  2. Very very interesting. Can't bear suspense. Again waiting for next Monday.

    ReplyDelete