அஜீம் அகமது அவர்கள் போன மறுகணம் ஆப்கானிஸ்தான்
பகுதியில் அவன் இயக்கத்து ஆட்களுக்கு ஏற்பட்டிருந்த
புதிய பிரச்னை குறித்த தகவல்களைத் தன் லாப்டாப்பில் படிக்க ஆரம்பித்தான். இனி மகேந்திரன் மகன் பிரச்னைக்கு மூன்று நாட்கள் கழித்து
தான் அவன் வருவான். அதன் பின் அப்பன் கதையை ஒரேயடியாய் முடித்தது போலவே மகன்
கதையையும் பொருத்தமான விதத்தில் முடித்து விட்டுத் தான் மற்ற வேலைகளை அவன் பார்க்கப்
போகிறான் என்பதால் முன்கூட்டியே அவன் அந்த மற்ற வேலைகள் குறித்துச் செய்ய வேண்டியதைச்
செய்தாக வேண்டும்...
மணி வீட்டில் அவன் ஆட்கள் ஆறு பேர் கூடியிருந்தார்கள். மணி டீப்பாய்
மீது நாகராஜின் வீட்டின் வரைபடத்தை வைத்து வீட்டின் அமைப்பை அவர்களுக்கு விளக்கிக்
கொண்டிருந்தான். அந்த ஆறு பேர் பார்வையும் மணி மீதும், வரைபடத்தின்
மீதும் மாறி மாறி விழுந்து கொண்டிருந்தது. அவர்கள்
முழுக்கவனமும் அவன் சொல்கின்ற வார்த்தைகளில் தங்கியிருந்தது.
வீட்டின் வரைபடத்தை விளக்கி முடித்த
மணி அவர்கள் திட்டத்தை அவர்களிடம் விளக்க ஆரம்பித்தான்.
“இந்த வீட்டுக்குப்
பக்கத்துல இருக்கற கேஜி காம்ப்ளக்ஸ்ல இருக்கற நாலு தியேட்டர்கள்லயும் ஓடற படங்கள்ல
கடைசியா முடியற படம் ராத்திரி 1.15க்குத் தான் முடியுது. படம் முடிஞ்ச
பிறகு டீக்குடிச்சுட்டு கிளம்பற ஆட்களும் கூட இந்த வீட்டுப் பகுதியை
1.45க்குள்ளாற கடந்து போயிடறாங்க. அதுக்கப்பறம் இந்தப்
பகுதில ஏதாவது பைக்கோ, காரோ, ஆம்புலன்ஸோ அப்பப்ப வந்து போகும்னாலும் யார் கவனமும் இந்த
வீட்டு மேல இருக்கப் போறதில்லை. இங்கே போலீஸ் ரோந்தும் இருக்குன்னாலும் அவங்க ராத்திரி
12.30 மணி சுமாருக்கு ஒரு தடவையும், காலைல நாலரை மணி
சுமாருக்கு ஒரு தடவையும் தான் வந்து போவாங்க. நாலரை மணிக்கு
மேல வாக்கிங் போறவங்க சிலரும் வர ஆரம்பிச்சுடுவாங்க. அதனால நம்ம
ஆபரேஷன் ராத்திரி ரெண்டிலிருந்து மூனே முக்காலுக்குள்ளார முடிஞ்சு நாம அந்த இடத்தை
நாலு மணிக்குள்ளே காலி செய்துடணும். வழக்கமா நம்ம வேலைக்கு
ஒன்னே கால் மணி நேரம் போதும்னாலும் எதிர்பாராத பிரச்சன எதாவது வந்தாலும் அதைச் சமாளிக்க
நமக்கு கூடுதலா கிட்டத்தட்ட அரை மணி நேரம் கிடைக்குதுங்கறது நமக்கு சாதகமான அம்சம்...”
“அந்த வீட்டுக்குள்ளே
பாம்பு சீறுற சத்தம் கேட்கறதா நம்ம கஸ்டமர் சொல்றார். அது பாம்பு
தானா இல்லை வேற எதாவது சத்தமான்னு நமக்குத் தெரியாது. ஆனாலும்
நாம ஜாக்கிரதையாய் இருக்கறது நல்லது. அதுக்காக ஒரு மூலிகை
எண்ணெய் வாங்கிட்டு வந்திருக்கேன். இந்த எண்ணெயை பூசிகிட்டா
இந்த நெடிக்கு எந்தப் பாம்பும் நம்மள கிட்ட நெருங்காது. இது பாம்புகள் நிறைஞ்ச பகுதில வேலை செய்யறவங்க பயன்படுத்த
எண்ணெய்ங்கறதால நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இது. நம்மள்ள
அந்த வீட்டுக்குள்ளே நுழையப் போற நாலு பேரும் பூசிக்குவோம். மத்தவங்க
பூசிக்க வேண்டியதில்லை.... நாம சரியா ரெண்டு மணிக்கு அந்த இடத்துக்குப் போய் சேர்றோம்....”
அவர்கள் ஆறுபேரும் தலையசைத்தார்கள். மீதியை
அறுவரில் ஒருவனாக இருந்த மணியின் பிரதான கூட்டாளி சொல்ல ஆரம்பித்தான். அவன் அந்த
ஆட்களில் மிகவும் குள்ளமாகவும், ஒல்லியாகவும் சிறு பையனைப் போலிருந்த ஆளைப் பார்த்து முதலில்
சொன்னான். “நீ வழக்கம் போல முதல்ல மொட்டை மாடி ஏறி கதவை உடைச்சிட்டு சிக்னல் அனுப்பினா
நம்ம விக்டர் மயக்க மருந்தோட மேல வந்து சேர்வான். ரெண்டு
பேரும் உள்ளே போய் வீட்டுக்குள்ளே இருக்கிற ரெண்டு பேரையும் மயக்கமடையச் செஞ்சுடுங்க. பிறகு கீழே
கதவைத் திறந்தீங்கன்னா நானும் மணியண்ணாவும் வர்றோம். நமக்கு
வேலை முடிக்க அதிகபட்சமா முக்கால் மணி நேரம் தான் ஆகும்.... நம்ம கஸ்டமர்
சொல்றதைப் பார்த்தா அந்த வீட்டுல வேற சாமான்கள் அதிகமிருக்காது. அவர் கேட்ட
ரத்தினங்களோட நகைநட்டு எதாவதோ, விலையுயர்ந்த வேற பொருள்களோ கூடக் கிடைச்சுதுன்னா நம்ம அதிர்ஷ்டம். நாம கிட்டத்தட்ட
வேலையை முடிச்சுட்டு மூனே காலுக்கு வந்துட முடியும்னு தான் தோணுது. ஒரு வேளை
ஏதாவது லேட் ஆனாலும் மூனரைக்கு கண்டிப்பா வெளியே வந்துடலாம். நாங்க வெளியில
வர்ற வரைக்கும் சுப்பன் வீட்டு வாசல்ல நின்னு காவல் காக்கனும். பழனியும், துரையும்
ரெண்டு பக்கமும் நூறு மீட்டர் தொலைவுல நின்னு ஏதாவது பிரச்சன வருதான்னு பார்த்துட்டு
நிக்கனும். அப்படி
வந்துச்சுன்னா சிக்னல் தரணும். பழனி நிக்க வேண்டியது இந்த இடத்துல, துரை நிக்க
வேண்டியது இந்த இடத்துல...” என்று வரைபடத்தில் அந்த இடங்களை அவன் காட்டினான்.
அனைவரும் முழுக்கவனத்துடன் கேட்டுக்
கொண்டார்கள். கடைசியில் மணி கேட்டான். “யாருக்கும்
எந்த சந்தேகமும் இல்லையே...”
இல்லை என்று தலையசைத்தார்கள்.
வேலாயுதத்துக்கு நேரம் மிக மெள்ள நகர்வதாகத் தோன்றியது. மாலை நேரம்
முடிந்து இருட்ட ஆரம்பித்ததிலிருந்தே ஐந்து
நிமிடத்திற்கு ஒரு முறை கடிகாரம் பார்த்து சலித்தார். எல்லாம்
திட்டப்படி நடந்தால் நாளை இன்னேரம் அதிர்ஷ்டம் இடம் மாறியிருக்கும்...
அதற்குப் பின் கோயமுத்தூரில் இருப்பதா, பம்பாய்
அல்லது டெல்லியிலிருப்பதா இல்லை அமெரிக்காவுக்கே போய் தங்கி விடலாமா என்றெல்லாம் யோசிக்க
யோசிக்க அவர் கண்கள் பிரகாசிக்க ஆரம்பித்தன.
அவர் மகன் இரவில்
வந்தவுடன் தாழ்ந்த குரலில் கேட்டார். “அவனுக எத்தனை
மணிக்கு வருவானுகன்னு கேட்டியாடா?”
கல்யாண் பொறுமையிழந்து சொன்னான். “அதையெல்லாம்
நாம கேட்கக்கூடாதுப்பா. கேட்டா அவனுக வெளிப்படையா சொல்லவும் மாட்டானுக. நமக்கு
வேலையாகணும். அவனுக நாம கேட்ட பொருளை எடுத்துகிட்டு வந்தா காசு தருவோம். அவ்வளவோட
நாம நிறுத்திக்கணும். நமக்கு அவனுக எப்படி பண்றானுக எப்ப பண்றானுகங்கறதெல்லாம்
அனாவசியம்....”
வேலாயுதம் ஏமாற்றத்துடன் தலையசைத்தார். அதுவும்
சரி தான் என்று தோன்றினாலும் அந்த நேரம் சரியாகத் தெரிந்தால் அதற்கு முன்னாலேயே சிறிது
தூங்கி விட்டுப் பின் முழித்திருக்கலாம் என்று அவருக்குத் தோன்றியது.
அவர் முகத்தில் தெரிந்த ஏமாற்றத்தைப்
பார்த்த கல்யாண் சொன்னான். “பெரும்பாலும் இந்த மாதிரி வேலைகள் எல்லாம் ராத்திரி ஒரு மணிக்கு
மேல நாலு நாலரைக்குக்குள்ள தான் நடக்கும்... ஆனா நான்
சொன்னது நினைவு இருக்கில்ல. வெளியே என்ன சத்தம் கேட்டாலும் நீங்க வெளியே போய் பார்க்கிறது
மட்டும் வேண்டாம்...”
வேலாயுதம் சொன்னார். “இடியே விழுந்தாலும்
நான் வெளியே போய் பார்க்க மாட்டேன். கவலைப்படாதே.”
வேலாயுதம் கடிகாரத்தைப் பார்த்தார். மணி இப்போது
தான் ஒன்பதே கால் ஆகிறது. ஒரு மணி ஆக இனியும் மூனேமுக்கால் மணி நேரம் இருக்கிறதே. இந்த நேரம்
சீக்கிரத்தில் நகராதே.... சிறிது கண்ணயர்ந்து விட்டு சுமார் பன்னிரண்டரை வாக்கில் எழுந்தால்
பின் அவர்கள் வேலை முடிக்கிற வரை வேடிக்கை பார்க்க சரியாக இருக்கும் என்று எண்ணியவராகத்
தனதறைக்குக் கிளம்பினார்.
கல்யாணுக்கு அன்றிரவு உறக்கம் வரும்
என்று தோன்றவில்லை. ஆனால் அவன் உறங்காமல் விழித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால்
மேகலா காரணம் கேட்பாள்.... ’வர வர உங்கப்பா மாதிரியே ஆயிட்டு வர்றீங்க’ன்னு சொல்வாள்.. என்று எண்ணியவன்
அவள் உறங்க ஆரம்பிக்கும் வரையாவது உறங்குவது போல நடிக்கலாம் என்று முடிவு செய்தான்....
அன்றைக்கென்று பார்த்து மேகலா வழக்கமான
நேரத்தில் உறங்கவில்லை. அவள் உறங்க ஆயத்தமான போது அமெரிக்காவிலிருந்து அவள் சினேகிதி
ஒருத்தி போன் செய்தாள். நேரம் போவது தெரியாமலேயே அவளிடம் மேகலா பேச ஆரம்பிக்க, படுக்கையில்
சாய்ந்தபடி வாட்சப் தகவல்களைப் பார்த்துக் கொண்டிருந்த கல்யாண் எப்போது கண்ணயர்ந்தான்
என்றே தெரியவில்லை.
Story is very interesting in both places. Dhik Dhik moments in both places. Eagerly waiting for next Monday.
ReplyDeleteநரேந்திரனுக்கு அஜும் அகமது வந்தது தெரியும்...அவர்களை வேறு இடத்திற்கு மாற்றி வைத்திருப்பானா?
ReplyDelete