Thursday, May 5, 2022

சாணக்கியன் 3

 

பாடலிபுத்திரத்துக்கு வந்த உத்தேசம் என்ன என்று கேட்ட கேள்விக்கு உடனடியாக விஷ்ணுகுப்தர் பதில் சொல்லவில்லை. பின் கோபாலனையும் தாண்டி வெற்றிடத்தில் பார்வையை நிலைநிறுத்தியபடி சொன்னார். “அந்தராத்மாவின் குரல் பாடலிபுத்திரம் போ என்று சில காலமாகவே சொல்லி வருகிறது கோபாலா. அதனால் தான் கிளம்பி வந்தேன். இங்கே வந்து என்ன சாதிக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆத்மா உணர்ந்த காரணம் இன்னமும் என் அறிவுக்கு எட்டவில்லை. ஆனால் அந்தராத்மாவின் குரலை நான் எப்போதுமே அலட்சியப்படுத்தியதில்லை

 

கோபாலன் திகைத்தார். அவருடைய அந்தராத்மாவின் குரலை அவர் இதுவரை கேட்டதில்லை. அது இதுவரை எதையும் சொல்லியதுமில்லை. ஆகவே அந்தராத்மா சொன்னதற்காக மாதக்கணக்கில் பயணம் செய்து தட்சசீலத்திலிரிந்து பாடலிபுத்திரத்துக்கு வந்திருப்பதாக நண்பன் சொன்னதை எப்படி எடுத்துக் கொள்வதென்று அவருக்குத் தெரியவில்லை.

 

விஷ்ணுகுப்தர் தன் நண்பனின் திகைப்பைப் பார்த்துப் புன்னகைத்தார். “இங்கிருந்து தட்சசீலம் போனதும் என் அந்தராத்மா சொல்லித் தான் கோபாலா. நம் ஆசிரியரும் என்னை ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காண்பித்த பின் ஒரு நாள் இனி என்ன செய்வதென்று யோசித்தபடி நான் நடந்து கொண்டிருக்கையில் ஒருவர் இன்னொருவரிடம் தட்சசீலத்திலிருந்து வருவதாகச் சொன்னது காதில் விழுந்ததுதட்சசீலத்தின் கல்விக்கூடம் மிகவும் பிரபலமானதல்லவா என்று நினைவு வந்தது. உடனே என் அந்தராத்மா என்னை அங்கே போகச் சொன்னது. அதற்கு மேல் நான் அது இருக்கும் தொலைவு உட்பட எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. உடனே கிளம்பி விட்டேன். என் கல்வி, உத்தியோகம் எல்லாவற்றையும் அந்தப் பயணமே நிர்ணயம் செய்தது. அதில் நான் நிறைவையே உணர்கிறேன். அது போல் சில நாட்களாகவே பாடலிபுத்திரம் போ என்று என் அந்தராத்மா தொடர்ந்து சொல்ல ஆரம்பித்த பின் நான் அதற்கு மேல் யோசிக்கவில்லை. உடனே கிளம்பி வந்து விட்டேன். விதி எதாவது ஒரு காரணம் வைத்திருக்கும்…. அது பிறகு தான் அறிவுக்குப் புலப்படும். இந்தக் காரணத்தை உன்னிடமானதால் சொல்கிறேன். மற்றவர் யார் கேட்டாலும் அறிஞர்களின் சிறப்புக் கூட்டம் எப்படி நடக்கிறது என்று பார்க்க வந்ததாகத் தான் சொல்லப் போகிறேன்…”

 

கோபாலன் தலையசைத்தார். “எத்தனை நாட்கள் இங்கே தங்குவதாய் இருக்கிறாய் விஷ்ணு? நாளை அதிகாலை கிளம்புகிற நான் திரும்பி வருவதற்கு ஒரு வாரமாகலாம். நான் வருகிற வரை இங்கே இருப்பாயா?”

 

இல்லை கோபாலா. மூன்று அல்லது நான்கு நாட்களில் கிளம்பி விடுவேன்.”

 

கோபாலன் கண்கள் ஈரமாக உணர்ச்சிவசப்பட்டு கேட்டார். “இனி நாம் மீண்டும் சந்திப்பது எப்போது விஷ்ணு?”

 

தெரியவில்லை கோபாலா…”

 

நாளை அறிஞர்கள் சிறப்புக் கூட்டத்திற்குச் செல்கிறாயா? பங்கு பெறப் போவதில்லை என்றாலும் பார்வையாளனாக…?”

 

ஆமாம். வந்திருக்கும் காரணமாக அந்த நிகழ்ச்சியையே சொல்ல வேண்டி இருப்பதால், நாளை காலை அரசவைக்குச் செல்வதாய் இருக்கிறேன். சரி கோபாலா நடுநிசியாகி விட்டது. கிளம்புகிறேன்….”    

 

கிளம்புகையில் கோபாலனைப் போல கண்கலங்கா விட்டாலும் நண்பனைச் சந்திக்க முடிந்ததில் விஷ்ணுகுப்தருக்கு மனநிறைவு இருந்தது.

 

 

றுநாள் காலை விடுதியிலிருந்து அரசவை நிகழ்ச்சிகளுக்குப் பரபரப்புடன் கிளம்பிய மற்ற ஆட்களுடன் விஷ்ணு குப்தரும் கிளம்பினார். சீக்கிரமாகப் போனால் தான் அமர்ந்து கொள்ள இடம் கிடைக்கும் என்று அவர்களில் சிலர் பேசிக் கொண்டார்கள். யாரிடமும் எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்து வரும் விஷ்ணுகுப்தரிடம் ஒருவர் கேட்டார். “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் ஐயா?”

 

தட்சசீலத்திலிருந்துஎன்று விஷ்ணுகுப்தர் சொன்னது அவரை ஆச்சரியப்படுத்தியது. தட்சசீலம் பெயரைக் கேட்டவுடன் முகத்தில் பெருமதிப்பும் தெரிந்தது.  “அவ்வளவு தொலைவிலிருந்தா வருகிறீர்கள்? நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு பேசப்போகிறீர்களா ஐயா?”

 

இல்லை. கேட்டு மகிழும் பார்வையாளனாகத் தான் வந்திருக்கிறேன்என்று விஷ்ணுகுப்தர் சொன்னவுடன் அந்த மனிதர் முகத்தில் முன்பு தெரிந்த மதிப்பு சற்று குறைந்தது போல் இருந்தது. கல்விக்குப் புகழ்பெற்ற தட்சசீலத்திலிருந்து வந்தாலும் பேசும் அளவுக்கு இந்த மனிதருக்கு ஞானம் இல்லை என்பதாக அதைப் புரிந்து கொண்ட அந்த மனிதர், தான் அயோத்தியிலிருந்து வருவதாகவும், ஜோதிடத்திலும், தர்க்க சாஸ்திரத்திலும் புலமை உள்ளவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அரசவை நுழைவாயில் வரை தன் உயர்வுகளைச் சொல்லிக் கொண்டே வந்தார்கடந்த மூன்று வருடங்களாக வந்து கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு வருடமும் ஏதாவது பரிசு பெற்றுச் செல்வதாகவும் சொன்னார்.

 

அரசவையில் அவர் அறிந்த அறிஞர் ஒருவரைக் கண்டதும் விஷ்ணுகுப்தரைப் பார்த்து தலையசைத்து விடைபெற்றுப் பிரிந்து அந்த அறிஞருடன் அந்த அயோத்திவாசி சேர்ந்து அமர்ந்து கொண்டார். விஷ்ணுகுப்தர் சிறிது காலியாக இருந்த இடம் பார்த்து அமர்ந்து கொண்டார். சிறிது நேரத்தில் அரசவையில் அரசர், அமைச்சர்கள் மற்ற முக்கியஸ்தர்களின் இருக்கைகள் தவிர மற்றவர்கள் அமருமிடங்கள் நிறைந்து விட்டன.

 

அமைச்சர்களில் வரருசி மட்டுமே தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். சபை நிறைந்திருப்பதை பெருமிதத்துடன் அவர் பார்ப்பதை விஷ்ணுகுப்தர் கவனித்தார். அவர் இந்த அரசவைக்கு வருவது இதுவே முதல் முறை. தனநந்தனின் அரசவை செல்வச்செழிப்போடு இருந்தது. அவனது சிம்மாசனம் தங்கத்தில் ஜொலித்தது. அமைச்சர்களின் இருக்கைகள் வெள்ளியில் செய்யப்பட்டிருந்தன. மற்ற அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் இருக்கைகள் விலையுயர்ந்த மரத்தில் செய்யப்பட்டிருந்தன. எல்லா இருக்கைகளிலும் விலையுயர்ந்த பட்டினாலான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தன. மற்றவர்கள் அமரும் மேடைப்பகுதிகளில் அழகான சுத்தமான விரிப்புகள் விரிக்கப்பட்டிருந்தன.

 

சிறிது நேரத்தில் வேறிரண்டு அமைச்சர்கள் வந்து அவர்களது ஆசனங்களில் அமர்ந்தார்கள்பிரதம அமைச்சர் உள்ளே நுழைகையில் பலர் எழுந்து நின்று வணங்கினார்கள். பொதுவான வணக்கத்தை எல்லோருக்குமாகச் செலுத்தியபடி சென்ற ராக்ஷசர் முகம் சிரிப்பறியாத முகமாக இருந்ததை விஷ்ணுகுப்தர் கவனித்தார். ஆனால் அந்த மனிதர் ஒரே பார்வையில் நிறைய விஷயங்களைக் கவனித்து மனதில் கணக்கெடுத்துக் கொண்டது தெரிந்தது.

 

வேகமாக முன்னேறி வரருசியைப் பார்த்து கைகூப்பி வணங்கிய ராக்ஷசர் காலியாக இருந்த சில அமைச்சர்களின் இருக்கையைப் பார்த்து அதிருப்தி அடைந்தது அவர் முகபாவனையிலேயே தெரிந்தது. அங்கிருந்து  பின்வழியாகச் சென்று அரசர் இருக்குமிடத்தை அவர் அடைந்த போது தனநந்தன் ஒரு அமைச்சருடன் சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தான். வேறு இரண்டு அமைச்சர்கள் அவர்களது சதுரங்க ஆட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

 

வணக்கம் அரசேஎன்று ராக்ஷசர் கைகூப்பியபடி கம்பீரமான குரலில் சொல்ல தனநந்தன் நிமிர்ந்தான். “வணக்கம். வாருங்கள் ராக்ஷசரேஎன்று அவன் கைகூப்ப அமைச்சர்களும் கைகூப்பினார்கள்.

 

ராக்ஷசர் கடுமையான குரலில் அமைச்சர்களிடம் சொன்னார். “சிறப்புக்கூட்டத்திற்கு பாரதத்தின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் அறிஞர்கள், ஆர்வலர்கள் வந்து அரசவையில் காத்திருக்கிறார்கள். முன்பே போயிருக்க வேண்டிய நீங்கள் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”

 

உடனே அமைச்சர்கள் எழுந்து நிற்க தனந்நதன் சிரித்துக் கொண்டே சொன்னான். “என்னிடம் சதுரங்க ஆட்டத்தில் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள் ராக்ஷசரே”   

 

ராக்ஷசர் பார்த்த பார்வையிலேயே அமைச்சர்கள் அங்கிருந்து அரசவைக்கு விரைந்தார்கள். ராக்ஷசர் மன்னனுக்கென்றே பிரத்தியேகமாக ஒதுக்கி வைத்திருக்கும் தன் விசேஷப் புன்னகையைப் பூத்தபடி தனநந்தனிடம் சொன்னார். “அரசே உங்களுக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள். வாருங்கள் அரசவைக்குச் செல்வோம்.”

 

தனநந்தன் கொட்டாவி விட்டபடி கேட்டான். “ராக்ஷசரே. ஏன் என்னை இப்படி அந்தச் சிறப்புக்கூட்டத்திற்கு வரச் சொல்லி துன்புறுத்துகிறீர்கள்?”

 

ராக்ஷசர் புன்னகை கலையாமல் கேட்டார். “அங்கு வருவதில் துன்பத்திற்கு என்ன இருக்கிறது அரசே?”

 

பணிப்பெண்ணிடம் துரங்கக் காய்களை எடுத்து வைக்க சைகை செய்த தனநந்தன் தன் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தபடி சலிப்பான குரலில் சொன்னான். ”வருடா வருடம் அறிஞர்கள் என்று நீங்கள் அழைக்கிற கூட்டம் வந்து சொல்லும் பெயர்களும் தெரிவதில்லை, அவர்கள் சொல்கின்ற விஷயங்களும் சரியாகப் புரிவதில்லை. குறிப்பாக ராஜநீதி என்ற தலைப்பில் ஆளாளுக்குச் சொல்கின்ற விஷயங்கள் எனக்கு எட்டிக்காயாய் கசக்கின்றது. அங்கு அமர்ந்திருப்பதே முள்ளில் அமர்ந்திருப்பது போலிருக்கிறது. இந்த வேதனைகளுக்கு முடிவில் என் பொறுமையைச் சோதித்தவர்களுக்கு பரிசளிப்பு என்ற பெயரில் என் கையாலேயே அவர்களுக்கு வாரி வழங்க வைத்து என் கஜானாவைக் காலியாக்குகிறீர்கள். இது எனக்கு இரட்டிப்பு துன்பமாகவே இருக்கிறது.”

 

ராக்ஷசர் புன்னகை அபூர்வமாய் சின்னச் சிரிப்பாய் விரிந்தது. “அரசே. இன்று பாரதத்தில் மகதம் ஒரு சக்தி வாய்ந்த சாம்ராஜ்ஜியமாக இருக்கிறது. நம் சேனை பலத்துக்கு இணையான சேனை பலம் நமக்கு நான்கு திசைகளிலும் இல்லை. செல்வத்திலும் நாம் முதலிடத்தில் இருக்கிறோம். இப்படி சக்தியும், செல்வமும் மிகுதியாக இருக்கும் மகதத்தில் கல்விக்கு ஒரு சிறப்பான இடமில்லை என்றால் அது நமக்கு அவமானமல்லவா? அதனால் தான் இந்த நிகழ்ச்சியை எல்லோரும் வியக்கும்படியாக நடத்திக் கொண்டிருக்கிறோம். இது உங்களுக்குத் தெரியாததல்ல. எழுந்திருங்கள் அரசே. போவோம்

 

நீங்கள் சொன்னால் எதையும் எனக்கு மறுக்க முடிவதில்லை. என்ன செய்வது!“ என்று சொல்லி விட்டு தனநந்தன் பெருமூச்சு விட்டபடி எழுந்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்   


இந்த நாவலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -


(அல்லது)

பதிப்பாளருக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம். 

நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்கினால் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களின் மொத்தத் தொகை மட்டும் அனுப்பினால் போதும்.)


நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்



3 comments:

  1. Can you please publish the books in amazon.com also? amazon.in is not delivering to sri lanka - thank you

    ReplyDelete
  2. Good characterization

    ReplyDelete
  3. தனநந்தனை எப்படி சமாளிப்பது என்று ராக்ஷசர் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்...

    ReplyDelete