Wednesday, March 16, 2022

பணம் வந்ததும், நோய்கள் குணமானதும்!


 

ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள் - 34 


1897 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தியோசபிகல் சொசைட்டியின் 21 ஆம் ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி மாநாடு ஒன்று சென்னையில் விமரிசையாக நடத்தப்பட்டது. உலகநாடுகளில் இருந்து ஆன்மிக அறிஞர்கள் பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் போது தியோசபிகல் சொசைட்டியில் அனைவரும் வணங்கும் இடத்தில் பலர் தங்கள் வேண்டுகோள்கள் அல்லது கேள்விகளை ஒரு காகிதத்தில் எழுதி அதை மடித்து வைத்தார்கள். அவர்களில் ஆறு அல்லது ஏழு பேருக்குப் பதில்கள் வேறொரு காகிதத்தில் பெற்றார்கள். அந்தப் பதில்கள் அவரவர் எழுதிய மொழியிலேயே இருந்தது என்பது தான் ஆச்சரியம். ஆங்கிலம், தமிழ் மற்றும் ஓரிரு இந்திய மொழிகளில் பதில்கள் வந்தது பலரை வியப்பில் ஆழ்த்தியது.

 

மாநாட்டிற்கு நன்கொடை நிறைய வசூல் ஆனாலும், அதில் ஒரு கணிசமான தொகை கவனக்குறைவால் அனாவசிய செலவுகளில் வீண் ஆனது. கடைசியில் முக்கியமான செலவுகளுக்குப் பணம் இருக்காமல் தனி மனிதர்கள் தங்கள் கையிலிருந்து செலவு செய்யும்படி ஆகி விட்டது. அப்படிச் செலவு செய்தவர்களில் அதிகமாகச் செய்திருந்தவர் நீதிபதி ஸ்ரீனிவாசராவ். அவர் ஐநூறு ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார் என்ற தகவல் கர்னல் ஓல்காட்டுக்குக் கிடைத்தது. நூற்றியிருபது வருடங்களுக்கு முன்பு ஐநூறு ரூபாய் என்றால் இன்றைய மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்று வாசகர்கள் யூகித்துக் கொள்ளலாம். நீதிபதி ஸ்ரீனிவாசராவுக்கு அது மிகப்பெரிய தொகை என்றும் அவர் செல்வந்தர் அல்ல என்றும் தெரிந்திருந்த கர்னல் ஓல்காட் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் ஒரு காலை நேரத்தில் இந்த விஷயத்தைச் சொல்லிக் குறைப்பட்டுக் கொண்டார்.

 

அந்தக் காலக்கட்டத்தில் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் இருந்த எல்லாப் பணத்தையும் கணக்கிட்டாலும் அது நூறு ரூபாயைக் கூடத் தாண்டாத நிலைமை தான் அவருக்கும் இருந்ததுகர்னல் ஓல்காட் சொன்னதைக் கேட்டு சிறிது யோசித்த ப்ளாவட்ஸ்கீ அம்மையார் பின் தாமோதரை அழைத்து, ”வழிபாடு நடத்தும் இடத்தில் ஒரு உறை இருக்கும். அதைக் கொண்டு வாஎன்றார்.

 

மக்கள் தங்கள் கேள்வி வேண்டுகோள்களை வைக்கப் போவது பொது மக்கள் பார்வைக்குத் திறக்கப்படும் போது தான். அதற்கு இன்னும் நேரம் இருந்தது அதனால் தாமோதர் போன போது பொதுமக்களுக்கான உறைகள், காகித மடிப்புகள் எதுவும் இல்லாமல் ஒரே ஒரு உறை தான் அங்கே இருந்தது. அவன் அதை எடுத்துக் கொண்டு வந்து ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் தந்தான். அந்த உறையின் மீதுஸ்ரீனிவாசராவ்என்ற பெயர் எழுதி இருந்தது.

 

அந்த நீதிபதியின் பெயர் அந்த உறையில் இருந்ததால் அவர்கள் நீதிபதியை அழைத்து அவரிடமே அந்த உறையினைத் தந்தார்கள். வியப்புடன் நீதிபதி ஸ்ரீனிவாசராவ் அந்த உறையைப் பிரித்தார். ப்ளாவட்ஸ்கீ அம்மையாரையும், கர்னல் ஓல்காட்டையும் ஒருசில முறை சந்தித்து அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கியிருந்த மகாத்மாவின் கையெழுத்தில் ஒரு கடிதமும் பணமும் இருந்தது. ஸ்ரீனிவாசராவின் ஆன்மிகத் தொண்டைப் பாராட்டி எழுதியிருந்த மகாத்மா இப்போதைய மாநாட்டில் தன் சக்திக்கும் மீறி அவர் செலவு செய்திருப்பதை மெச்சும் விதமாக அத்துடன் சிறிது பணம் வைத்திருப்பதாகவும், அதை ஏற்றுக் கொள்ளும்படியும் எழுதியிருந்தார். பணத்தை எண்ணிப் பார்த்த போது சரியாக ஐநூறு ரூபாய் இருந்தது.

 

அங்கிருந்த அனைவருமே நெகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்கள். ஸ்ரீனிவாசராவோ கண்கலங்கி விட்டார். அத்தனை பெரிய தொகை ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடமும் இருக்கவில்லை. வேலையாள் தாமோதரிடம் இருக்க வழியே இல்லை. கர்னல் ஓல்காட் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் சொல்லி பத்து நிமிடங்களுக்குள் இத்தனையும் நடந்து விட்டது. அதற்குள் கடிதம் எழுதவோ, பணம் ஏற்பாடு செய்யவோ கண்டிப்பாக அங்கிருந்த மனிதர்கள் யாருக்கும் முடிந்திருக்க வழியே இல்லை. மிகவும் ஆச்சரியப்பட்டுப் போன கர்னல் ஓல்காட் நீதிபதி ஸ்ரீனிவாசராவிடம் இருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை மட்டும் இந்த சம்பவத்தின் ஞாபகார்த்தமாய் வாங்கித் தன்னிடம் கடைசிவரை வைத்திருந்தார்.

 

சில காலம் கழிந்து ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் கர்னல் ஓல்காட்டும் சென்னையிலிருந்து பிரான்ஸ் நாட்டுக்குப் பயணமானார்கள். அவர்கள் அங்கிருந்து புறப்படுவதற்கு முன் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் இளமைத் தோழிகள் மூவர் அவரைச் சந்திக்க வந்தார்கள். மூவரும் மூன்று விதமான நோய்களில் பாதிக்கப்பட்டிருந்தார்கள். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கர்னல் ஓல்காட்டிடம் தனக்காக அந்த மூவரின் நோய்களைக் குணப்படுத்த முயற்சி செய்யும்படி வேண்டிக் கொண்டார். மூவரில் ஒருவருக்கு இடது கையும் இடது காலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. அவரால் தனது இடது கையை அசைக்க முடியவில்லை. சில நிமிடங்களில் கர்னல் ஓல்காட் அவருடைய கையை மிக நன்றாக அசைக்கும்படியும், இடது காலை ஓரளவு நகர்த்த முடியும்படியும் செய்தார். இன்னொரு சினேகிதி சில வருடங்களாகவே டமாரச் செவிடராக இருந்தார். அவரையும் கர்னல் ஓல்காட் பேசுவதைக் கேட்டுப் புரிந்து கொள்ளும் அளவு சில நிமிடங்களில் குணப்படுத்தி விட்டார். மூன்றாவது மூதாட்டிக்கு முதுகெலும்பில் பிரச்னை இருந்தது. அதையும் கர்னல் ஓல்காட் குணப்படுத்தி விட்டார். ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் தோழிகள் எதிர்பாராமல் தங்கள் நோய்கள் குணமானதில் மகிழ்ந்து நன்றி தெரிவித்தார்கள்.

 

பல்வேறு அற்புத சக்திகள் கொண்டிருந்த ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கு இந்த நோய் தீர்க்கும் சக்தி இல்லாததும், வேறு எந்த அபூர்வசக்திகளும் இல்லாமல் இருந்த கர்னல் ஓல்காட்டுக்கு நோய் தீர்க்கும் சக்தி வந்து சேர்ந்ததும் ஆன்மிகப் பயணத்தில் ஒவ்வொருவர் பெறும் சக்தி ஒவ்வொன்றாக இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.     

 

நோய் தீர்க்கும் சக்தியிலும் பல வகைகள் இருக்கின்றன என்பதையும் அதில் உயர்ந்த ஒரு வகை சக்தி இருப்பதையும் பாரிசில் கர்னல் ஓல்காட்டும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் அறிய நேர்ந்தது. சுவாவே ஜேக்கப் என்ற ஒரு சக்தியாளர் ஒரு நாளுக்கு ஐம்பது பேரைக் குணப்படுத்துகிறார் என்றும் கடந்த இருபதாண்டுகளில் அவர் மூன்று லட்சம் பேருக்கும் மேல் குணப்படுத்தி இருப்பார் என்றும் கேள்விப்பட்ட போது இருவருக்கும் வியப்பு தாங்கவில்லை. அது எப்படி முடிகிறது என்று அறிய ஆர்வமாக இருந்த இருவரும் அந்தச் சக்தியாளரை ஒரு நாள் சந்தித்தார்கள்.

 

சுவாவே ஜேக்கப் நடுத்தர உயரமுள்ள மனிதராக இருந்தார், தாடி வைத்திருந்தார். கருப்பாடை அணிந்திருந்தார். அவரைச் சந்திக்கும் போதே அவரிடம் சக்திகள் நிறைந்திருந்ததை கர்னல் ஓல்காட்டால் உணர முடிந்தது. அவர் நோயாளிகளைக் குணப்படுத்தும் முறை வித்தியாசமாக இருந்தது. அவருடைய வீட்டின் தரை தளத்தில் ஒரு நீண்ட ஹால் இருந்தது. அங்கே நிறைய பெஞ்சுகள் இருந்தன. நோயாளிகள் வந்து அந்த பெஞ்சுகளில் அமர்ந்து கொள்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வெளிக்கதவைச் சாத்தி விடுகிறார்கள். பின்பு யாரும் உள்ளே வருவதற்கில்லை.

 

பின் சுவாவே ஜேக்கப் அந்த ஹாலுக்குள் நுழைந்து பிரார்த்தனை செய்கிறார். பின் ஒவ்வொரு நோயாளி எதிரிலும் சென்று நிற்கிறார். அந்த நோயாளியையே கூர்ந்து பார்க்கிறார். சில சமயங்களில் ஆம் அல்லது இல்லை என்று பதில் வரும்படியான கேள்வி ஏதாவது கேட்கிறார். பின் பாதிக்கப்பட்ட உறுப்பைத் தொட்டுக் குணப்படுத்துகிறார். சில நோயாளிகளைக் கூர்ந்து பார்த்து விட்டு உன்னைக் குணப்படுத்த முடியாது என்று சொல்லி அனுப்பி விடுகிறார். சிலரைப் பகுதி குணப்படுத்தி மறுநாளும் வரச் சொல்லி அனுப்புகிறார்.

 

சுமார் ஐம்பது பேரையாவது ஒவ்வொரு நாளும் குணப்படுத்தி அனுப்பும் அவர் தன்னால் குணப்படுத்த முடியாதவர்களிடம் முதலிலேயே சொல்லி அனுப்பி விடும் நேர்மை கர்னல் ஓல்காட்டுக்கு மிகவும் பிடித்திருந்தது. குணப்படுத்துபவர்களிடமும் அதற்கென்று அவர் பணம் வாங்காதது அவர் மேல் இருந்த மதிப்பை அதிகப்படுத்தியது. அவர் பணம் வாங்காததால் சிலர் அவர் விற்கும் புகைப்படங்கள் அல்லது நூல்களை வாங்கிச் சென்றார்கள். பலர் அதையும் வாங்காமலேயே சென்றார்கள். இரண்டிலுமே பாதிக்கப்படாமல் இலவசமாக இருபது வருடங்களாகத் தன் தினசரி சேவையைத் தொடர்வதென்பது உள்ளத்தில் உயர்ந்த உள்ளம் அல்லவா?

 

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி : தினத்தந்தி


ஆன்மீகப் பயணத்தில் ஆத்மசக்திகள் நூலை வாங்கிப் படிக்க விரும்புவோர் பதிப்பாளரை 9600123146 எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம். நூலின் விலை ரூ.170/-

1 comment:

  1. அக்காலத்தில் இருந்த இயற்கை வாழ்வுமுறைகள் ஆத்ம சக்திகள் பெற பேருதவியாக இருந்திருக்கும்....போல

    ReplyDelete