க்ரிஷும், அக்ஷயும் அந்த சர்ச்சை நோக்கிக் காரில் சென்று கொண்டிருந்தார்கள். அக்ஷயை ஆபத்தில்
ஈடுபடுத்துகிறோம் என்ற குற்ற உணர்ச்சி க்ரிஷுக்கு இருந்து கொண்டே இருந்தது. தனக்கு
என்னவானாலும் சரி அக்ஷய் ஆபத்தில்லாமல் திரும்ப வேண்டும் என்று அவன் பிரார்த்தித்து
விட்டு தான் கிளம்பியிருக்கிறான்.
மாஸ்டரையும் மானசீகமாக
வணங்கி விட்டுத் தான் கிளம்பியிருந்தான்.
அவர் கனிவுடன் அவனைப் பார்த்ததை உணர்ந்தான். அவர்
ஆசி இருக்கிறது. இனி அக்ஷய்க்கு எந்த ஆபத்தும்
இல்லாமல் வேறு என்ன ஆகிறதோ ஆகட்டும் என்று க்ரிஷுக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது.
அக்ஷய் சொன்னான். “நீ எப்போதுமே
என் அருகில் தான் இருக்க வேண்டும். எந்தக் காரணத்தைக்
கொண்டும் ஒரு அடி தூரத்தை விட அதிக இடைவெளி விட்டு நகர்ந்து விடக்கூடாது.”
காரோட்டிய படியே க்ரிஷ் தலையசைத்து
விட்டு மெல்ல ஒரு வேண்டுகோள் விடுத்தான். “எனக்கு ஒரே ஒரு
வாக்கு கொடுப்பீர்களா?”
“என்ன?”
“எனக்கு
ஏதாவது ஆகி விட்டால் தயவு செய்து நீங்கள் தப்பித்து விட வேண்டும். உங்களுக்கு
ஏதாவது ஆனால் என் ஆத்மா சாந்தியடையாது.”
மறுக்க வாய் திறந்த அக்ஷய் அவன்
முகத்தில் தெரிந்த குற்றவுணர்ச்சியைப் பார்த்து வாயை மூடிக் கொண்டு தலையசைத்தான். அவன் மரணத்தையும்
ஏற்றுக் கொண்டு அங்கே போய் என்ன சாதிக்கப் போகிறான் என்று அக்ஷய்க்கு விளங்கவில்லை.
அவன் தலையசைத்தவுடன் க்ரிஷ்
நிம்மதி அடைந்தது தெரிந்தது.
அவன் முகத்தில் தெளிவும் அமைதியும் தெரிய ஆரம்பித்தன. ஏனோ அந்தக் கணத்தில் அவன் மைத்ரேயனை அக்ஷய்க்கு நினைவுபடுத்தினான்.
கார் சர்ச்சை அடைந்த போது இருட்ட ஆரம்பித்திருந்தது. காரிலிருந்து இருவரும் இறங்கினார்கள்.
அக்ஷய் க்ரிஷிடம் மறுபடி நினைவுபடுத்தினான்.
“நான் சொன்னது நினைவிருக்கட்டும். என் அருகிலேயே
தான் நீ இருக்க வேண்டும்.”
விஸ்வம் இப்போது தனக்குள் எல்லையில்லாத
சக்தியை உணர்ந்திருந்தான்.
அந்தச் சுவடி சொல்லியிருந்தது போல் அவன் தியானத்தில் அமர்ந்திருந்த போது
பிரமிடுக்குள் இருந்த அந்தப் பெருவிழி அவனுக்குள் ஏராளமான சக்திகளைப் பாய்ச்சிக் கொண்டிருப்பதை
உணர்ந்தான். முன்பு போல் அந்தப் பெருவிழி அவனை ஏமாற்றி விடவில்லை.
ஆனால் இப்போது உணர்ந்த சக்திகளும் கூட இந்த உடல் ஏற்றுக்கொள்ள முடிந்த
அளவு அதிகமே ஒழிய அவன் முந்தைய உடலில் இருந்த சக்திகளுக்கு இணையல்ல. ஆனாலும் இந்த அளவையே இவ்வளவு சீக்கிரம் அடைய முடியும் என்று அவன் எண்ணியிருக்கவில்லை.
ஜிப்ஸியின் கிதார் இசை கேட்டு எழுந்த போது விஸ்வம் அடைந்திருந்த
சக்திகளால் உற்சாகத்தின் உச்சியில் இருந்தான், ஆனால் ஜிப்ஸி சொன்ன செய்தி அத்தனை உற்சாகத்தையும் வடிய வைத்து அவனுக்குள் ஆத்திரத்தை நிரப்பி இருந்தது.
தூரத்தில் க்ரிஷும்,
அக்ஷயும் வருவதை விஸ்வம் மறைந்து நின்று பார்த்தான்.
அவர்களை நேரில் பார்க்கும் போது ஆத்திரம் இன்னும் அதிகமாகியது. இப்படி நேரில் வர க்ரிஷுக்குத் தைரியம்
தந்தது அக்ஷய் கூட இருப்பது தான் என்று நினைத்த விஸ்வம் தன்
சக்திகளைக் குவித்து அக்ஷயின் மனதை ஆக்கிரமித்தான். இது வரை அவன் ஆக்கிரமித்திருந்தவர்கள் எல்லாம் திடீரென்று சிறைப்பட்டது போல
உணர்ந்து ஸ்தம்பித்து அசைய முடியாமல் நின்று விடுவார்கள்.
அக்ஷய் விஸ்வத்தின் சக்தி தன்னை ஆக்கிரமிப்பதை உணர்ந்தான். கட்டப்பட்டது போல் உணர்ந்தாலும் சிரமத்துடன் அவனால் தொடர்ந்து நடக்க முடிந்தது.
அந்தச் சிரமமும் அவனுக்குத் தான் தெரிந்ததே ஒழிய பார்ப்பவர்களுக்கு வெளியே
தெரியவில்லை. அதே நடை,
அதே வேகம், அதே அமைதி….
விஸ்வம் திகைத்தான்.
முதல் முறையாகத் தன் உடலில் இந்த அளவு கட்டுப்பாடுள்ள இன்னொரு மனிதனை
அவன் பார்க்கிறான். அமானுஷ்யன் என்ற பெயர் வெறுமனே வைக்கப்பட்டதல்ல
என்பது அவனுக்குப் புரிந்தது. ஆக்கிரமித்திருந்த அமானுஷ்யனை அவன்
ஆராய்ந்தான். தெளிவான மனம் விரைவான அறிவு உடலில் முழுக் கட்டுப்பாடு
என்ற மூன்றையும் அக்ஷயிடம் விஸ்வம் பார்த்தான். அபூர்வ சக்திகள் அதிகம் பெற்றிருக்காதவன் என்றாலும் கூட, இந்த மூன்றுமே சேர்ந்திருக்கும் ஒருவனைச் சமாளிப்பது சுலபமல்ல என்று புரிந்தது.
சர்ச்சின் உள்ளே இருள் மண்டியிருந்தது. ஆனாலும் இருவரும் வாசலைத்
தாண்டி உள்ளே சென்றார்கள். அவர்கள் உள்ளே ஐந்தடிகள் வைத்தபின்
விஸ்வம் சொன்னான். “அங்கேயே நில்லுங்கள். இனி ஒரு அடி எடுத்து வைத்தால் உங்கள் உயிர் உங்கள் உடலில் தங்காது”
க்ரிஷும் அக்ஷயும் சேர்ந்தே நின்றார்கள். க்ரிஷுக்கு உள்ளே சுத்தமாக
எதுவும் தெரியவில்லை. ஆனால் அக்ஷயும் இருட்டுக்குப்
பழக்கமாயிருந்தவன், இருட்டில் காணவும், இயங்கவும் முடிந்தவன் என்பதால் விஸ்வம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்ததுடன்
இருட்டிலேயே அவனை எடைபோடவும் செய்தான்.
விஸ்வத்துக்கு இது இரண்டாவது அதிர்ச்சியாக
இருந்தது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்டான். “நீ எதற்கு
வந்தாய் க்ரிஷ்?”
“உன்னிடம்
நான் சிறிது பேச வேண்டும்” என்றான் க்ரிஷ்
“நீ ஒரு
முட்டாள் க்ரிஷ்” ஏளனமாக விஸ்வம் சொன்னான்.
“உண்மை. அதை நானே
பல முறை உணர்ந்திருக்கிறேன் நண்பனே”
விஸ்வம் திகைத்தான். இந்தப்
பதிலை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் நண்பனே என்று
சொன்னதை அவனால் ரசிக்க முடியவில்லை. இப்படி நண்பன் என்று
சொல்லியே அவனை க்ரிஷ் இல்லுமினாட்டி கூட்டத்தில் கவிழ்த்ததை அவன் மறக்க முடியாது. “உன்னிடம்
நான் பேச விரும்பவில்லை க்ரிஷ். நீ இங்கிருந்து போகலாம்....”
“நான் சொல்ல
வந்ததைச் சொல்லாமல் போக முடியாது நண்பனே”
அவன் மறுத்ததும், மறுபடி
நண்பன் என்று அழைத்ததும் ஆத்திரத்தை அதிகப்படுத்த விஸ்வம் சொன்னான். ‘இனி ஒரு
நிமிடத்திற்குள் நீ இங்கிருந்து போகா விட்டால் பின் நீ உயிரோடு போக முடியாது க்ரிஷ்”
“நீ ஏன்
என் பேச்சைக் கேட்பதற்குப் பயப்படுகிறாய் நண்பா?” என்று க்ரிஷ்
கேட்டான்.
அதற்கு மேல் விஸ்வத்துக்குத் தாங்க
முடியவில்லை. மின்னல் வேகத்தில் அவன் க்ரிஷ் மேல் பாய்ந்தான். அடுத்த
வினாடி அவன் க்ரிஷ் முன்னால் இருந்தான்.
க்ரிஷைக் கழுத்தை நெறிக்கக் கைகளை உயர்த்தினான். அதற்கடுத்த வினாடி அக்ஷயால் பலமாகத் தள்ளப்பட்டு சர்ச்சின்
பிரார்த்தனை பெஞ்சில் விழுந்து எழுந்தான். இது அவனுக்கு மூன்றாவது
உச்சக்கட்ட அதிர்ச்சியாக அமைந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் போக முடிந்த அவனை இருட்டில் தெளிவாக
அக்ஷய் பார்த்ததுடன்
அதே வேகத்தில் வலிமையாகத் தள்ளிவிட முடிந்ததை அவனால் சகிக்க முடியவில்லை. அப்படித் தள்ளி விடுவதற்குப் பதிலாக அக்ஷய்க்கு நுணுக்கமாகத்
தெரிந்த கழுத்து நரம்பில் வர்மக்கலை முடிச்சைப் போட்டிருந்தால் இன்னேரம் அவன் அசைய
முடியாமல் கீழே விழுந்து கிடக்க நேர்ந்திருக்கும் என்பதை உணர்ந்தபடியே விஸ்வம் அவமானத்துடன் மெல்ல எழுந்தான்.
வாழ்க்கையில் முதல் முறையாக ஒருவன் அவனை அடித்து வீழ்த்தியிருக்கிறான்….
கோமாவில் வீழ்த்த முடிந்தும் அவன் அதைச் செய்யாமல் காட்டிய கருணை விஸ்வத்தைச்
சுட்டது.
ஆத்திரத்துடன் விஸ்வம் சொன்னான். “அக்ஷய். உனக்கும் எனக்கும் இடையே எந்தப் பகையும் இல்லை. உன்னிடம்
என் சக்திகளை விரயமாக்க நான் விரும்பவில்லை.
அவனை அழைத்துக் கொண்டு போய் விடு. இல்லா விட்டால்
நீயும் உயிரோடு போக முடியாது. இது நிச்சயம்”
அக்ஷய் அமைதியாகச் சொன்னான். “அவன் சொல்வதைச் சொல்ல நீ அனுமதித்தால்
பிறகு நானும் அவனும் இரண்டு பேருமே சேர்ந்து வெளியே போய் விடுவோம்.”
அது வரை மறைந்திருந்து கவனித்துக் கொண்டு மட்டுமே இருந்த ஜிப்ஸி
கூவினான். “க்ரிஷை
நீ பேச அனுமதிக்காதே. அவன் பேச்சே ஆபத்து.”
க்ரிஷுக்குச் சத்தங்கள் கேட்டதே ஒழிய என்ன நடக்கிறது என்றே சரியாகத்
தெரியவில்லை. அவன்
முன் நிழல் பாய்ந்தது போல் ஒரு உருவம் வந்ததும் அடுத்த வினாடி மரப் பெஞ்சில் தடாலென்று
எதோ விழுந்த சத்தமும் கேட்டதே தவிர அக்ஷய் விஸ்வத்தைத் தள்ளி விட்டிருந்தது கூட அவனுக்கு அருகில் இருந்தும் தெரிந்திருக்கவில்லை. இப்போது இன்னொருவன் கூவி பேச அனுமதிக்க வேண்டாம் என்று சொல்வது மட்டும் கேட்கிறது.
இந்த ஆளும் அவன் பார்வைக்குப் படவில்லை. ஜிப்ஸி அக்ஷய் பார்வையிலும் அகப்படாமல் மறைவாகவே இருந்தான்.
அக்ஷய் அமைதியாகக் கேட்டான். “உன் கூட்டாளியைப் போலவே நீயும்
க்ரிஷ் பேசுவதைக் கேட்கப் பயப்படுகிறாயா விஸ்வம்?”
(தொடரும்)
என்.கணேசன்
இந்த நாவலையும் அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -
(அல்லது)
என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் தபாலில் பெற்றுக் கொள்ளலாம்.
நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பே, போன் பே, மற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம். (ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)
அக்கவுண்ட் விவரங்கள் -
G-pay UPI ID : gshubha1968@oksbi
Phonepe UPI ID: nganeshanbooks@ybl
வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch
IFSC Code DBSS0IN0188
A/c No.0188386000001146
தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
Wow moment. I am eager to know how Krish is going to convince Viswam? Answer is sadly seven days away.
ReplyDeleteWowwwww.., amanushyan rockssssss
ReplyDeleteWow..this is what we expect from ' Sholin Mink' Akshay.
ReplyDeleteஅக்ஷய் விஸ்வத்தை தாக்கி அடக்கி வைத்தது போலவே...
ReplyDelete"ஏன் பயப்படுகிறாய்?" என்ற வார்த்தையை பயன்படுத்தி விஸ்வத்தை பேச்சை கேட்கவும் வைத்துவிடுவான் போல...
அக்ஷய் மாஸ்🔥🔥
Indha moment ku thaan wait pannitu irunthaen... Akshay 🥳.. Akshay 🥳
ReplyDeleteamaanushyan ippothuthaan thanakke uriya vilaiyaatttai aarampiththirukkiraar, super. kalakkunga akshay.
ReplyDelete