Monday, February 14, 2022

யாரோ ஒருவன்? 72


ந்த திடீர் மின்னல் போன்ற பேரொளியும், அமானுஷ்யமாய் பாம்பு சீறும் சத்தம் கேட்டுத் தணிந்ததும் ஒரு கணம் வெளியே நின்றிருந்த அந்தப் பாம்பாட்டியை ஸ்தம்பித்து நிற்க வைத்தது. மறு கணம் பாம்பாட்டி தலைக்கு மேலே கைகளை உயர்த்தி வணங்குவதை வேலாயுதமும், கல்யாணும் திகைப்புடன் பார்த்தார்கள். அவர்கள் இருவருக்கும். பக்கத்து வீட்டில் விசேஷ நாகரத்தினத்தை அந்த நாகம் உதிர்த்து விட்டிருக்கும் போலிருக்கிறது என்று  யூகிக்க முடிந்தது. இருவரும் பிரமிப்புடன் பக்கத்து வீட்டைப் பார்த்தார்கள். சுமார் ஐந்து நிமிடங்கள் பக்கத்து வீட்டிற்குள் விளக்குகளின் வெளிச்சம் மட்டும் தெரிந்தது. பாம்பாட்டி சிலை போல அந்த வீட்டு கேட்டின் முன் நின்று கொண்டிருந்தான்

திடீரென்று பக்கத்து வீட்டுக்குள்ளிருந்து சுதர்ஷன் வெளியே வருவது தெரிந்தது. பாம்பாட்டி அவனைப் பார்த்தவுடன் வேகமாக அங்கிருந்து நகர்ந்தான். சுதர்ஷன் கேட் வரை வந்து வெளியே இரண்டு பக்கமும் பார்த்தான். பாம்பாட்டி உண்மையிலேயே போய்விட்டானா இல்லை அருகில் எங்கேயாவது ஒளிந்து கொண்டிருக்கிறானா என்று பார்த்தது போல் வேலாயுதத்துக்கும் கல்யாணுக்கும் தோன்றியது. பாம்பாட்டி தூரத்தில் போய்க் கொண்டிருந்தான். ஆனால் அவ்வப்போது திரும்பிப் பார்த்துக் கொண்டுமிருந்தான். சுதர்ஷன் மறுபடி வீட்டுக்குள் நுழைந்து கொண்டான்.

வேலாயுதம் மெல்லிய குரலில் மகனைக் கேட்டார். “பாம்பாட்டி சொன்ன மாதிரி அந்தப் பாம்பு செத்திருக்குமா?”

கல்யாணும் தாழ்ந்த குரலில் சொன்னான். “செத்திருக்கலாம். அப்படிச் செத்து இருந்தா அதை வீட்டு முன்னாடியோ பின்னாடியோ அவன் புதைச்சோ எரிச்சோ தான் ஆகணும்.”

பக்கத்து வீட்டில் முன்பக்கமும் பின்பக்கமும் சில செடிகளும் நிறைய காலி இடமும் இருந்ததுவேலாயுதம் தாழ்ந்த குரலில் சொன்னார். “முன்பக்கம் பார்த்துட்டு நீ இங்கே நில்லு. பின்பக்கத்தைப் பார்த்துட்டு நான் அங்கே நிக்கறேன். என்ன நடக்குதுன்னு பார்ப்போம்…”

கல்யாண் தலையசைக்க முன்பக்கம் பார்க்க முடிந்த அந்த இடத்திலேயே அவனை நிறுத்தி விட்டு பின்பக்கத்தைப் பார்க்க முடிந்த இடத்திற்கு அவர் விரைந்தார். அடிக்கடி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஏனென்றால் ஒருவரையொருவர் வாய் விட்டு அழைக்கும் சூழல் அங்கே இல்லைஏதாவது வித்தியாசமாய் முன்பக்கமோ பின்பக்கமோ நடக்குமானால் பார்த்தவர் மற்றவரை சைகையால் தான் அழைக்க முடியும். சத்தமாக அழைத்தால் அந்த இரவின் அமைதியில் பக்கத்து வீட்டுக்குக் கேட்டுவிடும் அபாயம் இருக்கிறது.

சுமார் அரை மணி நேரம் பக்கத்து வீட்டில் எந்தச் சலனமும், சத்தமும் இல்லைகல்யாண் கடிகாரத்தைப் பார்த்தான். மணி பதினொன்றே கால். இனி ஒன்றும் நடக்கும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. நாதமுனி என்ன சொன்னார் என்று அவரிடம் அவன் கேட்கவுமிருந்தது. அவன் மெல்ல தன் இடம் விட்டு அவரை நோக்கி நடக்க முற்பட்ட போது அவர் அவனைப் பார்த்துபொறுஎன்று சைகை காட்டினார். ஏதோ நடக்கப் போகிறது என்று அவருக்கு உள்ளுணர்வு சொல்லி இருக்க வேண்டும். மேலும் பத்து நிமிடங்கள் கழிந்த பிறகு, பக்கத்து வீட்டின் பின்கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டதுவேலாயுதம் மகனைத் தன்னருகில் வரும்படி சைகை செய்தார். கல்யாணும் விரைந்தான்.

பக்கத்து வீட்டின் பின்பகுதியில் முதலில் வெளிப்பட்டவன் சுதர்ஷன் தான். அவன் பின்பகுதியில் மண் தரையை விளக்குமாறால் பெருக்கிச் சுத்தம் செய்ய ஆரம்பித்தான். இன்னமும் நாகராஜ் வெளியே வரவில்லை. சுதர்ஷன் மண் தரையைப் பெருக்கிச் சுத்தம் செய்த பிறகு தண்ணீர் தெளித்து பயபக்தியுடன் ஓரமாய் ஒதுங்கி நிற்பது தெரிந்தது. கல்யாணும், வேலாயுதமும் என்ன நடக்கப் போகிறதெனப் பரபரப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்தில் நாகராஜ் ஒரு பாடையைத் தூக்கிக் கொண்டு வந்தான். அவன் இடுப்பில் வெறும் ஈரத்துண்டு மட்டும் கட்டிக் கொண்டிருந்தான். பாடையில் காடாத்துணிக்குள் சுற்றப்பட்டு இருந்தது அந்த இறந்த பாம்பாகவே இருக்க வேண்டும் என்று கல்யாணும், வேலாயுதமும் யூகித்தார்கள். அந்தப் பாடையை இடது தோளில் சுமந்தபடியே சுத்தம் செய்யப்பட்டிருந்த மண் தரையில் நாகராஜன் மண்டியிட்டான்.

வேலாயுதம் மகனை மெல்லக் கேட்டார். “என்னடா செய்யறான்?”

கல்யாண் பொறுமையிழந்து தாழ்ந்த குரலில் சொன்னான். “எனக்கெப்படிப்பா தெரியும். பேசாம கவனிங்க அப்பா

நாகராஜன் மண்டியிட்டவுடன் அவசரமாக அங்கிருந்து போன சுதர்ஷன் போன வேகத்திலேயே ஒரு டப்பாவை எடுத்துக் கொண்டு வந்தான். அதில் கோலப்பொடி இருந்தது. சுதர்ஷன் கோலப்பொடி டப்பாவை நீட்டியபடி நிற்க நாகராஜ் அதிலிருந்து கோலப்பொடி எடுத்து ஈர மண் தரையில் ஏதோ ஒரு மண்டலம் வரைய ஆரம்பித்தான். அவன் என்ன வரைகிறான் என்று கேட்க வாயெடுத்த வேலாயுதம் கஷ்டப்பட்டு வாயை மூடிக் கொண்டார்.

நாகராஜ் வரைந்த மண்டலத்தில் நிறைய சின்னங்கள் இருந்தன. மேல் நுனியில் நாகத்தின் முகம் போன்ற அமைப்பை கோலமிட்ட நாகராஜ் அடிப்பகுதியில் நாகத்தின் வால் போன்ற அமைப்பைக் கோலமிட்டான்.

வேலாயுதம் தாழ்ந்த குரலில் சொன்னார். “நாகமண்டலம்னு சொல்றதைக் கேள்விப்பட்டிருக்கேன். இது தான் போலருக்குகல்யாண் தலையை ஆட்டினான்.  

நாகராஜ் அந்த மண்டலத்தின் மீது நாகத்தின் பாடையை வைத்தான். சுதர்ஷன் ஓடிப்போய் உள்ளேயிருந்து விறகுகள் கொண்டுவந்து நீட்ட நாகராஜ் அவற்றை அந்த பாடையின் மீது வைத்தான். கடைசியில் அதன் மேல் நிறைய கற்பூரங்கள் கொட்டிய நாகராஜ் மூன்று முறை சுற்றி வந்து தீமூட்டினான். தீமூட்டிய போது அவன் அழுவது போல் தெரிந்தது. பின் அங்கேயே அவன் சோகமாக நின்றிருந்தான். தீஜுவாலை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்த பிறகும் அவன் உள்ளே போகவில்லை. தீஜுவாலை தணிய ஆரம்பித்த பிறகு தான் அவன் தளர்ந்த நடையுடன் உள்ளே போனான். அவனைப் பின் தொடர்ந்து சுதர்ஷனும் உள்ளே போய் கதவைச் சாத்தும் சத்தம் கேட்டது.

நின்று கால் வலித்ததால் வேலாயுதம் அப்படியே மொட்டைமாடியில் அமர்ந்து கொண்டார். கல்யாண் அவர் அருகில் அமர்ந்தபடி கேட்டான். “நாதமுனி என்ன சொன்னார்?”

அந்த ஆள் கிட்ட எப்படிடா இந்த சப்ஜெக்டை எடுக்கறதுன்னு நான் யோசிச்சிட்டு இருக்கறப்ப நல்ல வேளையா கிழவனே என்கிட்டமாதவன், கல்யாணுக்கு நாகராஜ்ங்கிற நண்பன் யாராவது இருந்தானான்னு கேட்டான்…”

மகன் முகத்தில் தெரிந்த குழப்பத்துடன் கூடிய அதிர்ச்சி கிழவரை அப்படியே நிறுத்தியது. “என்னடா ஆச்சு?”

இன்னிக்கு எங்க கிட்ட விசாரிக்க வந்த அதிகாரியும் இதே கேள்வியைத் தான் கேட்டான்.”

வேலாயுதம் திகைத்தார். ”என்னடா சொல்றே? எல்லாரும் மெண்டலாயிட்டானுகளா?”

கல்யாண் இந்த திகைப்பில் நாதமுனி சொன்னதை அறிவதைத் தாமதப்படுத்த விரும்பவில்லை. “ஒன்னுமே புரியல. சரி நீங்க சொல்லுங்க. நாதமுனி என்ன சொன்னார்?”

வேலாயுதம் நாதமுனி சொன்னதை எல்லாம் ஒன்றுவிடாமல் அப்படியே சொன்னார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட கல்யாணின் கண்கள் ஜொலித்தன. அப்படியானால் பாம்பாட்டி சொன்னது உண்மை தான். கடவுளின் சக்தியா, சித்தர்களின் சக்தியா என்று நாதமுனி போல் அவன் விவாதத்தில் இறங்க விரும்பவில்லை. நாகசக்திகளிலேயே உச்சமாய் ஆயிரம் வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கக்கூடிய  அந்தச் சக்தி அவனுக்கு எட்டும் தூரத்திலேயே இருக்கிறது என்ற நிஜம் பலவிதமான யோசனைகளை அவனுக்குள் ஏற்படுத்த ஆரம்பித்தது….   


(தொடரும்)
என்.கணேசன்     




இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகம் பங்கு பெறவில்லை. எனவே நூல்கள் வாங்க விரும்புவோர் வழக்கம் போல் பதிப்பாளரை 9600123146 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

சாணக்கியன் இரண்டு பாகங்களும் இம்மாத இறுதியில் வெளியாகும். வெளியானவுடன் அதை அறிவிக்கிறேன்.

அன்புடன்

என்.கணேசன்





2 comments:

  1. Very interesting. Father and son will try to steal the Nagarathinam, I think.

    ReplyDelete
  2. நாகரத்தினம் வெளிபட்டுவிட்டது... இனி தான் பரபரப்பு ஆரம்பம்...

    ReplyDelete