Monday, February 7, 2022

யாரோ ஒருவன்? 71


வேலாயுதம் பாம்பாட்டியைப் பார்த்ததும் மனதிற்குள் பொரிந்து தள்ளினார். ’பாவி உனக்கு சுளையா மூவாயிரத்தைனூறு ரூபாயை நேத்து எடுத்துத் தந்தேனேடா. இன்னும் என்னடா அங்கே நின்னு அந்த வீட்டைப் பார்க்கறே. நாகராஜுக்கு நீ பார்க்கறது தெரிஞ்சு எதாவது செஞ்சா என்னடா பண்ணுவே... அவன் கூப்பிட்டு விசாரிச்சா என் கிட்ட சொன்னதையும் சொல்லிடுவே போல இருக்கே. இன்னும் கல்யாண் வேற வரல. நீ இப்படியே நிக்கற சமயத்துல அவன் வந்தா உன்னைப் பார்த்துட்டு முகம் சுளிப்பானேடா... என்னப்பா அவன் வரமாட்டான்னு சொன்னீங்களே. இன்னிக்கே வந்து பக்கத்து வீட்டு முன்னாடி நிக்கறானேன்னு கேட்பானே. மொத்தமா உனக்கு நேரம் சரியில்லை. அந்தச் சரியில்லாத நேரத்தை நீ எங்களுக்கும் ஒட்ட வெச்சுடுவே போல இருக்கே. ஏண்டா வந்தே? உனக்கு என்ன தான் வேணும்?’

மனதிற்குள் புலம்பிக் கொண்டே அவர் மொட்டை மாடிக்குப் போய் ஒளிந்து நின்றால் பாம்பாட்டியையும், பக்கத்து வீட்டையும் சேர்ந்தாற்போல பார்க்க முடியும் என்று கணித்து கால் வலியைப் பொருட்படுத்தாமல் மொட்டை மாடிக்கு விரைந்தார்.
 
அன்று மாலையிலிருந்து அவர் வீட்டையும், நாகராஜ் வீட்டையும் கண்காணிக்க நரேந்திரன் ஏற்பாடு செய்திருந்த ஒருவன் மிக உன்னிப்பாக இருவீடுகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவர் அறிந்திருந்தால் மேலும் பதற்றமடைந்திருப்பார்.


ண்மையில் பாம்பாட்டிக்கு அன்று வீட்டில் உறங்க முடியவில்லை. ஆயிரம் வருடங்களுக்கொரு முறை நிகழும் அதிசயம் அவன் காலத்தில் நிகழப் போகிறது என்பதை அவன் தற்செயலாகத் தான் அறியமுடிந்திருந்தது. அவன் அன்று அந்த வீடிருக்கும் பகுதிக்குப் போயிருக்கா விட்டால், அந்த வித்தியாசக் கலவை மணத்தை உணர்ந்திருக்கா விட்டால், இந்த அற்புத அபூர்வ நிகழ்வு அவனுக்குத் தெரியாமலே நடந்து முடிந்திருக்கும். இப்போது தெரிந்தபின் அவனால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. ஒரு முறை அந்தப் பக்கம் போய்ப் பார்த்தாலென்ன என்று தோன்ற ஆரம்பித்தது. ஒரு பாதசாரியாய் அவன் அந்த வீட்டைக் கடப்பதில் யாரும் எந்தக் குற்றமும் கண்டுபிடிக்க முடியாது.

அந்த வீட்டின் பக்கத்து வீட்டுக் கிழவன் தான்திரும்பி இந்தப் பக்கம் வந்துவிடாதேஎன்று பல வார்த்தைகளால் சுற்றிவளைத்துச் சொன்னான். அந்த ஆள் நல்லவனாய்த் தெரியவில்லை. இரக்க குணமுள்ளவன் போல் வந்து பேசி காசையும் கொடுத்து அவன் சொன்ன தகவலையெல்லாம் கேட்டு முடித்தவுடன் உடனடியாகக் கழற்றி விட்டுப் போனது சில்லறைத்தனமான செயலாக அவனுக்குப் பட்டது. அந்த ஆள் முகத்தில் தெரிந்த கள்ளத்தனம் அவன் அந்த விசேஷ நாகரத்தினத்தைத் திருடக்கூட முயற்சிப்பான் என்று நினைக்க வைத்தது. அவன் வீட்டுக்குள் வராதே என்று சொல்ல வேண்டுமானால் அவனுக்கு அதிகாரம் இருக்கிறது. அந்தப் பக்கமே வராதே என்று சொல்ல கிழவனுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது...

இந்த எண்ண ஓட்டத்தில் தான் பாம்பாட்டி முடிவாக அந்த இரவு நேரத்திலும் ஒரு முறை அங்கு போய்விட்டு வரத் தீர்மானித்தான். அந்த வீட்டை நெருங்கும் போது நேற்றை விட இன்று அந்தக் கலவை மணம் கூடுதலாக இருந்தது. வீட்டினுள் மின்விளக்குகள் இல்லை. தீபவிளக்குகள் தான் உள்ளே நிறைய எரிந்து கொண்டிருக்கின்றன என்பதை மூடிய ஜன்னல் கண்ணாடிகள் அறிவித்தன. இது தான் அந்த விசேஷ நாகரத்தினம் உதிரும் நேரமோ....? அவன் உள்ளுணர்வு ஆமென்றது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நேரத்தில் அந்த வீட்டின் வெளியிலாவது நின்று கவனிக்க அவன் ஆசைப்பட்டான். என்ன ஆகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அந்த விசேஷ நாகரத்தினத்தால் வீட்டுக்காரன் கடவுளைப் போன்ற சக்திகள் பெறுவான் என்றால் அந்தக் கணம் அங்கிருக்கும் அவனுக்கு அந்த அதிர்ஷ்டத்தின் துளியாவது கிடைத்தாலும் கிடைக்கலாம்...

அதே சமயத்தில் தான் கல்யாணின் கார் அவன் வீட்டு கேட் முன் வந்து சேர்ந்தது

வேலாயுதம் கல்யாணின் கார் வீட்டு வாசலில் வந்து நிற்பதைப் பார்த்து  பதற்றம் அடைந்தார். ஏனென்றால் கூர்க்கா அன்று லீவு போட்டிருந்தான். அதனால் கேட்டைத் திறக்க அங்கே யாருமில்லை. கல்யாண் காரிலிருந்து இறங்கி தானே தான் கேட்டைத் திறந்து கொள்ள வேண்டியிருக்கும். இத்தனை வருடங்கள் கழித்து அந்தப் பாம்பாட்டி கல்யாணை அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பு குறைவென்றாலும் அனாவசியமாய் அவன் பாம்பாட்டி பார்வையில் ஏன் விழவேண்டும் என்று நினைத்தவராய் அவசரமாய் மகனுக்குப் போன் செய்தார். “அப்படியே காரிலேயே உட்கார்ந்திரு, நான் வேலைக்காரியை அனுப்பிக் கேட்டைத் திறக்கச் சொல்கிறேன்என்று அவர் சொல்ல நினைத்தார். அவரும் போய் அந்தப் பாம்பாட்டியின் பார்வையில் படப் பிரியப்படவில்லை.

வீட்டு கேட்டின் முன்னால் காரை நிறுத்திய கல்யாண் தந்தையின் அலைபேசி அழைப்பைப் பார்த்தாலும் லட்சியம் செய்யவில்லை. வீட்டுக்குத் தான் வந்து விட்டோமே, நேரிலேயே பேசிக் கொள்ளலாமே என்று நினைத்தான். அவன் இன்னமும் பாம்பாட்டியைக் கவனித்திருக்கவில்லை. தந்தை பாம்பாட்டி பக்கத்து வீட்டின் முன்னால் நிற்பதைச் சொல்லத்தான் அழைக்கிறார் என்பதை அறியவுமில்லை என்பதால் கேட்டின் முன்னால் காரை நிறுத்தி விட்டு சாவகாசமாய் இறங்கினான். அப்படி இறங்கும் போது தான் பக்கத்து வீட்டின் வாசலில் நின்றபடி அவனைக் கவனிக்கும் பாம்பாட்டியைப் பார்த்தான். உடனடியாக ஏற்பட்ட திகைப்பை அவனால் மறைத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றவன் வேகமாக கேட்டைத் திறந்து மீண்டும் வேகமாகக் காரில் ஏறி உள்ளே சென்றான்.

பாம்பாட்டிக்கு கல்யாணை அடையாளம் தெரியவில்லை என்ற போதிலும் கல்யாணின் திகைப்பையும் அவன் அவசரமாகக் கதவைத் திறந்துவிட்டு அதே அவசரத்துடன் கார் ஏறி உள்ளே போவதையும் கவனித்த அவனுக்கு அந்த ஆள் மீது சந்தேகம் வந்தது. என்னைப் பார்த்து ஏன் இந்த ஆள் இப்படி நடந்து கொள்கிறான் என்ற கேள்வி அவனைக் குழப்ப அவன் சிறிது நேரத்திற்கு விசேஷ நாகரத்தினத்தை மறந்தான். இந்த ஆள் நேற்றுப் பேசிய கிழவனின் மகனாகத் தான் இருக்க வேண்டும்... முன்பின் தெரியாத ஆட்கள் இந்த ஆளைப் போல திடுக்கிட மாட்டார்களே என்று நினைத்த பாம்பாட்டி அவன் திரும்பவும் கேட்டைச் சாத்த வரும் போது அவனைக் கூர்ந்து பார்க்க வேண்டும் என்று நினைத்து ஆர்வமாகக் காத்திருந்தான்ஆனால் உள்ளே போர்ட்டிகோவில் காரை நிறுத்திய கல்யாண் வேகமாக வீட்டுக்குள்ளேயே போனானேயொழிய கேட்டைச் சாத்த வரவில்லை. சில நிமிடங்கள் கழித்து வீட்டு வேலைக்காரி தூக்கக்கலக்கத்துடன் வந்து கேட்டைச் சாத்தி பூட்டிவிட்டுச் சென்றாள்.

பாம்பாட்டி சந்தேகத்துடன் கல்யாணின் வீட்டையே ஒரு நிமிடம் பார்த்துக் கொண்டு நின்றாலும் அடுத்த நிமிடம் நாகராஜின் வீட்டையே பார்க்க ஆரம்பித்தான்.

மகனிடம் பேச மொட்டை மாடியிலிருந்து கீழே விரைந்து வந்த வேலாயுதம் மருமகள் ஹாலில் இருப்பதைப் பார்த்து மகனிடம்அப்புறம் பேசலாம். மேலே வாஎன்று மருமகள் பார்க்காத வேளையில் சைகை செய்து விட்டு மறுபடியும் மொட்டை மாடிக்கே விரைந்தார். இந்த இடைவெளியில் பக்கத்து வீட்டில் நடக்கும் முக்கியமான எதையும் கவனிக்காமல் இருந்து விட அவர் விரும்பவில்லை.

அவர் கஷ்டப்பட்டு மாடிப்படி ஏறுவதைப் பார்த்த மேகலா கணவனிடம் சொன்னாள். “பக்கத்து வீட்டுக்காரன் எதோ சூனியம் செஞ்சு வெச்சிருக்கான் போலருக்கு. இவரு ஓட்டமும் சாட்டமுமா போய் பல இடங்கள்ல நின்னுகிட்டு அந்த ஆளைக் கவனிக்கறதை விடமுடியாமல் கஷ்டப்படறார்.”

கல்யாண் புன்னகைத்தபடி சொன்னான். “அவருக்குப் பொழுது போகறதில்ல. அதனால இப்படியெல்லாம் செய்யறார். செய்யட்டும் விடுபாவம்

அவன் சாப்பிடும் போது அவசரப்படாமல் சாப்பிட சிரமப்பட்டான். அவரிடம் இன்று சத்தியமங்கலத்தில் நடந்ததை விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அவசரப்பட்டு சாப்பிட்டு விட்டு மாடிக்குப் போவதைப் பார்த்தால் மேகலாஉங்க அப்பாவைப் போலவே ஆயிட்டு வர்றீங்கஎன்று சலித்துக் கொள்வாள்

மேகலாவிடம் பேசியபடியே சாப்பிட்டு விட்டு எழுந்தவன் கைகழுவி விட்டு அவசரமில்லாமல் மாடி ஏறினான். மொட்டை மாடியில் மறைவாக நின்று பக்கத்து வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்த வேலாயுதம் அவனை ஒரு நொடியில் பார்த்து விட்டு அவனையும் மறைவாகவே நிற்கச் சொல்லி சைகை காண்பித்தார். கல்யாணும் அவருடன் அப்படியே நின்ற அந்தக் கணத்தில் பக்கத்து வீட்டிற்குள் மின்னல் வெளிச்சம் போன்ற பேரொளி தோன்றி மூன்று வினாடிகள் நீடித்து மறைந்தது. அதே சமயத்தில் அமானுஷ்யமாய் பாம்பொன்று சீறும் ஒலி கேட்டு மெல்லத் தணிந்தது.



(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. The past seems to have so many mysteries. The connection between Kalyan and the snake charmer is one of them. Now, who gets the God like powers? That's a million dollar question.

    ReplyDelete
  2. இருவரும் பக்கத்து வீட்டை சலிக்காமல் கவனிப்பது... மேலும், வீட்டில் யாருக்கும் சந்தேகம் வராமல் நடந்து கொள்வது... அதில் உள்ள சிறுசிறு விசயங்கள்.... போன்ற அனைத்தையும் துல்லியமாக எழுத்தில் கொண்டு வந்து விட்டீர்கள்... அற்புதம் ஐயா...

    ReplyDelete