மதன்லாலுக்கு இந்தச் சிறைவாழ்க்கை சகிக்க முடியாத ஒன்றாய்
இருந்தாலும் யாருமே கற்றுக் கொடுக்க முடியாத அடக்கத்தை அவனுக்குக் கற்றுக் கொடுத்திருந்தது. அவனை விடத் திமிர் பிடித்தவனாய் அந்தத் தடியன் இருந்தான். அவன் தன்
கைதிகளை நடத்தியதை விடக் கேவலமாகவும் கொடுமையாகவும் அந்தத் தடியன் அவனை நடத்தினான். அந்தத்
தடியன் குத்துச் சண்டை பயில்வான் போல் இருந்தான். அவன் கை
கால்கள் மிக வலிமையாக இருந்தன. இரண்டையும் உபயோகப்படுத்துவதில் அவன் எந்த தாட்சணியமும் காட்டாதவனாக
இருந்ததால் மதன்லால் சஞ்சயைப் போலவே மரியாதையைக்
கற்றிருந்தான். வாங்கியிருந்த அடிக்கும், உதைக்கும்
பல மடங்கு வட்டியும் முதலுமாய் நிச்சயமாய் திருப்பித் தரும் வெறி நாளுக்கு நாள் அதிகமாகிக்
கொண்டே போனாலும் அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. நாயும்
சாப்பிடாது என்று அவன் சாப்பிட மறுத்த வறண்ட சப்பாத்தியை திரும்பவும் கேட்க அவன் சுயமரியாதை
விடவில்லை. ஒரு நாள் முழுப்பட்டினிக்குப் பிறகு உடல் பலமிழப்பதை அவன்
உணர ஆரம்பித்தான். தப்பித்துப் போக ஓரளவாவது உடல்பலம் வேண்டும் என்று அறிவு
அவனை எச்சரித்தது. ஒற்றைச்
சப்பாத்தியால் எத்தனை சக்தி கிடைக்கும் என்று மனம் புழுங்கினாலும் அதையும் மறுப்பது
முட்டாள்தனம் என்று உணர்ந்தவனாய் அவன் இரண்டு தடவை கெஞ்சியபிறகு தான் தடியன் அதைக்
கொடுக்க ஆரம்பித்தான். அதுவும் காலையும், இரவும்
மட்டும் தான் கிடைத்தது. நரேந்திரனிடம் சில தகவல்களைச் சொன்ன பிறகு தான் மூன்றாவது வேளை சப்பாத்தி கிடைக்கிறது என்று சஞ்சய் சொல்லியிருந்தான்.
இன்னமும் அவனிடம் பேச நரேந்திரன் வரவில்லை. தடியனிடம்
கேட்டதற்கு “அவர் தேவைப்பட்டால் தான் பேசுவார். தேவையிருக்கலை
போல...” என்றான்.
வந்த கோபத்தைக் கவனமாக அடக்கிக் கொண்டு
அவன் கேட்டான். “பின்னே எதுக்கு என்னைக் கடத்திகிட்டு வந்து இங்கே வச்சிருக்கீங்க? என்ன தான்
வேணும்”
தடியன் சொன்னான். “உன் தப்புக்கு
அபராதமாய் உன் பொண்டாட்டி கிட்ட பணம் கேட்டிருந்தோம். அவ குடுத்திருந்தா
அதை வாங்கிட்டு உன்னை விட்ருப்போம். பணம் குடுத்து உன்னை
மீட்டுக்கற அளவுக்கு உனக்கு எந்த மதிப்பும் இருக்கறதாய் அவ நினைக்கலை போலருக்கு. வேறென்ன
பண்றதுன்னு இங்கே கொண்டு வந்து போட்ருக்கோம்.”
மதன்லால் அவன் சொன்னதை நம்பினான். அவன் மெல்லக் கேட்டான். “எவ்வளவு
பணம் கேட்டீங்க?”
“ஐம்பது
லட்சம்”
மதன்லால் மனைவி பேரில் வாங்கிய சொத்துக்களின்
இன்றைய மதிப்பு குறைந்தது ஐந்து கோடி இருக்கும். கணவன் அவளுக்கு
வாங்கிக் கொடுத்த சொத்தில் பத்தில் ஒரு பகுதியை அவளுக்கு இழக்க மனமில்லை. தப்பித்துப்
போனால் அவளையும் முறையாக கவனிக்க வேண்டும்.
மதன்லால் வந்த முதல் நாளிலேயே தனது
அறையை நுணுக்கமாய் ஆராய்ந்திருந்தான். உபயோகிக்காமல் விட்டிருந்த
பழைய கட்டிடத்தின் ஒரு பாழடைந்த அறை. ஒரு ஜீரோ வாட்ஸ்
பல்பு மட்டும் தான் ஒரே மின்சார உபகரணம். அதனால் பேசுவதை
ஒட்டும் கேட்கும்படியான எந்த அறிகுறியும் தெரியவில்லை. சஞ்சய்
அறை நிலவரமும் அப்படியே என்பது அவனிடம் விசாரித்ததில் தெரிந்தது. தடியன்
இரவு நேரத்தில் மட்டும் அங்கேயே தங்குவான் போலத் தெரிந்தது....
அதனால் பகல் பொழுதுகளில் தடியன் இல்லாத நேரங்களில் சஞ்சயும் அவனும் மனம்விட்டுப்
பேசிக் கொண்டார்கள். அண்ணா அண்ணா என்று அழைத்து தர்மசங்கடமான விஷயங்களையும், தன்னம்பிக்கையை
இழக்க வைக்கும் விஷயங்களையும் தான் சஞ்சய் அதிகம் பேசினான் என்றாலும் அவனும் பேச்சுத்
துணைக்கு இல்லா விட்டால் பைத்தியம் பிடித்து விடும் என்று மதன்லால் நினைத்துக் கொண்டான்.
அங்கிருந்து தப்பிக்க எல்லா வழிகளையும்
அவன் யோசித்துப் பார்த்து விட்டான். கடினமான இரும்புச்
சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் வரை அங்கிருந்து தப்பிக்க வழியே இல்லை. சங்கிலியை பாத்ரூம் போக முடிந்த அளவு தளர்த்தியிருந்ததால்
அந்த நீளச்சங்கிலியை தடியனைத் தாக்க முடிந்த ஆயுதமாகவும் பயன்படுத்தலாம். அந்த யோசனையை
ஒரு நாள் சஞ்சயிடம் சொன்னான்.
“மதன்லால்
அண்ணா. அதை நானும் யோசிச்சிருக்கேன். ஆனா அவன்
நம்மள நெருங்கி வர மாட்டேன்கிறானேண்ணா. அது மட்டுமில்லாம
நம்மள சங்கிலியால கட்டியிருக்கற பூட்டைத் திறக்கற சாவி அவன் தன்கிட்டயே வெச்சிருக்கிறதில்லை
அண்ணா. அதைக் கண்டுபிடிச்சுட்டேன். அதனால நாம
கஷ்டப்பட்டு அவனை சங்கிலியால அடிச்சு சாய்ச்சா கூட நாம இதைக் கழட்டிட்டு போக முடியாதே
அண்ணா.”
சினிமாவில் வருவது போல் தடியனைத் தாக்கி
அவன் பாக்கெட்டில் வைத்திருக்கும் சாவியை எடுத்து பூட்டைத் திறந்து தப்பிக்கும் அந்த
வழிக்கு வாய்ப்பில்லை என்று தெரிந்த மதன்லால் மனம் நொந்து போனான்.
சஞ்சயின் குரல் பரிதாபமாகப் பக்கத்தறையிலிருந்து
வந்தது. “அண்ணா உங்களுக்கும் ஏழெட்டு நாள் முன்னாடியே இங்கே வந்து
மாட்டிகிட்டவன் நான். நாளுக்கு மூனு சப்பாத்தி மட்டும் சாப்பிட்டு உடம்பு ரொம்பவே
பலவீனமாயிடுச்சு அண்ணா. தப்பிச்சாலும் ஓடறதை விடுங்க, வேகமா நடக்க
முடியுமாங்கறதே சந்தேகமாயிருக்கு அண்ணா..”
இனி சில நாட்களில் தன் நிலைமையும் அது
தான் என்கிற உண்மை உறைத்த போது மதன்லால் கலக்கமடைந்தான். பசியும்
கடுங்குளிரும் சேர்ந்து சீக்கிரமே சாகடித்து விடும் போலத் தோன்றியது. உடனடியாக எதாவது செய்தாக வேண்டும்.
சஞ்சய் கவலையுடன் சொன்னான். “என் மாமாவோ, அஜீம் அகமதோ
நம்மளைக் கண்டுபிடிச்சுக் காப்பாத்தினா தான் உண்டு. அதுக்கு
எதாவது வழி இருக்கா அண்ணா?”
மதன்லால் மனதில் ஒரே ஒரு நம்பிக்கைக்
கீற்று மெல்ல எழுந்தது. “நீ காணாமல் போனதையும், என்னை நரேந்திரன் விசாரிக்க வந்ததையும் அஜீம் அகமது காதுல போடச்
சொல்லி உன் மாமா கிட்ட சொல்லிருந்தேன். சொல்லியிருப்பார். அவன் கில்லாடி. ரொம்ப புத்திசாலி. உன் மாமாவுக்கு
முடியாட்டியும், மனசு வெச்சா அஜீம் அகமதுக்கு நம்மள காப்பாத்த முடியும்.”
சஞ்சய் கேட்டான். “அவன் மனசு
வெப்பானா அண்ணா?”
மதன்லால் நம்பிக்கையோடு
சொன்னான். “அஜீம் அகமதுக்கு எதாவது சவாலா இருந்தா அதை அவன் நிச்சயம் அலட்சியமா விடமாட்டான்
சஞ்சய். பொறு. அவன் நம்மள கண்டுபிடிச்சு கண்டிப்பா காப்பாத்துவான்”
நரேந்திரனுக்கு நாகராஜைப் பற்றிய விவரங்கள் வந்து சேர்ந்தன. கிட்டத்தட்ட
ஜெய்ராம் கல்யாணுக்கு அனுப்பி வைத்த விவரங்களாகவே அவை இருந்தன. சுவாமி
முக்தானந்தா ஆசிரமவாசிகளையும், அக்கம்பக்கத்து ஆட்களையும், ஆசிரமத்துக்கு
நீண்ட காலம் வந்து போய்க் கொண்டிருந்த பக்தர்களையும் விசாரித்து எழுதினவையாக அவை இருந்தன. நாகரத்தினங்கள்
நாகராஜிடம் இருக்கும் விவரம் மட்டும் அதில் இருக்கவில்லை. மற்றபடி
நாகசக்தியால் அவன் அமானுஷ்ய சக்திகள் பெற்றிருப்பதை அந்த அறிக்கை பிரதானப்படுத்தியே
எழுதியிருந்தது. கூடவே சமீபத்தில் தான் ஜெய்ராம் என்ற போலிப் பெயரில் எழுத்தாளராக
எவனோ வந்து நாகராஜைப் பற்றிய விவரங்களை சேகரித்துக் கொண்டு போயிருக்கிறான் என்பதும்
குறிப்பிடப் பட்டிருந்தது. நாகராஜ் தன் சொந்த வேலையாக தற்போது கோயமுத்தூரில் தங்கியிருக்கிறான்
என்றும் விலாசம் இன்னதென்றும், அலைபேசி எண்ணும் கூட சொல்லப்பட்டு இருந்தது.
நரேந்திரனை அந்த விலாசம் ஆச்சரியப்படுத்தியது. கல்யாணின்
வீட்டு விலாசம் உள்ள பகுதி மட்டுமல்ல, கல்யாண் வீட்டுக்கு
அடுத்த வீட்டில் தான் நாகராஜ் தற்போது வசித்துக் கொண்டிருக்கிறான். மாதவனின்
நண்பனாக அறிமுகப்படுத்திக் கொண்டு வந்தவன், இன்னொரு
நண்பனின் பக்கத்து வீட்டிலேயே வசிக்க வந்திருப்பது தற்செயல் போலத் தெரியவில்லை.
அவனுக்கு அந்தத் தகவல்களை அனுப்பியவன்
ஒரு பின்குறிப்பையும் அனுப்பியிருந்தான். பிரதமரின் தனிச்
செயலாளர் குடும்பத்தினரும் நாகராஜை அடிக்கடிச் சந்திப்பவர்கள் என்றும், அதுமட்டுமல்லாமல்
ஆளும்கட்சிப் பிரபலங்கள், எதிர்க்கட்சிப் பிரபலங்கள், பல உயர்மட்ட
அதிகாரிகள் என அதிகாரமும், செல்வாக்கும் உள்ளவர்களே அவன் தயவைத் தேடி அடிக்கடி செல்பவர்கள்
என்பதால் நாகராஜின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது என்றும்
எச்சரித்திருந்தான்.
அதிகாரபூர்வமான விசாரணை என்று அவன்
நாகராஜை நெருங்கிவிட முடியாது என்பதை நரேந்திரன் புரிந்து கொண்டான்.. அதற்கான
அதிகாரத்தையே நாகராஜ் அலட்டாமல் அகற்றி விடமுடிந்த அளவு செல்வாக்குள்ளவன் என்பது புரிந்தது. நரேந்திரன்
கடிகாரத்தைப் பார்த்தான். காலை ஒன்பதரை மணி. அவன் கல்யாணையும்
சரத்தையும் அவர்களது கம்பெனியில் பதினோரு மணிக்குச் சந்திக்கச் செல்ல வேண்டும். பத்தரை
மணிக்கு அவன் தற்போது தங்கும் ஓட்டலிலிருந்து கிளம்பினால் போதுமானது. இன்னும்
ஒரு மணி நேரம் இருக்கிறது. அவர்களைச் சந்திக்கச் செல்லும் முன் நாகராஜிடம் பேசிப் பார்த்தால்
என்ன என்று தோன்றியது.
உடனே நாகராஜின் அலைபேசி எண்ணை நரேந்திரன் தொடர்பு
கொண்டான்.
(தொடரும்)
என்.கணேசன்
Will Ajim ahamed come to India to save Madanlal and Sanjay? How will Narendran tackle powerful Nagaraj? Eager to know in this interesting story.
ReplyDeleteசஞ்சய் மற்றும் மதன்லால் போன்றவர்களை கையாண்டு உண்மையை வாங்க நரேந்திரன் செய்த ஏற்பாடுகள் அருமை.....
ReplyDeleteநரேந்திரன் மற்றும் நாகராஜ் தொலைபேசி உரையாடல் எப்படி இருக்கும்..? ஆர்வமாக உள்ளது...