Thursday, January 13, 2022

இல்லுமினாட்டி 137



ம்மானுவலும் விஸ்வத்தின் குணங்களை இப்போது துல்லியமாக அறிந்திருந்ததால் அக்ஷய் சொன்னதை நம்பினான். விஸ்வத்துக்குத் தன் தோல்வியைச் சகித்துக் கொள்ள முடியாது. தன் குறிக்கோள் முடியும் வரை ஓய மாட்டான். உடனே அடுத்து ஏதாவது செய்வான்இம்மானுவல் அக்ஷயிடம் கேட்டான். “அப்படி அவன் ஒரு திட்டம் வைத்திருந்தால் அதை எங்கே அரங்கேற்றுவான் என்று நினைக்கிறீர்கள்?”

பெரும்பாலும் நாளை காலை உங்கள் கூட்டம் நடக்கும் இடத்தில்என்றான் அக்ஷய்.

அந்த இடத்தில் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் தான் செய்திருக்கிறான் என்றாலும் இம்மானுவலுக்கு விஸ்வம், அவன் கூட்டாளி சேர்ந்த கூட்டணி என்ன செய்யப் போகிறதோ என்ற கவலை சிறியதாக எழுந்தது. வெறும் திறமை வாய்ந்த மனிதர்கள் அவனுக்கு ஒரு பிரச்சினையே அல்ல. விஸ்வத்தைப் போன்ற சக்தி வாய்ந்த மனிதன் நிஜமாகவே ஒரு பிரச்சினை தான்.  மின்னல் வேகத்தில் அவன் நகர முடிந்த காட்சி இப்போதும் அவனை ஆச்சரியப்படுத்தியது. அந்த உடல் போதையால் பாழாகி தெருவில் சாகப் போகிற நிலையில் கிடந்த உடல். அதை இந்த அளவு  தேற்றியிருக்கிறவன் தன் மற்ற சக்திகளை எந்த அளவு பிரயோகப்படுத்த முடியுமோ!

எர்னெஸ்டோ யோசனையுடன் சொன்னார். “அவன் முயற்சியில் வெற்றி பெற்றிருந்தால் நீங்கள் நானும் கர்னீலியஸைப் போல உறக்கத்தில் மாரடைப்பு வந்து இறந்து விட்டேன் என்று நினைத்திருப்பீர்கள். உங்களுக்கு இந்த வயதானவன் இறந்ததில் சந்தேகமே வந்திருக்காது….”

தலையசைத்த இம்மானுவலுக்கு அவர் கர்னீலியஸையும், அவரும் அதே போல் இறந்தார் என்பதையும், நினைவுபடுத்திய போது அவனுடைய ஆட்கள் அவர் வீட்டைச் சோதனையிட்டு அனுப்பிய தகவலைப் படிக்காமல் வைத்திருப்பது நினைவுக்கு வந்தது. அக்ஷய் எர்னெஸ்டோவிடம் எதோ சொல்ல ஆரம்பிக்க அதில் கவனம் செலுத்தாமல் அவன் அலைபேசியை எடுத்து அந்தத் தகவலைப் பார்த்தான். கர்னீலியஸ் கைப்பட எதோ எழுதி இருந்ததன் புகைப்படம் அது. அதைப் பெரிதாக்கிப் பார்த்துப் படித்தான். அவன் முகம் மாறியது.

எர்னெஸ்டோ அவன் முக மாற்றத்தைப் பார்த்து என்னவென்று கேட்டார். இம்மானுவல் அவரிடம் தன் அலைபேசியை நீட்டினான். அதைப் படிக்கச் சோம்பல் பட்ட எர்னெஸ்டோ அக்ஷயிடம் சொன்னார். “நீ அதைப் பாரேன்என்றார்.    

அக்ஷய் அதைச் சத்தமாகப் படித்தான். “.....ஓருடல் நஷ்டப்பட்டு அழியும் போது வெளியேறி மறு உடல் கண்டு சேர்ந்து நிரந்தரமாய்த் தங்கும்  புதிய முயற்சி அரங்கேறும் போது ஆபத்துக் காலம் உச்சம் சென்றதென்று அறிக. இது நீங்கள் அறியாது நடக்க வழியில்லை. நடந்த பின் அறிவது உறுதி. மறு உடல் கண்ட மனிதன் மறைய உதவி கிடைக்கும்....” என்று அக்ஷய் படித்த போது எர்னெஸ்டோ இதையேன் அவர் எழுதி வைத்தார் என்று நினைத்தார். மீதியையும் அக்ஷய் படித்த பிறகு தான் இது நடந்த பின் எழுதி வைத்தது அல்ல நடப்பதற்கு முன்பே எழுதி வைத்தது, இனி நடக்கப் போவதும் அதில் எழுதி உள்ளது என்பது அவருக்கும் புரிந்தது.

ஒரு நிமிடம் அங்கே கனத்த அமைதி நிலவியது. இனி நடக்கப் போவது அவர்களுக்குத் தெளிவாய் இல்லை. ஏதோ மகாகவி, தொழுத இடம், பெருவிழி,  இருவர் மூலம் விதி முடிவு செய்வது எதுவும் புரிகிற மாதிரி இல்லை. குழப்பமாக இருந்தது. எதைப் பார்த்து ஏன் இதை அவர் எழுதி வைத்தார் என்று தெரியாமல் அவர்கள் குழம்பினார்கள்.

இம்மானுவல் சந்தேகத்துடன் சொன்னான். “அவரும் மாரடைப்பில் இறந்திருக்கிறார். அதுவும் இயற்கை மரணமாக இல்லாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது...”

எர்னெஸ்டோவுக்கு எதிரிகள் இருக்கலாம். ஆனால் கர்னீலியஸுக்கு எதிரிகள் கிடையாதுஎன்றார் எர்னெஸ்டோ.

ஆனால் இந்த மாதிரியான மிக முக்கியமான குறிப்பு அவரிடம் இருப்பதே அவருக்கு எதிராக மாறியிருக்கலாம்என்றான் அக்ஷய்.

இம்மானுவலுக்கும் ஆமென்று பட்டது. அவன் அடுத்த தகவலைப் பார்த்தான். போன்கால்களின் விவரம். அதில் ஏதும் சந்தேகப்படுகிறாற்போல் இல்லை. ஆனால் இம்மானுவல் அதில் திருப்தி அடையவில்லை. உடனடியாக ஒரு நபருக்குப் போன் செய்து சொன்னான். “நான் அனுப்பும் போன் நம்பரிலிருந்து எங்கெல்லாம் போன்கால்கள் போயிருக்கின்றன, எங்கிருந்தெல்லாம் போன்கால்கள் வந்திருக்கின்றன என்று தகவல்கள் வேண்டும். நம்பர்கள் மட்டும் போதாது. ஆட்கள் தகவலும் வேண்டும். உடனடியாக அனுப்பு. நான் காத்துக் கொண்டிருப்பேன்.”

அந்த நபர் அழைக்கும் வரை அவர்கள் மூவரும் பேசிக் கொள்ளவில்லை. அவரவர் சிந்தனைகளில் அவர்கள் ஆழ்ந்திருந்தார்கள். பத்து நிமிடங்களில் தகவல்கள் இம்மானுவலுக்கு வந்தன. கடந்த இருபது நாட்களில் கர்னீலியஸை அழைத்துப் பேசியவர்களில் சாலமன் பெயரையும், வாங் வே பெயரையும் பார்த்து இம்மானுவல் அதிர்ந்தான். அந்தத் தகவலை அவன் அவர்களிடம் தெரிவித்த போது  அவர்களும் அதிர்ந்தார்கள். அவர்களிடம் கர்னீலியஸ் பேசியிருப்பதில் சந்தேகப்படப் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் அலைபேசியில் அந்தப் பேசிய தகவல் அழிக்கப்பட்டிருப்பது சந்தேகத்தைப் பலமாகவே எழுப்பியது.

இம்மானுவல் சொன்னான். “கர்னீலியஸும் அந்த விஷம் தரப்பட்டு தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். கொன்று விட்டுத் தங்கள் போன்கால்கள் விவரங்களை அவர்கள் அவர் அலைபேசியில் அழித்திருக்கிறார்கள். அவர்கள் இருவர் பெயர்கள் மட்டும் தான் அழிக்கப்பட்டிருக்கின்றன

எர்னெஸ்டோ வாங் வே பெயரைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. திடீரென்று வயதானது போல் அவர் களைப்பை உணர்ந்தார். இல்லுமினாட்டியில் சாதாரணக் களைகளையே சகித்துக் கொள்வது கிடையாது. தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருக்கிற வாங் வே இப்படி மாறியிருப்பது அவரைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் யோசனையுடன் கேட்டார். “என்ன நடந்திருக்கலாம் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா

இம்மானுவலுக்கும் தெரியவில்லை. அவன் அக்ஷயைப் பார்த்தான். அக்ஷய் சொன்னான். “அவர் எழுதியிருப்பதைப் பார்த்தால் ஏதோ பழைய சுவடியில் இருந்து எடுத்து எழுதப்பட்டிருப்பது போலத்தான் தோன்றுகிறது…”

இம்மானுவல் சொன்னான். “அப்படித்தான் இருக்கும். கர்னீலியஸ் பழங்காலச் சுவடிகள், கலப்பு மொழிகள், இதிலெல்லாம் நிபுணர். ஏதாவது சுவடி அவர்களுக்குக் கிடைத்திருக்கலாம். அதை மொழிபெயர்த்துத் தர அவரிடம் சொல்லியிருக்கலாம். அவர் மொழிபெயர்த்துச் சொன்ன பிறகு இந்த விவரத்தை அவர் வேறு யாரிடமாவது சொல்லி விடக்கூடும் என்று அவரைக் கொன்றிருக்கலாம்தலைவரே! வாங் வேயே அவன் பக்கம் இருக்கிறார் என்கிற போது நாளை நீங்கள் அவரும் இருக்கிற அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது ஆபத்து என்று எனக்குப் படுகிறது.”

எர்னெஸ்டோ அக்ஷயைப் பார்த்தார். அக்ஷய் சொன்னான். “எனக்கும் அப்படித் தான் தோன்றுகிறது….”

எர்னெஸ்டோ யோசனையில் ஆழ்ந்தார். இம்மானுவல் அவர் என்ன முடிவெடுப்பாரோ என்ற கவலையில் இருந்தான். யார் என்ன அறிவுரை சொன்னாலும் அவருக்குச் சரியென்று பட்டாலொழிய அவர் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார். எப்போதும் அவர் அவருக்குத் தோன்றியதையே செய்வார், அதிலுள்ள ஆபத்துகளுக்கெல்லாம் அவர் அசர மாட்டார். இம்மானுவலுக்கு சாலமன், வாங் வே போன்ற உயர் பதவியில் இருப்பவர்களே சதிகாரர்களாக மாறியிருந்தது எச்சரிக்கையுணர்வை அதிகபட்சமாய் உயர்த்தியிருந்தது.

இரண்டு நிமிடங்களில் எர்னெஸ்டோ தன் முடிவைச் சொன்னார். இம்மானுவலிடம் இனி அடுத்து என்ன எல்லாம் ஆகவேண்டும் என்று கட்டளையிட்டார்.  அவருடைய மிகத் தெளிவான முடிவுகள், தெளிவான கட்டளைகள், யார் யார் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன சொல்ல வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டல்கள்- இவையெல்லாம் பார்க்கையில் அக்ஷயால் அவரை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. சதி, சூழ்ச்சிகள் எல்லாம் அவர் தினசரி பார்த்துப் பழக்கப்பட்டவை தான் என்பதால் ஸ்தம்பித்துப் போகாமல் அவரால் வேகமாவே அவற்றைத் தாண்ட முடிகிறது என்று அக்ஷய் நினைத்தான்.


வியாழன் அதிகாலை நான்கு மணிக்கு வாங் வேயின் அலைபேசி அடித்தது. அழைப்பது யாரென்று அவர் தூக்கக்கலக்கத்துடன் பார்த்தார். இல்லுமினாட்டியின் உபதலைவர். வாங் வே பேசினார். “ஹலோ

தலைவருக்கு உடல்நிலை சரியில்லை என்று அவர் ஒரு மணி நேரத்திற்கு முன்பு ம்யூனிக் போய் விட்டார். அதனால் இன்றைக்கு தலைமைக்குழுக் கூட்டத்தையும், பொதுக்கூட்டத்தையும் என் தலைமையிலேயே நடத்த உத்தரவிட்டிருக்கிறார்”  உபதலைவர் தெரிவித்தார்.

தலைவருக்கு என்ன ஆயிற்று?” வாங் வே பரபரப்போடு கேட்டார்.

நெஞ்சு வலியாம்…”

உயிருக்குப் பயம் ஒன்றும் இல்லையே?” ஆவலோடு வாங் வே கேட்டார்.

தெரியவில்லை. இம்மானுவல் தான் நெஞ்சு வலி தகவலையும், தலைவர் கூட்டத்தை என் தலைமையில் நடத்த உத்தரவிட்டார் என்ற தகவலையும் சொன்னான். ஆனால் அவன் குரலில் இருந்த பதற்றத்தைப் பார்த்தால் நிலைமை கொஞ்சம் அபாயம் போல் தான் தெரிகிறது….”


(தொடரும்)
என்.கணேசன்



10 comments:

  1. விபுலானந்தன்January 13, 2022 at 6:54 PM

    வாங்க வேயின் தொலைபேசி அடித்தது. அடுத்த வரியில் உபதலைவர் வாங்வே
    பேசினார் என்று இரண்டு இடங்களிலும் ஒரே பெயர் என்பது சரியா! திருத்தம் தேவையா? உங்களின் கவனத்திற்கு

    ReplyDelete
  2. யாரென்று பார்த்தார். உபதலைவர். வாங் வே பேசினார். இடையில் உள்ள முற்றுப் புள்ளியைப் பார்க்கவும்.

    ReplyDelete
  3. விபுலானந்தன்January 13, 2022 at 7:12 PM

    ஆம் புரிந்து கொண்டேன். நன்றி

    ReplyDelete
  4. எர்னெஸ்டோ, இம்மானுவேல், வாங்வே, க்ரிஷ், அக்ஷய், விஸ்வம் இவங்க எல்லோருடைய திறமையை பார்த்து வியக்கும் போது, இந்த எல்லா characters ம் உருவாக்கின நீங்க இன்னும் வியப்புக்குள்ளாக்குறீங்க, என்ன thinking and writings,,, semmmmaaaaaaa sir...

    ReplyDelete
  5. தலைவரின் திட்டம் ஆஹா.... உண்மையிலேயே வியக்காமல் இருக்க முடியவில்லை... தலைவர் விரித்த வலையில் யார்? யார்?? மாட்டுவார்களோ??? தெரியவில்லை...

    ReplyDelete
  6. ஒரு கூடுதல் தகவல்....இது போன்ற காட்சியை சன் டீவியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடரிலும் வைத்துள்ளார்கள்....

    வில்லி துப்பாக்கியால் கதாநாயகியை கொல்ல திட்டமிடுவது... கதாநாயகன் அதை அறிந்து போலி துப்பாக்கியை மாற்றி விடுவது... அந்த போலி துப்பாக்கியால் சுட்டு கதாநாயகி இறந்தது போல் ஒரு சூழலை உருவாக்கி... வில்லியை சிறையில் அடைத்து உண்மையை வெளிகொண்டு வருவது...
    குடும்பத்தினர் கதாநாயகி இறந்தது போல நாடகம் ஆடுவது...

    இந்த சீரியல் இயக்குனர் உங்கள் நாவலை படிப்பார் போல....

    ReplyDelete
  7. பொங்கல் ஸ்பெஷல் எபிசோட் கிடையாதா?

    ReplyDelete
    Replies
    1. பொங்கல் ஸ்பெஷலாக ‘வாழ்ந்து படிக்கும் பாடங்கள்’ அமேசான் கிண்டிலில் வெளியாகியிருக்கிறது. இல்லுமினாட்டி எபிசோட் வழக்கம் போல் அடுத்த வியாழன் தான்.

      Delete