வாஷிங்டன் வந்து சேர்ந்ததிலிருந்தே அக்ஷயின் மனம் ஏதோ ஒரு
நெருடலை உணர்ந்து கொண்டேயிருந்தது. அது என்னவென்று அவனால் சொல்ல முடியவில்லை. பயணத்தின்
போது ம்யூனிக்கிலும், வாஷிங்டனிலும் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளில் எந்தக் குறையும்
இருக்கவில்லை. எர்னெஸ்டோவின் பங்களாவிலும் அதில் எந்தக் குறையும் இல்லை. ஆனாலும் அந்தப்
பங்களாவில் கூட அவரைத் தனியாகச் சிறிது நேரம் அவர் அறையில் இருக்க விடுவதற்கு அவன்
மனம் சம்மதிக்கவில்லை.
அவன் தனக்குள் சொல்லிக்
கொண்டான். “இத்தனை பாதுகாப்பு கெடுபிடிகளைத் தாண்டி விஸ்வம் வர வாய்ப்பேயில்லை. இவர்
வருவதற்கு முன் இங்கிருந்த பாதுகாப்பு குறைந்த நிலைமையிலாவது விஸ்வம் எதாவது முயற்சி
எடுத்திருந்தால் அது முடிந்திருக்கலாம். இப்போது முடியவே முடியாது...”
அக்ஷய் ஒரு கணம்
மனதை நிறுத்தினான். திரும்பவும் முந்தைய வாக்கியத்திற்குப் போனான். ‘இவர் வருவதற்கு
முன் இங்கிருந்த பாதுகாப்பு குறைந்த நிலைமையிலாவது விஸ்வம் எதாவது முயற்சி எடுத்திருந்தால்
அது முடிந்திருக்கலாம்.’. தலைவர் இல்லாத போது அப்படி இங்கே வந்து போய் அவன் எதைச் சாதித்திருக்க
முடியும்.... ஏன் எதையும் சாதித்திருக்க முடியாது. வந்து வெடிகுண்டு வைத்து விட்டும்
கூடப் போயிருக்கலாமே....
இம்மானுவல் அங்கே
இருபத்திநான்கு மணி நேரமும் பாதுகாப்பு அதிகாரி, காவலாளிகள் இருக்கிறார்கள் என்று சொல்லியிருந்த
போதிலும் அக்ஷய்க்கு அந்த எண்ணம் வந்த பிறகு
நிம்மதியாக இருக்க முடியவில்லை. இருபத்தி நான்கு மணி நேரக் காவலில் சில வினாடிகள்,
சில நிமிடங்களாவது அவர்கள் அசந்திருக்க வாய்ப்பிருக்கிறது. தலைவர் தான் இல்லையே என்ன
ஆகி விடப்போகிறது என்று சிறு அலட்சியம் காட்டியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.... அந்தக்
குறைவான நேரம் விஸ்வத்துக்குப் போதும் ஏதாவது ஆபத்தை உருவாக்க...
அக்ஷய் உடனே இம்மானுவலை
அழைத்துத் தன் சந்தேகத்தைச் சொன்னான். இம்மானுவல் சொன்னான். “வெடிகுண்டு வைத்து விட்டுப்
போக விடுமளவு எங்கள் ஆட்கள் மோசமில்லை அக்ஷய். அவர்கள் இருப்பது மட்டுமல்ல. கண்காணிப்பு
கேமிராக்கள் வேறு இருக்கின்றன. ”
ஆனாலும் அக்ஷயின்
மனம் ஏனோ விஸ்வம் வந்து போயிருக்கலாம் என்ற சாத்தியக்கூறிலிருந்து நகர மறுத்தது.. அது
அர்த்தமில்லாத பயமாய் இருக்கலாம் என்றாலும் அலட்சியப்படுத்த வேண்டாம் என்று நினைத்த
அக்ஷய் சொன்னான். “அப்படியானால் கடைசி இரண்டு மூன்று நாட்களின் பதிவுகளை ஒரு தடவை
பார்த்து விடுங்களேன்...”
இம்மானுவல் தலையசைத்தான்.
அன்று மாலை எர்னெஸ்டோவும், அக்ஷயும் பாதுகாப்பு வீர்ர்களுடன் போக இம்மானுவல் பங்களாவிலேயே
இருந்தான். அமெரிக்க ஜனாதிபதி, ரஷிய ஜனாதிபதி எல்லாம் கலந்து கொள்கிற விருந்து என்பதால்
அந்தந்த நாட்டினரின் உச்சக்கட்டப் பாதுகாப்பு அங்கே இருக்கும். கூடவே இல்லுமினாட்டியின்
பாதுகாப்பும், அக்ஷயின் பாதுகாப்பும் தலைவருக்கு இருக்கும் போது கவலைப்பட ஏதுமில்லை
என்பதால் பங்களாவிலேயே இருந்து அக்ஷய் சொன்ன மாதிரி அந்தப் பதிவுகளை எல்லாம் பார்த்து
சந்தேகம் தெளிவது நல்லது என்று அவன் நினைத்தான். ஏனென்றால் விஸ்வம் சம்பந்தப்படும்
எதிலும் சிறிய சந்தேகத்தையும் கூட அவ்வப்போது நிவர்த்தி செய்யாமல் விடுவது ஆபத்து என்று
அவனும் நினைத்தான்.
இரண்டு நாட்களின்
பதிவுகள் சரியாகப் பிரிக்கப்பட்டு இரண்டிரண்டு பேர் கொண்ட ஆறு பிரிவினரால் பார்க்கப்பட்டது.
அவர்கள் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்க இம்மானுவல் அவர்கள் கண்காணிப்பை சுற்றி நடந்தபடியே
கண்காணித்துக் கொண்டிருந்தான். நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் எதுவும் வித்தியாசமாகவோ,
சந்தேகப்படும்படியாகவோ கிடைக்கவில்லை. எல்லாம்
இயல்பாகவே இருந்தது. தேவையில்லாமல் சந்தேகப்பட்டோமோ என்று இம்மானுவல் நினைத்த போது
திடீரென்று அந்தப் பன்னிரண்டு பேரில் ஒருவன் கத்தினான். “இங்கே பாருங்கள்”
இம்மானுவல் அந்த
ஆள் பின்னால் நின்று பார்த்தான். அந்த ஆள் சிறிது அந்தப் பதிவைப் பின்னுக்குத் தள்ளி
மறுபடி ஓட விட்டான். பங்களாவின் பின்னால் இருந்த காமிரா பின் சுவரிலிருந்து முகமூடியணிந்த
ஒருவன் குதிப்பதைக் காட்டியது. அவன் சுவரை ஒட்டி நின்று கொண்டு சிறிது நேரம் பார்த்து
விட்டு ஓட யத்தனிப்பது தெரிந்தது. திடீரென்று அவன் அந்தப் பதிவில் காணவில்லை. அடுத்தடுத்த
காமிராக்களில் ஏதோ அலைபாய்ந்தது போல் அவனது அவசரப் பாய்ச்சல் தெரிந்தது....
இம்மானுவல் சிலையாய்
உறைந்து போனான். ஹாலின் காமிராக்களிலும் ஒரு பாய்ச்சல் மட்டும் தான் மூன்று வினாடிகளில்
தெரிந்தது. அதன் பின் அவன் ஒரு அறையை அடைவது தெரிந்தது. அந்த அறையிலும் ஒரு காமிரா
இருந்தது என்றாலும் கும்மிருட்டில் எதுவும் சிறிதும் தெரியவில்லை. சில நிமிடங்கள் அவன் அங்கே இருந்தான் என்பது மட்டும்
தெரிந்தது. பின் மறுபடி ஹாலில் பாய்ச்சல், பின் சிறிது நேரம் வரவேற்பறையின் கதவருகே
நின்று எட்டிப் பார்த்தபடி நின்றது வராந்தா வெளிச்சத்தால் சில நிமிடங்கள் மங்கலாக அரையிருட்டில்
தெரிந்தது. அதன் பின் அசாத்திய வேகத்தில் பழையபடி
ஓட்டம்.
அவர்கள் பார்த்தபடி
திகைத்து நின்ற போது எர்னெஸ்டோவும் அக்ஷயும் விருந்திலிருந்து திரும்பி வந்து சேர்ந்தார்கள்.
அவர்களுக்கும் அந்தக் குறிப்பிட்ட பதிவு மறுபடி காட்டப்பட்டது. முகமூடி மனிதன் தொடர்ந்து
சிறிது நேரம் வெளிச்சத்தில் நின்றிருந்தது பின்பக்கச் சுவர் அருகே தான். மற்றபடி எல்லா
இடத்திலும் மின்னல் வேகம் தான். வந்திருந்தவன் விஸ்வம் தான் என்பதில் சந்தேகமேயில்லை.
இம்மானுவல் சொன்னான்.
“அவன் போய்ச் சிறிது நேரம் தங்கியிருந்தது தலைவரின் படுக்கையறை. அங்கே இருட்டில் என்ன
செய்திருக்கிறான் என்று பார்க்க வேண்டும்... இருட்டில் இருக்கும் காமிராப் பதிவுகளைத்
தெளிவாக்கிக் காட்ட வல்லுனர்கள் இருக்கிறார்கள்... அவர்களை அழைப்போம்.. அவனிடம் வெடிகுண்டு
எதுவும் இருந்தது போல் தெரியவில்லை என்றாலும் அந்த சாத்தியத்தையும் சோதித்து விடுவது
நல்லது.”
முதலில் எர்னெஸ்டோவை
தூர இருக்கும் ஒரு அறையில் பாதுகாப்பாக அமர்த்தி அவருடன் ஐந்து பாதுகாவலர்களை நிறுத்தினார்கள்.
பின் அந்தந்த வல்லுனர்கள் வருவதற்கு முன் எர்னெஸ்டோவின் அறையைச் சோதனையிடப் பாதுகாப்பு
வீர்ர்கள் உள்ளே செல்ல இம்மானுவலும், அக்ஷயும் பின் சென்றார்கள். அவரது படுக்கை, மற்ற
அலங்காரப் பொருட்கள் எல்லாம் அவர்கள் பரிசோதித்துப்
பார்த்துக் கொண்டிருந்த போது கண்களை மூடி நின்று யோசித்த அக்ஷய் பின் மெல்ல அலமாரியைத்
திறந்தான். ஒயின் பாட்டில்களைப் பார்த்தவுடன் சொன்னான். “ஆபத்து இதில் இருக்கலாம் என்று
நினைக்கிறேன்”.
அடுத்த அரை மணி
நேரத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், காமிராப்பதிவு நிபுணர்கள், மருத்துவ ஆய்வுப் பரிசோதகர்கள்
வந்து சேர்ந்தார்கள். பரிசோதனை செய்ததில் அக்ஷய் சந்தேகப்பட்டது போல மூன்று ஒயின்
பாட்டில்களிலும் விஷம் கலக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. மூத்த பரிசோதகர் சொன்னார். “இது சாதாரண விஷம் இல்லை.
இரண்டு மூன்று விஷங்கள் சேர்ந்த ஒரு கலவை. இதைச் சாப்பிட்டு இறந்தால் சாதாரணப் பரிசோதனையில்
கண்டுபிடிக்க முடியாது. மாரடைப்பில் காலமான அறிகுறிகள் தான் தெரியும்… ஆனால் சாப்பிட்டு
ஒரு மணி நேரத்தில் ஆள் இறப்பது மட்டும் நிச்சயம்”
இம்மானுவல்
அதிர்ந்து போயிருந்தான். சிறிது ஏமாந்திருந்தால், அக்ஷயின் உள்ளுணர்வுக்கு இது தோன்றாமலிருந்திருந்தால்
இன்றிரவு இல்லுமினாட்டி அதன் தலைவரை இழந்திருக்கும். அவன் தலைவரைப் பாதுகாக்கத் தவறியவனாய்
ஆகியிருப்பான்…. தலைவர் வாஷிங்டன் வரும் போதெல்லாம் ஒரு செனெட்டர் நண்பர் அவருக்குப்
பிரத்தியேகமாகத் தருவிக்கப்பட்ட இத்தாலிய, பிரெஞ்சு ஒயின்கள் அனுப்புவது வழக்கம் என்பதையும்
சாலமன் தான் விஸ்வத்துக்குத் தெரிவித்திருக்க வேண்டும்.
இம்மானுவலின்
அதிர்ச்சி எர்னெஸ்டோவிடம் இருக்கவில்லை. அவர் அக்ஷயிடம் புன்னகையுடன் சொன்னார். “விஸ்வத்தை
நான் இன்று திருப்திப்படுத்த முடியாதபடி செய்து விட்டீர்கள்…”
அக்ஷய்
அமைதியாகச் சொன்னான். “விஸ்வம் தன் திருப்திக்கு ஒரே ஒரு திட்டத்தை மட்டும் நம்பியிருக்க
மாட்டான். அவனிடம் வேறொரு திட்டம் தயாராக இருக்கலாம்.”
(தொடரும்)
என்.கணேசன்
Akshay is great. What will be the second plan of Viswam? How will Akshay tackle it? Curious to know.
ReplyDelete👍
ReplyDeleteமிகவும் சிறப்பான பரபரப்பான பதிவு. அடுத்து என்ன என்ற யோசனையில் நாற்காலி நுனியில் உட்கார வைத்து விட்டீர்கள். அருமை
ReplyDeleteவல்லவனுக்கு வல்லவன்👌👌
ReplyDeleteInga than sir nikrenga arumai
ReplyDeleteWowww,,, அக்ஷய் ஓட புத்திகூர்மையை ரொம்ப நாள் கழிச்சி பாக்றோம்..
ReplyDeleteHow Vishwam missed the cameras? Not fitting into his character,
ReplyDeleteவிஸ்வம் கேமிராக்களைக் கவனிக்காமல் போகவில்லை. அந்தந்த நேரத்திலேயே அந்த கண்காணிப்பாளர் கவனிக்கா விட்டால், எர்னெஸ்டோ வருவதற்கு முந்தைய கேமிரா பதிவுகளை இல்லுமினாட்டி செக் செய்ய வாய்ப்பு இல்லை என்று கணக்குப் போட்டான். அவன் கணக்குப் போட்டபடியே அவர்களும் பார்க்க முற்படவில்லை. அக்ஷய் சொல்லாமல் இருந்திருந்தால் அவர்கள் பார்த்திருக்கவே மாட்டார்கள்.
Deleteமிக அருமை...அக்ஷயின் ஆக்ஷன் தொடரட்டும்...
ReplyDeleteWe can expect same Chennai drama repeated here?
ReplyDeletessssssssss appaada amaanushyanin aattam aarampithhuvittthu. super
ReplyDeleteவிஸ்வம் அடுத்த திட்டத்தை தான் நிறைவேற்றியாக வேண்டும்....
ReplyDeleteஅக்ஷய் கண்டுபிடித்த விதம் அற்புதம்.....
மிக மிக அற்புதமான கதை....
ReplyDeleteஅடுத்து என்ன என்று ஆவால் தூண்டுகிறது....
நன்றி....
when will be the next episode?
ReplyDeletePublished today at 6.00 pm
Deletevishwam missed to notice/plan about cameras ? it doesnt suit his knowledge or his supernatural powers
ReplyDeleteவிஸ்வம் கேமிராக்களைக் கவனிக்காமல் போகவில்லை. அந்தந்த நேரத்திலேயே அந்த கண்காணிப்பாளர் கவனிக்கா விட்டால், எர்னெஸ்டோ வருவதற்கு முந்தைய கேமிரா பதிவுகளை இல்லுமினாட்டி செக் செய்ய வாய்ப்பு இல்லை என்று கணக்குப் போட்டான். அவன் கணக்குப் போட்டபடியே அவர்களும் பார்க்க முற்படவில்லை. அக்ஷய் சொல்லாமல் இருந்திருந்தால் அவர்கள் பார்த்திருக்கவே மாட்டார்கள்.
Delete