Thursday, December 30, 2021

இல்லுமினாட்டி 135



விஸ்வம் அந்த அறையில் பூட்டப்பட்டிருந்த அலமாரியை நோக்கிப் போனான். பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு வளைந்த கம்பியை எடுத்து அந்த அலமாரியின் சாவித்துளையில் நுழைத்தான். இரண்டு நிமிடங்களில் அந்த அலமாரியை அவனால் திறக்க முடிந்தது. அலமாரியில் மூன்று ஒயின் பாட்டில்கள் இருந்தன. இரண்டு இத்தாலிய உயர்ந்த ரக ஒயின் பாட்டில்களும், ஒரு பிரெஞ்சு உயர்ந்த ரக ஒயின் பாட்டிலும் இருந்தன. மூன்று பாட்டில்களும் கார்க் மூடிகளால் மூடப்பட்டிருந்தன.

விஸ்வம் கைகளில் உறை போட்டுக் கொண்டு தான் கொண்டு வந்திருந்த விட்டமின் வி ஜீரோ இருந்த புட்டியை நிதானமாக எடுத்தான். மருத்துவர்கள் ஊசி போடப் பயன்படுத்தும் சிரிஞ்சை எடுத்து அதிலிருந்த விஷத்தை உறிஞ்சி அதை அந்த கார்க்குகள் வழியே மூன்று ஒயின் பாட்டில்களிலும் செலுத்தினான். பின் அந்த அலமாரியை மூடினான். பின் மெல்ல அறைக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தான். ஹாலில் இன்னும் அந்தப் பாதுகாப்பு அதிகாரி திரும்பியிருக்கவில்லை. வேகமாக ஹாலைக் கடந்து வந்து வரவேற்பறையில் வாசற்கதவருகே வந்து விஸ்வம் எட்டிப் பார்த்தான்.  இப்போது மூவரும் சதாம் உசைன் பேச்சை முடித்துவிட்டு பின் லேடனைப் பற்றிப் பேச ஆரம்பித்திருந்தார்கள். இப்போதும் அந்தப் பாதுகாப்பு அதிகாரி நின்றிருக்கும் விதம் ஒரு காவலாளியை மறைப்பதாக இருந்தது. ஆனால் இப்போது விஸ்வம் வெளியே போனால் இன்னொரு காவலாளி கண்டிப்பாக அவனைப் பார்க்க முடியும்.

வராந்தாவில் மூன்றடி தடுப்புச் சுவர் ட வடிவில் இருந்தது. வராந்தாவில் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருக்கா விட்டால் தவழ்ந்து போய் அந்தத் தடுப்புச் சுவர் ஓரம் மறைந்து ஒதுங்கியிருக்கலாம் என்று அவன் நினைத்துக் கொண்டான். பின் அந்தப் பாதுகாப்பு அதிகாரி உள்ளே வந்தவுடன் அந்தக் காவலாளிகளை மட்டும் கவனித்துக் கொண்டிருந்து விட்டு  அவர்கள் இருவர் கவனமும் வேறெங்காவது இருக்கையில் பழையபடி பின்பக்கம் ஓடிப் போய் விட்டிருக்கலாம். அங்கே நல்ல வெளிச்சம் இருப்பதால் இப்போது அதற்கு வழியில்லை. ஒரு நல்ல சந்தர்ப்பத்திற்காக விஸ்வம் பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தான். வெளியே போலீஸ் கார் வரும் சத்தம் கேட்டது. மறுபடியும் அந்த அறைக்குள் போய் ஒளிந்து கொள்ள வேண்டிவருமா என்று விஸ்வம் யோசித்துத் தயாராக இருந்தான்.

போலீஸ் கார் எர்னெஸ்டோவின் பங்களா முன் நின்றது. பாதுகாப்பு அதிகாரி வெளியே போனார். காவலாளிகள் இருவர் கவனமும் கூட போலீஸ் கார் பக்கம் திரும்பியது. போலீஸ் காரில் இருந்த உயர் போலீஸ் அதிகாரி நாளையிலிருந்து அங்கிருக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அந்தப் பாதுகாப்பு அதிகாரியுடன் பேசுவது மெல்லக் கேட்டது இது தான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்த விஸ்வம் வெளியேறி சத்தமில்லாமல் வேகமாகப் பின்பக்கம் ஓடினான். காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்த பின்னர் தான் மூச்சு வாங்கி நின்றான்.  ஆனால் பாதுகாப்பாக உணர்ந்த இந்தக் கணத்திற்கு முந்தைய கணம் வரை பின்னாலிருந்து துப்பாக்கி ரவைகள் என்னேரமும் பாய்ந்து வரலாம் என்று எதிர்பார்த்து தானிருந்தான். ஆனால் நல்ல வேளையாக இந்த முறை விதி அதிகம் சோதிக்கவில்லை. அந்த விதி கடைசி நேரத்தில் காலை வாராமல் இருந்தால் சரி என்று நினைத்தவனாக முகமூடியைக் கழற்றியபடியே  மெல்லப் பின்பங்களாவின் முன் கேட் வந்து வாகனங்களோ ஆட்களோ இல்லாத நேரமாகப் பார்த்து ஏறிக் குதித்து தெருவில் நடக்க ஆரம்பித்தான்.


ர்னெஸ்டோ விஸ்வத்தின் இரண்டாவது கடிதம் மின்னஞ்சலில் வந்ததைத் தெரிவித்த போது இம்மானுவல் திகைத்தான். க்ரிஷ், அக்‌ஷய் சொல்வதைப் பார்த்தால்  அவரை வாஷிங்டனில் கொலை செய்ய அவன் திட்டம் போட்டது போல் இருக்கிறது. ஆனால் அவன் எதிர்மாறாக மிக நல்லவன் போல் முறையாக இப்படி வேண்டுகோள் விடுக்கிறான். உண்மையில் அவன் உத்தேசம் என்ன என்று இம்மானுவல் யோசித்தான்.

எர்னெஸ்டோ சொன்னார். “அவன் என் பர்சனல் மெயில் ஐடிக்கு அனுப்பாமல் தலைமைக்குழு மெயில் ஐடியை தேர்ந்தெடுத்தது ஒரு யதார்த்தமான காரியமாக எனக்குத் தெரியவில்லை”

இம்மானுவலுக்கும் அவர் சொன்ன பிறகு அப்படியே தோன்றியது. “அதற்கு என்ன பதில் அனுப்பப் போகிறீர்கள்?”

“அடுத்த வாரம் புதன் கிழமை ம்யூனிக்கில் அனைத்து உறுப்பினர் கூட்டம் ஏற்பாடு செய்ய வாங் வேயிடம் இப்போது தான் சொன்னேன். அதில் கலந்து கொண்டு பேச விஸ்வத்துக்கும் அழைப்பு அனுப்பச் சொல்லியிருக்கிறேன். இரண்டையும் எல்லா உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கச் சொல்லியிருக்கிறேன். முதலில் அவன் வரட்டும். பிறகு பார்ப்போம்”


விஸ்வத்துக்குத் தலைமைக்குழுவின் அழைப்பு மின்னஞ்சலும், வாங் வேயின் அலைபேசி அழைப்பும் அடுத்தடுத்து வந்தன. வாங் வே பரபரப்புடன் சொன்னார். “கிழவர் இப்போது தான் அழைத்துச் சொன்னார். உடனடியாக அனுப்பி வைத்திருக்கிறேன்”

விஸ்வம் கேட்டான். “ஏன் வியாழக்கிழமை நடக்கும் பொதுக்குழுக் கூட்டத்திற்கே என்னைப் பேச அழைத்திருக்கலாமே?”

“இது அமெரிக்காவின் இந்தப் பகுதி உறுப்பினர்களுக்கான கூட்டம் தான். அதனால் தான் தனியாக ஒரு அனைத்து உறுப்பினர் கூட்டத்தை ஏற்பாடு செய்ய அவர் சொல்லியிருக்கிறார்... உங்கள் திட்டமெல்லாம் எதிர்பார்த்தபடி நடந்து கொண்டிருக்கிறதா?”

“இது வரை நடந்து கொண்டிருக்கிறது. இனி பார்க்க வேண்டும்” என்று சொன்ன விஸ்வம் பேச்சை வளர்த்தாமல் முடித்துக் கொண்டான்.

உண்மையில் அவன் அடுத்த திட்டத்தில் தான் அப்போது ஆழ்ந்திருந்தான். அவன் கணக்குப்படி புதன் இரவு அந்த ஒயின் குடித்து எர்னெஸ்டோ மாரடைப்பில் இறந்து விடுவார். அவர் ஒயின் குடிக்காமல் எந்த இரவையும் கழித்ததாய் சரித்திரமில்லை.  இத்தாலியிலிருந்தும், பிரான்சிலிருந்தும்  ஒயின் தயாரிக்கும் இடங்களிலிருந்தே அவருக்காக மூன்று நாட்கள் முன்பு தான் உயர்ந்த ரக ஒயின் பாட்டில்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. அவர்கள் விஸ்வத்தின் தாக்குதலுக்குத் தயாராக இருப்பார்களே ஒழிய இந்த விட்டமின் வி விஷயத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒருவேளை அவர் ஒயின் குடிக்காமல் விட்டால் அடுத்தபடியாக அவரை எப்படிக் கொல்வது என்ற திட்டத்தில் இறங்கியிருந்தான்.

வியாழக்கிழமை நடக்கும் இல்லுமினாட்டி கூட்டம் தான் அவரைக் கொல்ல அடுத்தபடியான உகந்த இடம். விட்டமின் வி போல பிரச்னையில்லாத திட்டம் அது அல்ல என்றாலும்  அந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காது. எப்படியாவது அவரை வாஷிங்டனிலேயே முடித்து விட வேண்டும்.  அந்தக் கூட்டம் நடக்கும் இடத்தின் வரைபடம் அவன் முன் இருந்தது. நிகழ்ச்சி நிரலும் அவனிடம் இருந்தது. அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சாலமன் ஏற்கெனவே தந்திருந்தார். இதில் அவன் செய்ய முடிந்தது என்ன என்று பல வகைகளிலும் யோசனை செய்து கொண்டிருந்தான்.


ர்னெஸ்டோவுடன் கிளம்பும் செவ்வாய் காலையிலிருந்து மாலை வரை  அக்‌ஷய், க்ரிஷுடன் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தான். அவன் க்ரிஷின் சக்திப் பயிற்சிகள் குறித்தும் கேட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு சிந்துவை விஸ்வத்தின் ஆள் என்று க்ரிஷ் கண்டுபிடித்த விதமும், முன்பு ஹரிணி கடத்தப்பட்ட போது அவள் இருந்த இடத்தைக் கண்டுபிடித்த விதமும் ஆச்சரியமாய் இருந்தன. அக்‌ஷயும் எத்தனையோ சமயங்களில் ஆபத்திலிருந்து தப்பித்தது அவன் அந்தராத்மாவின் குரலால் தான். ஆனால் க்ரிஷுக்குச் சாத்தியப்பட்டிருப்பது மேலான சக்தி சாதனை என்று அவன் நினைத்தான்.

விஸ்வத்தின் தாக்குதல்களிலிருந்து எர்னெஸ்டோவைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றிருக்கும் அவன் விஸ்வத்தின் சக்திகள், அதை அவன் ஏவும் விதங்கள் பற்றியெல்லாம் க்ரிஷ் வாயால் கேட்க ஆசைப்பட்டான். அது வாஷிங்டனில் அவனுக்கு ஏதாவது வகையில் உதவக்கூடும் என்று நினைத்தான். ஏனென்றால் க்ரிஷ் அவனுடைய அலைவரிசை ஆராய்ச்சிகளில் நிறையத் தெரிந்தவனாகவும் சாதித்தவனாகவும் இருந்தான். க்ரிஷ் பொறுமையாக நிகோலா டெஸ்லாவில் ஆரம்பித்து அவனுக்கு மாஸ்டர் சொல்லிக் கொடுத்த பயிற்சிகள் பற்றியெல்லாம் விரிவாகச் சொன்னது சக்திப் பிரயோகங்களின் பலவிதப் பரிமாணங்களைப் புரிய வைப்பதாக இருந்தது.  

அவனுக்கு க்ரிஷும் வாஷிங்டன் வந்தால் நன்றாயிருக்கும் என்று தோன்றியது. ஆனால் வாஷிங்டனுக்கு அவர்களுடன் அவன் வந்தால் அவன் இந்தியாவுக்குப் போகவில்லை என்பதை யார் மூலமாவது விஸ்வம் அறிய வாய்ப்புகள் அதிகம் என்றும், அப்படி அவன் உண்மையைத் தெரிந்து கொண்டால் அது சிந்துவுக்கும், அவன் குடும்பத்திற்கும் ஆபத்து என்றும் சொல்லி க்ரிஷ் மறுத்து விட்டான். அதுவும் உண்மை என்பதால் அதற்கு மேல் அக்‌ஷய் அவனைக் கட்டாயப்படுத்தவில்லை.

அக்‌ஷய், இம்மானுவல், பாதுகாப்புப் படை சூழ எர்னெஸ்டோ வாஷிங்டனுக்கு செவ்வாய் இரவு கிளம்பினார்.

(தொடரும்)
என்.கணேசன்





2 comments:

  1. Viswam's thorough preparation and his readiness for implementing second plan amaze me. He is simply a genius. How Akshay is going to handle him? Very very curious to know.

    ReplyDelete
  2. விஸ்வம் அங்கே சென்று முன்னாதாக தங்கியிருந்து... தலைவர் வந்தவுடன் தாக்குவான்...என நினைத்திருந்தேன்...

    ஆனால்... புத்திசாலித்தனமாக விட்டமின் வி ஜீரோ...பயன்படுத்திவிட்டு வெளியேறி விட்டான்....

    ReplyDelete