இம்மானுவல் அக்ஷயிடம் கேட்டான். “பயணத்தின் போது தலைவருக்குப்
பாதுகாப்பு தருவதில் ஏதாவது மாற்றங்கள் தேவையிருக்கிறதா?”
அக்ஷய் சொன்னான்.
“தேவையில்லை. நீங்கள் இப்போது செய்திருப்பதே போதும்”
”விஸ்வம் எந்த சமயத்தில்
எந்த இடத்தில் தாக்கலாம் என்று உங்களுக்கு ஏதாவது யூகம் இருக்கிறதா?” என்று இம்மானுவல்
கேட்டான். சாலமன் மாறியிருப்பது தெரியும் வரை எக்காரணத்தைக் கொண்டும் விஸ்வம் ஜெர்மனியை
விட்டுப் போக வாய்ப்பில்லை என்று உறுதியாக நினைத்திருந்த இம்மானுவல் சாமுவல் பற்றிய
உண்மை தெரிந்த பின் அக்ஷயும், க்ரிஷும் சந்தேகப்படுவது போல் விஸ்வம் வாஷிங்டன் செல்லவோ,
சென்றிருக்கவோ வாய்ப்பிருக்கிறது என்று நினைக்க ஆரம்பித்திருந்தான்.
“விஸ்வம் செய்திருக்கும்
பழைய இரண்டு கொலைகளும் கொல்லப்பட்டவர்கள் தனியாகத் தங்கள் இருப்பிடங்களில் இருக்கும்
போது செய்யப்பட்டவை. மாஸ்டரின் குரு அவருடைய
குடிலில் கொல்லப்படும் போது தனியாகத் தான் இருந்தார். ராஜதுரை வீட்டில் முழுப் பாதுகாப்போடு
தான் இருந்தார் என்றாலும் அவரும் கொல்லப்பட்ட போது அவருடைய அறையில் தனியாகத் தான் இருந்தார்.
அதனால் இங்கேயும் அவன் அதையே செய்ய வாய்ப்பு அதிகம்...”
“அப்படியானால் புதன்
இரவு வாஷிங்டன் பங்களாவில் அவர் தங்கியிருக்கும் போது அவன் வந்து தாக்க வாய்ப்புகள்
அதிகம் என்கிறீர்கள்”
“ஆமாம். அதனால்
அந்த நேரத்தில் அந்த இடத்தில் நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அந்த வீட்டுக்கு
நீங்கள் தரப்போகிற பாதுகாப்பை நான் பார்த்தேன். தலைவர் அந்த வீட்டில் இருக்கும் போது
அந்தத் தெருவில் பாதுகாப்பு எந்த அளவில் இருக்கும்?”
“தலைவர் அங்கே இருக்கும்
போது அந்தத்
தெருவுக்குள் நுழையும் ஆட்கள், வாகனங்கள் எல்லாம் பரிசோதித்துப் பார்த்தே அனுப்புவதாக
இருக்கிறோம். அந்தத் தெருவில் இருக்கும் வீட்டுக்காரர்களின் விவரங்கள் நம்மிடம் இருக்கின்றன.
அவர்கள் தவிர மற்றவர்கள் போக்குவரத்து நம் ஆட்களின் அனுமதி இல்லாமல் நடக்காது. தெருவின்
இரண்டு கோடிகளிலும் நம் ஆட்கள் இருப்பார்கள்”
“தலைவர்
பங்களாவிற்குப் பின்னால் இருக்கும் பங்களா?”
“அது
இப்போதைக்குக் காலியாகத் தான் இருக்கிறது. தலைவர் அங்கே போவதற்கு முன் அதிலும் நம் ஆட்கள் போய்
விடுவார்கள். அதனால் அங்கிருந்து இந்தப் பங்களாவுக்குள் நுழைவதும் முடியாத காரியம்.
தலைவர் பங்களாவுக்கு இரண்டு பக்கத்திலும் இருக்கும் பங்களாக்களில் ஒன்று ஒரு செனட்டருடையது.
இன்னொன்று எஃபிஐ டைரக்டருடையது. அதனால் அங்கே ஏற்கெனவே பாதுகாப்பு எப்போதும் பலமாயிருக்கிறது. அங்கிருந்தும் விஸ்வம் எதுவும்
ஜாலம் காண்பிக்க வழியில்லை”
அக்ஷய் திருப்தியுடன்
தலையசைத்தான்.
கர்னீலியஸின் வீட்டில் இல்லுமினாட்டி உளவுத்துறை அதிகாரிகள்
சோதனையிட்டுக் கொண்டிருந்தார்கள். இது இல்லுமினாட்டியில் வழக்கமாய் நடக்கும் சோதனை
தான். இறந்து போனவர் இல்லுமினாட்டி குறித்து
ஏதாவது தடயம் தன் வீட்டிலோ, கம்ப்யூட்டரிலோ, அலைபேசியிலோ விட்டு விட்டுப் போயிருக்கிறாரா
என்று பார்த்து அவற்றை நீக்குவது தான் அந்த அதிகாரிகளின் பணி. திடீர் மரணங்களில் யாரும்
அந்தத் தகவல்களைத் துடைத்து விட்டுப் போக வாய்ப்பு இல்லை என்பதால் உளவுத்துறை அதைச் செய்து முடிக்கும். திடீரென்று இறந்து போன உறுப்பினர் தீவிரமாகச் செயல்படும்
உறுப்பினர் என்றால் நாலைந்து பேர் அந்த வீட்டுக்கு இந்த வேலை செய்யப் போய் விடுவார்கள்.
சாலமன் வீட்டுக்கும் நான்கு ஆட்கள் போய்ச் சோதித்துப் பார்த்திருக்கிறார்கள்…
கர்னீலியஸ்
ஒரு கௌரவ உறுப்பினர் போலத் தான் என்பதாலும், எந்த முக்கிய முடிவெடுப்புகளிலும் பங்கு
கொள்ளாதவர் என்பதாலும் இரண்டு அதிகாரிகள் மட்டும் வந்து சோதனையிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்படிச் சோதனையிடும் போது மேசை மீது இருந்த அவர் டைரியும் சோதனைக்குள்ளாகியது. அப்போது
டைரியின் கடைசிப்பக்கத்தில் அவர் எழுதியிருந்த வாசகங்களை அந்த அதிகாரி இரண்டு முறை
படித்தார். ”ஓருடல் விட்டு மறு உடல் போவது” என்று படித்தவுடனேயே
அவருக்கு விஸ்வத்தின் நினைவு வந்தது. உடனே அவர் அந்தப் பக்கத்தைப் புகைப்படம் எடுத்து
உடனடியாக இம்மானுவலுக்கு அனுப்பி வைத்தார். பின் மற்ற சோதனைகளைத் தொடர்ந்தார். இன்னொரு
அதிகாரி கர்னீலியஸின் அலைபேசியில் பேசிய நபர்கள், காலம் பற்றியெல்லாம் விவரங்கள் எடுத்துக்
கொண்டிருந்தார். அதில் எதுவும் சந்தேகப்படும்படி இல்லையென்றாலும் கூட அதுவும் இம்மானுவலுக்கு
அனுப்பப்பட்டது.
இம்மானுவல் “அவசரம்”
”அதிமுக்கியம்” என்று வருகிற தகவல்களைத் தவிர வேறு எதையும் பார்க்கிற நிலைமையில் இருக்கவில்லை. எர்னெஸ்டோ வாஷிங்டன் போய்ப் பத்திரமாய் திரும்பி
வரும் வரையில் வேறெதிலும் கவனம் திருப்பக்கூடாது என்ற முடிவில் அவன் இருந்தான். கர்னீலியஸ்
வீட்டில் பரிசோதனை செய்த அதிகாரிகள் அனுப்பிய செய்தியில் கர்னீலியஸ் வீட்டுச் சோதனை
என்ற தலைப்பில் இருந்ததால் வழக்கமாய் அனுப்பப்படும் குறிப்புகள் என்று அவன் விட்டு
விட்டான். பழங்கால மொழி, நூல், ஆவண வல்லுனர்
வீட்டில் வேறெந்த முக்கியமான ஆபத்தான தகவல்கள் கிடைக்க முடியும்?
மேலும்
இது போன்றவை எப்போதுமே சாலமனுக்குத் தான் வழக்கமாக அனுப்பப்படும். உளவுத்துறையின் உபதலைவர்
இல்லாததால் இப்போது எல்லாமே அவனுக்கு வருகின்றன. அவன் அடுத்த உபதலைவர் பதவிக்கு இரண்டு
அதிகாரிகள் பெயர்களை சிபாரிசு செய்து அவர்கள் பற்றிய விரிவான அறிக்கையை நேற்று தான்
எர்னெஸ்டோவிடம் தந்திருந்தான். அவர் முடிவெடுத்துச் சொல்லும் வரை இரட்டை பணிச்சுமையையும்
அவன் ஏற்று தான் ஆக வேண்டும்… கர்னீலியஸ் வீட்டில் இருந்து வந்த அறிக்கையை அவசரமில்லாத
ஒன்றாக, பின்னர் படிக்க வேண்டியதாக ஒதுக்கி வைத்து அவன் மற்ற வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தான்.
விஸ்வம் இரவு பதினோரு மணிக்கு மேல் கிளம்பினான்.
ஜிப்ஸி
கேட்டான். “நானும் வரவேண்டுமா?”
“வேண்டியதில்லை.
நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லி விஸ்வம் ஓட்டலிலிருந்து கிளம்பினான். வாஷிங்டனின்
இரவுப்பனி கடுமையாக பொழிந்து கொண்டிருந்தது. எர்னெஸ்டோவின் பங்களா அரை மணி நடைப்பயண தூரத்தில் இருந்தது. அந்தப் பனியிரவில் அமைதியாக அவன்
நடக்க ஆரம்பித்தான். டேனியல் உடலில் அவன் தனியாக ஈடுபடும் மிக முக்கிய வேலையிது. இந்த
உடல் அவசியப்படும் போது வேகமாக இயங்க வேண்டும். அது தான் முக்கியம். இன்று சோதித்துப்
பார்த்துவிடப் போகிறான்.
சற்று முன் தான்
எர்னெஸ்டோவின் வீட்டின் பாதுகாப்பு விவரங்களை மீண்டும் படித்து மனதில் பதித்திருந்தான்.
கிழவர் வந்தவுடன் மூன்று மடங்காகப் பாதுகாப்பு அதிகரித்து விடுமாம். அதைக்கூட அவன்
பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஜிப்ஸி அக்ஷயின் காற்றின் வேகத்தில் பாயும் திறமையையும்,
நரம்புகளைச் சுளுக்கி கோமாவில் ஈடுபடுத்தும் வித்தையையும் சொன்ன பின் அதிக ஆபத்தில்
ஈடுபட அவன் விரும்பவில்லை. தேவையான எச்சரிக்கையும் இல்லாமல் இயங்குவதற்குப் பெயர் வீரம்
அல்ல, முட்டாள்தனம். அந்த முட்டாள்தனம் இந்தச் சூழ்நிலையில் வேண்டாம்...
எர்னெஸ்டோ பங்களாவின்
பின்புறத் தெருவில் நடக்க ஆரம்பித்த போது அவன் நடையின் வேகம் குறைந்தது. தெருவில் யாராவது
இருக்கிறார்களா என்று பார்த்தான். அவ்வப்போது சில கார்கள் செல்வதும் வருவதுமாக இருந்தன.
ஆனால் ஆள் நடமாட்டவில்லை. எர்னெஸ்டோவின் பங்களாவின் பின் பங்களா முன்னால் அவன் அலைபேசியில்
எதையோ பார்ப்பது போல் நின்று யாராவது தென்படுகிறார்களா என்று ஓரக்கண்களால் பார்த்தான்.
ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அதைத்தவிர வேறெதுவும் வாகனமில்லை. ஆட்களுமில்லை. அந்தக்
கார் அவனைத் தாண்டிச் செல்லும் வரை அலைபேசியைப் பார்த்தபடி இருந்து விட்டு அந்தப் பங்களாவின்
பெரிய கேட்டில் ஏறி உள்ளே குதித்தான்.
அந்தப் பங்களாவில்
கண்காணிப்பு காமிரா இல்லை என்றும் ஆனால் பங்களாவின் கதவு ஜன்னல்களைத் தொட்டால் அலாரம்
மணி அடிக்க ஆரம்பித்து விடும் என்றும் சாலமன்
சொல்லியிருந்தார். அதன் உரிமையாளர் தற்போது நியூசிலாந்தில் இருப்பதாகவும், அவர் நிறைய
கலைப் பொருட்கள் வீட்டில் வைத்திருப்பதால் அது திருட்டுப் போகாதபடி இந்த ஏற்பாட்டைச்
செய்திருப்பதாகவும் சொல்லியிருந்தார். விஸ்வம் பக்கவாட்டு ஜன்னல்களிலிருந்து இரண்டடி
தள்ளியே சத்தமில்லாமல் நடந்தபடி பின்பக்கம் போனான்.
(தொடரும்)
என்.கணேசன்
Reading this episode I came to the edge of my chair without knowing. Tension is building. Because Viswam has started his part of action and Akshay has not yet shown up. Super novel.
ReplyDeleteவிஸ்வம்...இந்த முறை வித்தியாசமாக செயல்படுகிறான்...தலைவர் நிலைமை என்னவாகும்னு தெரியலையே...??
ReplyDelete