Wednesday, November 17, 2021

நோய் தீர்த்த சுவாரசிய சம்பவங்கள்!

 


ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள்! 30

னக்குக் கிடைத்திருக்கும் நோய் தீர்க்கும் சக்தியை கர்னல் ஓல்காட் முடிந்தவரை பொது மக்கள் துயர் தீர்க்க இறைவன் தந்திருக்கும் வாய்ப்பாகவே கண்டார். அப்படியே பயன்படுத்தவும் செய்தார். சில நேரங்களில் சிலருடைய உடல் உபாதைகள் உடனடியாகத் தீர்ந்தன. கேள்விக்குறி போல் முதுகு வளைந்து ஏழெட்டு ஆண்டுகளாகவே ஊன்றுகோல் ஊன்றி மட்டுமே நடக்க முடிந்த ஒரு ஏழை மூதாட்டியிடம் கர்னல் ஓல்காட் விளையாட்டாகஅம்மா உங்களை நடனமாடும் அளவுக்கு முன்னேற்றி விடட்டுமாஎன்று கேட்க அந்த மூதாட்டி வயிறு குலுங்கச் சிரித்தார். ஊன்றுகோல் இல்லாமல் சில அடிகள் கூட நடக்க முடியாத அவரை நடனமாடும் நிலைமைக்குக் கொண்டு வருவது என்றால் சிரிக்கத் தானே தோன்றும். ஆனால் திடீரென்று அவர் கையில் இருந்த ஊன்றுகோலைப் பிடுங்கி எறிந்து கர்னல் ஓல்காட்வாருங்கள் நாம் இருவரும் சேர்ந்து நடப்போம்என்று சொன்னார்.

 

ஒரு கணம் திக்குமுக்காடிப் போன அந்தக் கிழவியின் கூன் அந்தச் சமயத்திலேயே விலகியது. அவரால் ஓரளவு நிமிர்ந்து நிற்க முடிந்தது. ஊன்றுகோல் இல்லாமல் அந்த மூதாட்டி கர்னல் ஓல்காட்டுடன் வேகமாக நடப்பதைப் பார்த்துப் பலர் வியந்தனர். அதே போல் கையை மடக்க முடியாமல் சிரமப்பட்ட ஒரு சிறுவனின் உடல் உபாதையும் ஒரே நிமிடத்தில் தீர்க்கப்பட்டு அந்தச் சிறுவன் அப்போதே வீட்டுக்குச் சென்று கையால் உணவு எடுத்து உண்ணவும் முடிந்தது.

 

இப்படி ஒருசில அற்புதங்கள் உடனடியாக நடந்தன. சிலருடைய உடல்நிலையில் முன்னேற்றம் தினமும் சிறிது சிறிதாக ஏற்பட்டுப் பின்னர் குணமடைந்தனர். இந்த நோய் தீர்க்கும் பணிக்கு இவ்வளவு பணம் தர வேண்டும் என்று கர்னல் ஓல்காட் கேட்கவில்லை. நோய் குணமானவர்கள் விருப்பப்பட்டு தந்த பணத்தை இலங்கையில் பள்ளிக்கூடங்கள் இல்லாத பகுதியில் பள்ளிக்கூடங்கள் கட்ட ஒரு கமிட்டியை அமைத்து அதனிடம் ஒப்படைத்தார்.

 

என்னேரமும் வியாதியஸ்தர்களும், அவர்களை அழைத்து வருவோரும் கர்னல் ஓல்காட் இருக்கும் இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இதைக் கேள்விப்பட்ட ஒரு இளம் அரசாங்க மருத்துவர் கேள்விப்பட்டதெல்லாம் எந்த அளவில் உண்மை என்று அறிய ஒரு நோயாளியைத் தானே அழைத்து வந்தார். கர்னல் ஓல்காட்டிடம் அவர் வெளிப்படையாகச் சொன்னார். “ஐயா நான் அரசு மருத்துவர். எங்கள் மருத்துவமனையில் பல காலம் சிகிச்சை செய்தும் குணப்படுத்த முடியாத ஒரு நோயாளியை இங்கே அழைத்து வந்துள்ளேன். அவரை உங்களால் குணப்படுத்த முடியுமா? முடியுமானால் அது எப்படி என்று அறிய ஆவலாய் உள்ளேன்

 

அந்த இளம் மருத்துவரின் வெளிப்படையான பேச்சு கர்னல் ஓல்காட்டுக்குப் பிடித்திருந்தது. பத்தாண்டு காலம் கைத்தடி இல்லாமல் நடக்க முடியாமல் இருந்த அந்த நோயாளியை ஒரு மணி நேரத்தில் கைத்தடி இல்லாமல் நடக்க வைத்து விட்டார். அந்த நோயாளியும், இளம் மருத்துவரும் வியப்பின் எல்லைக்கே சென்றார்கள். அந்த நோயாளி போய் விட்ட போதும் அந்த இளம் மருத்துவர் கர்னல் ஓல்காட்டுடனே இருந்து அவர் மற்ற நோயாளிகளைக் குணப்படுத்துகையில் உதவியாளர் போல் நடந்து கொண்டார். படித்த மருத்துவத்தால் முடியாதது மெஸ்மெரிஸம், ஹிப்னாடிசம் போன்ற சக்திகளால் முடிகிறது என்கிற போது அதைப் பயன்படுத்துவது எப்படி என்று அறிந்து கொள்வது நல்லது என்கிற மனோபாவம் அந்த இளம் மருத்துவருக்கு இருந்தது.

 

ஆனால் அந்த இளம் மருத்துவருக்குத் தலைவராக இருந்த ஒரு மேல்நிலை மருத்துவர் இதைக் கேள்விப்பட்டு அந்த இளம் மருத்துவரைக் கடிந்து கொண்டார். இனி இது போல் மருத்துவம் படிக்காத பைத்தியக்காரத்தனமான நோய் தீர்க்கும் சித்துவித்தை மருத்துவர்களிடம் சம்பந்தம் வைத்துக் கொண்டால் பணிநீக்கத்திற்கு உத்தரவிட வேண்டி வரும் என்று மிரட்டினார். அரசு வேலையை இழக்க விரும்பாத அந்த இளம் மருத்துவர் அதன்பின் கர்னல் ஓல்காட்டை வந்து சந்திப்பதை நிறுத்திக் கொண்டார். விளைவுகளில் ஆர்வம் காண்பிப்பதை விடத் தங்கள் நிலைப்பாட்டிலேயே நிற்கும் இந்த கண்மூடித்தனமான பிடிவாதத்தால் மற்றதிலிருந்து நன்மையை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு நழுவி விடுகிறது என்பதைச் சில மனிதர்கள் உணர்வதே இல்லை என்று கர்னல் ஓல்காட் வருந்தினார். மருத்துவம் ஒரே வழியில் யோசிக்காது எல்லா வழிகளையும் முயன்று பார்த்து ஒவ்வொன்றிலும் இருக்கும் நன்மைகளை எடுத்துக் கொண்டு உதவாததை விட்டு விட்டு முன்னேறிக் கொண்டே போக வேண்டுமே ஒழிய இப்படிக் குறுகிய மனோபாவங்களில் நின்று விடக்கூடாது என்பது அவருடைய கருத்தாக இருந்தது.

 

ஒரு கடைந்தெடுத்த கஞ்சர் தன் பக்க வாதத்திற்கு 1500 ரூபாய்கள் வரை செலவு செய்தும் பயன் கிடைக்காமல் தவிப்பது பற்றி அவருடைய பள்ளிக்கூடம் கட்டும் கமிட்டியினர் சொன்னார்கள். செல்வந்தரான அந்த ஆளைக் குணப்படுத்தினால் தங்களுக்கு நிறைய பணம் கிடைக்கலாம் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். குணமாகாததற்கே 1500 ரூபாய்கள் வரை செலவு செய்தவர் குணமாவதற்கு எத்தனை வேண்டுமானாலும் தருவார் என்று நினைத்தார்கள். கர்னல் ஓல்காட் அவர்களிடம் அந்தக் கஞ்ச செல்வந்தரை அழைத்து வரச் சொன்னார். அவர்களும் அந்த ஆளை அழைத்து வந்தார்கள்.

 

ஒரு பக்கத்து கை, கால்களை அசைக்க முடியாமல் பரிதாபமாக இருந்த ஆளைக் குணப்படுத்தும் முயற்சியில் கர்னல் ஓல்காட் இறங்கினார். அரை மணி நேரத்தில் அவரால் அந்த மனிதரின் கையைக் குணப்படுத்த முடிந்தது. இறுகிய கைவிரல்களை அந்த மனிதர் மடக்க முடிந்தது. அந்தக் கையில் பேனா பிடித்து எழுத முடிந்தது. மேலும் அரை மணி நேரம் செய்த சிகிச்சையில் அந்த ஆள் பழுதான கையை உயர்த்திச் சுழற்ற முடிந்தது. இந்த அதிசயத்தைப் பார்த்துச் சுற்றிலும் இருந்தவர்கள் பிரமித்தனர். கர்னல் ஓல்காட் அவரிடம்உங்கள் கையைக் குணப்படுத்தியதற்கு நீங்கள் எவ்வளவு தருகிறீர்கள். அந்தப் பணம் எங்களுக்கல்ல. பள்ளிக்கூடம் கட்ட உங்கள் பணம் பயன்படப் போகிறது. ஒரு தர்ம காரியத்தில் பங்குபெறப் போகிறீர்கள். எவ்வளவு தருகிறீர்கள்?”

 

அந்தக் கஞ்சர் சொன்னார். “ஐயா நான் ஒரு ஏழை. என்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் மருத்துவத்திற்கே செலவு செய்து ஓட்டாண்டியாகி விட்டேன். அதனால் இந்த ஒரு ரூபாயைப் பெற்றுக் கொள்ளுங்கள்

 

கர்னல் ஓல்காட் பணத்திற்கு எப்போதுமே அதிக முக்கியத்துவம் கொடுத்தவர் அல்ல. ஆனால் குணப்படுத்தாத மருத்துவத்திற்கு 1500 ரூபாய்கள் வரை செலவு செய்தவர் இத்தனை தூரம் குணப்படுத்தியும் தாராளமாக மனமகிழ்ந்து தர்ம காரியத்திற்குத் தராமல் ஒரு ரூபாயை நீட்டியதைக் கண்ட போது அவர் இப்படியும் ஒரு மனிதரா என்று அருவருப்படைந்தார்.  அந்த ஒரு ரூபாயை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். முதலில் இங்கிருந்து போங்கள்என்று சொன்னார்.

 

அப்போதும் அந்தக் கஞ்சருக்கு அதிகப் பணம் தர மனம் வரவில்லை. பலருக்கு இலவசமாகவே இந்த மனிதர் சிகிச்சை செய்திருக்கிறார் என்று அவர் கேள்விப்பட்டிருந்ததால் தனக்கும் இவர் இலவசமாகவே சிகிச்சை செய்யட்டுமே என்று எதிர்பார்த்தார். அவரை அழைத்து வந்த கமிட்டியார் இந்த ஆள் இவ்வளவு கேவலமாக இருப்பார் என்று எதிர்பார்த்திரா விட்டாலும் அழைத்து வந்ததற்கு முழுவதுமாகக் குணப்படுத்த முயற்சிக்குமாறு கர்னல் ஓல்காட்டை வேண்டிக் கொண்டனர். “இவ்வளவு நாள் நாம் பணத்திற்காக யாரையும் திருப்பி அனுப்பியதில்லை. இப்போது இவரை அனுப்பி ஏன் அந்த ஒரு அவப்பெயரை வரவழைத்துக் கொள்ள வேண்டும்?” என்று சொன்னார்கள்.

 

கர்னல் ஓல்காட்டுக்கு ஆனாலும் மனம் ஆறவில்லை. அவர்கள் சொல்வதில் இருந்த உண்மையை யோசித்து முடிந்த வரை குணப்படுத்தி இந்த ஆளை அங்கிருந்து அனுப்பிவிடத் தீர்மானித்தார். வேண்டாவெறுப்பாகச் சிகிச்சையைத் தொடர்ந்து அந்த மனிதருடைய காலையும் குணமாக்கி அனுப்பி வைத்தார். அப்போதும் அந்தக் கஞ்சர் மனம் மாறிப் பணம் எதுவும் தந்து விடவில்லை. அங்கிருந்து மகிழ்ச்சியாக வெளியேறினார்.

 

சில நாட்கள் கழித்து கர்னல் ஓல்காட்டுக்கு அந்தக் கஞ்சர் குறித்த ஒரு தகவல் கிடைத்தது. அந்தக் கஞ்சரின் கை குணமானது இன்று வரை குணமாகியே இருக்கிறது. ஆனால் கால் மட்டும் திரும்பவும் பழைய நிலைக்கே மாறி பயன்படுத்த முடியாமல் இருக்கிறது என்று சொன்னார்கள். கையைக் குணப்படுத்தும் போது கர்னல் ஓல்காட் முழுமனதோடு செய்தார். அதன் விளைவு நிரந்தரமாகவே இருக்கிறது. கால் குணப்படுத்துதலை வேண்டா வெறுப்போடு செய்தார். அந்தச் சக்தி அப்போதைக்கு வேலை செய்தாலும் அதன் விளைவு நிரந்தரமாக இல்லை. கருணையும், அன்பும் கொண்டு செய்யும் முயற்சிகள் மட்டுமே இந்த நோய் தீர்த்தலில் நிரந்தரமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்ற பாடமும் அவருக்குக் கிடைத்தது.

 

(தொடரும்)

என்.கணேசன்     

நன்றி : தினத்தந்தி




2 comments:

  1. How true.Intensity of the mind decides the quality of the outcome.

    ReplyDelete
  2. கடைசியில் அவர் கற்ற பாடம்...நாமும் கற்று கொள்ள வேண்டியதே...

    ReplyDelete