Monday, November 22, 2021

யாரோ ஒருவன்? 60


மாதவனின் பெற்றோர் இப்போதும் உயிரோடிருப்பதும், அவர்கள் இத்தனை வருடங்கள் கழிந்த பின்னும் பழைய விலாசத்திலேயே சத்தியமங்கலத்தில் குடியிருப்பதும் நரேந்திரனின் தென்னிந்திய ஆரம்ப வேலையைச் சுலபமாக்கியது. கல்யாணுக்கும், சரத்துக்கும் கடிதங்கள் அனுப்பியது போல மாதவனின் பெற்றோருக்குக் கடிதம் அனுப்பாமல் அவர்கள் வீட்டுக்குக் காலை பத்தரை மணியளவில் நரேந்திரன் சென்றான்.

வாசலில் சாணி தெளித்து அழகானதொரு கோலம் போடப்பட்டிருந்தது. கேட்டுக்கு சுமார் இருபதடி தாண்டி உள்ளே வீடு இருந்தது. வீட்டுக்கு வெளியே இருந்த கயிற்றுக்கட்டிலில் தமிழ் தினசரிப்பத்திரிக்கை ஒழுங்காக மடித்து வைக்கப்பட்டிருந்தது.

நரேந்திரன் கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டு பரந்தாமன் வெளியே வந்தார். “யார் வேணும்?”

பரந்தாமன்என்று நரேந்திரன் மரியாதையுடன் சொன்னான்.

நான் தான் அது. நீங்க...?”

நான் நரேந்திரன். உளவுத்துறையிலிருந்து வர்றேன்என்று சொன்ன நரேந்திரன் தன்னுடைய விசிட்டிங் கார்டை அவரிடம் நீட்டினான்.

விசிட்டிங் கார்டை வாங்கி பரந்தாமன் கண்களைச் சுருக்கிப் படித்தார். நரேந்திரன் ஐபிஎஸ் என்றிருந்ததைப் படித்தவுடன் மிக மரியாதையாகவாங்க சார்என்று வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போனார். மண்டையைப் பிளக்கும் வெயில் அந்தக் காலை நேரத்திலேயே இல்லாமல் இருந்திருந்தால் வெளியே கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருப்பது வசதியாக இருந்திருக்கும் என்று நரேந்திரன் நினைத்தான்.

உள்ளே வீடு பழைய கால முறையில் இருந்தது. சுமார் 25 அல்லது 30 வருடங்கள் முந்தைய காலத்தில் காலடி எடுத்து வைத்த உணர்வை நரேந்திரன் அந்தக் கணத்தில் உணர்ந்தான். காரணம் அவர்கள் மகன் மறைந்த பிறகு அவர்கள் அந்த வீட்டில் எதையும் மாற்றவில்லை என்பதாக இருக்கலாம். அவர்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் அறிந்து கொண்டு தான் அவன் வந்திருக்கிறான். ஏழ்மையான வாழ்க்கை வாழும் அவர்கள் மீது அவனுக்கு இங்கு வருவதற்கு முன்பே பச்சாதாபம் ஏற்பட்டிருந்தது. அவன் தந்தையை இழந்து இத்தனை காலம் கஷ்டப்பட்டது போல அவர்கள் மகனையிழந்து ஒரு சோக வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று நினைத்திருந்தான். இப்போது நேரில் பார்க்கையில் அவன் இரக்கம் மேலும் கூடியது.

யாரு...?” என்று கேட்டபடி மாதவனின் தாய் அலமேலு சமையலறையிலிருந்து வெளியே வந்தாள்.

முழுவதுமாய் நரைத்த கூந்தலும், நெற்றி நிறைய பெரிய குங்குமப் பொட்டுமாய் வந்த கிழவி முகத்தில் அளவில்லாத சாந்தம் தெரிந்தது.   

பரந்தாமன் சொன்னார். “சார் உளவுத்துறை அதிகாரி...”

சரியென்று தலையாட்டிய அலமேலு அந்தப் பதவிக்கு அவரளவுக்கு முக்கியத்துவம் தரவில்லை. அவளைப் பொருத்தவரை அவர்களைத் தேடி வருபவர்கள் எல்லாரும் விருந்தினர்கள் தான்.

சந்தோஷம் உட்காருங்கஎன்று அங்கிருந்த பிரம்பு நாற்காலியைக் காட்டி விட்டு வேகமாகப் போய் ஒரு செம்பு தண்ணீரும் ஒரு தம்ளரும்  கொண்டு வந்து அவன் முன்னால் இருந்த டீப்பாயில் வைத்தாள்.

பரந்தாமனுக்கு அந்த ஐபிஎஸ் அதிகாரி முன்னால் உட்கார்வது மரியாதையாக இருக்காது என்று தோன்றியதால் நின்றபடியே இருந்தார். நரேந்திரனுக்கு அந்த முதியோரை ஏனோ மிகவும் பிடித்துப் போனது. எளிமையும் அன்பும், மரியாதையும்  நிறைந்த நல்ல மனிதர்கள்...

நீங்க உட்காருங்க.” என்று நரேந்திரன் சொன்னான். பின் பரந்தாமன் தயங்கியபடி அங்கிருந்த இன்னொரு நாற்காலியில் அமர்ந்தார். அலமேலு தன் கணவன் அருகில் வந்து நின்று கொண்டாள்.

நரேந்திரன் மென்மையாக ஆரம்பித்தான். “நான் உங்க மகன் மாதவனோட மரணம் சம்பந்தமாய் சில விவரங்களைத் தெரிஞ்சுக்க வந்திருக்கேன்...”

பரந்தாமன், அலமேலு இருவர் முகத்திலும் படர்ந்த சோகம் நரேந்திரனை என்னவோ செய்தது.

பரந்தாமன் மெல்லச் சொன்னார். ”கேளுங்க சார்
அவரோட மரணம் மணாலில ஏதோ வெடிகுண்டு விபத்தால நிகழ்ந்ததில்லையா. அது சம்பந்தமா உங்களுக்கு நினைவிருக்கிற எல்லா விவரங்களையும் சொன்னால் நல்லாயிருக்கும்...”

இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன் மாதவன் தன் நண்பர்கள் சரத் மற்றும் கல்யாணுடன் மணாலிக்குச் சுற்றுலா சென்றதையும், அங்கே ஒரு வெடிகுண்டு விபத்தில் சிக்கி அவன் உடல் கருகி மரணமடைந்ததையும் வருத்தத்துடன் பரந்தாமன் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல அலமேலு புடவைத்தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

அந்த விபத்தின் முழு விவரங்கள் அவருக்குத் தெரியவில்லையா, தெரிந்தும் அதை விவரிக்கும் மனநிலையில்லாமல் சுருக்கமாகச் சொல்கிறாரா என்பதை நரேந்திரனால் ஊகிக்க முடியவில்லை. ஆனால் அதை மறுபடி அவர் வாயால் சொல்ல வைத்து துக்கத்தை அதிகப்படுத்த அவன் விரும்பவில்லை. அதெல்லாம் அவன் மிக நன்றாக அறிந்த தகவல்கள் தான். அவன் அறிய வந்தது மாதவனின் நண்பர்கள் குறித்த தகவல்களை.

மாதவனுக்கு நண்பர்கள் யார் யார்?”

நிறைய பேர் இருந்தாங்க. அதுல ரஞ்சனி, சரத், கல்யாண் மூனு பேருமே அவனுக்கு நெருக்கமான நண்பர்கள்

அவங்க அந்த விபத்துக்கு அப்பறமும் இங்கே வர்றதுண்டா?”

இல்லை. அந்தப் பொண்ணு ரஞ்சனி மட்டும் கல்யாணத்துக்குக் கூப்பிட வந்தா. மத்தவங்க பிறகு வரலை…. வந்து எங்க துக்கத்தை அதிகப்படுத்த வேண்டாம்னு நினைச்சிருக்கலாம்எல்லாருக்கும் அவங்கவங்க வேலையே அதிகம்…. அவங்க யாரும் இங்க இல்லை. அதுவும் காரணம். அவங்க பிறகு கோயமுத்தூர் போயிட்டாங்க

நரேந்திரனுக்கு சரத், கல்யாண் இருவரும் மாதவனுடன் மணாலிக்குப் போனவர்கள் என்பதால் அவர்கள் இருவர் பற்றியும் முன்பே தெரிந்திருந்தது. நாளை அவர்களை கோயமுத்தூரில் விசாரிக்கவும் போகிறான். ரஞ்சனி பற்றி அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதனால் கேட்டான். “ரஞ்சனி இப்ப எங்கே இருக்காங்க?”

கோயமுத்தூர்ல தான். ரஞ்சனி கல்யாணம் செய்துகிட்டது சரத்தைத் தான்.” பரந்தாமன் சொன்னார்.

அந்தத் தகவலைப் பற்றி சிறிது யோசித்து விட்டு நரேந்திரன் கேட்டான். மாதவனுக்கு எதிரிகள் இருந்தாங்களா?”

அந்தக் கேள்வியே தவறானது என்ற முகபாவனை இருவரிடமும் தெரிந்தது. “இல்லைஎன்று இருவரும் ஒருமித்துச் சொன்னார்கள்.

அலமேலு குரல் கரகரக்க கூடுதலாகச் சொன்னாள். “கலகலன்னு பேசுவான். எல்லாருக்கும் முடிஞ்ச உபகாரம் செய்வான். பெருந்தன்மையா இருப்பான். அதனால எல்லாருக்கும் அவனை ரொம்ப பிடிக்கும்.”    

நரேந்திரன் நிறைய கேள்விகள் கேட்டான். அவர்கள் குடும்பத்தைப் பற்றி, மாதவனின் நண்பர்களின் குடும்பங்களைப் பற்றி, அந்த நண்பர்களுக்கு இடையே இருந்த அன்னியோன்னியம் பற்றி, கல்லூரி வாழ்க்கையைப் பற்றி, அவர்கள் வேலையைப் பற்றி.... எல்லாக் கேள்விகளுக்கும் பரந்தாமனும், அலமேலுவும் மாறி மாறி பதில் சொன்னார்கள். அவர்கள் இருவரும் யாரைப் பற்றியும் மோசமான எந்தக் கருத்தையும் சொல்லவில்லை என்பதை நரேந்திரன் கவனிக்கத் தவறவில்லை.

நரேந்திரன் கேட்டான். “இப்பவும் உங்களைத் தொடர்பு கொள்கிற அவன் நண்பர்கள் வேற யாராவது இருக்காங்களா?”

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் முன் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பின் பரந்தாமன் சொன்னார். “சில நாள்களுக்கு முன்னாடி மாதவனோட ஒரு நண்பன் வந்தான். அவனை எங்களுக்குத் தான் ஞாபகப்படுத்திக்க முடியல...”

அந்த நண்பனின் வரவு பற்றி அவர்கள் இருவரும் மாறி மாறி தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனது நரேந்திரனுக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. வந்தவன் கண்டிப்பாக மாதவனின் நண்பனாக இருந்திருக்க முடியாது என்பது தெளிவாகவே அவனுக்குத் தெரிந்தது. அவன் மாதவனின் சூட்கேஸில் எதையோ தேடி வந்திருக்கிறான். அதை வெளிப்படையாகச் சொல்லாமல் நடித்திருக்கிறான் என்பதில் சந்தேகமே இல்லை. இத்தனை வருடங்கள் கழித்து ஷிரடி பாபாவின் விக்கிரகத்துக்காக யாருமே வர முடியும் என்று தோன்றவில்லை. வந்தவன் கண்ணாடியைக் கழட்டாதது அவர்கள் முழுமையாக அவனை வேறு ஆளாக அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காகவே இருக்க வேண்டும்.

ஆனால் பரந்தாமன் தொடர்ந்து அந்த நண்பன் அவர் கணக்கில் 13,45,690 ரூபாய் அனுப்பி வைத்திருந்த தகவல் சொன்னது அவனைத் திகைக்க வைத்தது.

பரந்தாமன் சொன்னார். “13456.90 அனுப்பறதுக்கு பதிலா அவன் மாறி 13,45,690 அனுப்பிச்சிட்டானோங்கற சந்தேகம் இருந்துச்சு. அப்படி மாறியிருந்தா கண்டிப்பா திரும்பக்கேட்டு அவனோ, அந்த பாங்க் காரங்களோ வருவாங்கன்னு என் நண்பர் நாதமுனி சொன்னார். ஆனா அது நடக்கல. பணம் என் கிட்டயே தான் இருக்கு.”

நரேந்திரன் மூளை பல யூகங்களை விரைவாக யோசிக்க ஆரம்பித்த வேளையில் அலமேலு கடைசியாக அவர்கள் பார்த்த பாம்பு விஷயத்தையும் சொன்னாள். நரேந்திரன் விட்டலாச்சாரியா படக்காட்சியைப் பற்றி அவர்கள் சொல்வது போல அவர்களை வினோதமாகப் பார்த்தான்.


(தொடரும்)
என்.கணேசன்


2 comments:

  1. I think Narendran would reach Nagaraj to find the truth. But will Nagaraj tell the truth?

    ReplyDelete
  2. கதை இரண்டு இடங்கள்ல நடக்குற மாதிரி இருந்துச்சி.... இப்ப ஒரே இடத்துல இரண்டும் சேர்ந்துருச்சி.... அற்புதம் ஐயா...

    ReplyDelete