கல்யாண்
தந்தையிடம் கேட்டான். “நீங்க என்ன நினைக்கிறீங்க?”
வேலாயுதம் சொன்னார். “நாகராஜ்
கிட்ட கிழவன் பார்த்தது நாகரத்தினங்கள்
தான்னு நமக்குத் தெரியும். இந்தத் துப்பறியும் நிறுவனம் விஞ்ஞானம்கிற பேர்ல நம்ப முடியாம
இருக்காங்க. ஆனா நமக்கு உண்மை தெரியும்...”
கல்யாண் அந்தத்
துப்பறியும் நிறுவனத்திடம் எந்தக் குறையும் காணவில்லை. அவனே ஆரம்பத்தில் நாதமுனி நாகரத்தினம்
பற்றிச் சொன்ன போது நம்பவில்லை. அப்போது அவர் சொன்னதை நம்பியது மாதவன் மட்டுமே. கல்யாண்
ஏதோ கதை கேட்பது போல தான் அதை அன்று கேட்டிருந்தான். அதனால் நிறைய அதிர்ஷ்டம் வரும்
சக்தி வரும் என்றெல்லாம் நாதமுனி சொன்ன போது அப்படியொன்று இருந்து கிடைத்தால் எவ்வளவு
நன்றாக இருக்கும் என்று கனவு கண்டதென்னவோ உண்மை...
வேலாயுதம் சொன்னார்.
”இப்ப என் மனசுல இருக்கிற கேள்வி என்னன்னா சுமார் எத்தனை நாகரத்தினங்கள் அவன்
கிட்ட இருக்கும்கிறது தான். அந்த வேலைக்காரக் கிழவன் ரெண்டு மூனு பார்த்ததா சொல்றான். அது என்ன
கணக்குடா? ஒன்னா ரெண்டுன்னு சொல்லணும், இல்லன்னா
மூனுன்னு சொல்லணும்...”
மனித மனம் விசித்திரமானது என்று கல்யாண்
நினைத்துக் கொண்டான். யோசிக்க எத்தனையோ முக்கிய விஷயங்களெல்லாம் இருக்கையில் அவர்
கவனமெல்லாம் நாகராஜிடம் இருக்கும் நாகரத்தினங்களின் எண்ணிக்கையிலேயே தங்கியிருக்கிறது. ஆசிரமத்தில்
வேலை செய்த கிழவர் சரியாகவே பார்த்திருந்து இரண்டு அல்லது மூன்று என்று சொன்னாலும்
அந்த அளவு தான் நாகராஜிடம் இருக்கிறது என்று அர்த்தமல்ல. அவன் தன்னிடம்
இருப்பதில் சிலதை எடுத்துக் கூடப் பார்த்திருக்கலாம்... கல்யாணுக்கு
அதை விட அதிகமாய் நாகராஜ் இங்கே ஏன் வந்திருக்கிறான் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத
நெருடல் தான் அதிகமாக இருந்தது. துப்பறியும் நிறுவனத்தாலும் அதைக் கண்டுபிடித்திருக்க முடியவில்லை.
அதுமட்டுமல்லாமல் மற்ற பதிலில்லாத கேள்விகளும்
நாகராஜ் விஷயத்தில் இருந்தன. நாகராஜ் எப்போது எப்படி சுவாமிஜியிடம் வந்து சேர்ந்தான் என்பது
தெரியவில்லை. சுவாமிஜி ஆரம்ப காலங்களில் ஒரே இடத்தில் வாழ்ந்தவர் அல்ல
என்பதும் அவர் சஞ்சாரியாகவே இருந்தார் என்பதும் அதற்குக் காரணங்களாக இருந்தன. அவர் தமிழ்நாட்டுக்கு
வந்திருக்கும் போது கூட அவனை இங்கே எதாவது ஊரில் சந்தித்திருக்கலாம். அவனைத்
தன்னுடன் கூட்டிக் கொண்டு போயிருக்கலாம். அது தான் நாகராஜுக்குத்
தமிழ் தெரிந்திருப்பதன் காரணமாக இருக்கலாம். சந்தித்த
இடம், விதம் எல்லாம் அவனுக்கும் அவருக்கும் மட்டுமே தெரியும். அவர் இப்போது
உயிரோடு இல்லை. அவர் உயிரோடு இருந்த போதும் மற்றவர்களுடன் அந்தத்தகவலைப்
பகிர்ந்து கொண்டதாய் தகவல் இல்லை. அதனால் அவன் மட்டும் அறிந்த ரகசியமாக அது தங்கிவிட்டிருக்க
வேண்டும்.
கல்யாண் சற்று ஏமாற்றத்துடன் சொன்னான். “அவன் ஏன்
கோயமுத்தூர் வந்திருக்கான்னு தெரிஞ்சா அவனைப் பத்தி ஒரு தீர்மானத்துக்கு வர்றது சுலபமாயிருக்கும்.”
”வேலாயுதம்
மகனிடம் சொன்னார். “எனக்கு என்ன தோணுதுன்னா நாகராஜுக்கு மன நோய்னு எழுதியிருக்கானுகளே
அதுக்கு சிகிச்சைக்கு அவன் கோயமுத்தூர் வந்திருக்கலாமோ?”
“நிறைய சக்தி இருக்கறவனுக்குத்
தன்னைக் குணப்படுத்திக்க முடியாதா என்ன? அப்படியே இருந்தாலும் அங்கே பக்கத்துல
டெல்லில இல்லாத டாக்டர்களா இங்கே இருக்கப் போறானுக. அவன் சம்பாத்தியத்துக்கு
அவன் அமெரிக்கா போய் கூட சிகிச்சை பண்ணிக்கலாமே.... அதுவுமில்லாமல்
இப்ப அவன் குணமாயிட்ட மாதிரியில்ல தெரியுது. கடைசியாய்
காட்டுக்குப் போயிட்டுத் திரும்பி வந்தப்ப அவன் நல்லாயிட்டான்னு தானே இதுல சொல்லியிருக்கு....”
“என்னவோ
போ. நம்ம முகத்தைப் பார்த்து ரெண்டு வார்த்தை பேசறவனாய் இருந்தா
கூட நான் இன்னேரம் அவன் கிட்டப் பேசியே நிறைய தெரிஞ்சிகிட்டிருப்பேன். அவன் நம்ம
மூஞ்சியே பார்க்கிறதில்லையே. அதிசயமாய் தீபக் கிட்ட பேசறான். ஆனா தீபக்கையும்
கூட வீட்டுக்குள்ளே விடறதில்லை பார்த்தியா. வெளியேவே
நிறுத்தி அனுப்பிச்சிடறான்... தீபக்கும் ரெண்டு நாள்ல வீட்டுக்குள்ளே போய்க் காட்டறேன்னு
சவால் விட்டான். இப்ப அதைப் பத்திப் பேசறதேயில்லை...”
“நாகரத்தினத்தையாவது
அவன் ஒளிச்சு வெக்கலாம். பாம்பை அப்படி அவன் ஒளிச்சு வெக்க முடியுமா? அதனால்
உள்ளே ஆள்களை விட்டா அவங்க அதைப் பார்த்து வெளியே சொல்லிட்டா தேவையில்லாத பிரச்சனைன்னு
நினைச்சிருக்கலாம்...”
அதைக் கேட்ட வேலாயுதம் மனதில் ஒரு அற்ப
ஆசை உதித்தது. “அவன் பாம்பு வளர்த்தறான்கிறதை அனாமதேயமாய் நாம புகார் செஞ்சா
என்ன? சட்டப்படி வீட்டுல பாம்பு வளர்த்தக்கூடாதுல்லியா. போலீஸ்
வந்து அவனைக் கைது பண்ணட்டும். அவன் ஆங்காரத்தைக் குறைச்ச மாதிரியாவது இருக்கும்...”
கல்யாண் பயந்து போனான். “அப்பா தயவு
செஞ்சு சும்மா இருங்க. அவன் சாதாரண
ஆள் இல்ல. செல்வாக்கான ஆள். ஏகப்பட்ட
சக்திகளையும் வெச்சிகிட்டிருக்கான். அவன் இருந்த இடத்துலருந்து
ஒரு போன் பண்ணா போதும். வந்த போலீஸ் சத்தமில்லாம திரும்பிப் போயிடுவாங்க. பிறகு நம்ம
நிலைமை தான் பரிதாபமாயிடும். சரத் சொல்றான், தீபக்குக்கு அந்தக்
கனவு வர்றது நாகராஜ் சொன்னவுடன் நின்னு போச்சாம். அடுத்தவன்
கனவுல கூட ஆதிக்கம் பண்ண முடியற அளவு சக்தி இருப்பவனைப் பகைச்சுக்கறது நமக்குத் தான்
ஆபத்து. ”
வேலாயுதம் மெல்லச் சொன்னார். “நான் சும்மா
ஒரு பேச்சுக்குச் சொன்னேன்... நீ இந்த ரிப்போர்ட் பத்தி சரத் கிட்ட முழுசும் சொல்லப் போறியா...”
“மத்த விஷயங்களைச்
சொல்லலாம். ஆனா நாகரத்தினம் பத்தி அவனுக்குத் தெரியறது அவசியமில்லைன்னு
நினைக்கிறேன்ப்பா” என்று கல்யாண் தந்தையைப் பொருள் பொதிந்த பார்வை பார்த்தபடி
சொன்னான்.
அவர் புரிதலோடு தலையசைத்தார். ”அதுவும்
சரிதான்”
மதன்லாலின் மனைவிக்கு வியாழக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு
அந்தக் கடத்தல்காரன் போன் செய்தான். “பணம் ரெடியா?”
அவள் தூக்கக்கலக்கத்தோடு சொன்னாள். “ரெடிங்க”
“போலீஸுக்குத்
தெரிவிச்சுடலியே?”
மதன்லாலின் மனைவி சொன்னாள். “இல்லைங்க.”
“பணத்தை
எப்படி ரெடி பண்ணினே?”
மதன்லாலின் மனைவி இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. சிறிய தொகை
என்றால் யாரிடமாவது வாங்கினேன் என்று சொல்லி இருக்கலாம். ஐம்பது
லட்சம் ரூபாய் என்று வரும் போது நம்பும்படியாகச் சொல்ல வேண்டும். “ரெண்டு
இடத்துல வாங்கிப் போட்டிருந்த இடங்களை வித்து தாங்க”
நல்ல வேளையாக அவன் எந்த இடங்கள், யாருக்கு
விற்றாய் என்பது போன்ற விவரங்களை எல்லாம் கேட்கவில்லை. அவன் அடுத்த
கேள்வி கேட்டான். “ஐம்பது லட்சத்தை எந்த நோட்டாய் எடுத்து வெச்சிருக்கே?”
போலீஸ் மேலதிகாரி முன்பே இந்தக் கேள்வி
கேட்கப்படும் என்றும் என்ன சொல்ல வேண்டும் என்றும் சொல்லி வைத்திருந்தார். அதை அப்படியே
அவள் சொன்னாள். “ரெண்டாயிரம் ரூபாய் தாங்க”
“சரி. அப்படின்னா 25
பேக்கட் தான். பிரச்சனையில்ல.
காலேஜ் பசங்க போட்டுட்டு போற மாதிரியான ஷோல்டர் பேக்ல அந்தப் பணத்தைப் போட்டுட்டு
மதியம் மூனு மணிக்கு ராஜ்தானி டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வாசல்ல யாருக்கோ காத்திருக்கிற
மாதிரி வெளியே நில்லு. செல் போன் உன் கைல இருக்கட்டும். அங்கே நீ
வந்ததுக்கப்பறம் என்ன செய்யணும்னு நான் சொல்றேன்... ஞாபகம்
இருக்கட்டும். நீ தனியா தான் வரணும். போலீஸ்க்குத்
தகவல் கொடுத்து எங்களைப் பிடிக்கணும்னு நீ நினைச்சா உன் புருஷனை நீ உயிரோட பார்க்க
முடியாது...”
போலீஸ் மேலதிகாரி முன்பே எச்சரித்திருந்ததால்
இந்த முறை அவள் அலட்சியத்தைக் காட்டவில்லை. “ஐயோ அவரை
ஒன்னும் பண்ணிடாதீங்க. எனக்குப் பணம் முக்கியமல்ல. அவர் தான்
முக்கியம்... அவரு நல்லா இருக்காரு தானே.” என்று அழாத
குறையாய் அவள் சொன்னாள்.
“நல்லா தான்
இருக்கான். நீ ஏமாத்தாத வரைக்கும் அவனுக்கு ஒன்னும் ஆயிடாது....
கவலைப்படாதே”
போலீஸ் மேலதிகாரி முன்பே சொல்லியிருந்த
மாதிரியே அடுத்ததாகச் சொன்னாள். “நன்றிங்க. ஆனா அவரைக் கண்ணால
பார்த்தால் தான் நான் பணம் தருவேன்...”.
”பணம் எங்க
கிட்ட வந்ததற்கப்புறம் அவனை வெச்சிருக்கிறது எங்களுக்கும் தண்டச்செலவு தான். அவனைக்
கூட்டுகிட்டு வந்து உன்கிட்ட காட்டினதுக்கப்பறம் பணம் தந்தால் போதும்.” என்று சொல்லி
அவன் இணைப்பைத் துண்டித்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
இத்தனை நாட்களாக மதன்லாலை மறந்தே போய்விட்டேன்... மதன் லால் கதை கணிக்க முடியவில்லை... இதன் பின்புலத்தில் நரேந்திரன் திட்டம் தான் புரியவில்லை..
ReplyDeleteMystery is deepening. Very interesting
ReplyDeleteVery interesting.,
ReplyDelete